அண்டங்காக்கைகளால் பாதுகாக்கப்படும் மர்மம் நிறைந்த லண்டன் கோட்டை - "தி டவர் ஆஃப் லண்டன்"
சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியில் லண்டனும் ஒன்று. நைட் லைஃப் முதல் கட்டிடக்கலைகள் வரை லண்டனில் பல ஸ்பெஷாலிட்டிகள் உள்ளன. லண்டனின் மிகவும் பிரபலமான வரலாற்று கோட்டையான தி டவர் ஆஃப் லண்டன், அதன் வரலாற்றுக்கு மட்டும் இல்லாமல் சுவாரஸ்யமான சில கதைகளுக்கும் பிரபலமானது. இந்த கோட்டையை பற்றி மக்கள் பல வதந்திகளை பரப்பி வருகின்றனர். இந்த பழமையான கோட்டையான லண்டன் கோபுரத்தை அண்டங்காக்கைகள் (Raven) பாதுகாத்து வருவதாக கூறப்படுகிறது. இதில் என்ன சுவாரசியம் என்னவென்றால் அந்தக் காக்கைகளை காக்கவும், அவற்றின் நலனைக் கவனிக்கவும் சமீபத்தில் ஒருவர் பராமரிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பெயர் மைக்கேல் பார்னி சான்ட்லெர். 56 வயதாகும் மைக்கேல் பிரித்தானியாவின் கடற்படையான ராயல் மெரைனில் பணியாற்றிய முன்னாள் வீரர் ஆவர். இந்த கோட்டையை பற்றி பலரும் பல கருத்தை கூறி வருகின்றனர். அது குறித்து விரிவாக இக்கட்டுரையில் பார்ப்போம்.
லண்டன் கோபுரத்தின் வெளிப்புற தோற்றம்
கோட்டையின் வரலாறு
இந்த கோட்டை லண்டன் இளவரசர்களுக்காக கட்டப்பட்டது. இளவரசர்கள் ஐந்தாம் எட்வர்ட் மற்றும் அவரது இளைய சகோதரர் ரிச்சர்ட் ஆஃப் யார்க், இங்கிலாந்து கோட்டையில் வாழ்ந்து வந்துள்ளனர். 1483 ஆம் ஆண்டு அவர்களுக்கு முடிசூடும் விழா தயாராகிக்கொண்டு இருந்த நிலையில் அவர்களை அவர்களது முறைமாமன் மூன்றாம் ரிச்சர்ட் இந்த கோட்டையில் தங்க வைத்துள்ளார். அவர்கள் லண்டன் கோபுரத்தில் தங்கியிருந்தபோது அவர்களுக்கு முறையே 12 மற்றும் 9 வயது மட்டுமே ஆகியிருந்தது. அப்போதைய க்ளூசெஸ்டர் பிரபுவாக இருந்த மூன்றாம் ரிச்சர்ட், இவர்களை தங்க வைத்த பின்னர் இளவரசர்கள் இருவரும் மாயமாகியுள்ளனர். ஆனால் அவர்கள் காணாமல் போனது இன்று வரை மர்மமாகவே உள்ளது. அவர்களை அதன் பின்னர் பார்த்தவர்களே இல்லை. அவர்கள் கொல்லப்பட்டதாக பலர் நம்புகிறார்கள். மேலும் சிலர், அவர்களின் முறைமாமன் மூன்றாம் ரிச்சர்ட், இளவரசர்கள் முறைகேடானவர்கள் என்று கூறி, தானே அரியணைக்கு ஏறினார் என்றும் கூறுகின்றனர். இருப்பினும், எந்த உறுதியான ஆதாரமும் இன்றுவரை கிடைக்கவில்லை.
பல மர்மங்களை உள்ளடக்கிய "தி டவர் ஆஃப் லண்டன்"
கோபுரத்தின் சிறப்புகள்
1536-ஆம் ஆண்டில் மன்னர் எட்டாம் ஹென்றி தனது இரண்டாவது மனைவி அன்னே போளினை இங்கு தூக்கிலிட்டாராம். அதுமட்டுமில்லாமல் இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கோபுரத்தை கவனிக்காமல் விட்டுவிட்டால், அதற்கு அடுத்துள்ள வெள்ளைக் கோபுரம் இடிந்து, இங்கிலாந்து சாம்ராஜ்யம் வீழ்ந்துவிடும் என்று 7ஆம் நூற்றாண்டில் இரண்டாம் சார்லஸ் மன்னருக்கு தீர்க்கதரிசனம் ஏற்பட்டதாம். மேலும், இந்தக் கோபுரத்தில் எப்போதும் ஆறு காகங்கள் இருக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டதாம். அப்போதிலிருந்து, அண்டங்காக்கைகள் இந்த கோட்டையை காத்து வருவதாக உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள். காகங்கள் கோட்டையை விட்டு வெளியேறினால், வெள்ளை கோபுரத்துடன் இங்கிலாந்து ராஜ்ஜியமும் சாய்ந்துவிடும் என்றும் நம்புகிறார்கள்.
அண்டங்காக்கைகளால் பாதுகாக்கப்படும் லண்டன் கோட்டை
இளவரசர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு
17-ஆம் நூற்றாண்டில் கோட்டை புதுப்பிக்கப்பட்டபோது இளவரசர்களின் உடல்கள் கோபுரத்தின் படிக்கட்டுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் எச்சங்கள் உறுதியாக அடையாளம் காணப்படாததால் விசாரணைகள் மர்மத்தை அதிகரித்தன. அதனால் இன்றுவரை அந்த இளவரசர்கள் என்ன ஆனார்கள், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது மர்மமாகவே உள்ளது.
இங்கிலாந்தின் கிரீடமும் பொக்கிஷங்களும்
1303-ஆம் ஆண்டு வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள செயின்ட் பீட்டர் மடத்திலிருந்து ஏராளமான விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர், எஞ்சி இருந்த பொக்கிஷங்களின் பாதுகாப்பிற்காக லண்டன் கோபுரத்திற்கு கொண்டுவரப்பட்டன. இங்குதான் பிரிட்டன் மன்னர்கள் மற்றும் அரசிகள் தங்களது முடிசூட்டு விழாவில் அணியும் கிரீடமும் வைக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க லண்டன் கோபுரத்தை பார்வையிட ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தொள்ளாயிரம் ஆண்டுகளாக போர், எதிரிகளின் படையெடுப்பு மற்றும் பீரங்கியால் பாதிக்கப்படாத லண்டன் கோபுரத்தின் அழகு போன்றவை, தற்போது லண்டன் நகரின் வாகனங்களிலிருந்து வரும் புகையால் சிதைக்கப்பட்டு வருகின்றன.
சுற்றுலா பயணிகளை கவரும் லண்டன் கோபுரம்
காகங்களின் எண்ணிக்கை
மன்னர் இரண்டாம் சார்லஸ் தனக்குச் ஏற்பட்ட தீர்க்கதரிசனத்தை நம்பினார். அந்த கோபுரத்தில் எப்போதும் ஆறு காகங்கள் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். கடந்த ஆண்டு, மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்கு பின், காகங்களின் எண்ணிக்கை, ஏழாக உயர்த்தப்பட்டது. இப்போது காக்கைகளை பராமரிக்கும் பொறுப்பை மைக்கேல் பார்னி சாண்ட்லெர் ஏற்றுள்ளார். அவர் இந்த பதவியை வகிக்கும் ஆறாவது அதிகாரி ஆவார். அவர் பறவைகளின் ஆரோக்கியம் மற்றும் நலனைக் கவனித்துக்கொள்கிறார். பறவைகள் வழக்கமாக பகலில் கோபுர மைதானத்தில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன மற்றும் இரவில் கூண்டுகளில் தூங்குகின்றன.
காகங்களின் பராமரிப்பாளர் (ராவெண்மாஸ்டர்)
சமீபத்தில் மைக்கேல் லண்டன் கோபுரத்தின் ராவெண்மாஸ்டர் கடமைகளை ஏற்றுக்கொண்டார். அவருக்கு கீழ் மற்ற நான்கு ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.1066-ஆம் ஆண்டு இங்கிலாந்தைக் கைப்பற்றிய பின்னர், முதலாம் வில்லியம் மன்னரால் இந்த கோட்டை கட்டப்பட்டது. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அரச வசிப்பிடமாக இருந்த இந்தக் கோட்டை, பின்னர் சிறைச்சாலையாகப் புகழ் பெற்றது.1483-இல் மன்னர் நான்காம் எட்வர்டின் மகன்கள் (பிரின்சஸ் இன் தி டவர்) சிறையில் அடைக்கப்பட்டனர் என்று சிலர் கூறுகின்றனர். இன்று லண்டன் டவர் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக உள்ளது. அரண்மனைக்குள், பார்வையாளர்கள் கோபுரத்தின் வளமான வரலாற்றை ஆராயலாம். இது அரச அரண்மனை, சிறைச்சாலை, கருவூலம் மற்றும் ஒரு மிருகக்காட்சிசாலை உட்பட பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. நீங்கள் வரலாற்று ஆர்வலராக இருந்தாலும் சரி அல்லது நல்ல மர்மத்தை அனுபவிக்கும் ஒருவராக இருந்தாலும் சரி, தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள இந்த லண்டன் டவர் மிகவும் ஏற்ற இடம்.