இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கட்டிட கலைகளுக்கு மிகவும் பெயர்போனது இந்திய நாடு. சிந்து சமவெளி காலம்தொட்டு இன்றுவரை கட்டிட கலைகளில் சிறந்து விளங்குகின்றது பாரதம். பல நூறு ஆண்டுகளாக மாறிமாறி ஆட்சி செய்துவந்த அரசர்கள், அவர்களது சிறந்த கட்டிடங்களை இந்தியாவில் விட்டு சென்றுள்ளனர். அப்படி முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கட்டிடம்தான் 'பாரா இமாம்பரா'. 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கட்டிடம் இந்தியாவில் சுற்றி பார்க்க வேண்டிய மிகமுக்கியமான இடங்களில் ஒன்று. இந்த கட்டிடம் உருவான வரலாறு சுவாரஸ்யமானது. அதுகுறித்து இத்தொகுப்பில் காணலாம்.


பஞ்சத்தில் அனைத்து மக்களுக்கும் உணவு கிடைப்பதற்காக கட்டப்பட்ட இமாம்பரா மண்டபம்

பஞ்சத்தால் உருவான மாளிகை :

1784-ஆம் ஆண்டு லக்னோ (தற்போதைய உத்தரப்பிரதேசத்தின் தலைநகர்) பகுதியை மிகப்பெரிய பஞ்சம் தாக்கியது. மக்களுக்கு வேலையும் இல்லை, உண்ண உணவும் இல்லை. அந்த நேரத்தில், ஆவாத்தின் நவாப், ஆசாஃப்-உத்-தௌலா, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே மாதிரியான வேலைவாய்ப்பை உருவாக்க ஒரு சிறந்த வழியைக் கொண்டுவந்தார். எனவே அவர் நாட்டிலேயே மிகப்பெரிய பிரார்த்தனை மண்டபத்தை கட்ட முடிவு செய்தார். பாரா இமாம்பரா என்ற பெயர் கொண்ட அந்த மிகப்பெரிய பிரார்த்தனை மண்டபத்தை கட்ட பல தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள் என்பதால், அதில் பணிபுரியும் அனைத்து மக்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் உணவு கிடைக்கும் என்கிற நல்ல எண்ணத்தில் அதனை கட்ட நடவடிக்கை எடுத்தார். கட்டிடத்தின் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், இம்மண்டபத்தின் உட்புறத்தில் தூண்களே கிடையாது.


இமாம்பரா நினைவுச்சின்னத்தின் அழகிய தோற்றம்

புகழால் ஓங்கி நிற்கும் பாரா இமாம்பரா :

பஞ்சம் பதினோரு ஆண்டுகள் நீடித்தது. அந்த நகரத்தில் மேலும் வேலைவாய்ப்பை தொடர, பஞ்சம் நீடித்த காலத்திற்கு கட்டுமானமும் தொடர்ந்தது. பல இன்னல்களுக்கு பிறகு நவாப்பின் பெயரால் ஆசாபி இமாம்பரா என்று அழைக்கப்படும் பாரா இமாம்பரா, அற்புதமான மண்டபமாக மாறியது. இது ஒரு மசூதியோ அல்லது கல்லறையோ அல்ல, ஆனால் மொகரம் காலத்தில் துக்கத்திற்காக சமூகம் கூடும் ஒரு பிரார்த்தனை கூடமாக இருந்தது என்று சொல்லப்படுகிறது. இது பல கட்டிடக்கலைக்கு போட்டியாகவும் இருந்துள்ளது. இன்றும் கூட, இமாம்பராவின் இந்த மெகா நினைவுச்சின்னத்தின் ஆடம்பரம் மற்றும் அழகை கண்டு சுற்றுலா பயணிகள் ஆச்சர்யத்துடன் வாய்பிளக்கின்றனர்.


புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் கிஃபாயத்துல்லாவின் நினைவு சின்னம்

கட்டிட கலைஞரின் நினைவு சின்னம் :

பஞ்ச நிவாரணத் திட்டத்தின் ஒரு பகுதியாக இமாம்பரா இருந்த போதிலும், அதனை பிரம்மாண்டமாக கட்டுவதற்கான பெரிய திட்டங்களை நவாப் வைத்திருந்தார். அதற்காக ஒரு சிறந்த திட்டத்தை நவாப் தீட்டினார். அவர் சிறந்த வடிவமைப்பிற்கான போட்டியை நடத்தி, புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் கிஃபாயத்துல்லாவைத் இறுதியில் தேர்ந்தெடுத்தார். அவரது கட்டணத்தைக் குறிப்பிடும்படி நவாப் கேட்டபோது, தான் கட்டும் இந்த பிரம்மாண்ட கட்டிடத்திலேயே தன்னை அடக்கம் செய்யும்படி கிஃபாயத்துல்லா கோரிக்கை வைத்தார். அவரது விருப்பத்தை நிறைவேற்ற நவாப் ஒப்புக்கொண்டதால், பாரா இமாம்பரா, கிஃபாயத்துல்லாவின் நினைவிடமாக இன்றளவும் கம்பீரமாக நிற்கின்றது.


இமாம்பராவின் உட்புற அழகு

குழப்பத்தை உண்டாக்கும் பூல் புலையா :

இது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடைபாதைகள் மற்றும் 489 ஒத்த தோற்றமுடைய கதவுகளுடன், குறுகிய பாதைகள் மற்றும் குறைந்த கூரை காட்சியகங்கள் கொண்ட இடமாகும். முழு கட்டுமானமும் ஒரு பிரம்மை போலவே தோன்றும். புதிதாக உள்ளே செல்வோர், வழிகாட்டி இல்லையென்றால் தொலைந்து போவார்கள். எனவே ஒரு வழிகாட்டியை பின்பற்றிய சுற்றுலாப்பயணிகள் உள்ளே செல்லவேண்டும்.

இந்தியாவின் மிகமுக்கிய சுற்றுலாத்தலம்

இந்த சிக்கலான மண்டபத்தை கட்டிமுடிக்க 14 ஆண்டுகள் ஆகியிருக்கின்றது. இந்த நினைவுச்சின்னத்தின் கட்டிட அமைப்பு மக்களை ஆச்சரியப்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களை மிகவும் வியக்கவும் வைக்கிறது. இந்த வெற்று சுவர்கள், கூரைகள் மற்றும் பல்வேறு உயரங்களின் குவிமாடங்கள் இமாம்பராவை அலங்கரிக்க கட்டப்பட்டன. இது ஒரு முழு காற்றோட்டமான அமைப்பு. டெல்லி மற்றும் ஆக்ராவின் பிற பகுதிகளுக்கு செல்லும் சுரங்கப்பாதையையும் இந்த மண்டபத்தில் உள்ளது. எனவே நினைவுச்சின்னத்தின் கவர்ச்சி மற்றும் வளமான வரலாற்றால், இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் நிச்சயம் கவரப்படுவார்கள்.

பாரா இமாம்பராவிற்கு எப்படி செல்வது?

லக்னோவின் பழைய ஹுசைனாபாத் பகுதியில் பாரா இமாம்பரா அமைந்துள்ளது. நீங்கள் எங்கிருந்தாலும் லக்னோவிற்கு சென்றுவிட்டு, அங்கிருந்து மெட்ரோ மூலம் துர்காபுரி மெட்ரோ நிலையத்தை அடையவும். அங்கிருந்து 3 கிமீ தொலைவில் பாரா இமாம்பரா நினைவு சின்னத்தை நீங்கள் எளிதாக அடையலாம். பாரா இமாம்பரா, லக்னோ சார்பாக் ரயில் நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து டாக்ஸி, ஆட்டோ, பேருந்து என எதில் வேண்டுமானாலும், எளிதாக பாரா இமாம்பராவை சென்றடையலாம்.

வழிகாட்டி வரைப்படம்


Updated On 17 Sep 2024 7:27 AM GMT
ராணி

ராணி

Next Story