ராகுல் டிராவிடிடம் பாராட்டு பெற்ற சாய் சுதர்சன் யார்?

வரும் ஆண்டுகளில் மற்றொரு இளம் வீரர் டீம் இந்தியாவில் இடம் பெற முழு தகுதியை பெற்றுள்ளார் என்று ஒரு வீரரை வெகுவாக பாராட்டியுள்ளார் இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.

Update: 2024-01-01 18:30 GMT
Click the Play button to listen to article

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மூலம் கடந்த சில ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியில் பல முதல்தர கிரிக்கெட் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் பலர் இன்று இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக மாறிவிட்டனர். சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன் மற்றும் முகேஷ் குமார் போன்ற வீரர்கள்தான் இதற்கு உதாரணங்கள். வரும் காலங்களில் இந்திய அணிக்குள் நுழையக்கூடிய இன்னும் சில வீரர்களும் உள்ளனர். வரும் ஆண்டுகளில் மற்றொரு இளம் வீரர் டீம் இந்தியாவில் இடம் பெற முழு தகுதியை பெற்றுள்ளார் என்று ஒரு வீரரை வெகுவாக பாராட்டியுள்ளார் இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட். அதாவது நாம் பேசுவது குஜராத் டைட்டன்ஸ் அணியின் இடது கை பேட்ஸ்மேன் சாய் சுதர்ஷன் பற்றிதான். தற்போது இந்திய அணியில் இடம்பிடித்து தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக முதல் இரண்டு ஓடிஐ-களில் அரை சதம் அடித்து அசத்தினார். எனவே அவர் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக பல கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். யார் இந்த சாய் சுதர்சன்? இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிப்பாரா என்பதை பற்றியெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.


சிறுவயது மற்றும் குடும்பத்தினருடன் சாய் சுதர்சன்

யார் இந்த சாய் சுதர்சன்?

2001 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி பிறந்தார் சாய் சுதர்சன். சாய் சுதர்சனின் கிரிக்கெட் வாழ்க்கை ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அதாவது பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் தொடங்கியது. அது அவரை முதல் டிவிஷன் போட்டிக்கு கொண்டு சென்றது. டிவிஷன் போட்டிகளில் ஆல்வார்பெட் கிரிக்கெட் கிளப் அணிக்காக விளையாடினார். தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சனின் தந்தை ஒரு தடகள வீரர், அவரின் தாயார் மாநில அளவிலான வாலிபால் வீராங்கனை. சாய் சுதர்சனின் உடல் எடை, உணவு எல்லாவற்றுக்கும் அவருடைய அம்மாதான் அவருக்கு பயிற்சியாளர். ஆனால் மகன் விளையாடும் ஆட்டத்தை அம்மா பார்க்க மாட்டாராம். மேட்ச் முடியும் வரை பூஜை அறையில்தான் இருப்பாராம்.


டிஎன்பிஎல் திண்டுக்கல் ட்ராகன்ஸ் - லைகா கோவை கிங்க்ஸ் - ரஞ்சி கோப்பை - விஜய் ஹசாரே ட்ராபி போட்டிகளில் சாய் சுதர்சன்

முதல்தர போட்டிகளில் அறிமுகம்

சாய் சுதர்சன் முதன்முதலில் தமிழ்நாடு பிரீமியர் லீகில்தான் அறிமுகமானார். திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணிக்காக விளையாடிய சாய் முதல் லீகிலேயே பிரமாதமாக ஆடினார். அது அவரை தமிழ்நாடு அணிக்கு கொண்டு சென்றது. சென்னையைச் சேர்ந்த சாய் சுதர்சன் 2021ல் தமிழ்நாடு அணிக்காகத் தனது முதல் விஜய் ஹசாரே போட்டியில் விளையாடினார். பிறகு தனது முதல் T20 முதல்தர போட்டியை 2021-22ல் சையத் முஷ்தாக் அலி கோப்பைக்காக விளையாடினார். அதன் தொடர்ச்சியாக கடந்த விஜய் ஹசாரே தொடரில் 8 இன்னிங்ஸ்களில் 610 ரன்களை குவித்தார். இதில், மூன்று சதங்களும் இரண்டு அரை சதங்களும் அடங்கும். அந்தத் தொடரில் அதிக ரன் அடித்தவர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை சாய் சுதர்சன் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ரஞ்சி கோப்பை தொடருக்கான தமிழக அணியில் இடம் பிடித்தார். ரஞ்சி கோப்பையில், தான் அறிமுகமான முதல் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 273 பந்துகளில் 18 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என 179 ரன்கள் விளாசினார். ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் அவர், 7 ஆட்டங்களில் 63 சராசரியுடன் 572 ரன்களை விளாசி அனைவரது பார்வையையும் தன் பக்கம் இழுத்தார். தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி 20 தொடரில் 2021-ம் ஆண்டு சீசனில் கோவை கிங்ஸ் அணிக்காக களமிறங்கிய சாய்,  முதல் ஆட்டத்திலேயே 5 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் விளாசி முத்திரை பதித்தார். இந்த சீசனில் அவர், 8 ஆட்டங்களில் 143.77 ஸ்டிரைக் ரேட்டுடன் 358 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 2-வது இடத்தையும் பிடித்தார். இது அவரை ஐபிஎல் தொடருக்கு கொண்டு சென்றது.


ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சாய் சுதர்சன் விளையாடிய தருணங்கள்

ஐபிஎல் தொடரில் ஆதிக்கம்

முதல்தர போட்டிகளில் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்திய சாய் சுதர்சன் மீது குஜராத் டைட்டன்ஸ் அணியின் பார்வை விழுந்தது. 2022 ஐபிஎல் தொடரில் அவரை அடிப்படை தொகையான ரூ.20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்திருந்தது குஜராத். குஜராத் அணியின் ஆல்ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால் அவருக்கு மாற்று வீரராக சாய் சுதர்சனை அணிக்குள் கொண்டு வந்தது குஜராத். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தில் 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 31 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அங்கிருந்து ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார் சாய் சுதர்சன். அந்த சீசனில் 5 ஆட்டங்களில் விளையாடி 36.25 சராசரியுடன் 145 ரன்கள் சேர்த்தார். இதில் ஒரு அரை சதமும் அடங்கும். அதிகபட்ச ஸ்கோராக 65* ரன்கள் அடித்திருந்தார். இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் சாய் சுதர்சன் முக்கிய வீரராக திகழ்ந்தார். லீக் சுற்றின் தொடக்கத்தில் வெற்றிக்கான சில பயனுள்ள பங்களிப்புகளை வழங்கினார். முதல் 6 ஆட்டங்களில் இடம் பெற்ற அவர், 2 அரை சதங்கள் அடித்திருந்தார். ஆனால் அடுத்த 5 ஆட்டங்களில் சாய் சுதர்சன் களமிறக்கப்படவில்லை. எனினும் லீக் சுற்றின் இறுதிப் பகுதியில் சாய் சுதர்சன் மீண்டும் களமிறக்கப்பட்டார். ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில், 47 ரன்களும், தொடர்ந்து மும்பை அணிக்கு எதிரான தகுதி சுற்று 2-ல் 31 பந்துகளில் 43 ரன்களும் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார். தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட சாய் சுதர்சன், பெரிய மேடையான இறுதிப் போட்டியில் எந்த வித நெருக்கடியையும் உணராமல் பேட்டை சுழற்றிய விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. களத்திற்குள் இறங்கியது முதல் கடைசி ஓவர் வரை சிஎஸ்கே பந்து வீச்சாளர்களை கடும் அழுத்தத்திலேயே வைத்திருந்தார். தனது சிறப்பான பேட்டிங்கால் இந்திய தேர்வுக்குழுவினரின் பார்வையை தன்பக்கம் திரும்ப வைத்தார்.


இந்திய அணியில் சாய் சுதர்சன்

இந்தியாவிற்காக அறிமுகம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஜோஹனஸ்பர்க் நகரில் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற அந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இந்தியாவுக்காக 400வது வீரராக அறிமுகமான சாய் சுதர்சன் முதல் போட்டியில் ருதுராஜுடன் தொடக்க வீரராக களமிறங்கினார். அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தியும் கொண்டார். தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 117 ரன்களை சேசிங் செய்யும் போது முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அட்டகாசமாக தன்னுடைய கேரியரை துவங்கினார். அவர் மொத்தம் 9 பவுண்டரியுடன் 55* ரன்கள் குவித்து எளிதாக வெற்றி பெற உதவினார். அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே அரை சதமடித்த 4வது இந்திய துவக்க வீரர் என்ற சாதனையையும் சாய் சுதர்சன் படைத்தார். பிறகு இரண்டாவது ஆட்டத்தில் 66 ரன்கள் குவித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்ட சாய் சுதர்சன் அந்த தொடரில் தொடர்நாயகன் விருது வென்றார். இந்திய அணியின் எதிர்காலமாக சாய் சுதர்சன் இருப்பார் என்று பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் நிபுணர்களும் கூறுகின்றனர். வருங்கால இந்திய அணியின் தூணாக சாய் சுதர்சன் இருப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்