சுற்றுலா ஆர்வலர்களின் சொர்க்கபுரி தாய்லாந்து! பட்ஜெட் சுற்றுலாவுக்கு ஏற்ற உல்லாச நாடு!
நிறைய தீவுகள், மலைகள், அடர்ந்தக் காடுகள், பெரிய பெரிய நகரங்கள் என்று ஒருங்கே காணப்படும் ஓர் அழகிய நாடு தாய்லாந்து. பாரம்பரிய கோவில்கள், கடற்கரைகள், இயற்கை, உணவு, பார்ட்டிகள், கிளப்புகள், விருந்தோம்பல் கலாச்சாரம் போன்றவற்றில் புகழ்பெற்ற தாய்லாந்து, உலக மக்கள் பெரும்பாலானோரின் விருப்பமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. தென் கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள தாய்லாந்து, இந்திய சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றாகவும் இருக்கிறது. தாய்லாந்தின் இயற்கையும் கலாச்சாரமும் நம்மை சுவாரசியமாகவும், உற்சாகமாகவும் வைத்துக்கொள்ளும். அந்த வகையில் தாய்லாந்து சென்றால் கண்டிப்பாக சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
விசா பெறும் வழிமுறை :
தாய்லாந்து பயணம் 15 நாட்களுக்குள் என்றால், அங்கேயே சென்று விசா ஆன் அரைவல் மூலம் சுற்றுலா விசாவினை புகெட் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் உள்ளிட்ட 32 அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் பெற்றுக்கொள்ளலாம். 30 நாட்கள் பயணம் என்றால், நீங்கள் உங்கள் விசாவினை தாய்லாந்து தூதரகத்தின் மூலமே பெறமுடியும். இந்தியாவில் தாய்லாந்து தூதரகம், டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா நகரங்களில் அமைந்துள்ளது. விசா கோரி பாஸ்போர்ட் ஒப்படைத்தால், மூன்று வேலைநாட்களில் விசா கிடைத்துவிடும்.
காவோ யாய் தேசிய பூங்காவிலிருக்கும் அழகிய நீர்வீழ்ச்சி
பாங்காக் :
வேடிக்கை பார்ப்பதற்கும், பொருட்களை வாங்குவதற்கும் சிறந்த இடமாக தாய்லாந்து தலைநகர் பாங்காக் உள்ளது. பாங்காக் ஒரு வேகமான, பரபரப்பான நகரமாகும். பொழுதுபோக்குக்கும், ஷாப்பிங் செய்வதற்கும் உகந்த இடமாகும். முதன்முறையாக செல்பவர்கள் நிச்சயம் சுற்றி பார்க்கவேண்டிய ஒரு இடமாக பாங்காக் திகழ்கிறது. இங்கு நாம் பல ஷாப்பிங் மால்கள், ஏரிகள், பூங்காக்கள், சந்தைகள், மசாஜ் பார்லர்கள், கோவில்கள் போன்ற பல இடங்களை காணமுடியும். நண்பர்களுடன் சேர்ந்து இந்த இடங்களை எல்லா நாம் நிச்சயம் சுற்றிப்பார்க்கலாம்.
காவோ யாய் தேசிய பூங்கா :
இப்பூங்காவானது பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் சரணாலயமாக உள்ளது. இங்கு 300 வகையான பறவைகளும், விலங்குகளும் உள்ளன. இங்கு நீங்கள் உள்ளூர் வழிகாட்டியுடன்தான் செல்ல வேண்டும். ஏனென்றால் அவர்களுக்குத்தான் இந்த வனவிலங்கு சரணாலயத்தில் எந்த திசையில் எந்த விலங்குகள் இருக்கும் என்று தெரியும். ஆதலால் நீங்கள் இங்கு உள்ளூர் வழிகாட்டியுடன் செல்வது நல்லது. அதுமட்டுமில்லாமல் நீங்கள் இங்கு எந்த விலங்கிற்கும் உணவளிக்கக்கூடாது. இங்கு மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், இங்கிருக்கும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழலாம். இந்த தேசிய பூங்காவிற்கு செல்வதற்க்கு அனைத்து விதமான போக்குவரத்து வசதிகளும் இருக்கின்றன.
இந்திரனின் வாகனமாக கருதப்படும் ஐராவதம் யானையை நினைவுகூறும் வகையில் அமைந்துள்ள இரவான் நீர்வீழ்ச்சி
சத்துசக் சந்தை :
தலைநகர் பாங்காக் உள்ளே அமைந்துள்ள இந்த சந்தை நாம் ஷாப்பிங் செய்ய ஏற்ற இடங்களில் ஒன்றாகும். இங்கு நாம் அழகு சாதனங்கள், துணிகள், கலை பொருட்கள் போன்றவற்றை வாங்கலாம். மேலும் இங்கு சாலை உணவு கடைகள் பல உள்ளன. இங்கு தாய்லாந்து நாட்டின் உணவுகளை ருசித்து பார்க்கலாம். ஆனால் அவை அனைத்தும் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவாக இருக்காது. தவளை, எலி மற்றும் பல்வேறு வகையான புழுக்கள் என்று இருக்கும், வித்தியாசமான உணவை உண்ண வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் சுவைத்து பார்க்கலாம். அதுமட்டுமில்லாமல் இங்கு கிடைக்காத பொருட்களே கிடையாது. குறிப்பாக இங்கு தாய்லாந்தின் பல கலை பொருட்கள் கிடைக்கும். அவை ஒவ்வொன்றும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும். இரவு சந்தைக்கு சென்றால் பல விலை உயர்ந்த பொருட்களை மிகவும் மலிவான விலையில் நீங்கள் பெறலாம்.
இரவான் நீர்வீழ்ச்சி :
பண்டைய காலத்து ஹிந்து புராணங்களில் இந்திரனின் வாகனமாக உள்ள மூன்று தலை கொண்ட யானையான ஐராவத்தை நினைவுகூறும் வகையில் இந்த இடத்திற்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது ஓர் பருவகால நீர்வீழ்ச்சியாகும். இது பெரும்பாலும் மழைக்காலங்களில் மட்டுமே அதன் உண்மையான அழகை வெளிப்படுத்துகிறது. பசுமைக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியானது, காடுகளில் உங்கள் மனம் தொலைந்து போகவும், அருவியின் ரம்மியமான சூழலை அனுபவிக்கவும் அற்புதமான இடமாகும். பல வகையான விலங்குகள் மற்றும் தாவரங்களின் தாயகமான இரவான் நீர்வீழ்ச்சியானது பல்லுயிர் பெருக்கத்திற்கு காரணமாக இருக்கிறது.
தாய்லாந்தின் அழகிய மிதக்கும் சந்தை
பிஹிமை வரலாற்று பூங்கா :
தாய்லாந்து செல்பவர்கள் நிச்சயம் பார்க்கும் முதல் 5 இடங்களில் இந்த பூங்காவும் ஒன்று. இங்கு கெமெர் கோவில்கள் உள்ளன. புத்த விகாரங்களை போல எழுப்பப்பட்ட ஹிந்து கோவில்கள் இவை. வரலாற்று சிறப்புமிக்க இந்த இடம், அந்நாட்டு அரசால் இன்றும் போற்றி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் வரலாற்று முக்கியத்துவத்தையும், அழகிய கைவினைத்திறனையும் வெளிக்காட்டுகிறது. இங்குள்ள அரண்மனை, அழகான கட்டிடக்கலை மூலம் அலங்கரிக்கப்பட்ட 150 ஆண்டுகள் பழமையான கண்கவர் சுற்றுலாத்தலமாகும்.
மிதக்கும் சந்தைகள் :
மிதக்கும் சந்தைகள் தாய்லாந்து அனுபவத்தைப் பெறுவதற்கான சிறந்த வழியாகும்.பழங்காலத்தில் மக்கள் எப்படி ஷாப்பிங் செய்தார்கள் என்பதை இந்த சந்தைகள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். அங்கிருக்கும் கிராம மக்கள் தங்கள் பாரம்பரிய உடைகள் மற்றும் தொப்பிகளை அணிந்து கொண்டு, பழங்கள், மூலிகைகள், தூபங்கள், பூக்கள் போன்ற தயாரிப்புகளை சிறிய படகுகளில் வைத்து விற்று வருகின்றனர். இதை பார்ப்பதற்கென்றே உலகம் முழுவதிலுமிருந்து ஏராளாமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.
தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடைபெறும் மோசடிகள் :
தாய்லாந்தில் நெரிசல் மிகுந்த பகுதிகளில் சர்வசாதாரணமாக நடைபெறும் பிக்பாக்கெட் சம்பவங்கள்
ராசிக்கல் மோசடி :
ராசிக்கல் மோசடி என்பது தாய்லாந்தில் மிகவும் பிரபலமான மோசடிகளில் ஒன்றாகும், அங்கு உள்ளூர் மக்கள் உரிமம் பெற்ற ரத்தினக் கல் விற்பனையாளர்களைப் போலவே உடையணிந்து சுற்றுலாப் பயணிகளுக்கு போலி ரத்தினக் கல்லை விற்பார்கள். பாங்காக் மற்றும் சியாங் மாயில் இந்த மோசடி அதிகம் காணப்படுகிறது. இங்கு ஏராளமான பார்வையாளர்கள் ரத்தினங்களை நினைவுப் பொருட்களாக வாங்குகிறார்கள். இதனை பயன்படுத்திக்கொள்ளும் மோசடி நபர்கள், குறைந்த தரம் அல்லது புனையப்பட்ட ரத்தினங்களை, அதிக விலைக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு விற்றுவிடுகிறார்கள்.
பிக்பாக்கெட் :
தாய்லாந்தில் பிக்பாக்கெட் செய்வது மிகவும் பொதுவானது. குறிப்பாக சந்தைகள், கோவில்கள், போக்குவரத்து மையங்கள் போன்ற நெரிசலான இடங்களில் பிக்பாக்கெட் அதிகம் நடைபெறுகிறது. பணம், பாஸ்போர்ட் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை திருடர்கள் எளிதாக திருடி செல்கின்றனர்.
முக்கிய சுற்றுலா இடங்களுடன்கூடிய தாய்லாந்தின் வரைபடம் :
பட்ஜெட் மற்றும் பயணதிட்டம் :
இந்தியாவிலிருந்து தாய்லாந்து செல்வதற்கு 4 முதல் 5 மணி நேரம் ஆகும். அதேபோல் 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரை விமானக் கட்டணம் இருக்கும். தாய்லாந்தில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு 2,500 ரூபாயிலிருந்து 4,500 ரூபாய் வரை ஆகும். அதுமட்டுமில்லாமல் ஒரு சில இடங்களுக்கு மட்டுமே அனுமதி கட்டணம் தேவைப்படும். இவையனைத்தையும் சேர்த்து ஒரு லட்சம் கையில் இருந்தால் போதும் தாய்லாந்திற்கு திருப்தியாகச் சென்று வரலாம். இது போக உங்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்க நினைத்தால் சற்று கூடுதல் தொகையை பாதுகாப்பிற்கு வைத்துக்கொள்வது நல்லது.