
கற்பனைக்கு எட்டாத மாய உலகம்! ஒரே மலையில் 100 குகைகள்! 200 ஆண்டுகளாக கட்டப்பட்ட எல்லோரா!
மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், அவர்களுக்குப் பெருமையைச் சேர்த்தது அவர்களின் கட்டுமான நுட்பங்கள்தான். அதிலும், ஆன்மிகத் தலங்களின் கட்டடக் கலையில் ஒரு தனிச்சிறப்பே இருந்துள்ளது. அனைத்து நாட்டு மன்னர்களும் போட்டி போட்டுக்கொண்டு ஆன்மிகத் தலங்களை எழுப்பி வந்தனர். விதவிதமான கற்பனைத் திறன்களை வெளிப்படுத்தி வித்தியாசமான அமைப்பில் ஆன்மிகத் தலங்களை வடிவமைத்து வந்தனர். அதற்கு தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், லேபாக்ஷி கோயில் போன்ற இடங்களை சான்றாக சொல்லலாம். இக்கோயில்களில் எல்லாம் ஒற்றைக்கல்லினால் செய்யப்பட்ட மிகப்பெரிய சிற்பங்களை நாம் காணலாம். ஆனால் ஒரே பாறையில் குடையப்பட்ட மிகப்பெரிய கோவில் ஒன்று மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிறது. எல்லோரையும் மயக்கும் அக்கட்டிடக்கலை உன்னதத்தை பற்றி இத்தொகுப்பில் விரிவாக காணலாம்.
எல்லோரா குகையின் வெளிப்புறம்
இந்தியாவின் பெருமை "எல்லோரா குகைகள்"
பழைமையும் பெருமையும் வாய்ந்தவை இந்தியாவின் கலைப் படைப்புகள். இன்றளவும் உலகத்தின் கவனத்தைக் கவர்வனவாகவும், வியப்பூட்டுவனவாகவும் விளங்குகின்றன. அத்தகைய கலைப் பொக்கிஷங்களின் கூடாரமே எல்லோரா. அஜந்தா, எல்லோரா, எலிபண்டா குகைகள் என வெறும் கற்களையும், மலைகளையும் தங்கள் உளிகளால் காவியங்கள் ஆகியுள்ளனர் அக்காலத்து சிற்பிகள். மகாராஷ்டிரம் பல்வேறு கலாச்சாரத்திற்கு மட்டுமல்லாது பல்வேறு மதங்களுக்கும் சொந்தமான ஊராகும். மதங்கள் அங்குத் தோன்றாவிட்டாலும் மதங்களுக்கு ஆதரவும், அடைக்கலமும் கொடுத்த ஊர். எனவே புத்த மதம், சமணம், சைவம் என்று முப்பெரும் மதச் சின்னங்களை அங்கு ஒரே இடத்தில் காணலாம். அப்படிபட்ட இடம்தான் இந்த எல்லோரா குகை.
எல்லோரா குகையினுள் இருக்கும் புத்தர் சிலை
எல்லோரா குகையின் வரலாறு
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் நகரிலிருந்து 28 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் எல்லோரா குகையினுள் இருக்கும் 'கைலாசா கோவில்' தான் உலகில் ஒற்றைக்கல்லில் குடையப்பட்ட மிகப்பெரிய கோவிலாகும். இந்த எல்லோரா சிற்பங்கள் ராஸ்டிரகூடர் மற்றும் யாதவ வம்சத்தினரால் கட்டப்பட்டதாகும். சரணாந்த்ரி மலையில் அமைந்திருக்கும் குகைகளில், 17 குகைகள் ஹிந்து கோவில்களாகவும், 12 பௌத்த கோவில்களாகவும், 5 ஜைன கோவில்களாகவும் இருக்கின்றன. அருகருகே வெவ்வேறு மத கோவில்கள் இருப்பது அக்காலத்தில் நிலவிய மதநல்லிணக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த கோவில்கள் 6-9 ஆம் நூற்றாண்டிற்குள் கட்டப்பட்டவையாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது.
இந்தியாவின் பழம்பெரும் கைலாசநாதர் கோவில்
புகழ்பெற்ற கைலாசநாதர் கோவில்
கி.பி 757-783 காலகட்டத்தினுள் ராஸ்டிரகூடர் வம்சத்தை சேர்ந்த முதலாம் கிருஷ்ணா என்ற அரசரின் ஆட்சி காலத்தில் கைலாசநாதா கோவில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இக்கோவிலின் மூலவராக சிவபெருமான் இருக்கிறார். இந்த கோவிலை கட்டிமுடிக்க கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகியிருக்கின்றதாம். சிவபெருமானின் உறைவிடமான கைலாச மலையை மறுவுருவாக்கம் செய்யும் நோக்கோடு இந்த கைலாசநாதா குடைவரை கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. மற்ற பொதுவான கோவில்களில் இருப்பதை போன்றே இந்த குடைவரை கோவிலும் கட்டப்பட்டிருப்பதுதான் ஆச்சரியமூட்டக்கூடிய விஷயமாகும். கற்தூண்கள், ஜன்னல்கள், உள் மற்றும் வெளி விகாரங்கள், மிகப்பெரிய மண்டபம், இவை எல்லாவற்றிற்கும் மேலாக இக்கோவிலின் மத்தியில் இருக்கும் மிகப்பெரிய சிவலிங்கம் போன்றவை திராவிட குடைவரை கட்டிடக்கலையின் உச்சமாக இருக்கின்றன.
1000 ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் கோவில்
ராவணனின் கம்பீரமான சிற்பங்கள்
இந்த கைலாசநாதர் ஆலயத்தில் ராவணனின் கம்பீரமான சிற்பங்கள் அமைந்துள்ளன. பார்வதியோடும் நந்தியோடும் சிவன் இருக்கும் கயிலையை, ராவணன் தூக்கி எறிய முயலும் காட்சிகள் மிக நுட்பமாக வடிக்கப்பட்டிருக்கின்றன. ராவணன் தனது 10 தலைகளில் 9 தலைகளை ஈசனுக்குக் காணிக்கையாகத் தர, அந்த 9 தலைகளையும் ஈசன் மாலையாகக் கோத்து அணிந்திருக்கும் சிற்பமும் மிகவும் சிறப்புப் பெற்றது. பல்வேறு காலங்களைச் சேர்ந்த அழகிய ஓவியங்களின் சிதறல்கள் இந்தக் கோவில் மண்டபத்தின் கூரையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
யுனெஸ்கோ மாநாட்டில் அங்கீகாரம் பெற்ற எல்லோரா குகை
இந்தியாவின் பொக்கிஷம்
உலக அதிசயங்களாகத் திகழும் இந்தக் கலைக் கோவில்களை 1983-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், கலாச்சாரம், நாகரிகம், பாரம்பரியம், தனித்துவம் என்ற பட்டியலின் அடிப்படையில், யுனெஸ்கோவின் 1, 3 மற்றும் 4-வது விதியின் கீழ் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் எல்லோரா குகைகள் சேர்க்கப்பட்டன.
எல்லோரும் மயங்கும் எல்லோரோ!
எல்லோராவில் ஒரே மலையில் 100-க்கும் மேற்பட்ட குகைகள் என்பது ஆச்சர்யம் அளிக்கும் நிலையில், இதை மனிதர்கள்தான் கட்டினார்களா என்ற வியப்பும் ஏற்படுகிறது. பெரும்பாலான ஆதாரங்களின்படி, இந்தியாவில் எல்லோரா குகைகள் தளத்தில் 100க்கும் மேற்பட்ட குகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றில் 34 குகைகள் மட்டுமே பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பிரம்மாண்டம் என்ற வார்த்தையே பிரம்மிக்கும் அளவில் உள்ள இந்த எல்லோரா குகை கோவில்களை கட்டி முடிக்க 200 ஆண்டுகள் ஆனதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவேதான் தற்போதும் கம்பீரமாய் நிற்கும் எல்லோரா, எல்லோரையும் மயக்குகிறது!
இந்தியாவின் மிகமுக்கியமான சுற்றுலாத்தலமான எல்லோரா குகைகள்
சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு
அவுரங்காபாத்திலிருந்து 28 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து 1,199 கி.மீ. தொலைவிலும் எல்லோரோ உள்ளது. விமானம், ரயில் மூலம் அவுரங்காபாத் அடைந்து அங்கிருந்து பேருந்துகள் மூலமாக எல்லோராவை அடையலாம். எல்லோராவிலிருந்து புனே 255 கி.மீ தொலைவிலும், ஷீரடி 109 கி.மீ தொலைவிலும் இருக்கின்றன. எல்லோரா செல்வதற்கு நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலச்சூழல் சிறந்ததாக இருக்கும். காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும் எல்லோரா குகைகளுக்கு செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை. வாரத்தின் மற்ற நாட்களில் எல்லோரவை ரசிக்கலாம். அதன்பிறகு எல்லோரா குகைகளைச் சுற்றிப் பார்க்க விரும்பும் இந்தியப் பயணிகளுக்கு 35 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பிற நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு 550 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.
