இந்திய பெண்கள் அணியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றவர்- ஷஃபாலி வர்மாவின் வாழ்க்கை வரலாறு.

14 வயதில் ஒரு பிளேயர் முதல்தர போட்டியில் அறிமுகமாவது சச்சின் டெண்டுல்கருக்கு பின் ஷஃபாலி வர்மாதான். அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கான சேலென்ஜர் போட்டியில் தனது 2 ஆவது ஆட்டத்திலேயே சதமடித்து அசத்தினார்.

Update:2024-03-12 00:00 IST
Click the Play button to listen to article

மிக குறுகிய காலத்தில் இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஷஃபாலி வர்மா. இவரது கிரிக்கெட் பயணம் மிகச்சிறப்பானது. சிறிய கிராமத்திலிருந்து வந்து இந்திய கிரிக்கெட்டை தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் திருப்பி போட்டவர். தனது 15 வயதில் சர்வதேச போட்டியில் அறிமுகமாகி பல சாதனைகளை படைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்தியாவிற்காக மூன்று ஃபார்மட்டிலும் இளம்வயதில் அறிமுகமான முதல் வீராங்கனை என்கிற பெருமைக்கு சொந்தக்காரர். இவரை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சேவாக்குடன் ஒப்பிட்டு பல கிரிக்கெட் நிபுணர்கள் பேசுகின்றனர். ஏனென்றால் சேவாக்கை போன்று முதல் பந்தில் இருந்தே பௌண்டரி அடிக்கும் நோக்கில் ஆடுவார். இது அவரது மிகப்பெரிய பலமாகவும் இருக்கிறது. இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த ஷஃபாலி வர்மா யார்? அவரது கிரிக்கெட் பயணம் எங்கிருந்து தொடங்கியது என்பதை பற்றியெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.


ஷஃபாலி இளம்வயதில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டபோது 

ஷஃபாலியின் ஆரம்பகாலம் :

ஜனவரி 28, 2008 ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்திலுள்ள ரோதக் என்னும் சிறிய நகரத்தில் பிறந்தார் ஷஃபாலி. இவரது தந்தை சஞ்ஜீவ் வர்மா பெரிய கிரிக்கெட் ஆர்வலர். அதனால் தனது மகளை பெரிய கிரிக்கெட் வீராங்கனையாக உருவாக்க வேண்டும் என்று நினைத்தார். ரோத்தகில் பெரிதாக கிரிக்கெட் பயிற்சி கூடம் இல்லாததால் ஷஃபாலியின் தந்தையே அவருக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார். அதுமட்டுமில்லாமல் ஷஃபாலியின் தந்தை தான் முதன்முதலில் பவர் ஹிட்டிங் திறமையை கண்டுபிடித்தார். அதன்பின் பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் மிகச்சிறப்பாக செயல்பட்டதன் மூலம் தனது 14 வயதில் ஹரியானா பெண்கள் அணிக்கு தேர்வானார். 14 வயதில் ஒரு பிளேயர் முதல்தர போட்டியில் அறிமுகமாவது சச்சின் டெண்டுல்கருக்கு பின் ஷஃபாலி வர்மாதான். அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கான சேலென்ஜர் போட்டியில் தனது 2 ஆவது ஆட்டத்திலேயே சதமடித்து அசத்தினார். அந்த தொடரில் 8 போட்டிகளில் 549 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 2 சதங்களும், 4 அரைசதங்களும் அடங்கும். இது இந்திய தேர்வாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.


வேலோஸிட்டி மற்றும் சர்வதேச கிரிக்கெட்டுகளில் விளையாடிய தருணங்கள்

சர்வதேச தொடக்கம் :

சேலென்ஜர் கோப்பைக்கு பிறகு பெண்களுக்காக பிரத்யேகமாக ஐபிஎல்லை போன்று 3 அணிகள் பங்கேற்கும் லீக் போட்டிகள் நடக்கும். இதில் வேலோஸிட்டி அணிக்காக களமிறங்கிய ஷஃபாலி முதல் ஆட்டத்தில் அதிவேகமாக 31 ரன்கள் அடித்தார். இதன்பின்தான் இவருக்கு சர்வதேச அழைப்பு வந்தது. பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக களமிறங்கினார் ஷஃபாலி. கடினமான பிட்சில் 46 ரன்கள் சேர்த்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு உதவியாக இருந்தார். அந்த ஆட்டத்தில் ஆட்டநாயகி விருதையும் வென்றார். இது ஷஃபாலிக்கு நல்ல சர்வதேச தொடக்கமாக அமைந்தது. அதன்பிறகு 2020 ஆம் ஆண்டு பெண்களுக்கான T20 உலகக்கோப்பையில் பங்கேற்றார். மிகக்குறைந்த வயதில் உலகக்கோப்பையில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். அதுமட்டுமில்லாமல் அந்த தொடரில் இந்திய அணியின் தூணாக செயல்பட்டார். 5 போட்டிகளில் விளையாடி 163 ரன்கள் குவித்தார். அந்த உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் ஷஃபாலிதான் அடித்திருந்தார். 16 வயதில் உலககோப்பையில் அரைசதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். ஷஃபாலியின் வெற்றி, சவால்கள் இல்லாமல் இல்லை. அவரது ஆக்ரோஷமான பேட்டிங் ஸ்டைலுக்காக அவர் பல விமர்சனங்களை எதிர்கொண்டார், இது பெண்கள் கிரிக்கெட்டுக்கு ஏற்றதல்ல என்று சிலர் கருத்து தெரிவித்தனர். இருப்பினும், அவர் தனது அணுகுமுறையில் உறுதியாக இருந்தார் மற்றும் நம்பமுடியாத வேகத்தில் வரும் பந்துகளை தைரியமாக எதிர்கொண்டு தொடர்ந்து ரன்களை எடுத்து கொண்டே இருந்தார். அதன்பிறகு தனது முதல் டெஸ்டில் 96 ரன்கள் அடித்து அசத்தினார்.


கேப்டனாக U19 உலகக்கோப்பையை வென்ற ஷஃபாலி

 U19 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் :

சர்வதேச போட்டிகளில் பல சாதனைகளை செய்த ஷஃபாலி இந்தியா U19 அணிக்கு கேப்டனானார். அதுமட்டுமில்லாமல் இந்திய அணிக்கு முதல் முறையாக கோப்பையும் வாங்கித்தந்தார். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, வரலாற்றில் முதல் கோப்பையை ருசித்தது. அதுமட்டுமில்லாமல் அந்த தொடரில் 208 ரன்கள் அடித்தும் அசத்தினார். ஷஃபாலி இப்போது பெரிய தொடரை வென்று உலகின் தலைசிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனைகளில் ஒருவராக தனது அதிகாரத்தை முத்திரை பதித்துள்ளார். பெண்கள் கிரிக்கெட் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இளம் கிரிக்கெட் வீராங்கனை ஷஃபாலி வர்மா. அவர் வழியில் பல சவால்களை எதிர்கொண்டார். ஆனால் அவருடைய உறுதியும் திறமையும் அவற்றை கடக்க அவருக்கு உதவியது. ஆர்வமும் முனைப்பும் இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதற்கு இவரது பயணம் ஒரு சான்று. அவர் எல்லா இடங்களிலும் உள்ள இளம் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு உத்வேகமாகவும், எதிர்காலத்தில் கவனிக்க வேண்டிய வீராங்கனையாகவும் இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்