இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மர்மங்கள் நிறைந்த இந்த உலகில் பலவற்றுக்கு ஆராய்ச்சியாளர்கள் விடை கண்டுவிட்டனர். ஆனால், விடைகாணப்படாத சில மர்மங்களும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. இயற்கையின் ஆச்சர்யங்கள் அனைத்தையும் மனிதனால் ஒரே மூச்சில் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், தொடர்ந்து பல ஆண்டுகள் ஆராய்ந்து அதைக் கண்டுபிடிக்கும் வண்ணம் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இருந்தபோதிலும் பூமியில் இன்னமும் தீர்க்கப்படாத சில பல சிக்கல்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது ‘பெர்முடா முக்கோணம்’. இந்த பகுதிக்குள் செல்லும் விமானங்கள், கப்பல்கள் எல்லாம் காணாமல் போவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் இந்த பகுதி துல்லியமாக எங்கே உள்ளது? இதுவரை எத்தனை விமானங்கள் கப்பல்கள் காணாமல் போயுள்ளன? எத்தனை பேர் இதில் தொலைந்து போனார்கள்? என்பதை பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.


வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ள பெர்முடா தீவு

பெர்முடா முக்கோணம் என்றால் என்ன?

வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு. அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு வைக்கப்பட்ட பெயர்தான் பெர்முடா முக்கோணம். இதை சாத்தானின் முக்கோணம் என்றும் மக்கள் அழைக்கிறார்கள். அதற்குக் காரணம், அந்தக் கடல் பகுதியில் செல்லும் விமானங்கள், கப்பல்கள் எல்லாம் மாயமாய் மறைந்து போவதுதான். பெர்முடா முக்கோணத்தின் அருகே செல்லும்போது திசை காட்டிகள் செயலிழக்கின்றன என்று முதன் முறையாகக் கண்டறிந்து கூறியவர் கொலம்பஸ். அந்தப் பகுதி வானத்தில் ஓர் எரிப்பந்தைக் கண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். அதன்பின் 1872-ம் ஆண்டு ‘மேரி செலஸ்டி’ என்கிற கப்பலும், 1918-ம் ஆண்டு ‘யு.எஸ்.எஸ் சைக்ளோப்ஸ்’ என்கிற கப்பலும் சில நூறு பயணிகளுடன் காணாமல் போயின. 1945-ம் ஆண்டு பிளைட்-19 வகையைச் சேர்ந்த 5 ராணுவ விமானங்கள் அந்தப் பகுதியில் பறக்கும்போது காணாமல் போயின. 1949-ல் ஜமைக்கா நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் 39 பயணிகளுடன் இங்கே மாயமானது. இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் அந்தப் பகுதியில் நிகழ்ந்ததாகப் கூறப்படுவதால், அது மர்மப் பிரதேசமாகவே திகழ்கிறது.

பெர்முடா முக்கோணத்தை பற்றிய முதல் தகவல் :

1950ம் ஆண்டு அமெரிக்காவில் வெளிவந்த தி மியாமி ஹெரால்டு என்ற பத்திரிகையின் செய்திதான் இப்படியான ஒரு மர்மம் நிகழ்வதையே வெளி உலகிற்குக் கொண்டுவந்தது. அவர்கள்தான் முதல் முதலாக இந்த பகுதியில் மாயமான கப்பல்கள் மற்றும் விமானங்களை வைத்து இப்படி ஒரு விஷயம் நடப்பதைக் கண்டுபிடித்தனர். அதன்பின் இது குறித்து ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட்டன. சிலர் இந்த சம்பவம் குறிப்பிட்ட ஒரு இடத்திற்குள் நடப்பதாக எல்கைகளைக் குறிப்பிட்டிருந்தனர். சிலர் அப்படி எதுவும் குறிப்பிடாமல் குறிப்பிட்ட இடத்தை மட்டும் தங்கள் ஆய்வில் கூறியிருந்தனர். அதன்படி பார்த்தோமேயானால், சுமாராக 13 முதல் 39 லட்சம் சதுர பரப்பு கொண்ட பகுதிதான் மர்மமான பெர்முடா முக்கோண பகுதியாகக் கருதப்படுகிறது.


அனைத்தையும் மூழ்கடிக்கும் பெர்முடா முக்கோணம்

விமானியின் அனுபவம் :

இதுவரை அந்தப் பகுதியில் காணாமல்போன விமானங்களோ, கப்பல்களோ கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்கள் இதனால் பலியாகி இருக்கின்றன. இந்தநிலையில் அப்பகுதியில் இருந்து தப்பிவந்த புரூஸ் ஹெனன் என்கிற விமானி சொன்ன அனுபவம்தான் பெர்முடா முக்கோணம் பற்றிய ஆராய்ச்சிக்கு விதையாக அமைந்தது. அவர் ஒருமுறை மியாமியிலிருந்து பனாமா கால்வாய் வழியாகத் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது தீடீரென்று அவரைச் சுற்றி கருமேகங்கள் சூழ்ந்து, திசைகாட்டும் கருவி விடாமல் சுற்றிக்கொண்டே இருந்தது. அவரால் திசையை தீர்மானிக்க முடியவில்லை. இருப்பினும் தொடர்ந்து விமானத்தை இயக்கியவர், மேகக்கூட்டங்களுக்கு நடுவே ஒரு குகை போன்ற வழியைக் கண்டார். 16 கிலோமீட்டர் நீளமான அந்தக்குகை போன்ற மேகக்கூட்டத்தை 20 நொடிகளில் கடந்ததாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். அதுதான் ஆராய்ச்சியாளர்களை மேலும் சிந்திக்க வைத்தது.

சாத்தானின் முக்கோணம் :

மத நம்பிக்கை உடையவர்கள் இதை சாத்தானின் முக்கோணம் என்று தெரிவிக்கின்றனர். அங்கு செல்பவர்கள் கடவுளின் சாபத்திற்கு ஆளாகி மாயமாகிவிடுவதாக அவர் கூறிவந்தனர். வேற்றுகிரக வாசிகள், ஏலியன்கள் அங்கு வசிப்பதாகவும், அங்கு எரிவாயு, தாது பொருட்கள் அதிகம் இருப்பதால் பன்னாட்டு நிறுவனங்கள் அப்பகுதிக்குள் செல்பவர்களை கொன்றுவிடுவதாகவும், இது இல்லுமினாட்டி சதி என்றும் சதிக்கோட்பாட்டாளர்கள் தெரிவித்துவந்தனர்.


சாத்தானின் முக்கோணம் என்று அழைக்கப்படும் பெர்முடா முக்கோணம்

ஏலியன்களா? மனித தவறுகளா?

குறிப்பிட்ட இந்த பெர்முடா முக்கோண பகுதியில் அடிக்கடி ஏலியன் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும், சிலர் பறக்கும் தட்டுகள் மற்றும் மிதக்கும் வித்தியாசமான பொருட்களை பார்த்ததாகவும் கூறுகின்றனர். அவர்களின் வேலைதான் இந்த காணாமல் போன கப்பல் மற்றும் விமானங்கள் என்றும் தெரிவிக்கின்றனர். ஆனால் இதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. இன்றுவரை வெறும் கட்டுக்கதைகளாகவே இருக்கின்றன. இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம், அமானுஷ்யமா? அறிவியலா? என்று உண்மையான காரணம் முழுமையாக விளக்கப்படவில்லை. எனவே விமானம் மற்றும் கப்பலை ஓட்டி செல்பவர்கள் செய்த தவறால் மட்டுமே இது நிகழ்ந்திருக்கலாம் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால் அவர்களிடம் காணாமல் போன விமானங்கள், கப்பல்கள் எங்குதான் போனது என்ற எந்த தகவலும் இன்றளவும் இல்லை.

புவி ஈர்ப்பு சக்திதான் காரணமா?

விஞ்ஞானிகளை பொறுத்தவரை பெர்முடா முக்கோணத்தில் அதிகளவிலான புவி ஈர்ப்பு சக்தி இருக்கலாம் என்றும், அதன் காரணமாகவே விமானங்கள் மற்றும் கப்பல்கள் உள் இழுக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். இதுகுறித்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த கார்ல் என்ற ஆராய்ச்சியாளர் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார். அதன் முடிவில் பெர்முடா முக்கோணத்தில் எந்த மர்மமும் இல்லை என்றும், அப்பகுதியில் நேர்ந்த அசம்பாவிதங்களுக்கு மோசமான வானிலையும், மனித பிழைகளுமே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.


அதிக புவி ஈர்ப்பு சக்தியால் விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈர்க்கப்படுவதாக தகவல்

காரணம் கண்டுபிடிப்பு!

பெர்முடா முக்கோணத்துக்குப் பின்னால் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக சமீபத்தில் தெரிவித்த ஆராய்ச்சியாளர்கள், அதுகுறித்த ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளனர். அந்தப் பகுதியில் நிலவும் அதிகப்படியான காற்று மற்றும் பருவநிலை மாற்றங்கள் ஏற்படுத்தும் அழுத்தமும், அறுகோண வடிவில் சுழலும் மேகங்கள் 170 மைல் வேகத்தில் ஏற்படுத்தும் காற்றழுத்தமும்தான் அதற்குக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும், காற்றுப்படிமங்கள் கப்பல்களையும், விமானங்களையும் உள்ளிழுத்துக் கொள்ளும் சக்திவாய்ந்தவையாக இருப்பதாகக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதுகுறித்து, வானியல் ஆராய்ச்சியாளர் ராண்டி சேர்வெனி குறிப்பிடும்போது, "செயற்கைக்கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், அங்கு காற்று வடிவங்கள் மிகவும் வினோதமாக இருக்கின்றன. அவை ஏற்படுத்தும் வெடிப்புதான் அழுத்தத்துக்குக் காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று கூறியுள்ளார்.

Updated On 30 Sept 2024 11:47 PM IST
ராணி

ராணி

Next Story