நட்சத்திர வீரர்களுடன் தொடங்கவிருக்கிறது இந்த ஆண்டு ரஞ்சிக் கோப்பை தொடர்! வெற்றி யாருக்கு?

வரலாற்று சிறப்புமிக்கத் தொடர் எங்கிருந்து தொடங்கியது? இத்தனை வருடகால பாரம்பரியம்மிக்க ரஞ்சிக் கோப்பையை பற்றியும் அதன் வரலாறையும் இக்கட்டுரையில் காணலாம்.

Update:2023-11-14 00:00 IST
Click the Play button to listen to article

இந்தியாவில் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்றால் ரஞ்சிக் கோப்பையில் விளையாடியிருக்க வேண்டும். அப்படி இந்திய அணியின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படும் ரஞ்சி கிரிக்கெட்டானது டெஸ்ட் ஃபார்மேட்டை போன்றது. ரஞ்சி கிரிக்கெட்டின் ஒரு ஆட்டம் 5 நாட்கள் நடைபெறும். ஒருவேளை போட்டி ட்ராவானால் முதல் இன்னிங்சில் எந்த அணி முன்னிலை வகித்ததோ அந்த அணிக்குத்தான் கூடுதல் புள்ளி வழங்கப்படும். சுமார் மூன்று மாதங்கள் நடக்கும் இந்தத் தொடர் வரலாற்று சிறப்புமிக்கத் தொடராகும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் போட்டு போட்டிக் கொண்டு இந்தத் தொடரில் விளையாடும். நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் ரஞ்சி கோப்பை தொடர் நடக்கும். தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிவரும் அனைத்து வீரர்களும் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடியவர்கள்தான். இத்தகைய வரலாற்று சிறப்புமிக்கத் தொடர் எங்கிருந்து தொடங்கியது? இத்தனை வருடகால பாரம்பரியம்மிக்க ரஞ்சிக் கோப்பையை பற்றியும் அதன் வரலாறையும் இக்கட்டுரையில் காணலாம்.


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் ரஞ்சி போட்டி

ரஞ்சிக் கோப்பையின் தொடக்கம்

தொடக்கத்தில் தேசிய அளவு முதல்தரத்தை ஆரம்பித்தவர் பிசிசிஐ-ன் முன்னாள் தலைவர் அந்தோணி ஸ்டானிஸ்லாஸ் டிமெல்லோதான். இவர்தான் ரஞ்சித் தொடரை 1934 ஆம் ஆண்டு ஷிம்லாவில் அறிமுகப்படுத்தினார். ஆனால் அப்பொழுது ரஞ்சி கிரிக்கெட் என்று பெயரிடப்படவில்லை. இதற்கு ‘கிரிக்கெட் சாம்பியன்ஷிப் ஆப் இந்தியா’ என்றுதான் பெயர் இருந்தது. பின் ரஞ்சி கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு முன் கிரிக்கெட்டரும் பாட்டியாலா மஹாராஜாவுமான குமார் ஸ்ரீ ரஞ்சித்சிங் நினைவாக ரஞ்சி கிரிக்கெட் என்று பெயர் மாற்றப்பட்டது. இவர்தான் இந்தியாவின் முதல் டெஸ்ட் கிரிக்கெட்டர். அதுமட்டுமில்லாமல் ‘இந்தியாவின் கிரிக்கெட் தந்தை’ என அழைக்கப்படுகிறார் ரஞ்சித் சிங். இவர் கவுண்டி கிரிக்கெட்டில் சசெக்ஸ் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் ரஞ்சி ஆட்டம் 1934 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி மெட்ராஸிற்கும் மைசூருக்கும் இடையே சேப்பாக்கத்தில் நடந்தது. இதில் மெட்ராஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. மெட்ராஸ் அணியில் 11 விக்கெட்டுகளை அள்ளிய எ.ஜி.ராம்சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார்.


கிரிக்கெட்டரும் பாட்டியாலா மஹாராஜாவுமான குமார் ஸ்ரீ ரஞ்சித் சிங்

ரஞ்சி ஃபார்மட்டும் தற்போதைய அணிகளும்

ரஞ்சியின் ஆரம்ப காலகட்டத்தில் West zone, South zone, North zone and East zone என்று நான்கு அணிகள் இருந்தன. ஒவ்வொரு சோனிலிருந்தும் பல முக்கிய நகரங்களிலிருந்து வீரர்கள் வருவார்கள். எடுத்துக்காட்டாக சவுத் சோனிலிருந்து தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களிருந்து வீரர்கள் வருவார்கள். அதேபோல் ஒவ்வொரு சோனிலும் நடக்கும். 1952 ஆம் ஆண்டு புதிதாக சென்ட்ரலும் சேர்க்கப்பட்டது. 1935 ஆம் ஆண்டிற்குப் பிறகே தனித்தனி மாநிலங்களாக பங்கேற்றனர். ஆரம்பத்தில் 28 மாநிலங்கள் பங்கேற்றன. தற்போது 38 அணிகள் கலந்துகொள்கின்றன.

பம்பாயின் ஆதிக்கம்

இதுவரை 88 ஆண்டுகள் தொடர்ச்சியாக ரஞ்சித் தொடர் நடந்து வருகிறது. 2020-21 ஆம் ஆண்டிருக்கான ரஞ்சித் தொடர் மட்டும் கொரோனா பெரும்தொற்றால் நடைபெறாமல் இருந்தது. 1934 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரஞ்சித் தொடரின் முதல் சாம்பியனானது பம்பாய் அணி. அந்தப் போட்டியில் வடக்கு இந்தியாவிற்கு எதிராக விளையாடிய பம்பாய் அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்தது. முதலில் சற்று தடுமாறிய பம்பாய் அணி 266 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பி.ஜே.சுர்ரி 58 ரன்கள் அடித்தார். ஆனால் பந்துவீச்சில் மிரட்டியது பம்பாய். 


பம்பாய் அணியின் ஆதிக்கம்

முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை எடுத்தார் விஜய் மெர்ச்சண்ட். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய பம்பாய் 208 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ரஞ்சியின் முதல் சாம்பியனானது பம்பாய். அங்கிருந்துதான் பம்பாயின் எழுச்சி ஆரம்பித்தது. இதுவரை 88 முறை நடந்துள்ள ரஞ்சித் தொடரில் 41 முறை சாம்பியனாகி அசத்தியிருக்கிறது பம்பாய் அணி. அந்த அணியிலிருந்துதான் பல சாம்பியன்கள் உருவானார்கள்.

ரஞ்சியின் சாம்பியன்கள்

88 வருடங்கள் நடக்கும் ரஞ்சித் தொடரில் பல சாதனைகள் நடந்துள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது, மும்பை அணி 41 முறை டைட்டில் வென்றதுதான். உலகக் கிரிக்கெட்டில் இதுவரை எந்த அணியும் 41 முறை சாம்பியன் பட்டம் வென்றதில்லை. 1934 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை மும்பையின் ஆதிக்கம் தொடருகிறது.


வாசிம் ஜாபர் மற்றும் ராஜிந்தர் கோயல்

ரஞ்சித் தொடரின் அதிக ரன்களை மும்பை மற்றும் விதர்பா அணிகளுக்கு விளையாடிய வாசிம் ஜாபர் அடித்துள்ளார். 1996 ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வரும் வாசிம் ஜாபர் இதுவரை சுமார் 12038 ரன்கள் குவித்துள்ளார். தனி நபர் சாதனையில் அதிக ரன்களை மஹாராஷ்டிராவைச் சேர்ந்த நிம்பல்கர், அதாவது 443* அடித்து சாதனை படைத்துள்ளார்.

அதன்பிறகு பாம்பாயின் விஜய் மெர்ச்சண்ட் அதிக ஆவரேஜ் வைத்துள்ளார். 98.35 ஆவரேஜ் வைத்திருக்கும் விஜய் மெர்ச்சண்ட்டின் சாதனை இன்று வரை முறியடிக்கப்படாமலேயே இருக்கிறது. பந்துவீச்சில் தற்போது வரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதில் முதலிடம் வகிக்கிறார் பஞ்சாபின் ராஜிந்தர் கோயல். 639 விக்கெட்டுகளை அள்ளி இன்றுவரை முதலிடம் வகிக்கிறார். சிறந்த பந்துவீச்சாக பெங்காலின் பிரேமங்ஷு சட்டர்ஜீ 20 ரன்களை விட்டுக் கொடுத்து 10 விக்கெட்டுகளை அள்ளினார். இந்த சாதனை நிகழ்ந்து 67 ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை.


ரஞ்சிக் கோப்பை

2023-24 ரஞ்சித் தொடரில் எந்த அணி ஜெயிக்கும்?

2023-24 சீசன் கூடிய விரைவில் தொடங்க இருக்கிறது. இதில் ஒவ்வொரு மாநில அசோஷியேஷன்களும் தங்களது அணிகளை பிரபலப்படுத்துகின்றன. ஒவ்வொரு அணியும் தனது கேப்டனை தற்போது அறிவித்துள்ளது. இதில் நட்சத்திர வீரர்களான ஹனுமா விஹாரி, சஞ்சு சாம்சன், அம்பத்தி ராயுடு, மயங்க அகர்வால், அஜிங்கியா ரஹானே, வ்ரிதிமான் சாஹா மற்றும் சாய் கிஷோர் உள்ளிட்டோர் அவரது மாநில அணிகளை வழிநடத்த உள்ளனர். இந்த முறை ஒவ்வொரு அணியிலும் பல நட்சத்திர பட்டாளங்கள் உள்ளதால் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்திருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்