இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சென்னை மாநகராட்சியின் இளம் பெண் மேயர் என்ற பெருமைக்குரியவர் பிரியா ராஜன். திமுக ஆட்சியில் 49வது மேயர், 3வது பெண் மேயர் இவர். சென்னை மாநகராட்சியில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மேயர் பிரியா ராஜனிடம் ஓர் ஜாலியான உரையாடல்...

மேயர் பிரியா ராஜன் என்று அறிவித்த தருணம் உங்களுக்கு எப்படி இருந்தது?

அது ஒரு நல்ல தருணம். சந்தோஷமாகவும், அதே சமயம் பதற்றமாகவும், பயமாகவும் இருந்தது. நான் மேயர் ஆவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. கவுன்சிலராக அறிவிப்பார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். பணிகள் மற்றும் திட்டங்கள் அதிகமாக செயல்படுத்தப்படுகிற சென்னை போன்ற பெரிய மாநகராட்சிக்கு மேயராக பதவியேற்றபோது இதனை எப்படி கையாளப்போகிறேன் என்று பதற்றமாக இருந்தது.


பிரியா சென்னை மாநகராட்சி மேயராக பதவி ஏற்றபோது

பள்ளி, கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, மேயராவேன் என்று நினைத்ததுண்டா?

அரசியலுக்கு வருவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அப்பா அரசியலில் இருந்ததால் பள்ளி, கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது அவருடன் சென்று மீட்டிங்குகளில் பங்கேற்பேன். வீட்டில் நிகழ்ச்சிகள் இருந்தால் கட்சிக்காரர்கள் வீட்டிற்கு வருவார்கள். கவுன்சிலர் தேர்தலுக்கு முன்புதான் நான் அரசியலுக்கு வருவதே முடிவாயிற்று. அதற்கு முன்பு டீச்சிங் லைனில் செல்வதுதான் எனது விருப்பமாக இருந்தது.

மக்களை சந்தித்து பிரச்சினைகளை கேட்கும்போது என்ன உணர்கிறீர்கள்?

மக்களை பார்க்கும்போது நிறைய கோரிக்கைகளை வைப்பார்கள். எந்தெந்த கோரிக்கைகளை எங்கு சொல்லவேண்டும் என்று எண்ணாமல், சென்னை மாநகராட்சியிடம் சொன்னால் நிறைவேற்றப்படும் என்பதே அவர்களின் மனப்பான்மையாக இருக்கிறது. மக்களை திருப்திப்படுத்துவதே முக்கியமானதாக இருக்கிறது.


மேயர் பிரியா பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிகிறார்

வீட்டில் உங்களுக்கு ஆதரவு எப்படி இருக்கிறது?

அப்பா வீட்டிலும், கணவர் வீட்டிலும் மிகவும் ஆதரவு இருக்கிறது. அப்பா அரசியலில் இருப்பதால் நான் மேயர் பொறுப்பில் இருப்பது அவர்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அம்மாதான் குழந்தையை பார்த்துக்கொள்கிறார். கணவரும் நிறைய விஷயங்களை எனக்கு சொல்வார்.சென்னை மாநகராட்சிக்கு புதிதாக என்ன செய்யலாம் என்று ஆலோசனை சொல்லுவார். மேயர் என்பது மிகப்பெரிய பொறுப்பு. பொறுப்பாக செயல்பட வேண்டும் என்று கூறுவார்கள்.

யாரும் செய்யாததை நான் செய்திருக்கிறேன் என்று நீங்கள் பெருமைப்படும் விதமாக செய்தது என்ன?

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை தற்போதைய முதலமைச்சர்கூட மேயராக இருந்து, நிறைய வளர்ச்சித் திட்டங்களை கொண்டுவந்துள்ளார். ஒரு பெண் மேயராக, பள்ளி மாணவர்கள் மீதுதான் அதிக கவனம் செலுத்துகிறேன். எந்தவொரு பள்ளிக்குச் சென்றாலும், மாணவர்களின் தேவைகளை கேட்டறிந்து அதனை பூர்த்தி செய்யும்போது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றனர். சென்னை மாநகராட்சியில் மற்ற பணிகளை விட மாணவர்களுக்கான பணிகளில் கவனம் செலுத்துவது மிகவும் பிடித்திருக்கிறது. அடுத்த தலைமுறையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதில் அதிக நாட்டம் காட்டுகிறேன்.


பள்ளி மாணவர்களுடன் ஒரு சந்திப்பு

`நான் பள்ளி, கல்லூரியில் படித்தபோது மாணவர்களுக்கு இருந்த ஒரு பிரச்சினை, இப்போதும் மாணவர்களுக்கு இருக்கிறது. நான் மேயரான பிறகு அதனை மாற்ற முயற்சி செய்கிறேன்’ என்று சொல்லும் பிரச்சினை ஏதாவது இருக்கிறதா?

நான் படிக்கும்போதிலிருந்தே கம்யூனிகேஷன் கேப் இருக்கும். ஆங்கிலத்தில் சரியாக பேசமுடியவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மை இருக்கும். அது இப்போதும் இருக்கிறது. ஆங்கிலம் ஒரு தேவையான மொழியே தவிர, அதனால் தான் தன்னம்பிக்கை இருக்கும் என்ற எண்ணத்தை மாணவர்களிடையே மாற்றிவருகிறோம்.

அரசியல் பயணத்தில் உங்களுக்கு பிடித்த பெண் அரசியல்வாதி யார்?

கனிமொழி எம்.பியை பிடிக்கும். எந்த இடமாக இருந்தாலும் அவருடைய கருத்துகளை முன்வைப்பார். அவருடைய தைரியம் எனக்கு மிகவும் பிடிக்கும்.


மேயர் பிரியாவுக்கு பிடித்த அரசியல்வாதி கனிமொழி

தமிழ்நாடு முதலமைச்சருக்கும், மேயர் பிரியாவுக்கு இடையேயான கம்யூனினேஷன் எப்படி இருக்கிறது?

தமிழ்நாடு முதலமைச்சர் எல்லா இடங்களிலுமே எனக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். நான் மேயராக பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்து இப்போதுவரை எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி எனக்கு மேயர் என்ற அங்கீகாரத்தை, முக்கியத்துவத்தை தருகிறார். அதேபோல், சென்னை மாநகராட்சி சார்பாக பணிகள், திட்டங்கள் மற்றும் மக்களின் குறைகள் குறித்த எந்தவொரு கோரிக்கையை முன்வைத்தாலும் சப்போர்ட்டாக இருக்கிறார். நான் ஒன்றரை ஆண்டுகள் மேயராக வெற்றிகரமாக பயணிக்க காரணம் முதலமைச்சர்தான்.


தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உடன் மேயர் பிரியா

வீடு மற்றும் வேலை நேரத்தை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்? ஒரு நாளில் நேரத்தை எப்படி செலவிடுகிறீர்கள்?

வீட்டில் செலவிடும் நேரம் என்பது குறைவாகவே இருக்கிறது. களப்பணிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நிறைய இருப்பதால் அவற்றில் கலந்துகொள்ள வேண்டி இருக்கும். அதனால் முன்புபோல வீட்டில் நேரம் செலவிட முடிவதில்லை. ஆனால் வீட்டிலுள்ளவர்கள் அதனை புரிந்துகொள்கின்றனர். பெரும்பாலும் மாலை நேரங்களை வீட்டில் செலவிடுகிறேன்.

காலை எழுந்தவுடன் என்னுடைய மகளை பள்ளிக்கு செல்ல தயார்படுத்துவேன். அந்த வேலை முடிந்ததும் இன்ஸ்பெக்‌ஷன் அல்லது ஏதேனும் ஒரு மீட்டிங் இருக்கும். மதிய நேரங்களில் பொதுமக்களை சந்திப்பேன். மாலை நேரங்களில் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன். ஒரே வீட்டில் இருந்தாலும் அம்மாவை இரண்டு நாட்கள்கூட பார்க்காமல் இருந்திருக்கிறேன். தன்னுடன் அதிக நேரம் செலவிட முடியாதது குறித்து என் மகள் வருத்தப்படுகிறாள்.


பத்திரிகையாளர் சந்திப்பில் மேயர் பிரியா

ஒரு பெண்ணாக எதை நினைத்து பெருமைப்படுகிறீர்கள்?

ஒரு பெண்ணாக, ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். எனக்கு என் பொண்ணுதான் எல்லாமே.

உங்களைப் போன்று அரசியலுக்கு வரவேண்டும் என நினைக்கும் பெண்களுக்கு என்ன சொல்கிறீர்கள்?

பெண்கள் தாராளமாக அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பெண்களுக்குமான இடம்தான். வீட்டை ஒரு பெண் எவ்வாறு வழிநடத்துகிறாரோ, அதேபோலத்தான் ஒரு சமுதாயத்தையும் வழிநடத்த முடியும். நான் என்னுடைய கருத்துக்களை முதல்வரிடம் முன்வைக்கும்போது அதற்கு முக்கியத்துவம் தருகிறார். மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஒரு நல்ல இடம் இது என்பதால் பெண்கள் தாராளமாக அரசியலுக்கு வரலாம்.

Updated On 8 Aug 2023 10:05 AM IST
ராணி

ராணி

Next Story