இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஒவ்வொரு நகரத்திலும் வரலாறு தொடர்பான பல ரகசியங்களும் கதைகளும் ஒளிந்திருக்கும். அப்படி பல வரலாறுகளுடன், மர்மங்களும் நிறைந்த மாநிலம்தான் ராஜஸ்தான். இதுவே அந்த மாநிலத்திற்கு மேலும் சிறப்பை சேர்க்கிறது. அப்படி ராஜஸ்தான் மாநிலத்தில், அமானுஷ்யங்கள் நிறைந்ததாக சொல்லப்படும் ஒரு கிராமத்தை பற்றி பல கதைகள் உலாவுகின்றன. குல்தாரா, ஆள்நடமாட்டம் இல்லாத கிராமப் பகுதி. ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த கிராமம். இந்த பகுதி 13ம் நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்ட இடமாக வரலாற்று கூற்றுகள் மூலம் அறியப்படுகிறது. ஒரு காலத்தில் வளமான பகுதியாக இருந்தது குல்தாரா கிராமம். இங்கு, ராஜஸ்தானின் பாலி எனும் பகுதியில் இருந்து வந்த பாலிவால் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். ஆனால் தற்போது அங்கு யாருமே வசிப்பது இல்லை. இதனால், பல நூறு ஆண்டுகளாக மனிதர்களே வசிக்காத கிராமத்தை பார்ப்பதற்கென்றே சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குல்தாராவிற்கு வருகை தருகின்றனர். நாமும் அந்த மர்மமான இடத்தை பற்றி விரிவாக இக்கட்டுரையில் காணலாம்.


13ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட குல்தாரா கிராமம்

எங்கே இருக்கிறது மர்மம் நிறைந்த குல்தாரா கிராமம்?

ஜெய்சால்மர் நகரத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது குல்தாரா கிராமம். இந்த ஊர், பெண் தெய்வத்தை மையமாகக் கொண்டு அமைந்திருக்கிறது. கிராமம் மொத்தமே 3 முக்கிய சாலைகள், அதை சார்ந்து அமைந்துள்ள சில தெருக்கள் என சிறிதாக அமைந்துள்ளது. குல்தாரா கிராமத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பாழடைந்த கட்டிட சுவர்கள் மட்டுமே மிஞ்சி இருக்கின்றன. கிழக்கு பகுதியில் வறண்டுபோன ஆற்றின் கிளை வழி இருக்கின்றது. மேற்கு பகுதியில், கிராமத்தை பாதுகாக்கும் எல்லை சுவர்கள் உள்ளன. வழக்கமான சுற்றுலாத்தலங்களை தவிர்த்து புதுமையான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பமுள்ளவர்கள் ஜெய்சால்மர் நகருக்கு அருகில் இருக்கும் இந்த கிராமத்திற்கு நிச்சயம் ஒருமுறை பயணம் செய்ய வேண்டும்.


ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்படும் குல்தாரா

ஒரே இரவில் வெளியேறிய மக்கள்!

13ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த கிராமம்தான் சுற்றுப்பகுதியில் உள்ள 85 கிராமங்களுக்கு தலைமை கிராமமாகவும் இருந்துள்ளது. மழை வளம் இல்லாத பகுதியாக இருக்கின்ற போதிலும், மிகப்பெரிய அளவில் விவசாயம் நடைபெற்றிருக்கிறது. இந்த நகரம் பாலி என்ற பகுதியிலிருந்து குடிபெயர்ந்து வந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் சிறு கூட்டமாக இருந்த இவர்கள், நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமானார்கள். செழிப்பான கிராமமாக இருந்த குல்தாரா மக்கள் அனைவரும், ஒரே இரவில் அந்த கிராமத்தை விட்டே வெளியேறினர் என்று பல ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது. அவர்களுக்கு சரியாக என்ன நடந்தது? வறட்சி மற்றும் ஜெய்சால்மரின் பிரதம மந்திரி சலீம் சிங்கின் அதிகப்படியான வரி போன்ற காரணங்களுக்காக இந்த கிராமம் காலப்போக்கில் கைவிடப்பட்டதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் வேறு தகவல்கள் சிலவும் சொல்லப்படுகின்றன. ஜலீம் சிங் என்று அழைக்கப்படும் சலீம் சிங், ஜெய்சால்மர் மன்னருக்கு உயர்வான முதன்மை மந்திரியாக இருந்தாராம். அவர் மிகவும் சக்திவாய்ந்தவராக விளங்கினாராம். அப்போது குல்தாரா கிராமத்தில், பாலிவால் பிராமணர்கள் வசித்து வந்துள்ளனர். அந்த நேரத்தில், மிகவும் அழகாக இருந்த கிராமத் தலைவரின் மகள் மீது சலீம் சிங்கின் கவனம் திரும்பி உள்ளது. அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய விரும்பியுள்ளார். யாரேனும் அதை தடுக்க முயன்றால், அனைவரும் கொல்லப்படுவார்கள் என்று கிராம மக்களிடம் சலீம் சிங் கூறியுள்ளார். இதனால் அச்சம் காரணமாக அந்த கிராமம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 85 கிராமங்களின் மக்களும் கூட்டத்தை கூட்டி, திடீரென ஒரே இரவில் கிராமத்தை விட்டு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 19ம் நூற்றாண்டில், கிட்டத்தட்ட 500 குடும்பங்கள் இந்த கிராமத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த கிராமத்தில் ஒரு அம்மன் கோவில் அமைத்து அதனைச் சுற்றி நகர் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒரே நாள் இரவில் அந்த கிராமத்தில் வாழ்ந்த 500 பேரும் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.


சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 85 கிராமங்களின் தலைமை கிராமமாக இருந்த குல்தாராவின் இன்றைய நிலை

சபித்துவிட்டு சென்ற மக்கள்!

இந்த கிராமத்தில் வாழ்ந்த மக்கள் எல்லாம் எங்குச் சென்றார்கள்? ஏன் சென்றார்கள்? என்ற எந்த காரணமும் யாருக்கும் தெரியவில்லை. இவர்கள் காணாமல் போனதற்குப் பலர் பல்வேறு காரணங்களைச் சொல்லி வருகின்றனர். ஆனால் அவர்கள் செல்லும் போது உடமைகள், அன்றாடப் பொருட்கள், உணவு, பானங்களைக்கூட அங்கேயே வைத்துவிட்டு அவசரமாக கிராமத்திலிருந்து வெளியேறியுள்ளனர். கிராமத்தை விட்டு வெளியேறும் போது, ​​அந்த கிராமத்தில் வேறு யாரும் வாழக் கூடாது என்று சபித்துவிட்டு சென்றதாக நம்பப்படுகிறது. தீர்க்கப்படாத மர்மம் என்னவென்றால், பாலி வாழ் பிராமணர்கள் தங்கள் சொந்த கிராமத்தை விட்டு வெளியேறிய பிறகு மாயமாகிவிட்டார்களாம். அவர்கள் காற்றில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அவர்கள் அதன் பிறகு எங்கே குடியேறினார்கள் என்பதைக் கண்டறிய பல முயற்சிகள் நடந்தும் எதுவும் பலனளிக்கவில்லை. அவர்கள் எங்கு போனார்கள்? என்ன ஆனார்கள்? என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது. அவர்களுக்கு பின் இந்த கிராமத்தில் இன்று வரை யாரும் வசிக்கவில்லை. பல தசாப்தங்களாக இந்த கிராமம் வெறிச்சோடியே காணப்படுகிறது.


ராஜஸ்தான் மாநில அரசால் சுற்றுலா தலமாக்கப்பட்டுள்ள குல்தாரா கிராமத்தின் நுழைவு பகுதி

சுற்றுலாதலமாக மாறிய குல்தாரா :

2010 வாக்கில் ராஜஸ்தான் மாநில அரசால் குல்தாரா பகுதியை சுற்றுலா தலமாக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 2011ம் ஆண்டு சைப் அலிகானின் ஏஜென்ட் வினோத் என்ற திரைப்படத்தின் சில காட்சிகளும், 2017ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் உருவான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளும் இங்கு படமாக்கப்பட்டன. ராஜஸ்தான் அரசே அந்த கிராமத்தைச் சுற்றி வேறு வழியின்றி சுற்றுலாப் பயணிகளுக்கான வசதியை வழங்கி வருகிறது. ஆனால் அந்த கிராமத்தைச் சுற்றி ஒரு கதவு வைத்துள்ளனர். அந்த கதவை மாலை 6 மணிக்கு அவர்கள் அடைத்து விடுகின்றனர். அதன் பின்னர் யாரும் அந்த கிராமத்திற்குள் விடியும்வரை செல்வது இல்லை. அப்படி யாரேனும் அந்த கிராமத்திற்குள் செல்ல வேண்டுமானால் அரசிடம் முன்பே அனுமதி பெற்று உரியப் பாதுகாப்புகளுடன், கூட்டமாக செல்லவே அனுமதி வழங்கப்படுகிறது. அப்படியான அனுமதி பெற்றுதான் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Updated On 22 July 2024 5:19 PM GMT
ராணி

ராணி

Next Story