இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மேலே இருந்து பார்ப்பதற்க்கு வட்ட வடிவில் புள்ளிகள் போல் தோன்றும் மர்மமான, புதிரான நிலத் திட்டுகள் நமீபியா மற்றும் ஆஸ்திரேலியாவின் பாலைவனங்களில் சிதறிக்கிடக்கின்றன. நாம் எண்ணி பார்க்க முடியாத அளவிற்கு பரவலாக அங்கு இந்த நிலத்திட்டுக்கள் காணப்படுகின்றன. தேவதை வட்டங்கள் என்று பிரபலமாக கூறப்படும் இந்த நிலத்தட்டுகள் உலகளவில் 2 தளங்களில் உள்ளன. குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்கா கண்டங்களில் பரவியுள்ளன. தென்னாப்பிரிக்காவின் வறண்ட புல்வெளிகளில் 1,100 மைல்களுக்கு பரவியுள்ள இந்த தேவதை வட்டங்கள் பற்றி 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுசூழலியலாளர்கள் ஆய்வு செய்து விவாதித்து வருகின்றனர். எப்படி இந்த தேவதை வட்டங்கள் தோன்றின? இதில் அடங்கியிருக்கும் மர்மம் என்ன? என்பதையெல்லாம் பற்றி விரிவாக இக்கட்டுரையில் காண்போம்.


ஆப்பிரிக்கா கண்டங்களில் பரவி கிடக்கும் தேவதை வட்டங்கள்

"தேவதை வட்டங்கள்" என்றால் என்ன?

இந்த தேவதை வட்டங்கள் வறண்ட நிலத்தில் புள்ளிகள் போன்று காணப்படும். இவை ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்கா கண்டங்களில் சிதறிக்கிடக்கின்றன. விஞ்ஞானிகள் முதன்முதலில் 1970-களில் நமீபியாவில் தேவதை வட்டங்களை விவரித்தனர். பல ஆய்வாளர்கள் இவற்றின் தோற்றம் குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர். ஆனால் அவை எவ்வாறு உருவாகின்றன என்பதை யாரும் உறுதியாக நிரூபிக்கவில்லை. பில்பராவில் வசிக்கும் பழங்குடியின மக்கள், தேவதை வட்டங்களை லினிஜி என்று அழைக்கிறார்கள்.

தேவதை வட்டங்கள் இருக்குமிடம்

1970-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் மேற்குப் பகுதிகளில் இருக்கும் பாலைவனத்தில்தான் இந்த தேவதை வட்டங்களை கண்டுபிடித்தனர், குறிப்பாக நமீபியா நாடுகளில் இந்த வட்டங்கள் அதிகமாக தென்பட்டன. அதன்பிறகு அதே ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பில்பாரா என்னும் கிராமத்தில் ஒரு பகுதியில் இதேபோன்ற தாவர வளையங்கள் இருப்பதை சுற்று சூழலியலாளர்கள் கண்டுபிடித்தனர். தென்னாபிரிக்காவில் இந்த தேவதை வட்டங்கள் 160 கிலோமீட்டர்கள் பரவி கிடைக்கின்றன. மேலும் அங்கோலாவிலிருந்து தெற்கு நோக்கி தென்னாப்பிரிக்காவின் வடமேற்கு கேப் மாகாணம் வரை சுமார் 2,400 கிலோமீட்டர்கள் இந்த வட்டங்கள் இருப்பதை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதேபோல் ஆஸ்திரேலியாவில் 15 கிலோமீட்டர் வரை இருந்திருக்கின்றது.


சுற்றி தாவரங்களை கொண்ட தேவதை வட்டங்கள்

தேவதை வட்டங்களின் தோற்றம் மற்றும் மறைவு

தேவதை வட்டங்கள் எப்பொழுதும் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வுதான். இதன் தோற்றமும் மறைவும் இன்றுவரை கணிக்க முடியாத அளவிற்கு இருக்கின்றது. சில சமயங்களில் தேவதை வட்டங்கள் 10 ஆண்டுகள்வரை இருந்தது என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். அதன்பிறகு தானாகவே அந்த வட்டங்கள் மறைந்துவிடும். இதனை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் தான் கண்டுபிடித்தனர். 2014-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தோன்றிய இந்த தேவதை வட்டங்கள் சமீபத்தில்தான் மறைந்தன. சமீபத்தில் நடந்த ஆய்வில் தென்னாப்பிரிக்காவில் பூமிக்கு அடியில் நீரோட்டம் கம்மியாக இருப்பதால் இந்த தேவதை வட்டங்கள் தோன்றியிருக்கலாம் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கணித்திருகின்றனர்.

விலகாத மர்மம்

அமெரிக்காவில் இருக்கும் மீமா மேடுகளை போலவே, தேவதை வட்டங்களின் காரணமும் நீண்ட காலமாக ஒரு புதிராக இருந்து வருகிறது . நமீபியாவில் உள்ள தேவதை வட்டங்கள் ஆஸ்திரேலியாவில் இருப்பதை விட வித்தியாசமான முறையில் இருக்கும். எப்படியென்றால் நமீபியாவில் இருக்கும் தேவதை வட்டங்கள் சாதாரண மண்ணில் இருக்கும். ஆனால் ஆஸ்திரேலியாவில் இருக்கும் வட்டங்கள் களிமண்ணில் இருக்கும். இந்த தேவதை வட்டங்களை பற்றி பல மர்மங்கள் பரவி கொண்டே இருந்தன. 2004-ஆம் ஆண்டில் பிரிட்டோரியா தாவரவியலாளர் கிரெட்டல் வான் ரூயன், கரையான் செயல்பாடு மற்றும் தாவர நச்சுகளால் இப்படி நடக்கவில்லை என்கிற கருத்தை நிராகரித்தார். அதன்பிறகு 2014-ஆம் ஆண்டில் மைக்கேல் குரோமர் என்னும் அறிவியல் ஆராய்ச்சியாளர் வறண்ட பாலை நிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால்தான் வட்டங்கள் ஏற்படுகின்ற என்கிற கோட்பாட்டை முன்வைத்துள்ளார். ஆனால் இதை ஒரு சில அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மறுத்து வருகின்றனர்.

தேவதை வட்டங்களின் கட்டுக்கதைகள்

வடக்கு நமீபியாவின் குனேனே பிராந்தியத்தைச் சேர்ந்த ஹிம்பா மக்களின் வாய்வழி புராணங்களில், இந்த நிலத்திட்டுகள் கடவுள்கள், ஆவிகள் அல்லது இயற்கை தெய்வங்களால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட நம்பிக்கைகளில், ஹிம்பா மக்கள் தங்கள் அசல் மூதாதையரான முகுரு, தேவதை வட்டங்களின் உருவாக்கத்திற்கு காரணமானவர் அல்லது அவை கடவுள்களின் கால்தடங்கள் என்று குறிப்பிடுகின்றனர். நமீபியாவில் சில சுற்றுலா வழிகாட்டிகளால் முன்வைக்கப்பட்ட மற்றொரு கட்டுக்கதை, பூமியில் ஒரு டிராகனால் வட்டங்கள் உருவாகின்றன மற்றும் அதன் நச்சு சுவாசம் தாவரங்களைக் கொன்றுவிடுகிறது என்பதாகும்.


மர்மம் விலகாத தேவதை வட்டங்கள்

தேவதை வட்டத்தின் பயன்பாடு

ஹிம்பா மக்கள் தங்கள் விவசாயத்தில் தேவதை வட்டங்களைப் பயன்படுத்துகின்றனர். தேவதை வட்டங்கள் தரிசு நிலத்தில் புற்களை ஆதரிப்பதால், அவை மேய்ச்சலை வழங்குகின்றன. சில நேரங்களில் அவை வேட்டையாடுபவர்களுக்கும் பயன்படுகின்றன.

Updated On 9 Dec 2024 9:36 PM IST
ராணி

ராணி

Next Story