ஒலிம்பிக்கில் வெற்றி கணக்கை தொடங்கிய இந்தியா! பெண்கள் துப்பாக்கிச்சுடுதலில் முதல் பதக்கம்!
பாரிஸில் 2024 ஒலிம்பிக் போட்டிகள் 26 ஜூலை 2024 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்தியா சார்பில் 117 வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். முதற்கட்டமாக ஃபுட்பால், ஹேண்ட் பால், ரக்பி ஆகிய ஆட்டங்கள் தொடங்கிய நிறைவு பெற்றுள்ளன.
பாரிஸில் 2024 ஒலிம்பிக் போட்டிகள் 26 ஜூலை, கோலாகல கொண்டாட்டத்துடன் தொடங்கின. ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியா சார்பில் 117 வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் இந்த ஒலிம்பிக்கில் கலந்து கொண்டுள்ளனர். முதற்கட்டமாக ஃபுட்பால், ஹேண்ட் பால், ரக்பி ஆகிய ஆட்டங்கள் தொடங்கி நிறைவு பெற்றுள்ளன. மொத்தமாக சர்வதேச அளவில் 10,200-க்கும் அதிகமான வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்ளும் இதில், 32 விளையாட்டுகளில் 329 பிரிவாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. 206 நாடுகள் இந்த போட்டிகளில் பங்கேற்று தங்கள் அணியின் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. கடந்த 100 ஆண்டுகளில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ், கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
அணிவகுப்பில் இந்திய கொடியை ஏந்தி சென்ற சரத் கமல் மற்றும் பி.வி. சிந்து
வீரர்களின் அணிவகுப்பு :
ஒலிம்பிக் போட்டிகளில் ரசிகர்களை முதலில் கவரக்கூடியது விளையாட்டு வீரர்களின் அணிவகுப்புதான். இதில் ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்த வீரர்களும், தங்களது தேசியக்கொடியை ஏந்தியவாறு அணிவகுப்பில் ஈடுபடுவர். முதல் நாடாக ஒலிம்பிக்கை அறிமுகப்படுத்திய கிரீஸ் நாட்டு வீரர்களும், கடைசி நாடாக போட்டியை நடத்தும் பிரான்ஸ் வீரர்களும் அணிவகுப்பில் நடந்தனர். அகர வரிசைப்படி இந்தியாவிற்கு 84வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இருவரும் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.
படகில் நடந்த தொடக்க விழாவில் இந்திய அணியினர்
படகுகளில் பிரமாண்ட அணிவகுப்பு :
எப்பொழுதும் தொடக்கவிழா நிகழ்ச்சிகள் மைதானத்தில்தான் நடைபெறும். ஆனால், இம்முறை பாரிஸ் நகரில் உள்ள செய்ன் நதிக்கரையில் தொடக்க விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க ஆற்றில் மற்றும் விளையாட்டு அரங்கத்திற்கு வெளியே நடைபெறும் முதல் ஒலிம்பிக் தொடக்க விழா இதுவாகும். மூன்று மணி நேரம் மற்றும் 45 நிமிடங்கள் விழா நடைபெற்றது. இதில் 206 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 7,000 பேர், ஆறு கிலோமீட்டர் (3.7 மைல்) தூரத்திற்கு 94 படகுகளில் பயணம் செய்தனர். அதோடு விழா நடைபெறும் பகுதி, கண்களை கவரும் விதமாக வண்ண விளக்குகளாலும், லேசர் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நடனம், பாடல், ட்ரோன் காட்சி போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த விழாவை உலகம் முழுவதும் குறைந்தது ஒரு பில்லியன் மக்களாவது பார்த்திருப்பார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலையடுத்து ஒலிம்பிக் அணிவகுப்பில் பங்கேற்காத ரஷ்யா
ரஷ்யாவுக்கு அனுமதி மறுப்பா?
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துக் கொண்டிருப்பதால், ரஷ்யாவும், ரஷ்யாவை ஆதரிக்கும் பெலாரஸ் நாட்டின் வீரர்களும் அந்தந்த நாட்டுக் கொடிகளுடன் ஒலிம்பிக் தொடக்க விழாவிலும், போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூறியுள்ளது. அதே சமயத்தில் நடுநிலைக் கொடியின் கீழ், தங்களது நாட்டைப் பிரிதிநிதித்துவப்படுத்தாமல் தனிப்பட்ட முறையில் போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் உக்ரைன் கலந்துகொள்கிறது. இதற்காக 140 வீரர்கள், வீராங்கனைகள் கொண்ட குழுவை பாரிஸுக்கு அனுப்பியுள்ளது. ஆனால், வழக்கத்தை விட குறைவான வீரர்களைதான் உக்ரைன் அனுப்பியுள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக 400க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உயிரிழந்தது இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. போர் சூழல் காரணமாக வீரர்கள், வீராங்கனைகள் முறையான பயிற்சி எடுத்துக்கொள்ள முடியாததும் ஒரு காரணம்.
பலத்த பாதுகாப்பில் பாரிஸ் நகரம்
உச்சபட்ச பாதுகாப்பில் பாரிஸ் :
உலக தலைவர்கள் அனைவரும் பங்கேற்பதால் பாரிஸ் நகரமே பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வீரர்களுக்கான அணிவகுப்பிற்கு பயன்படுத்தப்பட்ட 94 படகுகளிலும் பிரான்சின் உயரடுக்கு GIGN பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 45,000 போலீஸ் அதிகாரிகள், 20,000 தனியார் பாதுகாப்பு முகவர்கள், 18,000 ராணுவ வீரர்கள் நகரைச் சுற்றி ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாரிஸை சுற்றியுள்ள 150 கிலோமீட்டர் சுற்றளவுக்கான வான்வெளி, மாலை 6:30 முதல் நள்ளிரவு வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சார்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பி.வி. சிந்து மற்றும் நீரஜ் சோப்ரா
பதக்கங்களை வெல்ல காத்திருக்கும் இந்திய வீரர்கள் :
ஏறக்குறைய 100 ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்கிறது இந்தியா. இதுவரை 10 தங்கப் பதக்கங்கள், 9 வெள்ளிப் பதக்கங்கள், 16 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 35 பதக்கங்களை மட்டுமே இந்தியா வென்றுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியாவின் சார்பாக 70 வீரர்கள் மற்றும் 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 பேர் பதக்கம் வெல்லும் முனைப்பில் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் தடகளம், பாய்மரப் படகு, துப்பாக்கிச்சுடுதல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர். இம்முறை ஈட்டி எறிதல், மல்யுத்தம், பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல், ஹாக்கி, குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளில் இந்தியாவுக்கு பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல சோதனைகளை தாண்டி ஒலிம்பிக்கில் களமிறங்கும் இந்திய மல்யுத்த வீராங்கனைகள்
தடைகளைக் கடந்து களமிறங்கும் இந்திய மல்யுத்த அணி :
டோக்கியோ ஒலிம்பிக்கில் (2020) இரண்டு பதக்கங்கள், 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் பட்டம் மற்றும் உலக அளவிலான ஜூனியர் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் சிறப்பான செயல்திறன் என இந்திய மல்யுத்த அணி சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்தது . தீடீரன்று கடந்தாண்டு அப்போதைய மல்யுத்த சங்கத்தின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்திய போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்த சர்ச்சையை தொடர்ந்து பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு நெருக்கமான சஞ்சய் சிங், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், மத்திய அரசு இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பை இடைநீக்கம் செய்தது. இந்த காலகட்டத்தில், தேசிய மல்யுத்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்படவில்லை, சோதனைகள் நடத்தப்படவில்லை. மல்யுத்த வீரர்களால் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. மல்யுத்த போட்டிகள் ஆகஸ்ட் 5 முதல் 11 வரை நடைபெறவுள்ளன.
கோலாகலமாக நடைபெற்ற ஒலிம்பிக் தொடக்க விழா
நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் உலக தலைவர்கள் :
ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் 326,000 பார்வையாளர்கள் ஆற்றின் கரைகள் மற்றும் பாலங்களில் அடுக்கப்பட்ட இருக்கைகளில் இருந்து பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பாதையில் உள்ள 80 பெரிய திரைகளிலும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டதுடன், போட்டிகளும் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன. இதனிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், இத்தாலிய அதிபர் செர்ஜியோ மேட்டரெல்லா, சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் போன்ற சர்ச்சைக்குரிய பிரமுகர்கள் உட்பட சுமார் 100 நாட்டுத் தலைவர்கள், ஒலிம்பிக் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர்.
துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்ற மனு பாக்கர்
இந்தியாவின் முதல் பதக்கம்!
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் வெற்றி கணக்கு துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தொடங்கியுள்ளது. மகளிர் துப்பாக்கி சுடுதல் பிரிவில், மனு பாக்கர் வெண்கலத்தை வென்று இந்தியாவின் பதக்க வேட்டையை தொடங்கிவைத்தார். இறுதிச்சுற்றில் அவர் மொத்தம் 221.7 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார். இந்தப் போட்டியில் தென் கொரிய வீராங்கனை ஓ யீ ஜின் 243.2 புள்ளிகள் சேர்த்து தங்கமும், மற்றொரு தென் கொரிய வீராங்கனை கிம் யெஜி 241.3 புள்ளிகள் சேர்த்து வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.