இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

உலகின் பழமையான நாகரிகங்களில் சிந்து சமவெளி நாகரிகமும் ஒன்று. சிந்து சமவெளி நாகரிகம் சிந்து நதிக்கரையில் இருந்து தொடங்கியது. குறிப்பாக மொஹஞ்சதாரோ என்னும் நகரத்திலிருந்து சிந்து சமவெளி நாகரிகம் தொடங்கியது. மொஹஞ்சதாரோ என்பது பாகிஸ்தானின் சிந்து நதிக்கரையில் உள்ள ஒரு தொல்பொருள் தளமாகும். கிமு 2500இல் கட்டப்பட்ட இது பண்டைய சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தின் மிகப்பெரிய குடியிருப்புகளில் ஒன்றாகும். மேலும் இது பண்டைய எகிப்து, மெசபடோமியா, மினோவா (கிரீட்) மற்றும் நோர்டே சிக்கோ ஆகிய நாகரிகங்களுடன் சமகாலத்தில் இருக்கும் உலகின் ஆரம்பகால முக்கிய நகர்ப்புறங்களில் ஒன்றாகும். இந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்தை பற்றி விரிவாக இத்தொகுப்பில் காணலாம்.


மனித நாகரிகத்தின் பழமையான நகரம் "மொஹஞ்சதாரோ"

மொஹஞ்சதாரோ என்னும் " பொக்கிஷ நகரம் "

இந்த நகரம் பாகிஸ்தானில் இருக்கும் லர்கானா நகரத்திலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. நதி பள்ளத்தாக்கின் நடுவில் உள்ள ப்ளீஸ்டோசீன் மலைத்தொடரில் அமைந்துள்ளது. சிந்து சமவெளி நாகரிகத்தின்போது இந்த மலைமுகடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இந்த நகரத்தை சுற்றியுள்ள நதி மொஹஞ்சதாரோ நகரத்தை மேடாக காண்பித்தது. ஆனால் பின்னர் ஏற்பட்ட வெள்ளம் அதன் பெரும்பகுதியை புதைத்துவிட்டது. ஆதலால் இந்த நகரத்தை இறந்தவர்களின் மேடு என்று மக்கள் அழைக்க ஆரம்பித்தனர்.


"இறந்தவர்களின் மேடு" என்று அழைக்கப்படும் மொஹஞ்சதாரோ நகரம்

மொஹஞ்சதாரோவின் வரலாறு

மொஹஞ்சதாரோ கிமு 26ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது பண்டைய சிந்து சமவெளி நாகரிகத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகும். இது ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. சிந்து நாகரிகம் இப்போது பாகிஸ்தான் மற்றும் வட இந்தியாவின் பெரும்பகுதியை உள்ளடக்கியதாகும். மேற்கு நோக்கி ஈரானிய எல்லை வரையிலும், தெற்கே இந்தியாவின் குஜராத் வரையிலும் மற்றும் வடக்கே காஷ்மீர் வரையிலும் இருக்கிறது. மொஹஞ்சதாரோ அதன் காலத்தின் மிகவும் மேம்பட்ட நகரமாக இருந்தது. அப்பொழுதே அதிநவீன சிவில் இன்ஜினியரிங் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் இந்த நகரத்தில் இருந்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் அப்பொழுதே கழிவு நீர் அமைப்பு அமைத்து வீடுகளை பிரம்மாண்டமாக கட்டியுள்ளனர். கிமு 1900இல் சிந்து நாகரிகம் பெரும் வெள்ளத்தால் மண்ணுக்குள் புதைந்தது.


அதிநவீன வசதியுடன் கூடிய மொஹஞ்சதாரோவின் கட்டிடக்கலை

மொஹஞ்சதாரோ நகரின் கட்டிடக்கலை

மொஹஞ்சதாரோ நகரத்தின் தெருக்கள் அப்பொழுதைய காலகட்டத்திலேயே நேர்கோட்டில் திட்டமிட்டு கட்டப்படுகிறது. பெரும்பாலானவை சுடப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்டு இருக்கின்றன. கட்டிடத்தின் மேற்கூரையில் உலர்த்தப்பட்ட மண் செங்கல்லால் எழுப்பியுள்ளனர். மொஹஞ்சதாரோவின் மொத்த பரப்பளவு 300 ஹெக்டேர் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஏறத்தாழ 40000 மக்கள் இந்த இடத்தில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த மொஹஞ்சதாரோ நகரம், சிட்டாடல் மற்றும் லோயர் சிட்டி என்று இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஆச்சரியம் என்னவென்றால் அப்பொழுதே இரண்டு மாடி அடுக்குகள் கொண்ட வீடுகள் கட்டி, மக்கள் இங்கு வாழ்ந்து வந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் குளிப்பதற்கென்று தனி அறை என்றும் சொகுசாக வாழ்ந்துள்ளனர்.


சிந்து சமவெளி நாகரிகத்தின் வரைபடம்

அதிநவீன வசதியுடன் வாழ்ந்த மொஹெஞ்சதாரோ மக்கள்

1950ஆம் ஆண்டு ஆய்வு நடத்திய இங்கிலாந்தை சேர்ந்த சார் மோர்டிமேட் வீலர், இங்கு கட்டிடங்களில் மரங்கள் பயன்படுத்தி தூண்கள் எழுப்பப்பட்டிருப்பதையும், பஞ்சம் வந்தால் சமாளிப்பதற்கு வீட்டின் மேலே தானிய கிடங்குகள் அமைத்து கட்டப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தார். அதுமட்டுமில்லாமல் நகரின் நான்கு திசைகளிலும் பெரிய கோபுரங்கள் எழுப்பி பாதுகாப்பிற்கு காவலர் வைத்து நகரத்தை பாதுகாத்து வந்துள்ளனர். ஆனால் இங்கு ஆடம்பரமான அரண்மனைகள், கோயில்கள் மற்றும் எந்த விதமான நினைவுச்சின்னங்களும் இல்லை. அரசாங்கத்தின் தெளிவான மைய இடம் மற்றும் எந்த அரசர் இந்த பகுதியை ஆட்சி செய்தார் என்பதற்கான சரியான ஆதாரமும் இன்றுவரை இல்லை.


அகழ்வாராய்ச்சியில் கிடைத்த குறியீடுகள் மற்றும் சிலைகள்

மொஹஞ்சதாரோ நகரின் அகழ்வாராய்ச்சி பணி

1919-20ல் இந்திய தொல்லியல் துறையின் அதிகாரியான ஆர்.டி.பானர்ஜி, மொஹஞ்சதாரோவிற்கு சென்று, புத்த ஸ்தூபியை (கி.பி. 150-500) கண்டறிந்து, ஆராய்ச்சி செய்ய தொடங்கினார். அப்பொழுதுதான் அவருக்கு தெரிந்தது, பூமிக்கு அடியில் ஒரு நகரமே புதைந்து கிடப்பது. அதன்பின் தொடர்ச்சியாக மாறி மாறி அங்கு அகழ்வாராய்ச்சி நடந்தது. 1965ஆம் ஆண்டு வானிலை சரியில்லாததால் இந்த ஆராய்ச்சி அப்படியே கைவிடப்பட்டது. அதன்பிறகு மீண்டும் 1980இல் தொடங்கி 2015ஆம் ஆண்டு வரை தொடர் ஆராயச்சி நடந்தது. பிரம்மாண்ட மொஹஞ்சதாரோ குறித்து சிலர் மட்டுமே அறிந்திருக்கின்றனர். கி.மு.1700ஆம் ஆண்டில் இந்த நகரம் கைவிடப்பட்டதாக தெரிகிறது. ஏன் இங்கு குடியிருந்த 40000 மக்கள் வெளியேறினர் அல்லது அவர்கள் எங்கே சென்றனர்? என்பது குறித்து இந்த நாள் வரை யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.

Updated On 4 Feb 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story