இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

அமெரிக்கா, வளர்ச்சியடைந்த நாடுதான் என்றாலும், இன்றும் அங்கு வெளிவராத ரகசியங்களும் மர்மங்களும் புதைந்து கிடக்கின்றன. அந்த வகையில் உலக நாடுகளுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கும் அமெரிக்காவானது, பலவருட காலமாக தன் நாட்டு பாதுகாப்பு துறைக்குக்கூட தெரியாத பல மர்ம இடங்களை தன்னுள் கொண்டுள்ளது. அதில் பிரதான ஒன்றுதான் இந்நாட்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் Area-51. பல வருடங்களாக மக்கள் அமெரிக்காவைப் பார்த்து கேட்கும் கேள்வி, அப்படி என்னதான் இருக்கிறது ஏரியா-51 என்கிற இடத்தில்? ஏரியா-51 பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.


அமெரிக்காவில் இருக்கும் ஏரியா-51 நுழைவு வாயில்

ஏரியா-51 எங்கு இருக்கின்றது?

அமெரிக்காவின் லாஸ் வேகாஸின் வடமேற்கில் சுமார் 120 மைல் தொலைவில், நெவாடாவின் (Nevada) Extraterrestrial Highway என அழைக்கப்படும் 'வேற்று கிரக நெடுஞ்சாலை' வழியாக எந்தவித பெயர் அடையாளங்களும் குறிப்பிடப்படாத ஒரு புழுதி பறக்கும் சாலைக்கு நடுவில் செல்கிறது இந்த மர்ம பூமி. கிட்டத்தட்ட 200 கிலோ மீட்டர் நீளும் இந்த நெடுஞ்சாலையின் இடையே எந்தவொரு கடைகளோ, பெட்ரோல் பங்கோ, நின்று நிறுத்தி இளைப்பாறும் இடமோ என எதுவுமே இல்லை. தடித்த சங்கிலிகளால் வளைத்து மூடப்பட்ட இந்த தரிசு நிலத்துக்குள் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு எறும்பின் அசைவும் கூட சுற்றி வளைத்து கண்காணிப்படுகின்றது.


பல ராணுவ ஆயுதங்களை உள்ளடக்கிய ஏரியா-51

வேற்றுகிரக வாசிகளை பற்றிய ஆராய்ச்சி?

பலவருட காலமாக இதனுள் இருக்கும் ரகசியத்தை அறிந்துகொள்ளத் துடிக்கும் பலரும், பலவிதமான கருத்துக்களையும் வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். இந்த இடத்தில், இரண்டாம் உலகப்போர் காலத்திலிருந்து அதிபயங்கர வெடிகுண்டுகள் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருவதாகவும், வானிலையை கட்டுப்படுத்தும் அதிநவீன தொழில்நுட்பங்கள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், அமெரிக்காவுக்கென்றே தனித்துவமான வானூர்திகள் உருவாக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ஏரியா-51 என்ற பெயரை சொன்னவுடன், இங்கு வேற்றுகிரக வாசிகளின் உடல்களும், அவர்களின் தொழில்நுட்பங்கள் பற்றிய ஆராய்ச்சிகளும்தான் நடைபெறுகின்றன எனவும் பெரும்பாலானோரால் கூறப்படுகிறது. இப்பகுதியில் வாழும் மக்கள் இங்கு விசித்திர விண்கலங்கள் தரை இறங்குவதாகவும், இதுவரை பார்த்திடாத புதுவகை போர் விமானங்கள் மற்றும் தரைவழி ஊர்திகள் சென்றுவருவதாகவும் தெரிவிக்கின்றனர்.


ஏரியா-51 இடத்திற்கு அருகில் இருக்கும் உணவகங்கள் மற்றும் மோட்டல்

ஏரியா-51 செல்ல யாருக்கெல்லாம் அனுமதி?

ஐக்கிய அமெரிக்காவின் CIA எனப்படும் Central Intelligence Agency எனும் உளவு நிறுவனம் மற்றும் இப்பகுதியில் தொழில்புரிய அனுமதிக்கப்பட்டுள்ள தனித்துவமான ஆட்களைத் தவிர வேறு யாராலும் இந்த Area-51 பகுதிக்குள் கால்வைக்க முடியாது. உலக நாடுகளிலுள்ள ஒவ்வொரு அரசு துறையும், தான் செலவுசெய்யும் பணம் குறித்து பற்றுச்சீட்டுடன் அரசுக்கு முழு தகவலையும் அனுப்பவேண்டியதென்பது அவசியமான ஒன்றாகும். ஆனால் இந்த Area-51 பகுதிக்காக அனுப்பப்படும் பணத்திற்கு எந்தவித கணக்கும் காட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை.


ஏரியா-51 இடத்திற்கு வேற்றுகிரக வாசிகள் வந்து செல்வதாக மக்கள் கருத்து

உண்மையாகவே ஏரியா-51ல் என்ன நடக்கிறது?

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் அமைந்திருக்கிறது இந்த ஹோமி விமான நிலையம் (Homey Airport). இதுதான் ஏரியா 51-ன் அதிகாரப்பூர்வ பெயர். இந்தப் பகுதி வியட்நாம் போரின்போது சிஐஏ ஆவணங்களில் ஏரியா-51 என்ற ரகசியப் பெயரால் குறிப்பிடப்பட்டது. 1955-ம் ஆண்டில்தான் இங்கே போர் விமானங்கள் தொடர்பான ஆராய்ச்சி தொடங்கியது. ஏரியா-51 டாப் சீக்ரெட் எனப்படும் சிறப்பு வளையத்துக்குள் இருக்கும் ஒரு பகுதி. எனவே, இது தொடர்பான தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. புதிய விமானங்களையும், ராணுவத்துக்கான கருவிகளையும் பரிசோதிக்கும் இடமாகவும் ஏரியா-51 செயல்பட்டு வருகிறது. நீண்ட காலமாக அமெரிக்கா பல வடிவங்களில் போர் விமானங்களை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறது. அதனால் இந்தப் பகுதியில் பல வடிவங்களில் போர் விமானங்கள் பறப்பது வழக்கம். அப்படிப் பறக்கும் விமானங்களைத்தான், வேற்றுகிரகவாசிகள் பயன்படுத்தும் பறக்கும் தட்டுகள் என மக்கள் நம்பி வருவதாக கூறப்படுகிறது. இது தவிர பூமிக்கு வரும் வேற்றுக்கிரக வாசிகளை அமெரிக்க அரசு இங்கே அடைத்து வைத்து ஆராய்ச்சி செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஏரியா-51ல் ரகசியமாகச் சில விஷயங்கள் இருப்பது என்பது முற்றிலும் உண்மையான விஷயம்தான். அங்கே ராணுவம் தொடர்பாகப் பல்வேறு ஆராய்ச்சிகளும் பரிசோதனைகளும் நடத்தப்படுகின்றன. இப்படி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு இடத்துக்கு பொதுமக்களை அமெரிக்கா மட்டுமல்ல, வேறு எந்த நாடும் அனுமதிக்காது. ஒரு திட்டம் தொடர்பான தகவல்கள் எதிரி நாட்டின் கையில் சிக்கக்கூடாது என்பதில் ஒரு நாடு கவனமாக இருப்பது வழக்கம்தான். இங்கே மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதைவிடவும், அங்கே சென்று பார்க்க ஒன்றுமே இல்லையென்பதுதான் அந்த இடத்தின் உண்மை நிலை. ஆனால் ஏலியன்கள், பறக்கும் தட்டுகள் என காலம்காலமாகக் கூறப்பட்டு வரும் கதைகள் அங்கே செல்லும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. அதன் காரணமாகவே ஏரியா-51 பகுதிக்கு செல்ல பலரும் ஆசைப்படுகிறார்கள்.


வினோதமான விஷயங்கள் அரங்கேறும் ஏரியா-51

ஏரியா-51 வரைபடம் :


Updated On 1 Oct 2024 4:31 AM GMT
ராணி

ராணி

Next Story