குறைந்த செலவில் வெளிநாட்டை சுற்றிப்பார்க்க வியட்நாம் போலாம்.. வாங்க...
இந்தியாவுக்கு வெளியே குறைந்த செலவில் வெளிநாட்டிற்கு செல்ல விரும்பினால் அதில் வியட்நாம் மிக முக்கிய இடத்தை பிடிக்கும். மனதிற்கு அமைதி தரும் இடங்களுக்கு சென்றுவர விரும்புகிறீர்களா? அப்படியானால், நீங்கள் சுற்றுலா செல்வதற்கு சிறந்த இடமாக வியட்நாம் இருக்கும். அழகான நிலப்பரப்புகள், அடுக்கடுக்கான மாடிகள், அழகிய கடற்கரைகள் மற்றும் பல சுண்ணாம்புக் குகைகள் என திரும்பிய திசையெல்லாம் சுற்றிப்பார்க்க உகந்த இடங்களாக இருப்பதால், அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் மன மகிழ்ச்சி மற்றும் அமைதியை கொடுக்கும் இடமாக வியட்நாம் இருக்கிறது. வியட்நாம் சுற்றுப் பயணத்தில் பலவகையான அறுசுவை உணவுகளும் உங்களுக்கு கிடைக்கும். இந்த கட்டுரையில் வியட்நாமில் உள்ள பிரபல சுற்றுலாத்தலங்கள் பற்றி விரிவாக காண்போம்.
லேடி புத்தா டா நாங் கோவில்
வியட்நாமில் பெரும்பாலான மக்கள் புத்த மதத்தையே பின்பற்றுகின்றனர். அதனாலேயே அங்கு புத்தருக்கென்று பல கோவில்கள் இருக்கும். அதில் மிகவும் பிரபலமானது லின்ஹ் உங் பகோடா நகரில் அமைந்துள்ள லேடி புத்தா டா நாங் கோவில். இந்த கோவிலில் இருக்கும் 220 அடி உயர புத்தரை பார்ப்பதற்கென்றே உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவர். அதுமட்டுமில்லாமல் இங்கு இருக்கும் புத்தர் மட்டுமே தாமரை மீது நின்று கொண்டிருப்பார். அதுமட்டுமில்லாமல் அந்த சிலை பெண் உருவத்தில் இருப்பதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இங்கு வர விரும்புவர். அந்த புத்தரை தவிர்த்து இங்கு சிறு சிறு சிலைகளாய் 21 புத்தர்கள் இருக்கின்றனர். இதில் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு புத்தரும் விதவிதமான முகபாவனைகளில் இருப்பர். அதுமட்டுமில்லாமல் பெரிய புத்தர் சிலையில் 17 மாடிகள் இருக்கும் அங்கிருந்து வியட்நாமின் கேல் கடற்கரையை கண்டு ரசிக்கலாம்.
லின்ஹ் உங் பகோடா நகரில் அமைந்துள்ள லேடி புத்தா டா நாங் கோவில்
வார் ரேம்நான்ட்ஸ் அருங்காட்சியகம்
ஹோ சீ மின்ஹ் நகரத்தின் மைய பகுதியில் அமைந்திருக்கும் இந்த அருங்காட்சியகமானது பல வரலாற்று சிறப்புகளை உடையது. இந்தோ- சீனா போரின் நினைவாக இது கட்டப்பட்டது. செப்டம்பர் 5,1975 ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. வியட்நாமிற்கு வரும் பாதி சுற்றுலா பயணிகள் இங்கு தவறாமல் வந்துவிட்டு செல்வர். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எதனால்? எப்படி போர் தொடங்கியது? என்னென்ன ஆயுதங்கள் போரில் பயன்படுத்தப்பட்டன போன்ற அனைத்து விதமான வரலாற்று தகவல்களையும் இங்கு காணலாம். அதுமட்டுமில்லாமல் அந்த போரின்போது உயிர் தியாகம் செய்த பல ராணுவ வீரர்களின் பெயரும் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த இடத்திற்கு வர அனைத்து விதமான போக்குவரத்து வசதிகளும் இருக்கின்றன. இருசக்கர வாகனத்தில் வரும் நபர்களுக்கு பார்க்கிங் வசதியும் இருக்கின்றது.
இந்தோ- சீனா போரின் நினைவாக கட்டப்பட்ட வார் ரேம்நான்ட்ஸ் அருங்காட்சியகம்
ஹோய் அன் நகரம்
உலகின் பழமையான நகரங்கள் பட்டியலில் இந்த நகரமும் யுனெஸ்கோவினால் 1999 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. பழமையான நகரம் என்பதாலேயே இந்த இடத்திற்கு தனி வரலாற்று சிறப்பு இருக்கிறது. 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் அப்போது பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்று பார்த்து ரசிப்பதற்கு ஏராளமான விஷயங்கள் இங்கு இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் 17 ஆம் நூற்றாண்டில் ஜப்பானியர்களால் கட்டப்பட்ட பாலம் இன்றளவும் ஹோய் அன் நகரத்தில் இருக்கின்றது. இதை காணவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். முக்கியமாக வியட்நாமின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்காக ஹோய் அன் நகரத்தில் மூன்று அருங்காட்சியகங்கள் உள்ளன. முதன்முதலில் 1994 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மியூசியம் ஆஃப் ஷாஹ் ஹியுனில், முந்தைய காலத்தில் வியட்நாமில் வாழ்ந்த ஷாஹ் ஹியுன் இனமக்களின் கலை பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்த அருங்காட்சியகத்தில் ஷாஹ் ஹியுன் மக்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களின் ஓவியங்கள் என்று பார்த்து ரசிப்பதற்கு ஏராளமானவை இருக்கும். இரண்டாவதாக 1995 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மியூசியம் ஆஃப் ட்ரேட் செராமிக்ஸில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வியட்நாம் மக்களினால் என்னென்ன பொருட்கள் பண்டமாற்றம் செய்யப்பட்டதோ, அனைத்து பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்த அருங்காட்சியகத்தில் பெரும்பாலும், சீன மக்களின் பொருட்களும், பெர்சிய நாட்டு மக்களின் பொருட்களும் அதிகளவில் காணப்படும். அதன்பிறகு 2017 ஆம் ஆண்டு ஹெரிடேஜ் ஆஃப் கேலரி கட்டப்பட்டது. இங்கு 18 ஆம் நூற்றாண்டில் வியட்நாம் நாட்டிற்கு வந்த ஃபெரஞ்சு போட்டோகிராஃபர் ரீகன் எடுத்த புகைப்படங்கள் காட்சிபடுத்தப்பட்டிருக்கும்.
யுனெஸ்கோவினால் உலகின் பழமையான நகரங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஹோய் அன் நகரம்
லின்ஹ் புஹாக் பகோடா
இதுவும் வியட்நாமில் உள்ள பிரபலமான கோவில்தான். கோவிலின் மைதானத்தில் 49 மீட்டர் நீளமுள்ள டிராகன் இருக்கும். அந்த டிராகன் 12,000 பீர் பாட்டில்களால் ஆனது. டிராகனின் வாய் அங்கிறக்கும் புத்தரை மூடுவதை போல் இருக்கும். கோவிலின் மைதானத்தில் 37 மீட்டர் உயரமுள்ள ஏழு மாடி கோபுரம் ஒன்றும் இருக்கின்றது. அத்துடன் வியட்நாமின் மிக உயரமான கோவில் மணி கோபுரமும் இங்குதான் இருக்கின்றது. கோபுரத்தின் இதயத்தில் 4.3 மீட்டர் உயரத்தில் மணி உள்ளது. 2.33 மீட்டர் அகலமும், 8,500 கிலோ எடையும் கொண்டது அந்த மணி. 1999 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த லின்ஹ் புஹாக் பகோடா கோவிலுக்கு செல்ல அனைத்து விதமான போக்குவரத்து வசதிகளும் இருக்கின்றன.
வியட்நாமின் மிக உயரமான கோவில் மணி கோபுரத்தைக்கொண்ட லின்ஹ் புஹாக் பகோடா
முவங் ஹவ் பள்ளத்தாக்கு
வடமேற்கு வியட்நாமில் உள்ள சுற்றுலாத்தலங்களில் மிகவும் கவர்ச்சிகரமான இடமாக முவங் ஹவ் பள்ளத்தாக்கு விளங்குகிறது. சாபா என்கின்ற இந்த நகரம் வியட்நாம் மக்களால் "வடக்கின் டா லாட்" என்று அழைக்கப்படுகிறது. சாபாவில் ஹாம் ரோங் மலை, கேட் கிராமம், ஓ குய் ஹோ பாஸ் மட்டுமின்றி, பல சுற்றுலாப் பயணிகளை கவரும் சொர்க்க பூமியாக முவங் ஹவ் பள்ளத்தாக்கு இருக்கிறது. வடமேற்கு வியட்நாமின் மலைத்தொடர்கள் மற்றும் காடுகளை கடந்து, பார்வையாளர்களை கவரும் வகையில், இயற்கையினால் நெய்யப்பட்ட அழகிய சித்திரம் போல முவங் ஹவ் பள்ளத்தாக்கு காட்சியளிக்கிறது. மேலும், பரந்த அமைதியான நிலப்பரப்பின் மத்தியில் மனதுக்கு அமைதியை தரும் வகையில் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. ட்ரெக்கிங் செய்ய விரும்புவோருக்கு இந்த இடம் கண்டிப்பாக பிடிக்கும்.
மனதை மயக்கும் முவங் ஹவ் பள்ளத்தாக்கு
பட்ஜெட் மற்றும் பயண திட்டம்
விமான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.17,000 வரை இருக்கும். விமான முன்பதிவு இணையதளங்களைச் சரிபார்த்து, சற்று முன்கூட்டியே பயணத்தை திட்டமிட வேண்டும். முடிந்தளவுக்கு 3 மாதங்களுக்கு முன்பே பயணத்தை திட்டமிட்டு வைத்துக் கொண்டால், விமான டிக்கெட் விலை குறைவாக கிடைக்க வாய்ப்புள்ளது. தங்குமிடத்தை பொறுத்தவரையில் நிறைய பட்ஜெட் ஹோட்டல்கள் மற்றும் விடுதிகள் உள்ளன. ஒரு இரவுக்கு ரூ.1,000க்குக் கீழே கூட தங்குமிடங்கள் இருக்கின்றன. அதன்பிறகு மிக முக்கியமானது உணவு. வியட்நாம், தெரு உணவுக்கு மிகவும் பிரபலமானது. அந்த அனுபவத்தை தவறவிட்டுவிடாதீர்கள். நேம் ரான் அல்லது சா ஜியோ (வறுத்த ஸ்பிரிங் ரோல்ஸ்) மற்றும் சா கா (வறுக்கப்பட்ட துண்டு துண்டாக வெட்டப்பட்ட மீன்), ஃபோ (குழம்பு நூடுல்ஸ்), ஸோய் (ஒரு வகையான ஒட்டும் அரிசி) ஆகியவை கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய சில சுவையான வியட்நாமிய உணவுகள் ஆகும். வியட்நாமிற்கு செல்ல சிறந்த நேரம் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை மற்றும் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை.
முக்கிய சுற்றுலா இடங்களுடன்கூடிய வியட்நாமின் வரைபடம்