இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நம் தமிழகத்தில் பல வரலாற்று இடங்கள் இருக்கின்றன. செஞ்சி கோட்டையில் ஆரம்பித்து தஞ்சை பெரிய கோவில் முதற்கொண்டு பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இருக்கின்றன. அப்படி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில், கரடுமுரடான பாதைகளைக் கொண்ட மலைப்பகுதியில் அமைந்துள்ளது மலையாம்பட்டு கிராமம். இங்கு சமணர்கள் வாழ்ந்ததாக கூறப்படும் ஆர்மா குகை உள்ளது. இந்த குகையை பற்றி பல மர்ம கதைகள் இன்றளவும் உள்ளூர் மக்களால் சொல்லப்படுகின்றன. இந்த மர்மம் நிறைந்த குகையை பற்றி விரிவாக இக்கட்டுரையில் காணலாம்.


மலையாம்பட்டி கிராமத்தில் இருக்கும் ஆர்மா மலை

ஆர்மா மலையின் வரலாறு

"ஆர்மாமலை என்று அழைக்கப்படும் இந்த மலை முன்பு ‘அருகர் மாமலை’ என அழைக்கப்பட்டது. அருகர் சமணர்கள் வழிபடும் தெய்வமாகும். எனவே, அவர்கள் இம்மலையினை ‘அருகர் மாமலை’ என்று அழைத்து வந்துள்ளனர் (கிராமவாசிகள் அரவான் மலை என்கிறார்கள், அரவன் அல்லது அருகன் என்ற சொல் தீர்த்தங்கரரைக் குறிக்கும்). பின்னர் காலப்போக்கில் அச்சொல் மருவி அருமாமலை, அர்மாமலை என்றெல்லாம் அழைக்கப்பட்டு தற்போது ஆர்மா மலை என்று அழைக்கப்படுகிறது. சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆர்மா மலைக்குகை சமணர்கள் காலத்தில் கட்டப்பட்டது என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இம்மலையின் நடுப்பகுதியில் இயற்கையாக அமைந்த குகையில் சமண முனிவர்கள் தங்குவதற்காக மண் மற்றும் பச்சை செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட அறைகளும், வண்ண ஓவியங்களும் உள்ளன. பாறையின் மேற்பகுதியில் அழகிய பல்லவர் கால ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.


சமணர்கள் வாழ்ந்த ஆர்மா மலை

மூலிகையினால் வரையப்பட்ட ஓவியம்

அங்குள்ள ஓவியங்கள் மூலிகைச் சாறு கொண்டு தீட்டப்பட்டு சமணச்சமயக் கதைகள் மற்றும் எண்திசைக் காவலர்கள் உருவங்களுடன் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 9-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வரையப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கி.பி.1882-இல் ராபர்ட் சீவெல் என்ற ஆங்கிலேய வரலாற்று அறிஞர் ஆர்மாமலை ஓவியத்தைத் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த குகையில் எண்திசைக் காவலர்களில் அக்னி தேவன் ஆட்டின் மீது அமர்ந்து வருவது போன்ற காட்சியும், எருமை மீது எமன் வருவது போன்ற காட்சியும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. மற்றொறு பகுதியில் பூத்துக் குலுங்கும் தாமரைப்பூக்களுடன் இலைகளும் கொடிகளும், அன்னப்பறவைகளும் காணப்படுகின்றன.


சமணர்களால் மூலிகை சாறினால் வரையப்பட்ட ஓவியங்கள்

சித்தன்னவாசலுக்கு நிகரான ஓவியங்கள்

இவ்வோவியங்கள் தீட்டும் முன்னர், ஒழுங்கற்ற பாறைகளில் சுண்ணாம்புப் பூச்சு கொண்டு பூசி வரைவதற்கு ஏற்ற சமதளம் உருவாக்கிப் பின்னர் வண்ணங்கள் கொண்டு வரையப்பட்டுள்ளன. பெரும்பாலான ஓவியங்கள் அழிந்த நிலையில் இருப்பினும், எஞ்சியுள்ள ஓவியங்கள், வண்ணம் மற்றும் வடிவமைப்பு ஒப்புமையில் சித்தன்னவாசல் ஓவியங்களைப் போன்றே இருக்கின்றது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சமணத் துறவியர் வாழ்ந்ததற்கான சான்று

மேலும், இந்த குகையில் இருக்கும் கல்லில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துக்களில் 'கடைக்கோட்டுருந்த நந்தி படாரர் மாணாக்கர்’ என்று எழுதியுள்ளது. இதன்மூலம் 8-ஆம் நூற்றாண்டில் இங்கு கடைக்கோட்டுருந்த நந்தி படாரர் என்ற சமணத் துறவியார் வாழ்ந்துள்ளார் என்பது தெரியவருகிறது. இவரது காலத்தில் இங்குள்ள ஒவியங்கள் வரையப்பட்டிருக்கலாம். இங்குள்ள ஓவியங்கள் சமண சமயம் தொடர்பான நம்பிக்கைகளையும் செய்திகளையும் அடையாளப்படுத்துகின்றன.

மண் சுவர்களை கொண்ட அறைகள்

இக்குகையில் சமணத் துறவிகள் தங்குவதற்கும், வழிபாட்டுக்காகவும் மண் சுவர்களை ஏற்படுத்தி அறைகளாகப் பகுத்துப் பயன்படுத்தியுள்ளனர். அந்த அறைகளில் சமணத் துறவிகள் தங்கியுள்ளனர். இக்குகைத்தளத்தின் மேல் விதானத்தின் நடுவில் ஒரு சதுரம் அமைத்துத் தீட்டப்பட்ட அழகிய ஓவியம் ஒன்று உள்ளது. அதுமட்டுமில்லாமல் அறையில் தாமரைத் தடாகமும் வரையப்பட்டுள்ளது. மேலும், இங்கு சமணக் கோயிலுக்குரிய மானஸ்தம்பத்தின் அடிப்பகுதி மட்டும் காணப்படுகிறது. ஆதில், ‘ஸ்ரீ கனக நந்தி படாரர்’ என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு துவாரபாலகர் சிலைகளும், தாமரை மலர் போன்ற பீடமும் காணப்படுகின்றது.

சமணப்பள்ளிகள்

சமணத்துறவிகள் தங்கும் இயற்கையான குகைகளில் அவர்கள் படுப்பதற்காக கற்பாறையில் படுக்கைகள் வெட்டிக்கொடுக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததாகவும், அரசர்களும் செல்வந்தர்களும் இதை ஓர் அறக்கொடையாக செய்ததாகவும் தொல்லியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த குகைகள் பள்ளிக்குகைகள் எனப்பட்டன. இந்த குகையில் சமண மதத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே தங்கி சமயக்கல்வியும் தவப்பயிற்சியும் பெற்றார்கள் என்று நம்பப்படுகிறது. அவ்விடத்தில் சமணமதத்தின் தூய்மை நெறிமுறைகள் பேணப்பட்டதாக அங்குள்ள மக்கள் கூறி வருகின்றனர்.


ஆர்மா மலையில் தொல்லியல் ஆராச்சியாளர்களின் கண்டுபிடிப்பு

தொல்லியல் துறையினரின் ஆய்வு

அருகர் மாமலை என்ற ஆர்மாமலைக் குகை, தொல்லியல் துறையால் 12.06.1978 அன்று பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாத நிலையில், அழிவுறும் நிலையில் இருந்த இவ்விடத்தினை பாதுகாத்திட எழுந்த கோரிக்கையினை ஏற்று தொல்லியல் துறையினர் இந்த மலைக்குகையைக் கடந்தாண்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து,சேதமடைந்து காணப்பட்ட ஆர்மா மலைக்குகையை ரூ.20 லட்சம் செலவில் சீரமைத்ததாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர். மலைக்கு செல்லும் பாதைகள், படிக்கட்டுகள், பக்கவாட்டு சுவர்கள், அறிவிப்புப் பலகைகள் என சுற்றுலா பயணிகள் வந்து ஆர்மா மலையின் அழகையும், பழங்கால மக்கள் வாழ்ந்த தடத்தையும் காண்பதற்கான ஏற்பாடுகளைத் தொல்லியல் துறையினர் மேம்படுத்தியுள்ளனர்.

Updated On 11 Feb 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story