இந்திய கிரிக்கெட்டையே மாற்றியமைத்த திருஷ் காமினி! - யார் இவர்?

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். அனைத்து திறமையும் இருந்தும், ஃபிட்னஸ் பிரச்சினையால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாக உள்ளது.

Update:2023-12-12 00:00 IST
Click the Play button to listen to article

இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் மிதாலிராஜ் மற்றும் ஜூலன் கோஸ்வாமி. பேட்டிங்கில் பொறுமையாக ஆடி இந்திய அணியின் தூணாக செயல்பட்டவர் மிதாலிராஜ். அதே போல பந்துவீச்சில் மிக நேர்த்தியான லெந்தில் பந்துபோட்டு விக்கெட்களை எடுத்து எதிரணியின் பேட்டிங்கை முற்றிலும் கலைத்துவிடுவார் கோஸ்வாமி. சீராக போய்க்கொண்டிருந்த இந்திய அணி ஆட்டத்தை அதிரடி ஆட்டத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர் தமிழகத்தின் திருஷ் காமினி. இடதுகை ஓப்பனிங் பேட்ஸ்மேனான காமினி, சேவாக்கை போன்று முதல் பந்தில் பவுண்டரி அடித்து ஆரம்பிக்க கூடியவர். 2013 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் சதமடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதுமட்டுமில்லாமல் 2007 ஆம் ஆண்டு பிசிசிஐ-யிடம் இருந்து சிறந்த வீராங்கனை என்கிற விருதையும் வென்றார். திருஷ் காமினி விளையாடிய சிறிது காலத்திலேயே இந்திய அணியின் பேட்டிங் முறையை மாற்றி அமைத்தார். குறுகிய காலத்தில் பல சாதனைகளை செய்தார் காமினி. யார் இந்த திருஷ் காமினி? ஏன் திருஷ் காமினியால் இந்திய அணியில் நீண்ட காலம் நீடிக்க முடியவில்லை? என்பதை பற்றியெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.


தனது தந்தை மற்றும் பயிற்சியின்போது திருஷ் காமினி

திருஷ் காமினியின் ஆரம்ப காலம்

தனது 6 வயதில் கிரிக்கெட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார் காமினி. இவரது ஆர்வத்தை பார்த்த காமினியின் தந்தை முருகேசன் இவருக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார். 6 வயதிலேயே இவருக்கு பேட் வாங்கி கொடுத்து ஊக்கமளித்து தினமும் காலையில் இவருக்கு பயிற்சி கொடுப்பாராம் முருகேசன். காமினியின் தந்தை முருகேசன் முன்னாள் தேசிய ஹாக்கி வீரர் என்பது கூடுதல் தகவல். காமினி, 8 வயதில் தமிழ்நாடு அணிக்காக U-16 போட்டியில் கலந்துக்கொண்டார். அதன்பிறகு தனது 10 வயதில் தமிழ்நாடு பெண்கள் சீனியர் அணியில் இடம் பிடித்து தேசிய தேர்வு குழுவின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த திருஷ் காமினிக்கு, பார்டர் கவாஸ்கர் ஸ்காலர்ஷிப் மூலம் ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பிரிஸ்பேனிலுள்ள எக்சலன்ஸ் ஆஃப் ட்ரைனிங் சென்டரில் பயிற்சி பெற ஆரம்பித்தார் காமினி.


அறிமுகப் போட்டியும் - உலகக் கோப்பையில் சதமடித்த தருணமும்

சர்வதேச தொடக்கம்

தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் அசத்தி வந்த காமினிக்கு பிசிசிஐ தரப்பில் 2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீராங்கனை என்கிற விருது கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தனது 15 வயதில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தனது முதல் சர்வதேச போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொண்டார் காமினி. தொடக்க வீராக களம் கண்ட காமினி, பேட்டிங்கில் 24 பந்தில் 22 ரன்களும், பந்துவீச்சில் 3 விக்கெட்களையும் சாய்த்து ஆட்டநாயகன் விருது வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அது போல, தான் அறிமுகமான முதல் சர்வதேச தொடரிலேயே பிளேயர் ஆஃப் தி டோர்னமெண்ட் விருதும் வென்றார். தொடர்ச்சியாக பேட்டிங், பௌலிங் என்று இரண்டிலும் அசத்தி வந்த காமினிக்கு திருப்பு முனையாக அமைந்தது 2013 ஆம் ஆண்டு உலகக்கோப்பைதான். அந்த உலகக்கோப்பையில் 38 வருட உலகக்கோப்பை வரலாற்றில் முதன் முறையாக சதமடித்து அசத்தினார். மும்பையிலுள்ள ப்ராபோர்னே மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் 146 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார். இதற்கு முன்பு மிதாலிராஜ் அடித்த 91 ரன்களே ஓர் இந்திய வீராங்கனையின் அதிகபட்ச ரன்னாக இருந்தது.


டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியபோது

டெஸ்ட் அரங்கில் சாதனை

தொடர்ந்து ஓடிஐ போட்டிகளில் அசத்தி வந்த காமினிக்கு 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. முதல் டெஸ்டில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த காமினி, இரண்டாவது டெஸ்டில் விஸ்வரூபம் எடுத்தார். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த இந்த ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்கிய திருஷ் காமினி 430 பந்துகளை சந்தித்து 192 ரன்கள் அடித்தார். இரட்டை சதம் அடித்திருந்தால் பெண்கள் டெஸ்ட் அரங்கில் முதல் இரட்டை சதம் அடித்த வீராங்கனை என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகிருப்பார். ஆனால் 8 ரன்களில் அந்த சாதனையை தவறவிட்டார். அதே போல் இன்றுவரை இவர் அடித்த 192 ரன்களே ஒரு தொடக்க ஆட்டக்காரர் அடித்த அதிக ரன்னாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்னொரு சாதனையும் இந்த டெஸ்ட் போட்டியில் நிகழ்ந்தது. பூணம் ரவுத்துடன் இணைந்து 275 ரன்கள் பார்ட்னெர்ஷிப் அமைத்தார். இதுவே இன்றளவும் இந்திய அணியில் பார்ட்னெர்ஷிப்பில் அதிக ரன்களாக உள்ளது. பூணம் ரவுத்தும் 130 ரன்கள் அடித்தார். ஆனால் பல சாதனைகள் படைக்கப்பட்ட இந்த டெஸ்ட் போட்டிக்கு பிறகு திருஷ் காமினி விளையாடவில்லை.


ஸ்டார் ஸ்போர்ட்ஸில் வர்ணனையாளராகவும், பேட்டிங்கிலும் காமினியின் புகைப்படங்கள்

இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிக்க தவறிய காமினி

சிறப்பாக செயல்பட்டு வந்த காமினிக்கு காயங்கள் பெரும் தொல்லையாக இருந்து வந்தன. அடிக்கடி காயங்கள் ஏற்பட்டு வந்ததால் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியாத சூழ்நிலை இருந்துவந்தது. காயத்தால் சிக்கித்தவித்த காமினிக்கு பதிலாக களமிறங்கியவர்தான் ஸ்ம்ரிதி மந்தனா. அதன் பிறகு அணியில் நிரந்தர இடம்பிடிக்க முடியாமல் திணறினார் காமினி. இவரது இடத்தை இளம் வீரர் மந்தனா கெட்டியாக பிடித்து கொண்டார். அதன்பிறகு காமினி சர்வதேச போட்டிகளில் பெரிதாக விளையாடவில்லை. தற்பொழுது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். அனைத்து திறமையும் இருந்தும், ஃபிட்னஸ் பிரச்சினையால் காமினியின் கிரிக்கெட் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாக உள்ளது. மீண்டும் தனது ஃபிட்னஸை சரிசெய்து கொண்டு இந்திய அணிக்கு திரும்புவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்