இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நம் அன்றாட வாழ்க்கையில் நம்மிடத்திலும் நம்மைச் சுற்றிலும் ஏதோ ஒன்று வியக்கத்தக்க வகையில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அவை நமக்கு ஏதோ ஒரு தகவலையும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது. அப்படி அதிசயத்தக்க நிகழ்வுகள் அதுவும் வெளிநாடு சார்ந்த நிகழ்வுகள் படிப்பதற்கு ஆர்வமாக இருக்கும். தெரியாத ஒன்றை தெரிந்து கொள்கிறோம் என்ற அனுபவம் தரும். அப்படி துர்க்மெனிஸ்தான் நாட்டில் கராகம் என்ற பாலைவனம் உள்ளது. இந்தப் பாலைவனத்தின் நடுவில் தர்வாசா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் 350 பேர் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்திற்கு அருகில் ஒரு நெருப்புக் குழி இருக்கிறது. இது பார்ப்பதற்கு பாலைவனத்தின் நடுவில் உள்ள எரிமலை போல் தெரியும். இதை நரகத்தின் வாசல் என்று அங்கு இருக்கும் மக்கள் அழைப்பர். அந்த இடத்தில் எப்படி நெருப்பு குழி ஏற்பட்டது? ஏன் இதை நரகத்தின் வாசல் என்று அழைக்கின்றனர்? மற்றும் இந்த நெருப்பு குழியில் முதன்முதலாக இறங்கிய ஜார்ஜ் கௌரோனிஸ் என்பவரின் பேட்டியை பற்றியும் விரிவாக பார்ப்போம்.


நரகத்தின் வாசல் என்று அழைக்கப்படும் "தர்வாசா வாயு பள்ளம்"

தர்வாசா வாயுப் பள்ளத்தின் தோற்றம்

சோவியத் ரஷியப் பொறியாளர்கள் 1971-ஆம் ஆண்டில் கராகம் பாலைவனத்தில் எண்ணெய் வயலைக் கண்டுபிடித்தனர். ஆதலால் அங்கு அவர்கள் 230 அடி சுற்றளவில் மிகப்பெரிய சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொண்டனர். அப்பொழுது எண்ணெய் அளவை மதிப்பீடு செய்ய துளையிடும் பெரிய ரிக் கருவி மூலம் துளையிட்டனர். இந்தப் பணி தொடங்கிய சிறிது நேரத்திலேயே தரைப்பகுதி உள்வாங்கி சரிந்தது. இதனால் ஒரு பெரிய பள்ளம் உருவானது. இந்தப் பள்ளத்தில் துளையிடும் ரிக் இயந்திரம் விழுந்து மறைந்தது. இதிலிருந்து இயற்கையாக விஷ வாயு வெளிப்பட்டது. இது எண்ணெய் வயல் அல்ல. இது எரிவாயு நிறைந்த பகுதி எனத் தெரியவந்தது. மீத்தேன் விஷ வாயு அதிகப்படியாக கசிந்தது. இதனால் ஆபத்தும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும் என்பதை உணர்ந்தனர். வாயுக்கள் வெளியேறுவதைத் தடுக்க பொறியாளர்கள் தீயிட்டபோது பள்ளம் முழுவதும் தீப்பிடித்தது. இது சில வாரங்களில் அணைந்துவிடும் என அவர்கள் நம்பினர். ஆனால் தற்போது வரை (54 ஆண்டுகளாக) எரிந்து கொண்டிருக்கிறது.


தர்வாசா வாயு பள்ளம் முதன்முதலாக தோண்டப்பட்டபோது

பள்ளத்தாக்கில் இறங்கிய முதல் மனிதர்

கனேடிய ஆய்வாளர் ஜார்ஜ் குரூனிஸ், கடந்த ஆண்டு நெருப்பு குழிக்குள் இறங்கிய முதல் நபர் என்கிற சாதனையை படைத்தார். அவரது பயணத்தின் காட்சிகள் நேஷனல் ஜியோகிராஃபியில் ஒளிபரப்பப்பட்டன. இவர் குழியின் அடிப்பகுதியில் இருந்து மண் மாதிரிகளை சேகரித்து, இத்தகைய கடுமையான சூழலில் உயிர்கள் இருக்க முடியுமா என்பதை அறிய முயற்சிப்பதே இதன் நோக்கமாக இருந்தது. இது பற்றி முதன்முதலாக அவர் பேட்டியும் கொடுத்தார்.


எரிவாயுவினால் உருவான நெருப்பு பள்ளம்

தர்வாசா வாயு பள்ளத்தின் ஆய்வு திட்டத்தின் தொடக்கம் - ஜார்ஜ் கௌரோனிஸ்

இந்த இடம் என்னை மிகவும் கவர்ந்தது. இது எவ்வாறு உருவானது என்பதற்குப் பின்னால் உள்ள கதை இன்றுவரை மர்மத்தில் மறைக்கப்பட்டுள்ளது. மேலும் பூமியில் வேறு எந்த இடமும் இதுபோன்று இல்லை. இது மிகவும் தனித்துவமானது. அதிக அழுத்தத்தில் தரையில் இருந்து வெளியேற்றப்படும் எரியும் மீத்தேன் குழி வேறு எங்கும் இல்லை. இது கவர்ச்சிகரமானது, இது பார்வைக்கு பிரமிக்க வைக்கிறது, மேலும் இந்த இடத்தைப் பற்றி நாம் அறிந்துகொள்ள நிறைய இருக்கிறது.

பயணத்திற்குத் தயாராக நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்களை எப்படி பாதுகாத்துக் கொண்டீர்கள்?

சுமார் ஒன்றரை வருட திட்டமிடல் இருந்தது. அனுமதி பெறுதல், அனைத்து தளவாடங்களையும் ஒழுங்காகப் பெறுதல், குழுவைக் கூட்டுதல், எக்ஸ்பெடிஷன்ஸ் கவுன்சிலைப் பெறுதல். மேலும் தயாராவதற்காக, முதலில் நிறைய பயிற்சி இருந்தது. நாங்கள் உள்ளூர் ஆற்றின் பள்ளத்தாக்கில் கயிறு-ரிக்கிங் அமைப்பை அமைத்து, பலமுறை அங்கு பயிற்சி செய்தோம், அதில் நான் அணிந்திருந்த முழு உபகரணமும் அடங்கும். வெப்ப பிரதிபலிப்பு உடை, சுவாசக் கருவி, ஏறும் சேணம் உள்ளிட்டவை இருந்தன.


ஜார்ஜ் கௌரோனிஸ் முதன்முதலாக பள்ளத்தில் இறங்கியபோது

நீங்கள் பள்ளத்திற்குள் சென்று மாதிரிகளை சேகரித்தபோது எப்படி இருந்தது?

"சர்ரியல்" என்பது போதுமான வலுவான வார்த்தை அல்ல. விளிம்பில் இருந்து உங்கள் முதல் அடி எடுத்து வைத்து, இறுதியாக உங்கள் முழு எடையையும் அந்தக் கயிற்றில் வைக்கும்போது, அந்த தொழில்நுட்பம் மற்றும் குழுப்பணியின் சங்கிலியின் ஒவ்வொரு இணைப்பையும் நீங்கள் நம்புகிறீர்கள். நீங்கள் வெளியே செல்லும்போது, ​​நேராக கீழே பார்த்தால், அது கிட்டத்தட்ட வேறொரு கிரகத்தைப் போன்றது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக எரியும் எரிவாயுவின் மர்ம கதை

இணையத்தில் பரவி வரும் கதை, உள்ளூர் புவியியலாளர்கள் சொன்னதில் இருந்து சற்று வித்தியாசமானது. இந்த இடத்தின் பொதுவான நகர்ப்புற புராணக்கதை என்னவென்றால், இது 1971-இல் இடிந்து விழுந்தது மற்றும் சிறிது காலத்திற்குப் பிறகு சோவியத் விஞ்ஞானிகளால் தீ வைக்கப்பட்டது. ஆனால் பல தசாப்தங்களாக அங்கிருந்த உள்ளூர் துர்க்மென் புவியியலாளர்கள், இந்த சரிவு 60-களில் நடந்திருக்கலாம் என்றும், அது 1980-கள் வரை எரியாமல் போய்விட்டது என்றும் கூறுகின்றனர்.


சுற்றுலா தலமாக மாறிய நரகத்தின் வாசல்

சுற்றுலா தலமாக மாறிய நெருப்பு குழி

துர்க்மெனிஸ்தான், உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட நாடுகளில் ஒன்றாகும். இருப்பினும் அதன் வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையானது, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பள்ளத்தை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது. இதற்கு வேலி அமைக்கப்படாததால், பாதுகாப்பு அபாயங்கள் உள்ள போதிலும், பார்வையாளர்கள் பள்ளத்தின் விளிம்பில் நின்று தங்கள் அசாத்திய திறனை சோதித்துக் கொள்கின்றனர்.

நரகத்தின் வாசலுக்கான வழிகாட்டி வரைபடம்

Updated On 28 Jan 2025 9:17 AM IST
ராணி

ராணி

Next Story