இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நகங்களை அழகு படுத்துவது இன்றளவில் அதிகமாகிவிட்டது. நெயில் பராமரிப்பு மற்றும் அதை அழகு படுத்துவதற்கு மெனிக்யூர், பெடிக்யூர், நெயில் ஆர்ட், எக்ஸ்டென்ஷன் வைப்பது என தனி படிப்புகளே உள்ளன. நெயில் ஆர்ட்டை பொறுத்தவரை சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் நெயில் பாலிஷை பயன்படுத்தி செய்ய முடியாது. இதற்கென ஜெல் பாலிஷ் கிடைக்கும், அதை பயன்படுத்தி மட்டுமே நெயில் ஆர்ட் செய்ய முடியும். அவ்வகையான நெயில் பாலிஷ்கள் நீண்ட நாட்கள் வரை, அதாவது 2 அல்லது 3 வாரம் வரைக்கும் கைகளில் இருக்கும். அந்த வகையில் நெயில் எக்ஸ்டென்ஷன், ஆர்ட், டிசைன்கள் பற்றி நம்மிடம் பல கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார் நெயில் ஆர்ட் கலைஞர் கார்த்திகா.


கேட் ஐ நெயில் எக்ஸ்டென்ஷன் டிசைன்

மெனிக்யூர், பெடிக்யூர், நெயில் ப்ரெப்பிங் ஆகிய அனைத்தும் ஒன்றா?

மெனிக்யூர், பெடிக்யூர் என்பது மசாஜ், ஸ்பா கிரீம், நெயில் கட் செய்வதை குறிக்கும். நெயில் ஆர்ட் செய்வதில் முதல் படி நெயில் ப்ரெப்பிங். இது நகங்களில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி கிளீன் செய்யும் ஒரு முறை. எக்ஸ்டென்ஷன் வைப்பதாக இருந்தாலும் சரி, ஒரிஜினல் நகத்தில் ஆர்ட் செய்தாலும் சரி, நகத்தில் உள்ள கியூட்டிகளை சரி செய்து தேவையில்லாத கியூட்டிகளை முதலில் கட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் ஜெல் பாலிஷ் நீண்ட நாள் வரை கைகளில் இருக்கும். இது சுகாதாரத்தின் அடிப்படையில் செய்யும் ஒரு படி நிலை.


நெயில் எக்ஸ்டென்ஷன் ஃபிக்ஸ் செய்யும் காட்சி

ஒரிஜினல் நெயிலில் ஆர்ட் செய்ய விருப்பம் இருப்பவர்களுக்கு அதில் செய்ய முடியுமா?

அவரவருக்கு என்ன விருப்பமானதாக இருக்கிறதோ அதன் அடிப்படையில் நெயில் ஆர்ட் அல்லது எக்ஸ்டென்ஷன் என எது வேண்டுமானாலும் செய்ய முடியும். எக்ஸ்டென்ஷன் வைத்தால் ஸ்ட்ரெஸ் காரணமாக நகம் கடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் நாளடைவில் அதை மறந்துவிடுவார்கள். மேலும் முகத்திற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து பார்க்கிறோமோ அதே அளவிற்கு நக பராமரிப்பு மற்றும் நெயில் ஆர்ட்டுக்கும் இன்றளவில் முக்கியத்துவம் அதிகமாகிவிட்டது. கை நகம் மட்டுமின்றி கால் நகத்திற்கும் அனைவரும் கவனம் தர ஆரம்பித்துவிட்டனர். சிலருக்கு நகம் மெலிதாக இருக்கும், அப்படி இருக்கும் பட்சத்தில் நகத்தை வலிமையாக்கி அதன் மேல் கூட ஆர்ட் செய்யலாம்.

எந்த வயதிலிருந்து நெயில் ஆர்ட் செய்துகொள்ளலாம்? நெயில் டிசைன்கள் கஸ்டமைஸ் செய்வீர்களா?

பொதுவாக கல்லூரியில் படிப்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள்தான் அதிக அளவில் இதனை செய்துகொள்கிறார்கள். பாதுகாப்பின் அடிப்படையில் 17 வயதிற்கு கீழ் இருப்பவர்கள் இதை செய்யாமல் இருப்பதே நல்லது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் சிறு வயதினருக்கு நாங்கள் நெயில் ஆர்ட் செய்வதில்லை. டிசைன்களை பொறுத்தவரை சிலர் இப்படித்தான் வேண்டும் என சொல்வார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் கேட்பது போல் செய்வதுண்டு. சிலருக்கு எப்படி என ஐடியா இல்லாமல் இருக்கும். அவர்களுக்கு எங்களிடம் இருக்கும் டிசைன்களை பரிந்துரை செய்வோம்.


பல்வேறு வகையான நெயில் எக்ஸ்டென்ஷன் டிசைன்கள்

நெயில் எக்ஸ்டென்ஷன் வகைகள் என்னென்ன?

அக்ரலிக் நெயில் எக்ஸ்டென்ஷன், எக்ஸ் ஜெல் எக்ஸ்டென்ஷன், ஜெல் எக்ஸ்டென்ஷன் என வகைகள் உள்ளன. இதில் ஜெல் எக்ஸ்டென்ஷன் மற்றும் அக்ரலிக் எக்ஸ்டென்ஷன், நாம் பராமரிப்பதன் அடிப்படையில் 2 முதல் 3 வாரங்கள் வரைக்கும் இருக்கும். அக்ரலிக் எக்ஸ்டென்ஷனில் மீண்டும் கலர் அப்ளை செய்து கொள்ளலாம். இதனை சாதாரணமாக நெயில் பாலிஷ் ரிமூவர் வைத்து அழிக்க முடியாது. இதற்கென தனி ரிமூவல் சொல்யூசன் இருக்கிறது. அதை நகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்தே ரிமூவ் செய்ய முடியும். எனவே தானாகவே ஜெல் எக்ஸ்டென்ஷன்களை ரிமூவ் செய்ய நினைப்பதை தவிர்க்க வேண்டும். ஏதேனும் நெயில் ஆர்ட் சலூன் சென்று ரிமூவ் செய்வது பரிந்துரைக்கத்தக்கது.

மணப்பெண்களுக்கான நெயில் ஆர்ட் எப்படி இருக்கும்?

மணப்பெண்களை பொறுத்தவரை ஒவ்வொரு விரலுக்கும் வெவ்வேறு டிசைன்கள் என கேட்பார்கள். வளைகாப்பு, லவ்வர்ஸ் டே என ஒவ்வொரு காலத்திற்கு ஏற்றார் போல கஸ்டமைஸ் செய்து நெயில் ஆர்ட் செய்யலாம். திருமண உடை, ஜஸ்ட் மேரீட், ஜஸ்ட் எங்கேஜ்ட் என எழுதவும் செய்யலாம். மணப்பெண், மணமகன் பெயர் உள்ளிட்டவற்றிலும் டிசைன் போடலாம்.


நெயில் எக்ஸ்டென்ஷனை LED லைட்டில் க்யூர் செய்யும் காட்சி

LED லைடில் நெயில் பாலிஷை காய வைப்பதால் சைடு எஃபக்ட்ஸ் வருமா?

நிறைய பேருக்கு பயம் இருக்கும். LED லைடில் அதிக நேரம் இருந்தால் உடல் நிறம் கருத்துவிடும் என்று, அது முற்றிலும் தவறான ஒன்று. நெயில் பாலிஷ் போட்டு 30 நொடிகள் அல்லது 60 நொடிகள் மட்டுமே அதில் கை, காலை வைத்து உலர்த்துவோம். எனவே பயமின்றி இதை பயன்படுத்தலாம். இதன் மூலம் எந்தவித பக்க விளைவுகளும் வராது. நெயில் பாலிஷ் உடனே அழிந்துவிடும் என பயப்பட தேவையில்லை. இந்த ஜெல் பாலிஷ் சுமார் ஒரு மாதம் வரை கைகளில் இருக்கும்.

Updated On 22 July 2024 3:07 PM IST
ராணி

ராணி

Next Story