இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கடவுளின் தேசம் என்று அன்புடனும், அழகுடனும் அழைக்கப்படுவது கேரளா மாநிலம். அங்கு பார்த்து ரசிப்பதற்கு ஏராளமான இடங்கள் இருக்கின்றன. அதில் வயநாடு இன்னும் கொஞ்சம் பிரபலம். "கேரளாவின் ஊட்டி" என்று அழைக்கப்படும் வயநாட்டில் பார்த்து ரசிப்பதற்கு பசுமையான மலைகள், வயல்வெளிகள், பாரம்பரியமிக்க இடங்கள் என பார்க்க வேண்டிய இடங்களை சொல்லிக் கொண்டே போகலாம். பச்சை புல்வெளி படர்ந்திருக்கும் சூழல், நம்மை குளு குளு என உணர வைக்கும் வயநாட்டில் எந்தெந்த இடங்களையெல்லாம் சுற்றிப்பார்க்கலாம் என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

வயநாடு தொல்பொருள் அருங்காட்சியகம் :

இந்த அருங்காட்சியகம் சுல்தான் பத்தேரியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அம்பலவாயில் என்னும் ஊரில் அமைந்துள்ளது. கேரளாவில் அமைந்திருக்கும் மிகப்பெரிய தொல்பொருள் அருங்காட்சியகங்களில் இந்த அருங்காட்சியகமும் ஒன்று. இரண்டாம் நூற்றாண்டில் கண்டறியப்பட்ட பல பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. வீரஸ்மிருதி, கோத்ரஸ்மிருதி, தேவஸ்மிருதி, ஜீவனஸ்மிருதி என நான்கு பிரிவுகள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் புதிய கற்காலம் முதல் 17ம் நூற்றாண்டு வரையிலான பொருட்கள் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளன.


எழில்மிகு வயநாடு தொல்பொருள் அருங்காட்சியம்

எடக்கல் குகைகள் :

வயநாட்டிலிருந்து 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது எடக்கல் குகைகள். இந்த குகையின் சிறப்பம்சம் என்னவென்றால் இப்பாறையில்தான் கற்கால ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை கி.மு. 6,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கூறப்படுகிறது. இதன்மூலம் கற்காலம் தொட்டே இப்பகுதியில் மனிதர்கள் வசித்து வந்தது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் 3 தொகுதிகளாக இந்த குகைகள் பிரிக்கப்படுகின்றன. இதன் சுவர்களில் பழமையான கல்வெட்டுகள், மனித, விலங்கு உருவங்கள், ஆயுதங்களின் வடிவங்கள், பழமையான மனிதர்களின் மொழிகள் என சுவற்றில் பல குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த குகைக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் செல்லலாம்.


அழகிய செம்பரா மலை மற்றும் பாணசுர சாகர் அணை

செம்பரா மலை :

இந்த இடம் மலை ஏற விரும்பும் மக்களுக்கு சொர்க்கம் எனக் கூறலாம். இங்குதான் மிகப் பிரபலமான இதய வடிவிலான செம்பரா ஏரி அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 2,100 மீட்டர் உயரம் கொண்ட இந்த மலையிலிருந்து பனி படர்ந்த பள்ளத்தாக்கின் அழகை காணலாம். இந்த ஏரியின் அருகிலேயே முகாம் அமைத்து தங்கும் வசதியும் உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த மலையின் உச்சியில் ஏராளமான டிரெக்கிங் முகாம்கள் உள்ளன. இங்கு செல்ல மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் சார்பாக, மரக் குடில்கள், காலணிகள், டிரெக்கிங் உபகரணங்கள் போன்ற அனைத்தும் வழங்கப்படுகிறது. செம்பரா சிகரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல மெப்பாடி வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.

பாணாசுர சாகர் அணை :

வயநாட்டில் இருந்து 33 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இது இந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாகும். கபினி ஆற்றின் கிளை நதியான கரமனாத்தோடு ஆற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டு பாசன வசதிக்காகவும், குடிதண்ணீருக்காகவும் இந்த அணை கட்டப்பட்டது. பாணாசுரன் என்னும் மன்னனின் நினைவாக அணைக்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த இடத்திற்கு செல்லலாம்.

நீலிமலா வியூ பாய்ண்ட் :

வியூ பாய்ண்ட்டைப் பார்க்க மலையேற்றப் பாதையில் செல்லும்போது நமக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். அதற்கு காரணம் அங்கிருக்கும் காபி, இஞ்சி, பாக்கு மரத் தோட்டங்களில் இருந்து வரும் வாசனைதான். அதன்பிறகு மலையேறி வியூ பாய்ண்ட்டை சென்றடைந்ததும் அங்கு ஒரு அழகிய காட்சியை காணலாம். இங்கிருந்து மீன்முட்டி அருவியிலிருந்து விழும் பால் போன்ற நீர். பாறையில் மோதி சிதறும் காட்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.

ஃபாண்டம் ராக் :

மண்டையோட்டு வடிவில் இந்த பாறை அமைந்திருக்கும். உள்ளூர் மக்கள் இதனை சீங்கேரி மலா அல்லது தலைப்பாறை என்று அழைக்கின்றனர். இதை ஒரு தொல்பொருள் அதிசயம் என்றே கூறலாம். இப்பாறையை சுற்றிலும் மேற்கு தொடர்ச்சி மலை பரந்து விரிந்து காணப்படுகிறது. ரம்மியமான இடம் மட்டுமல்லாமல் மலையேறுபவர்களுக்கு சிறந்த இடம் இந்த ஃபாண்டம் ராக்.


மனதை மயக்கும் நீலிமலா வியூ பாயிண்ட்

பக்ஷிபத்தலம் :

இக்குகைகள் காட்டின் உள்ளே இருக்கும் பிரம்மகிரி மலையில் 1,700 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. பல்வேறு வகையான பறவைகள், காட்டு மாடுகள், மலபார் அணில்கள், அரிய வகையான மரங்கள் ஆகியவற்றிற்கு பக்ஷிபத்தலம் குகைகள் வாழ்விடமாக இருக்கின்றன. இங்குச் செல்ல வேண்டுமானால் காட்டின் உள்ளே 7 கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும். அதுமட்டுமல்லாமல் வனத்துறை அலுவலகத்தில் முன் அனுமதியும் பெற்றிருக்க வேண்டும்.


வயநாடு வன உயிரின சரணாலயம் மற்றும் சூச்சிபாறை அருவி

சூச்சிப்பாறை அருவி :

வயநாட்டில் இருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பசுமையான தேயிலை தோட்டம் மற்றும் காடுகள் நிறைந்த 2 கி.மீ. தூரத்தை கடக்க நடைப்பயணம் மேற்கொண்டால் சூச்சிப்பாறை அருவியை அடையலாம். மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த அருவியின் முழு அழகையும் காண வேண்டுமென்றால் மழைக் காலத்தில் செல்ல வேண்டும். பல அடி உயரத்தில் இருந்து விழும் அருவி, தரையில் சிறு குளத்தை உருவாக்குகிறது. அந்தக் குளத்தைச் சுற்றிலும் பாறைகள் காணப்படுகின்றன.

வயநாடு வன உயிரின சரணாலயம் :

1973ம் ஆண்டு இந்த சரணாலயம் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வன உயிரின சரணாலயம் ஆகும். மலை ஏறுவதற்கும், இயற்கை நடை செல்வதற்கும், பல்வேறு வகையான பறவைகளை பார்ப்பதற்கும் சரணாலயத்தின் உள்ளேயே குறிப்பிட்ட பகுதிகள் உள்ளன. புலிகள் மற்றும் யானைகளை பார்ப்பதற்கு இது சிறந்த இடம். மைசூரில் இருந்து சுல்தான் பத்தேரி செல்லும் வழியில் இந்த வயநாடு வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது.

Updated On 22 April 2024 6:14 PM GMT
ராணி

ராணி

Next Story