இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஏரியில் தண்ணீர் நிறைந்து வழிவதை பார்த்திருப்போம். ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை கூட பார்த்திருப்போம். ஆனால் ஒரு ஏரி முழுவதும் மனித எலும்புகளாக இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம்! உத்தரகாண்ட் மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து 5,029 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள 'ரூப்குண்ட் ஏரி' இந்தியாவின் உயரமான ஏரிகளில் ஒன்றாகும். ஆனால் இது இந்தியாவின் மற்ற சாதாரண ஏரிகளை போல அல்லாமல், மர்மம் நிறைந்ததாக காணப்படுகிறது. இந்த ஏரி முழுக்க நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் நிரம்பி இருக்கின்றன. குளிர் காலத்தில் பனியால் மூடி இருக்கும் இந்த ஏரி உருகும்போது, ​​நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் தண்ணீரில் அல்லது மேற்பரப்பிற்கு கீழே மிதப்பதைக் காணலாம்.


மர்மம் நிறைந்த 'ரூப்குண்ட் ஏரி'

ஏரியிலிருந்து வெளிவந்த எலும்புக்கூடுகள்

கடந்த 1942ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின்போது வனத்துறை அதிகாரி ஒருவர் இந்த ஏரியில் எலும்புக்கூடுகள் இருப்பதை கண்டுபிடித்தார். அப்போது அவை இரண்டாம் உலகப்போரின்போது உயிரிழந்த ஜப்பான் நாட்டு ராணுவ வீரர்களின் எலும்புக்கூடுகள் என பலரும் நம்பினர். மேலும் சிலர் பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் எலும்புகள் என்றும், சிலர் பனிப்புயலால் இவர்கள் இறந்திருக்கலாம் எனவும் கூறினர். ஆனால் இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் எதிரிகள் இங்கு ஊடுருவி வந்தபோது இறந்துவிட்டனரா என்று ஆராய பிரித்தானியர்கள் ஒரு புலனாய்வு குழுவை அனுப்பி சோதனை செய்தனர். சோதனை முடிவில், சடலங்கள், ஜப்பானிய வீரர்களுக்கு சொந்தமானது அல்ல என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ரூப்குண்டிற்கு வந்து சில பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் மற்றும் பல அறிவியல் அறிஞர்கள் ஆய்வு செய்ததில், காஷ்மீரின் ஜெனரல் ஜோராவர் சிங் மற்றும் அவரது ஆட்கள் 1841ல் திபெத் போர் முடிந்து வந்தபோது, ​​உயரமான இமயமலையில் வழி தவறி இறந்திருக்கலாம் என்றும், அவர்களது எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என்றும் சந்தேகித்தனர்.


ரூப்குண்ட் ஏரியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள்

தொற்றுநோயால் இறந்தவர்களின் மண்டை ஓடா?

தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட "கல்லறையாக" இந்த ஏரி இருந்திருக்கலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மறுபுறம், 9ஆம் நூற்றாண்டின்போது பேரழிவு சம்பவத்தில் ஒரே நேரத்தில் இறந்தவர்களின் எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் அப்பகுதியில் ஆயுதங்களோ, வர்த்தக பொருட்களோ காணப்படவில்லை. அதுமட்டுமில்லாமல் வர்த்தக பாதைக்கும், ஏரிக்கும் தொடர்பே இல்லாமல் இருந்தது. அதேநேரம் இறப்பு காரணத்திற்கான விளக்கமாக நோயை வழங்கக்கூடிய பழங்கால பாக்டீரியா நோய்க்கிருமிகள் எதுவும் எலும்புக்கூடுகளில் இருப்பதற்கான ஆதாரமும் இல்லை என்று மரபியல் ஆய்வுகள் தெரிவித்தன.


ரூப்குண்ட் ஏரியில் ஆய்வு நடந்தபோது

துக்ளக் படைகளின் சடலம்

1960களில் செய்யப்பட்ட ரேடியோகார்பன் சோதனைகள் இந்தக் கோட்பாட்டை பொய்யாக்கின. எலும்புக்கூடுகள் 12 மற்றும் 15ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் உள்ள காலத்தை சேர்ந்தவை என்று சுட்டிக்காட்டின. இது கர்வால் இமயமலையில் முகமது துக்ளக் தாக்குதல் நடத்திய காலத்தை ஒத்திருந்ததால், தோல்வியடைந்து சென்ற துக்ளக் படைகளின் சடலங்களாக இருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கணக்கிட்டனர்.


2004ஆம் ஆண்டு ரூப்குண்ட் ஏரியில் ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள்

வெளிச்சத்திற்கு வந்த திகிலூட்டும் உண்மை!

2004ஆம் ஆண்டில், நேஷனல் ஜியோகிராஃபிக் சேனலின் உத்தரவின் பேரில் ஐரோப்பிய மற்றும் இந்திய விஞ்ஞானிகள் குழு ஒன்று இப்பகுதியில் ஆராய்ந்தபோதுதான், திகிலூட்டும் உண்மை வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியது. எலும்புகளின் டிஎன்ஏ சோதனையானது இறந்தவர்களை இரண்டு தனித்தனி உடல் வகைகளாக பிரித்தன. ஒன்று உயரம் குறைவானது; மற்றொன்று மீடியம் உயரம். பெரும்பாலானோர் நடுத்தர வயதுடையவர்கள், 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள். அவர்களில் சிலர் வயதான பெண்கள். அனைவரும் ஓரளவு நல்ல உடல் ஆரோக்கியத்துடனேயே இருந்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் எலும்புக்கூடுகள் மரபணு ரீதியாக இருதரப்பாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவற்றில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இல்லை என்பதும் தெரியவந்தது. அத்துடன் இறப்புகள் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்கலாம் என கண்டறியப்பட்டது.


ஏரியின் பனி படர்ந்த பாறைகளில் காணப்படும் மனித எலும்புகள்

சுற்றுலாத்தலமாக மாறிய "எலும்புக்கூடு ஏரி"

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக்கூடுகள் என்று கண்டறியப்பட்டாலும், ரூப்குண்ட் ஏரியில் என்ன நடந்தது என்பது தெளிவாக இன்றுவரை அறியப்படவில்லை. ஆனால் நாளடைவில் உலகம் முழுக்க பிரபலமான இந்த எலும்புக்கூடு ஏரியை பார்க்க பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் உத்தரகாண்ட்டிற்கு வர ஆரம்பித்தனர். இதனால் அரசாங்கமே இதனை சுற்றுலாத்தலமாக மாற்ற முடிவெடுத்து இங்கு ட்ரெக்கிங் செயல்பாடுகளுக்கு ஏற்பாடு செய்தது. தற்போது இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக ரூப்குண்ட் ஏரி விளங்குகிறது.

ரூப்குண்ட் ஏரிக்கு செல்வதற்கான வழிகாட்டி வரைபடம்


Updated On 3 Sep 2024 4:27 AM GMT
ராணி

ராணி

Next Story