தங்கம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? அதிலும் குறிப்பாக இந்தியர்களுக்கு சொல்லவே தேவையில்லை. அணிந்து அழகு பார்ப்பது தொடங்கி, சீர்வரிசை, பரிசுகள், சேமிப்பு, முதலீடு மற்றும் அவசர தேவைக்கு அடகு வைக்கும்வரை தங்கத்தின் தேவை அவசியமானதாக இருக்கிறது. ஆனால் இப்படி அனைத்துக்கும் பயன்படும் தங்கத்தின் விலையைப் பற்றி யோசித்தாலே தலைசுற்றும் அளவிற்கு நாளுக்குநாள் ஏறிக்கொண்டே போகிறது. சாமானியர்கள் தங்கம் வாங்குவது வெறும் கனவாகத்தான் போகும் என்ற நிலை உருவாகி வருகிறது. உலகளவில் தங்கம் விலைமதிப்புமிக்க உலோகமாக பார்க்கப்பட்டாலும் இந்தியாவை பொருத்தவரை அது நமது சமூகத்தின் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது. மேலும் ஒருவரின் தங்க கையிருப்பை வைத்துதான் அவருடைய அந்தஸ்து சமுதாயத்தில் தீர்மானிக்கப்படுகிறது. தங்க நகைகளை அதிகம் பயன்படுத்தாத வட அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளிலும் இது பாதுகாப்பான சேமிப்பு என்பதாலேயே தற்போது தங்கம் வாங்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. பல உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் தங்கத்தின் பயன்பாடு அதிகம் இருப்பதால் இங்கு அதிகம் இறக்குமதி செய்யப்படுகிறது. அதனாலேயே தங்கத்தில் விலை கிடுகிடுவென அதிகரித்து தற்போது ஒரு கிராம் 7 ஆயிரம் ரூபாயை தாண்டியிருக்கிறது. ஒரு சவரன் நகைவிலை 57 ஆயிரத்தை தொட்டிருக்கிறது. வரலாறு காணாத இந்த விலையேற்றத்தால் மக்கள் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில் அடுத்தடுத்த 4 ஆண்டுகளில் 1 சவரன் தங்கம் விலை 1 லட்சத்தை எட்டும் என்கின்றனர் வணிக நிபுணர்கள். தங்கத்திற்கு இத்தனை மவுசு எதனால்? பார்க்கலாம்.
தங்க விலையேற்றத்தின் வரலாறு
கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1920களில் இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சிசெய்துவந்த காலத்தில் ஒரு சவரன் 22 காரட் தங்கத்தின் விலை 21 ரூபாயாக இருந்தது. இது ஒன்றிரண்டு ரூபாயாக ஏற்றம்கண்டு வந்த நிலையில், 1962-இல் நடந்த இந்திய - சீனப்போர் மற்றும் 1971இல் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக 1980ஆம் ஆண்டு தங்க விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாயை தொட்டது. அதன்பிறகு 1990களில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகள் நடந்த காலகட்டத்தில், தங்கச் சந்தையில் போட்டி அதிகரித்ததன் காரணமாக 2001ஆம் ஆண்டு தங்கத்தின் விலையும் 3 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குள் அதாவது 2006இல் அதுவே இருமடங்காக அதிகரித்து சவரன் ரூ. 6 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. அதன்பிறகு 2009ஆம் ஆண்டு புதிய உச்சமாக தங்கம் விலை பத்தாயிரத்தை எட்டியது. இப்படி உள்நாட்டு மற்றும் உலகளாவிய காரணிகளால் தங்கத்தின் விலை திடீரென ஏற்றம் கண்டு அடுத்த ஆண்டே, அதாவது 2010ஆம் ஆண்டே சவரனுக்கு 15 ஆயிரமாக கணிசமாக உயர்ந்தது. அதன்பிறகு இந்தியாவில் 2016ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்டபிறகு, இந்திய பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.
பங்குச்சந்தை வீழ்ச்சியால் அதிகரித்த தங்கம் விலை
அதன்விளைவாக தங்கத்தின் விலையும் ரூ.20 ஆயிரமாக உயர்ந்தது. இப்படி அடுத்தடுத்த ஆண்டுகளில் 5, 10 ஆயிரங்களாக அதிகரித்து கடந்த ஆண்டு ரூ.45 ஆயிரத்தை தொட்டது. இப்படி தங்கத்தின் விலை கடந்த ஆண்டுவரை கொஞ்சம்கொஞ்சமாக ஏறிவந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து திடீரென கிடுகிடுவென அதிகரிக்கத் தொடங்கியது. மார்ச் 28ஆம் தேதி ரூ.45 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை ஆறே மாதங்களில் ரூ. 10 ஆயிரம் அதிகரித்து இப்போது வரலாறு காணாத அளவில் சவரன் ரூ.57 ஆயிரத்தை தொட்டிருக்கிறது. தூய தங்கத்தின் விலை ரூ. 60 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இதனிடையே 2024-25ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் வெளியானபோது தங்கத்தின் இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.2,200 குறைந்தது. தொடர்ந்து ஓரிரு நாட்கள் விலை குறைந்த நிலையில், திடீரென மீண்டும் ஏறுமுகமானது. இப்படியே தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே போனால் அடுத்த 4 ஆண்டுகளில் 1 சவரன் விலை 1 லட்சத்தை எட்டும் என்கின்றனர் வணிக நிபுணர்கள். தங்கத்தின் விலையேற்றம் வெள்ளி விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி விலையானது ரூ. 1 லட்சத்தை தாண்டிவிட்டது.
தங்க விலை அதிகரிப்புக்கான காரணம் என்ன?
பண வீக்கம், தொடர்ந்து விலை ஏற்றம் போன்றவை தங்கத்தின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சர்வதேச அளவில் தங்கத்திற்கு விலையுயர்வு ஏற்படும்போது அது இந்திய மார்க்கெட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பிற முதலீடுகளுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் மீதான முதலீடானது மிகவும் பாதுகாப்பாக கருதப்படுவதே இறக்குமதி வரி குறைக்கப்பட்டாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பதற்கு காரணம் என்கின்றனர் நிபுணர்கள். குறிப்பாக, கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே பாதுகாப்பு சொத்துகளின் தேவை அதிகரித்திருக்கிறது. அதற்கு முதன்மையானதாக மக்கள் தேர்ந்தெடுப்பது தங்கமாக இருக்கிறது. இந்தியாவை பொருத்தவரை தங்கம் ஒரு பிரபலமான முதலீடாக பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 50 - 60 ஆண்டுகள் தொடர்ந்து ஏற்றம்கண்டுவந்த பங்குச்சந்தை முதலீட்டின்மீது சிலகாலம் ஈர்ப்பு இருந்தபோதிலும் அதில் ஏற்பட்ட திடீர் சரிவுகள் மக்களை மீண்டும் தங்கத்தின் பக்கம் திருப்பியிருக்கிறது. இதுதான் வரி குறைப்பு செய்தபிறகும் தொடர் விலையேற்றத்துக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
தங்க விலையில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா பொதுமுடக்கம் மற்றும் வேலையின்மை
மேலும் உள்நாட்டு, வெளிநாட்டு போர்கள், போர் அபாயம், பண மதிப்பிழப்பு, ரூபாயின் மதிப்பு குறைவது, திடீர் வேலை இழப்பு, உள்நாட்டு உற்பத்தி குறைவு, தங்க உற்பத்தி குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை உயருகிறது. மேற்கூறிய காரணங்களால் தங்கத்தின் விலை உயர்வது மட்டுமல்லாமல் எப்போது வேண்டுமானாலும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்படலாம் என்ற சூழல் நிலவுவதால், இதுபோன்ற சிரமங்களை சந்திக்க விரும்பாதவர்கள் தங்கத்தை தங்களது பாதுகாப்பு பெட்டகமாக கருதுவதாகக் கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள். குறிப்பாக, 2008ஆம் ஆண்டு உலக பொருளாதார மந்த நிலை அதிகரித்ததன்விளைவாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் சாய்ந்தனர். அதே ஆண்டு, அமெரிக்க டாலர் மதிப்பில் தங்கத்தின் விலையானது 5.6% அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து இரண்டே ஆண்டுகளில் அது 29.5%ஆக உயர்ந்தது. இது உலக பொருளாதார சந்தையில் தங்கத்தின் விலையுயர்வுக்கு வழிவகுத்தது. இப்போது மீண்டும் அமெரிக்க ரிசர்வ் வங்கியானது, தங்களிடம் முதலீடு செய்பவர்களின் வட்டி விகிதத்தை குறைத்திருப்பதே பிற நாடுகளில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்வதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த வட்டிவிகிதமானது 2020 வரை ஒரே சீராக இருந்தது. அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீக்கம் மற்றும் விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்த இந்த வட்டிவிகிதம் குறைக்கப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில் 2020 முதல் 2024 வரை அதை குறைக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் 0.5% வட்டியை குறைத்திருக்கின்றனர். இதன் எதிரொலியாக, அங்கு முதலீடு செய்திருந்தவர்கள் தங்களது பணத்தை பாதுகாப்பான முதலீடாக மாற்ற நினைத்து, தங்கம் வாங்கத் தொடங்கியிருக்கின்றனர். இதனால் உலகம் முழுவதுமே பல நாடுகளில் தங்கத்தின் விலையானது கூடியிருக்கிறது. குறிப்பாக, இந்தியா போன்ற தங்கத்தின் பயன்பாடு அதிகமிருக்கும் நாடுகளில் இது சாமானியர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும், இந்தியா வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் ஒன்றாக இருப்பதால், தங்கம் இந்நாட்டு மக்களின் முக்கிய சொத்தாக பார்க்கப்படுவது மட்டுமல்லாமல் தேசிய பொருளாதாரத்தில் ஒரு முக்கியப்பகுதியாகவும் மாறியிருப்பதும் தொடர் விலையேற்றத்துக்கு காரணம் என்கின்றனர்.
தங்க நகைகளை சேமிக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டியவை
இனிமேல் நகை வாங்குவது வெறும் கனவுதானா?
தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே இருப்பதால் கொஞ்சம் குறைந்தபிறகு அதில் முதலீடு செய்யலாம் என்று நினைப்பது புத்திசாலித்தனம் அல்ல என்கின்றனர் நிபுணர்கள். விலை ஒருபுறம் ஏறிக்கொண்டே போனாலும், இருக்கும் பணத்திற்கு ஏற்ப அதை முதலீடு செய்யலாம். முதலில் மிகவும் அதிகம் என்று பார்க்கப்பட்ட முதலீட்டுத் தொகை இரண்டு வருடங்களுக்குப் பிறகு சாதாரணமானதாக மாறிவிடும் என்கின்றனர். அதனால் சாமானியர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் தங்க நகைச்சீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்தால் ஓரிரு வருடங்களில் ஒன்று அல்லது இரண்டு சவரன் நகையை சிரமமின்றி வாங்கமுடியும். ஒரே நேரத்தில் ஒரு பெரும் தொகையை நகைக்கு செலவிடுவதற்கு பதிலாக, கொஞ்சம் கொஞ்சமாக சேமிப்பைப் போன்று முதலீடு செய்தால், சவரன் கணக்கில் நகையை பாதுகாப்பாக சேமிக்கலாம் என்கின்றனர். எதிர்காலத்தில் தங்கத்தின் விலையில் சிறு ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இதில் நஷ்டமிருக்காது என்பதால் எந்தவித தயக்கமுமின்றி நகைத்திட்டங்கள் மற்றும் சேமிப்பில் பணத்தை செலவிடலாம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.