நடப்பு ஐபிஎல் தொடரில் எமெர்ஜிங் பிளேயர் விருதை வெல்லப்போவது யார்?

ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இவ்வருட ஐபிஎல்லில் தான் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. ஒவ்வொரு ஐபிஎல்லின் போதும் அதிக ரன் அடித்தவருக்கு ஆரஞ்சு நிற தொப்பியும், அதிக விக்கெட் எடுத்தவர்களுக்கு பர்பிள் நிற தொப்பியும் வழங்கப்படும். இதுபோல அறிமுக வீரர்களுக்கு எமெர்ஜிங் பிளேயர் விருது அளிக்கப்படும்.

Update: 2024-05-20 18:30 GMT
Click the Play button to listen to article

2024 ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இவ்வருட ஐபிஎல்லில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஐபிஎல்லின் போதும் அதிக ரன் அடித்தவருக்கு ஆரஞ்சு நிற தொப்பியும், அதிக விக்கெட் எடுத்தவர்களுக்கு பர்பிள் நிற தொப்பியும் வழங்கப்படும். இதேபோல் அறிமுக வீரர்களில் சிறப்பான திறனை வெளிப்படுத்துவோருக்கு எமெர்ஜிங் பிளேயர் விருது அளிக்கப்படும். இந்த எமெர்ஜிங் பிளேயர் விருது எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது? விருதுக்கு என்னென்ன தகுதிகள் தேவை? இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் எந்தெந்த வீரர்கள் எமெர்ஜிங் பிளேயர் விருதை வென்றுள்ளனர்? இந்த தொடரில் எந்த வீரர் எமெர்ஜிங் பிளேயர் விருதை தட்டி செல்ல அதிக வாய்ப்புள்ளது? என்பதை பற்றியெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.

எமெர்ஜிங் பிளேயர் விருதுக்கான தகுதிகள்

1. விருது பெற தகுதியான வீரர், 1 ஏப்ரல் 1998-க்கு பின் பிறந்திருக்க வேண்டும்.

2. 25 ஐபிஎல் போட்டிகளுக்கு மேல் விளையாடியிருக்ககூடாது.

3. தனது நாட்டிற்காக 20 ஓடிஐ போட்டிகளுக்கு மேலும், 5 டெஸ்ட் போட்டிகளுக்கு மேலும் விளையாடியிருக்கக்கூடாது.

4. இதற்கு முன் எமெர்ஜிங் பிளேயர் விருது வென்றிருக்க கூடாது.

2008-ல் விருதை வென்ற ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி (ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்)

2008 ஆம் ஆண்டு நடந்த முதல் ஐபிஎல் சீசனில் பல முதல்தர கிரிக்கெட் வீரர்கள் இந்த எமெர்ஜிங் பிளேயர் விருதுக்காக போட்டியிட்டனர். ஆனால் இறுதியில் பெங்களூரு அணியை சேர்ந்த ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி விருதை தட்டி சென்றார். கோஸ்வாமிக்கும் ராஜஸ்தான் அணியின் துவக்க வீரரான அஸ்னோத்காருக்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில் ஸ்ட்ரைக் ரேட்டின் அடிப்படையில் கோஸ்வாமி அந்த விருதை தட்டி சென்றார். ஃபினிஷராக களமிறங்கி பெங்களூரு அணியை அரை இறுதிவரை கொண்டுசென்றதில் இவருக்கு பெரும் பங்குண்டு. அப்போதைய காலகட்டத்திலேயே 150 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 


முதல் இரண்டு சீசன்களில் எமெர்ஜிங் பிளேயர் விருது வென்ற ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, ரோஹித் சர்மா 

2009-ல் விருதை வென்ற ரோஹித் சர்மா (டெக்கான் சார்ஜெர்ஸ்)

2007 ஆம் ஆண்டு இந்திய அணி T20 உலகக்கோப்பையை வெல்ல மிகமுக்கிய காரணமாக இருந்தவரும், தற்போதைய இந்திய அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மாதான் இரண்டாவது ஐபில் சீசனில் எமெர்ஜிங் பிளேயர் விருதை வென்றார். டெக்கான் சார்ஜெர்ஸ் அணிக்காக 16 போட்டிகளில் விளையாடிய ரோஹித் சர்மா 362 ரன்களும், பந்து வீச்சில் 11 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார். அதுமட்டுமில்லாமல் மும்பை அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். 2 ஓவர்கள் பந்துவீசிய ரோஹித் சர்மா, வெறும் 6 ரன்களே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளினார். டெக்கான் சார்ஜெர்ஸ் அணி முதல் ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு ரோஹித் சர்மாவின் பங்களிப்பு மகத்தானது.

2010-ல் விருதை வென்ற சவுரப் திவாரி (மும்பை இந்தியன்ஸ்)

2010 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி போட்டிவரை சென்றதற்கு சச்சின் டெண்டுல்கரின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவிற்கு மிடில் ஆர்டரில் களமிறங்கி அதிரடியாக ஆடி அசத்தியவர் சவுரப் திவாரி. 16 போட்டிகளில் விளையாடிய இவர் 419 ரன்கள் குவித்து எமெர்ஜிங் பிளேயர் விருதை தட்டி சென்றார். அந்த தொடரில் மட்டும் மூன்று அரைசதங்கள் அடித்திருந்தார் சவுரப் திவாரி. அதுமட்டுமில்லாமல் இந்த தொடருக்கு பின்புதான் இவர் இந்திய கிரிக்கெட் அணிக்கும் தேர்வானார். சென்னைக்கு எதிரான இறுதி போட்டியில் மட்டுமே அவர் அப்போது சொதப்பினார். அதுவே மும்பை அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. சமீபத்தில்தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் சவுரப் திவாரி.


மும்பை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சவுரப் திவாரி மற்றும் கொல்கத்தாவின் ஸ்பின்னர் இக்பால் அப்துல்லா 

2011-ல் விருதை வென்ற இக்பால் அப்துல்லா (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

முதல் முறையாக கவுதம் காம்பீர் தலைமையில்தான் கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது. அந்த அணியின் துருப்பு சீட்டாக இருந்தவர் இடதுகை ஆர்த்தோடாக்ஸ் ஸ்பின்னர் இக்பால் அப்துல்லா. 12 போட்டிகளில் விளையாடிய இக்பால், 16 விக்கெட்களை அள்ளினார். அதுமட்டுமில்லாமல் 5.09 எகானாமியில் பந்து வீசினார். கொல்கத்தா அணி முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றதற்கு இவர்தான் மிக முக்கிய காரணம். இறுதி கட்டத்தில் வந்து ஒரு சில சிக்ஸர்களையும் விளாசினார். சமீபத்தில் பேட்டி அளித்திருந்த கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் காம்பீர், " நான் பார்த்த சிறந்த ஸ்பின்னர்களில் இக்பால் அப்துல்லாவும் ஒருவர் " என்று கூறினார்.

2012-ல் விருதை வென்ற மந்தீப் சிங் (கிங்ஸ் 11 பஞ்சாப்)

பஞ்சாப் அணிக்காக இதுவரை பல நட்சத்திர வீரர்கள் ஆடியுள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் ஏற்படுத்தாத தாக்கத்தை மந்தீப் சிங் ஏற்படுத்தினார். ஒவ்வொரு வருடமும் பல நட்சத்திர வீரர்கள் அந்த அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டபோதும், அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு வர மிகவும் கஷ்டப்படும். ஆனால் அந்த அணியில் அதிக முறை விளையாடியவர் என்றால் அது மந்தீப் சிங்தான். 2012 ஆம் ஆண்டு சீசனில் 14 போட்டிகளில் 432 ரன்கள் குவித்து அசத்தினார். சராசரியாக ஒவ்வொரு போட்டியிலும் 27 வைத்திருந்தார். அந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக அதிக ரன்கள் அடித்தவரும் இவர்தான். அதுமட்டுமில்லாமல் தனி ஆளாக பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற போராடினார். ஆனால் அந்த போராட்டம் தோல்வியில் முடிந்தது.


2012-ல் விருதை வென்ற பஞ்சாபின் மந்தீப் சிங் மற்றும் 2013-ல் விருதை வென்ற ராஜஸ்தானின் சஞ்சு சாம்சன் 

2013-ல் விருதை வென்ற சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ்)

தற்போது விராட் கோலி, ரோஹித் சர்மாவிற்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்டிருப்பவர் சஞ்சு சாம்சன். 2013 ஆம் ஆண்டுதான் ஐபிஎல் சீசனில் அறிமுகமானார். இதற்கு முன் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு கொல்கத்தா அணியில் இருந்தார். ஆனால் முதல் முறையாக ராஜஸ்தான் அணிக்காகத்தான் களமிறங்கினார். சஞ்சு சாம்சனை ராகுல் டிராவிட்டிற்கு ஸ்ரீசாந்த்தான் அறிமுகம் செய்துவைத்தார். அதன்பின்னரே ஏலத்தில் ராஜஸ்தான் அணி சஞ்சு சாம்சனை எடுத்தது. தான் விளையாடிய முதல் போட்டியிலேயே 63 ரன்கள் குவித்து அசத்தினார் சஞ்சு. இந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடிய சாம்சன், 206 ரன்கள் குவித்தார். 18 வயதில் தனது முதல் எமெர்ஜிங் பிளேயர் விருதை வென்றார். இதன் பிறகே இந்தியா முழுவதும் சஞ்சு சாம்சன் பரவலாக பேசப்பட்டார். தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2014-ல் விருதை வென்ற அக்சர் படேல் (கிங்ஸ் 11 பஞ்சாப்)

தற்போது ஜடேஜாவிற்கு பிறகு சிறந்த இடதுகை ஆர்த்தோடாக்ஸ் ஸ்பின்னர் என்றால் அது அக்சர் படேல்தான். 20 வயதில் பஞ்சாப் அணிக்காக களமிறங்கினார். அந்த சீசனில் பஞ்சாப் அணி இறுதி ஆட்டம்வரை செல்வதற்கு மிகமுக்கிய காரணம் அக்சர் படேல்தான். 16 போட்டிகளில் விளையாடிய இவர் 17 விக்கெட்டுகளை அள்ளினார். ஐபிஎல்லில் நன்கு செயல்பட்டதன் மூலம் 2014 ஆம் ஆண்டு T20 உலகக்கோப்பைக்கும் தேர்வானார். இந்த சீசனில்தான் கடைசியாக பஞ்சாப் அணி இறுதி போட்டிவரை சென்றது. பஞ்சாப் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடியவரும் இவர்தான். அதிக விக்கெட்டுகளை எடுத்தவரும் இவர்தான். 20 வயதில் எமெர்ஜிங் பிளேயர் விருது வாங்கி அசத்தினார்.


பஞ்சாப் அணியின் சிறந்த ஸ்பின்னர் அக்சர் படேல் மற்றும் டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 

2015-ல் விருதை வென்ற ஷ்ரேயஸ் ஐயர் (டெல்லி டேர்டெவில்ஸ்)

தற்போது கொல்கத்தா அணியின் கேப்டனாக இருக்கும் ஷ்ரேயஸ் அறிமுகமானது டெல்லி அணியில்தான். 2015 ஆம் ஆண்டு தொடக்க வீரராக சென்னை அணிக்கு எதிராக களமிறங்கினார். தான் விளையாடிய முதல் போட்டியிலேயே 54 ரன்கள் குவித்து அசத்தினார். ரிஷப் பந்திற்கு பிறகு டெல்லி அணிக்காக அதிக ரன்களை அடித்தவர் ஷ்ரேயஸ் ஐயர்தான். 14 போட்டிகளில் விளையாடிய இவர் 439 ரன்கள் குவித்து அசத்தினார். அதுமட்டுமில்லாமல் பலம் வாய்ந்த மும்பை அணிக்கு எதிராக 83 ரன்கள் அடித்தார். 2015 ஆம் ஆண்டு அதிக ரன்கள் அடித்த இந்தியர்களில் 4 ஆவது இடத்தை பிடித்திருந்தார் ஷ்ரேயஸ்.

2016-ல் விருதை வென்ற முஸ்தபிஸுர் ரஹ்மான் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

2016 ஆம் ஆண்டு தனது முதல் கோப்பையை வென்றது ஹைதராபாத் அணி. அந்த அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் முஸ்தபிஸுர் ரஹ்மான். இன்றுவரை எமெர்ஜிங் பிளேயர் விருது வாங்கிய ஒரே வெளிநாட்டவர் இவர்தான். அப்போதைய அணி வீரர்கள் இறுதி ஓவர்களில் இவர் வீசும் பந்தை அடிக்க முடியாமல் திணறுவர். பங்களாதேஷில் இருந்துவந்து ஐபிஎல் தொடரில் ஒரு கலக்கு கலக்கியவர் முஸ்தபிஸுர் ரஹ்மான். 16 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை எடுத்தார். அதுமட்டுமில்லாமல் 6.07 எகானாமியில் பந்து வீசினர். ஹைதராபாத் அணி கோப்பையை வென்றதற்கு மிகமுக்கிய காரணம் முஸ்தபிஸுர் ரஹ்மான்.


ஹைதராபாத் அணியின் முஸ்தபிஸுர் ரஹ்மான் மற்றும் குஜராத்தின் பாசில் தம்பி 

2017-ல் விருதை வென்ற பாசில் தம்பி (குஜராத் லயன்ஸ்)

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளின் தடையினால் புதிதாக சேர்க்கப்பட்ட அணிதான் குஜராத் லயன்ஸ். சுரேஷ் ரெய்னா தலைமையிலான இந்த அணி 2017 ஆம் ஆண்டு படுபயங்கரமாக சொதப்பியது. அந்த அணி பேட்டிங்கில் பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்தாலும், பந்துவீச்சில் பலவீனமாக காணப்பட்டது. அப்படி பந்துவீச்சில் தடுமாறி கொண்டிருந்த குஜராத் அணிக்கு ஒரே ஆறுதலாய் இருந்தது பாசில் தம்பி மட்டும்தான். கேரளாவை சேர்ந்த இவர் 14 போட்டிகளில் 12 விக்கெட் எடுத்து அசத்தினார். அதன்பிறகு பல அணிகளில் இவர் விளையாடினாலும், குஜராத் அணியில் செயல்பட்டதுபோல் சிறப்பாக செயல்படவில்லை.

2018-ல் விருதை வென்ற ரிஷப் பந்த் (டெல்லி டேர்டெவில்ஸ்)

டெல்லி அணியில் இன்றுவரை சிறந்த வீரர் என்றால் அது ரிஷப் பந்த்தான். 2018 ஆம் ஆண்டு சீசனில் தனது முதல் எமெர்ஜிங் பிளேயர் வீரருக்கான விருதை வென்றார். 14 போட்டிகளில் விளையாடி 684 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் இரண்டாம் இடமும் பிடித்தார். மூன்று அல்லது நான்காவது வரிசையில் களமிறங்கும் ரிஷப் பந்த், சுமார் 173 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார். குறிப்பாக ஹைதராபாத் அணிக்காக 63 பந்துகளில் 128 ரன்கள் குவித்து, இந்திய அணி தேர்வாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். இன்றுவரை எமெர்ஜிங் பிளேயர் விருது வென்றவர்களில் இவர் குவித்த 684 ரன்களே அதிகபட்சமாக இருக்கின்றது.


எமெர்ஜிங் பிளேயர் விருதை வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ரிஷப் பந்த் மற்றும் கொல்கத்தா அணியின் சுப்மன் கில் 

2019-ல் விருதை வென்ற சுப்மன் கில் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

U-19 உலகக்கோப்பையை வென்ற கையோடு ஐபிஎல் தொடருக்கு வந்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் சுப்மன் கில். ஆரம்பத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கிய இவர், இறுதியில் தொடக்க வீரராக வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 10 போட்டிகளில் 296 ரன்கள் அடித்து, முக்கியமான போட்டிகளில் எல்லாம் அரைசதம் அடித்து அசத்தினார். சராசரியாக ஒவ்வொரு போட்டியிலும் 32 வைத்திருந்தார். அதன்பிறகு கொல்கத்தா அணிக்காக ஒரு சில போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருந்தாலும், இந்த சீசன்தான் அவருக்கு மிகப்பெரிய அடித்தளமாக இருந்தது. இவரின் செயல்பாட்டை பார்த்து அப்போதைய இந்திய கேப்டன் "இன்னொரு சூப்பர்ஸ்டார் உருவாகிறார்" என்று கூறினார்.

2020-ல் விருதை வென்ற தேவ்தத் படிக்கல் (ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்)

கர்நாடக பிரீமியர் லீக்கில் அசத்திய தேவ்தத் படிக்கல், அடிப்படை விலை 20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். தனது முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து அனைவரையும் ஆச்சரியபடுத்தினார் தேவ்தத் படிக்கல். விராட் கோலியுடன் துவக்க வீரராக களமிறங்கி அதிரடியாக ஆடினார். 15 போட்டிகளில் விளையாடிய தேவ்தத் படிக்கல், 473 ரன்கள் குவித்தார். அதுமட்டுமில்லாமல் தனது அறிமுக தொடரிலேயே ஐந்து அரைசதங்களும் அடித்திருந்தார். பெங்களூர் அணி பிளே ஆஃப் சுற்றுவரை சென்றதற்கு தேவ்தத் படிக்கல்லின் ஆட்டம் மிகமுக்கியமாக இருந்தது.


பெங்களூரின் தேவ்தத் படிக்கல் மற்றும் சென்னை அணியின் ருதுராஜ் கைக்வாட் 

2021-ல் விருதை வென்ற ருதுராஜ் கைக்வாட் (சென்னை சூப்பர் கிங்ஸ்)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல சாம்பியன் பட்டங்கள் வென்றிருந்தாலும், 2020 ஆம் ஆண்டுவரை இந்த எமெர்ஜிங் பிளேயர் விருதை வெல்லவில்லை. இந்த விருதை முதன்முதலாக வென்றவர் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கைக்வாட்தான். 2020 சீசனில் படுமோசமாக சொதப்பிய சென்னை அணி, புதிய உத்வேகத்தில் 2021 ஆம் ஆண்டு சீசனில் களமிறங்கியது. அபாரமாக செயல்பட்ட சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. சென்னை அணி கோப்பையை வெல்ல மிகமுக்கிய காரணமாக இருந்தவர் ருதுராஜ் கைக்வாட். 16 போட்டிகளில் விளையாடிய இவர் 635 ரன்கள் குவித்தார். அதுமட்டுமில்லாமல் ஆரஞ்சு நிற தொப்பியை வென்றும் அசத்தினார். இங்கிருந்துதான் ருதுராஜ் கைக்வாட்டின் எழுச்சி ஆரம்பித்தது.

2022-ல் விருதை வென்ற உம்ரான் மாலிக் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

இந்திய ஆடுகளங்கள் எப்பொழுதும் ஸ்பின்னர்களுக்கே சாதகமாக இருக்கும். அதனால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் அதிகபட்ச வேகமே 145 கி.மீ - 150 கி.மீ வேகத்தில்தான் இருக்கும். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ஒரு இந்திய வேகப்பந்து வீச்சாளர் 157 கி.மீ வேகத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அவர்தான் உம்ரான் மாலிக். அதிவேகமாக பந்துவீசி எதிரணியை மிரட்டினார். 10 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை அள்ளினார். இதுவே இவரை இந்திய அணிக்கு அழைத்து சென்றது.

2023-ல் விருதை வென்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ராஜஸ்தான் ராயல்ஸ்)

ராஜஸ்தான் அணிக்காக அதிரடியாக ஆடி இந்திய அணிக்குள் நுழைந்தவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். தொடர்ந்து தனது அதிரடி ஆட்டத்தின் மூலமாக இந்திய தேர்வாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். அதுமட்டுமில்லாமல் ராஜஸ்தான் அணிக்காக ஓர் சீசனில் அதிக ரன் அடித்த இந்தியரும் இவர்தான். 14 போட்டிகளில் விளையாடிய இவர் 625 ரன்கள் அடித்தார். இதில் 4 அரைசதங்களும் 1 சதமும் அடங்கும். தற்போது இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருகிறார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.


ஹைதராபாத்தின் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் மற்றும் ராஜஸ்தானின் பாக்கெட் டைனமைட் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 

2024-ல் எந்த வீரர் எமெர்ஜிங் பிளேயர் விருது வாங்குவார்?

இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள ஐபிஎல்லில் பல அறிமுக வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். குறிப்பாக நிதிஷ் குமார் ரெட்டி இதுவரை 219 ரன்கள் அடித்து, பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சிறந்த ஆல்ரவுண்டராகவும் செயல்பட்டு வருகிறார். இவருக்கே எமெர்ஜிங் பிளேயர் விருது கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக பல கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர். அதன்பிறகு சென்னை அணிக்காக ஆடிவரும் இலங்கையை சேர்ந்த பதிரானா, 6 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார். சென்னை அணியின் பந்துவீச்சுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தார். அடுத்ததாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேக் மெக் பிரேசர், பவர்பிளேயில் வந்து எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து வருகிறார். 6 போட்டிகளில் விளையாடிய இவர் 259 ரன்கள் குவித்திருக்கிறார். இவர்கள் மூவர் இடையேதான் எமெர்ஜிங் பிளேயர் விருதுக்கான போட்டி நிலவுகிறது. இறுதியில் யார் விருதை தட்டி செல்வார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்