
போகர் பிரதிஷ்டை செய்த தசபாஷான முருகர் எங்கிருக்கிறார்? பூம்பாறைக்கு ஒரு பயணம்!
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானல் ஒளித்து வைத்திருக்கும் அழகின் ரகசியமாக அறியப்படுகிறது பூம்பாறை. சுற்றிலும் பச்சை போர்த்திய மலைகள். மலைச் சரிவுகளில் அடுக்கடுக்கான வயல்கள், வயல்களால் சூழப்பட்ட பள்ளத்தாக்கில் வசதியாக அமர்ந்துக்கொண்டிருக்கிறது அந்த சின்னச்சிறு கிராமம். அந்தப் பள்ளத்தாக்கு கிராமத்தை இன்னும் இன்னும் அழகாக்கி விடுகிறது வண்ணமயமான வீடுகளும் அதன் மேற்கூரைகளும். ஊரின் நடுவில் இருக்கின்ற முருகன் கோயிலால் பூம்பாறை மென்மேலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க பூம்பாறை முருகன் கோயில்
கோயிலுக்கு போவோமா..?
குன்றிருக்கும் இடமெல்லாம் முருகன் இருக்கும் இடமல்லவா! அப்படி இருக்கும்போது முருகனை கும்பிடவா இவ்வளவு தூரம் என்று நினைக்காதீர்கள். சாமி கும்பிட மட்டும்தான் கோயிலுக்கு போகவேண்டும் என்பதல்ல; வரலாறுகளை படிக்கவும் கூட போகலாம். தன் கற்றளி செல்களிலெல்லாம் வரலாறுகளை வடித்து வைத்திருக்கின்ற எத்தனையோ கோயில்கள் உள்ளன. கடவுளர்கள் குடிவருவதற்கு முன்பே கோயிலுக்குள் வரலாறுகள் குடியிருந்து வருகின்றன. வாழ்க்கை என்பது தேடுவது, தேடி கொண்டே கற்பது, கற்றவற்றை வாழ்க்கையாக வாழ்வது. ஆக வரலாறு மீண்டும் மீண்டும் நமக்கு தேடலை கற்பிக்கிறது.
பூம்பாறை முருகன் கோயிலின் உட்புறம்
கோயில் அமைவிடம்
கொடைக்கானல் ஏரியிலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த பூம்பாறை குக்கிராமம், பூண்டு உற்பத்திக்கு பெயர் பெற்றிருக்கிறது. தெருவோரங்களில் பூண்டு வியாபாரம் சோம்பிப் போய் கிடக்கிறது.
பூம்பாறையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு குழந்தை வேலப்பர் என்று பெயர். எவ்வித வரிசைப்படுத்தலுமின்றி கூட்டம் வெகு இயல்பாக சன்னதி நோக்கி ஊர்ந்து செல்கிறது. பழமையான சின்னச்சிறு கோயிலின் வெளிப்பிரகார கற்களில் கிரந்த எழுத்துக்களும், பழங்கால புடைப்பு சிற்பங்களும் சிலைகளும் காணக் கிடைக்கின்றன. ஆரவாரமோ ஆராதனைகளோ ஏதுமின்றி வேலாயுதபாணியாக வீற்றிருக்கிறார் குழந்தை வேலப்பர். தேடிவந்த தசபாஷான சிலையை கண்குளிர கண்டு மகிழலாம். "தசபாஷான முருகன் சிலையை காணும் அந்த நேரத்தில், இந்த சிலையை உருவாக்க எப்படி தொடங்கி இருப்பார்கள்? முடிக்க எத்தனை நாட்கள் ஆகியிருக்கும்? முதலில் எங்கிருந்து வடித்திருப்பார்கள்? தலையிலிருந்து பாதம் முடியவா? பாதத்திலிருந்து தலை முடியவா? இதை முதன்முதலில் கண்டு வணங்கிய மனிதன் யார்? போன்ற கேள்விகள் மனதில் எழும்.
பூம்பாறை முருகன் கோயிலின் வெளிப்புற தோற்றம்
போகர்கள் யார்?
காடுகளில், மலைகளில் , குகைகளில் இயற்கையுடன் வாழ்ந்து மக்களுக்கு ஆயூர்வேத வைத்தியம் செய்தவர்கள் போகர்கள். கிமு300 - கிபி300 காலக்கட்டத்தில் சிறப்புற்று இருந்த இவர்கள் நவபாஷானம், பஸ்பம், மூலிகை, நாடிவைத்தியம் என தெரிந்தவர்கள் ஆவர். மூலிகைகள், ரசாயன பொருட்களை கொண்டு தங்களின் வழிப்பாட்டு தலைவர்களுக்கு சிலை செய்து அதில் பால் தேன் தயிர் பழங்கள் உள்ளிட்ட ஐந்து பொருட்களால் அபிஷேகம் செய்திட அது பஞ்ச அமிர்தமாக மாறுகின்றது. அந்த பஞ்சாமிர்தம் உண்ண அது மனித பிணிகளுக்கு மருந்தாகுகிறது. இவர்களின் வழிப்பாட்டு தலைவர் போகர்நாத், இந்த சிந்தனை மரபை சேர்ந்தவர் கோரக்நாத். போகர் வழிப்பாட்டு முறையில் உருவாக்கப்பட்டது பழனி தண்டாயுதபாணி சிலை.
பூம்பாறை முருகர் கோயிலின் அழகிய தோற்றம்
தசபாஷான சிலை என்றால் என்ன?
பூம்பாறை முருகன் சிலை, தசபாஷான சிலை. அதாவது பழனியில் இருக்கும் சிலை ஒன்பது வகையான தாதுக்களால் கட்டப்பட்டது. பூம்பாறையில் இருப்பது பத்து வகையான தாதுக்களால் ஆனது. ஒரு பாஷானம் கூடுதல். பழனி முருகன் கோயிலில் மட்டுமல்ல; கும்பூர், கீழான வயல், மதிகெட்டான் சோலை உள்ளிட்ட கோயில்களிலும், குக்கல் குகைகளிலும் போகர்களால் உருவாக்கப்பட்ட நவபாஷான சிலைகள் உள்ளன.
முருகன் கோயில் மற்றும் பசுமையான பூம்பாறை கிராமம்
யானை முட்டி குகை!
மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்ட சித்தர்கள் என்று அறியப்படுகின்ற அறிவர் பெருமக்களில் ஒரு குழுவினரான போகர்கள், மூலிகைகள், ரசாயன பொருட்கள் போன்றவற்றை கொண்டு பரீட்சித்து பார்க்கும் முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வுக்கூடம் பழனி மலைக்கும் பூம்பாறை மலைக்கும் நடுவில் உள்ள யானை முட்டி குகையில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில்தான் இந்த தசபாஷான முருகரும் வீற்றிருக்கிறார்.
ஒவ்வொரு முறை கொடைக்கானல் செல்லும்போதும், பிரையன்ட் பூங்கா, ரோஸ் கார்டன், கோக்கர்ஸ் வாக், குணா குகை என்று வழக்கமாக, பார்த்ததையே பார்த்துக் கொண்டிருப்பவர்கள், மீண்டும் ஒருமுறை பயணத்திற்கு திட்டமிட்டால், பூம்பாறைக்கு சென்று வாருங்கள். சுற்றுலா போனது போலவும் இருக்கும், வரலாற்றை தெரிந்து கொண்டதை போலவும் இருக்கும், அனைத்திற்கும் மேலாக தசபாஷான முருகரை தரிசித்தது போலவும் இருக்கும்!
