இந்திய அணியில் மீண்டும் கேரள சிங்கம்! T20 உலககோப்பைக்கு தேர்வானார் சஞ்சு சாம்சன்!

இந்த ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர், வரும் ஜூன் 2-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இத்தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்த சஞ்சு சாம்சனின் பெயரும் அதில் இடம் பெற்றுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி 10 போட்டிகளில் அதிரடியாக 385 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சனும் இந்திய அணியில் எடுக்கப்பட்டிருக்கிறார்.

Update:2024-05-07 00:00 IST
Click the Play button to listen to article

இந்த ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர், வரும் ஜூன் 2-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இத்தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்த சஞ்சு சாம்சனின் பெயரும் அதில் இடம் பெற்றுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி 10 போட்டிகளில் அதிரடியாக 385 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சனும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நடப்பு ஐபிஎல் தொடரில் கேரளாவை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆடாமலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறார். தற்போது பல கிரிக்கெட் நிபுணர்களும் சஞ்சு சாம்சனை புகழ்ந்து வருகின்றனர். கிரிக்கெட்டில் அவரது செயல்பாடுகள் எப்படி உள்ளன? உலக கோப்பை தேர்வுக்கு பின் அவரை பற்றி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிபுணர்கள் கூறியது என்ன என்பதை பற்றியெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.

தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட சாம்சன் :

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் சஞ்சு சாம்சன், ஐபிஎல் மற்றும் முதல் தர போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். இருப்பினும் அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு மட்டும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. ஐ.பி.எல்லில் ஒரு சில போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் கூட இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆனால் அவர்களைவிட பல சாதனைகளை படைத்த சஞ்சு சாம்சனுக்கு மட்டும் பல ஆண்டுகளாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டே வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்காக அவர் ஒரு சில போட்டிகளில் விளையாட தேர்வு செய்யப்பட்டாலும், பெஞ்சில்தான் அமர வைக்கப்படுகிறார். ஒரே ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு அளித்துவிட்டு அவர் சிறப்பாக செயல்படவில்லை என்று கூறி நீக்குவது வாடிக்கையாகி இருக்கிறது.


டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சஞ்சு சாம்சன் 

திருப்பம் தந்த தென் ஆப்ரிக்கா தொடர் :

தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த சஞ்சு சாம்சனுக்கு இவ்வருடம் தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. முதல் போட்டிகளில் சொற்ப ரன்களில் வெளியேறினாலும் இரண்டாவது போட்டியில் அரைசதமும், மூன்றாவது போட்டியில் சதமும் அடித்து அசத்தினார். இதனால் ரசிகர்கள் சஞ்சு சாம்சனிற்கு மேலும் கூடுதல் ஆதரவு கொடுக்க ஆரம்பித்தார்கள். தொடர்ந்து இந்திய அணி அறிவிப்பு வரும்போதெல்லாம் ஏன் சஞ்சு சாம்சனின் பெயர் இடம் பெறவில்லை என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை கொட்டி தீர்த்தனர். தற்போது நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே 80 ரன்கள் குவித்து இந்திய அணியின் தேர்வுகுழு பார்வையை தன் பக்கம் திருப்பியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ராஜஸ்தான் அணி விளையாடிய 10 போட்டிகளில் 385 ரன்கள் குவித்துள்ளார் சாம்சன். அதற்கு பலனாக தற்போது T20 உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.


சர்வதேச மற்றும் ஐபில் போட்டிகளில் சாம்சன் விளையாடிய தருணங்கள் 

நான் பார்த்தவரை அவர் மிகவும் அமைதியானவர் - ரவி சாஸ்திரி :

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி கிரிக் இன்ஃபோ-விடம் பேசும்போது, தோனிக்கு நிகரான குணாதிசயங்கள் சஞ்சு சாம்சனிடம் உள்ளதாக குறிப்பிட்டார். நான் பார்த்தவரை அவர் மிகவும் அமைதியானவர், நிதானமானவர். அதை அவர் வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும், தனது வீரர்களுடன் நன்றாக தொடர்புகொள்கிறார். அவர் எவ்வளவு அதிகமாக வேலையைச் செய்கிறாரோ, அவ்வளவு அதிகமாக ஆர்வத்துடன் கற்றுக்கொள்வார் என்று நான் நினைக்கிறேன். தோனியைப் போன்றே முடிவுகளை அவரே எடுக்கிறார். அது சரியான முடிவோ, தவறான முடிவோ, சஞ்சு மேம்பட்டுள்ளார் என்று ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார்.


தோனிக்கு நிகரான குணாதிசயங்கள் சஞ்சு சாம்சனிடம் உள்ளதாக ஒப்பிட்டு பேசிய ரவி சாஸ்திரி

சாம்சனிற்கும் தோனிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை நான் பார்க்கிறேன் - சஹால் :

ஐபிஎல் தொடரில் தனக்கு பிடித்த கேப்டன் குறித்த கேள்விக்கு ஹுமன்ஸ் ஆப் பாம்பே என்கிற நிகழ்ச்சியில் சஹால் அளித்த பேட்டியில் சஞ்சு சாம்சனைதான் தனக்கு பிடித்த கேப்டன் என்று கூறினார். அவருக்கும் மகேந்திர சிங் தோனிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை நான் பார்க்கிறேன். தோனியைப் போலவே அவரும் அமைதியாகவும் எளிமையாகவும் உள்ளார். கடந்த ஆண்டில் ஒரு பந்துவீச்சாளராக நான் என்ன வளர்ச்சி அடைந்திருந்தாலும், எல்லாவற்றுக்கும் சஞ்சுதான் காரணம் என்று புகழ்ந்திருந்தார்.


ஐபிஎல் தொடரில் தனக்கு பிடித்த கேப்டன் சாம்சன்தான் என புகழ்ந்து கூறிய சாஹல் 

சஞ்சு சாம்சனிற்கு ஏன் இவ்வளவு ஆதரவு?

19 வயதில் இந்திய அணியில் அறிமுகமான இவருக்கு தற்போது 28 வயதாகிவிட்டது. இன்னும் தனது இருப்பை தக்கவைக்க முடியாமல் தவித்து வருகிறார். எனவேதான் கேரளா, ராஜஸ்தான் மட்டுமின்றி சர்வதேச போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு இணையான ரசிகர்களை பெற்றுள்ளார் சஞ்சு சாம்சன். அதுமட்டுமில்லாமல் அவர் மீது ரசிகர்ளுக்கு ஏற்பட்டிருப்பது அனுதாபம் மட்டுமில்லை. முதல் தர போட்டிகளிலும், ஐபிஎல் போட்டிகளிலும் அவர் ஆடிய விதத்தை ரசிகர்கள் பார்த்து இருக்கிறார்கள். தரமான அவரது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் திறன் மற்றும் ஆடுகளத்தில் நடந்துகொள்ளும் விதம் போன்றவை ரசிகர்களை அவர் பக்கம் ஈர்த்திருக்கிறது. இவ்வளவு எதிர்பார்ப்புக்கு மத்தியில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலககோப்பையில் சிறப்பாக விளையாடுவாரா சாம்சன் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்