2024ஆம் ஆண்டு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றிருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான அவையில் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார். இதன்மூலம் தொடர்ச்சியாக 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்திருக்கிறார். 2019ஆம் ஆண்டு நிதியமைச்சராக நியமிக்கப்பட்டதிலிருந்து இவர்தான் தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்துவருகிறார். பிரதமர் நரேந்திர மோடி அரசின் மூன்றாவது ஆட்சி காலத்தின் முதல் பட்ஜெட் இது என்பதால் மக்களுக்கு பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பானது மிகவும் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய நிர்மலா சீதாராமன், 1 மணிநேரம் 22 நிமிடங்கள் உரையாற்றினார். அதில், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக, இளைஞர்கள் நலனுக்காக 5 சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட்டில் பெண்களை மையப்படுத்தி அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டங்கள்

பெண்கள் மேம்பாட்டு திட்டங்களுக்காக 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக பணிபுரியும் பெண்களுக்கு சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்க சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும்விதமாக அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு வழங்கப்படும் முத்ரா கடன் வரம்பு ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் மத்திய பட்ஜெட் நிதியில் 281.8% அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, 2014 -15ஆம் ஆண்டு பட்ஜெட்டில், பெண்கள் நலனுக்கான ரூ.97,134 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2024-25ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அந்த தொகை ரூ.3.10 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. பல்வேறு தொழில்துறைகளில் பெண்களை ஈடுபடுத்தவும், பெண் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் கல்வியை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சுய உதவிக்குழுக்கள், தேசிய ஊரக வாழ்வாதார திட்டங்கள் போன்றவற்றிற்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.


பெண்கள் மேம்பாட்டுக்கு ரூ. 3 லட்சம் கோடி ஒதுக்கீடு

விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பு திட்டங்கள்

விவசாயத்திற்கு ரூ. 1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக, விவசாயத்தையும் டிஜிட்டல்மயமாக்க திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 400 மாவட்டங்களில் விவசாயத்தை டிஜிட்டல்மயமாக்கும் முகாம்கள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. தானியம் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி மற்றும் சேமிப்புக்கு புதிய திட்டங்கள் வகுக்கப்படவுள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. 5 மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் உச்ச வரம்பு ரூ. 100 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் 12 தொழிற்பூங்காக்கள் தொடங்கவும், ஆயிரம் ஐடிஐக்களை உருவாக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 5 ஆண்டுகளில் ஒரு கோடி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்படும் என்றும், 500 பெரிய நிறுவனங்களில் 30 லட்சம் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி பெற வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதனால் 1 கோடி இளைஞர்கள் பலனடைவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி, தொழில்திறன் மேம்பாடு, வேலை வாய்ப்புகளுக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உயர்கல்வி பயில ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ‘பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம்’ மூலம் 12 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதுடன், மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதன்முறையாக வேலைக்கு செல்வோரின் வங்கிக்கணக்கில் ரூ.15ஆயிரம் செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


விவசாயத்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

வீட்டுவசதி மற்றும் பிற பொதுநல திட்டங்கள்

நாடுமுழுவதும் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் 3 கோடி குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தர ரூ. 10 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் நகர்ப்புறங்களில் ஒரு கோடி வீடுகள் கட்டித்தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இந்த முறை நகர்ப்புற மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் தரும் வகையில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் மின் உற்பத்தி பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதை கருத்தில்கொண்டு அணுமின் நிலைய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. அதில், தனியாருடன் சேர்ந்து சிறிய அளவிலான அணுமின் திட்டங்கள் உருவாக்கப்படும் என்று சொல்லப்பட்டிருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. உள் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ. 11 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

வருமான வரியில் மாற்றம் உண்டா?

இந்தியாவின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் கடந்த ஜூன் மாதத்தில் 5.1 சதவீதமாக இருந்த நிலையில், வரிக்குறைப்பு அவசியம் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படுத்தப்படாத வருமான வரியில் இந்த ஆண்டு மாற்றம் ஏற்படுத்தப்படும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பழைய வருமான வரி திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

புதிய வருமான வரி திட்டத்தை தேர்ந்தெடுப்பவர்களுக்கு, நிலையான கழிவு, ரூ.50,000-லிருந்து ரூ.75,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் புதிய வருமான வரி திட்டத்தில், மூன்று லட்சம் வரை சம்பளம் பெறுவோருக்கு வரி இல்லை. 3 முதல் 7 லட்சம்வரை சம்பளம் பெறுவோருக்கு 5% வரியும், 7 முதல் 10 லட்சம்வரை சம்பளம் பெறுவோருக்கு 10% வரியும். 10 முதல் 12 லட்சம் வரை சம்பளம் பெறுவோருக்கு 15% வரியும். 12 முதல் 15 லட்சம் வரை சம்பளம் பெறுவோருக்கு 20% வரியும், 15 லட்சத்துக்கு மேல் சம்பளம் பெற்றால் 30% வரியும் விதிக்கப்படும்.


பழைய வருமான வரி திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை

செல்போன் விலை குறையுமா?

செல்போன் மற்றும் செல்போன் உதிரிபாகங்களின் விலை குறைக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல் அடிப்படை ஏற்றுமதி வரி குறைக்கப்பட்டிருக்கிறது. லெதர் மற்றும் அதுசார்ந்த பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கான சலுகைகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கான வரிவிதிப்பு 15% -லிருந்து 6%ஆக குறைக்கப்படும் என்றும், பிளாட்டினத்திற்கான சுங்க வரியானது 6.5% ஆகவும் குறைப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இணைய வர்த்தகத்திற்கான டிடிஎஸ் குறைக்கப்பட்டிருக்கிறது. முக்கியமான டிடிஎஸ் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் அது கிரிமினல் குற்றமல்ல என்று கூறப்பட்டிருப்பது சற்று ஆறுதலாக பார்க்கப்படுகிறது. நேரடி வரிவிதிப்பு முறையை எளிமையாக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்டார்ட் -அப் நிறுவனங்களுக்கு முக்கியமானதாக பார்க்கப்படும் ‘ஏஞ்சல் டாக்ஸ்’ ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

பீகார், ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள்

மத்திய கூட்டணி ஆட்சியின் எதிரொலியாக, பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களின் வளர்ச்சிக்கு கூடுதல் மற்றும் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. புதிய விமான நிலையம், மருத்துவ கல்லூரிகள், விளையாட்டு உள்கட்டமைப்புகளை பீகாரில் புதிதாக நிறுவ கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பீகார் அரசின் கோரிக்கையை ஏற்று தொழில்வளர்ச்சிக்கு மூலதன முதலீடு வழங்கும் வகையில் வெளிப்புற வங்கிகளின் உதவியும் ஆதரவும் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. அங்கு நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ. 26,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் 3 கோடி குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தர ரூ. 10 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

அதேபோல் ஆந்திரபிரதேசம் மறுசீரமைப்பு சட்டத்தின்கீழ், பல்வேறு சர்வதேச மூலதன முதலீட்டு நிறுவனங்களின்மூலம் அம்மாநிலத்திற்கு ரூ. 15,000 கோடி சிறப்பு நிதி உதவியானது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், நீர், மின்சாரம், ரயில்வே மற்றும் சாலை மேம்பாட்டிற்காக சிறப்பு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஹைதராபாத் - பெங்களூரு, விசாகபட்டினம் - சென்னை பாதுகாப்பு தளவாட தொழில்வழித்தடம் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திர தலைநகராக அறிவிக்கப்பட்டிருக்கிற அமராவதியை மேம்படுத்த ரூ. 15,000 கோடி நிதி, அங்கு மிகவும் பின் தங்கிய மாவட்டங்களாக பார்க்கப்படுகிற ராயலசீமா மற்றும் பிரகாசம் போன்ற மாவட்டங்களுக்கான சிறப்பு நிதி, போலோவரம் நீர்பாசன திட்டத்திற்கான சிறப்பு நிதி என ஆந்திராவுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.

பட்ஜெட் - மக்கள் கருத்து

குறிப்பிட்ட இரண்டு மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கும் நிலையில், மற்ற மாநிலங்களின் வளர்ச்சிக்கென்று பிரத்யேக திட்டங்கள் பெரிதாக வகுக்கப்படவில்லை என்பது மக்கள் கருத்தாக உள்ளது. அத்துடன், டெக்ஸ்டைல் துறை, போக்குவரத்து துறை, புதிய பென்ஷன் திட்டம், அன்றாட மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான வரிகுறைப்பு போன்ற எதிர்பார்த்த சில அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் மக்கள் கூறியுள்ளனர். அதேபோல் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியானது 40% லிருந்து 35% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவர்களுடைய வருமானம் அதிகரிக்கும். ஆனால் சாமானியர்களுடைய வருமானத்தை அதிகரிக்கும் விதத்தில் எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Updated On 23 July 2024 11:58 AM GMT
ராணி

ராணி

Next Story