இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை தற்போது நகர்கின்றது என்றால் சொன்னால் நம்பமுடியுமா? ஆம் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை 30 ஆண்டுகளுக்கும் மேலாக கடல் அடிவாரத்தில் சிக்கிய நிலையில் நகர்கிறது. இதன் பெயர் A23a. இந்த பனிப்பாறை 1986இல் அண்டார்டிக் கடற்கரையிலிருந்து பிரிந்தது. ஆனால் அது விரைவாக அண்டார்டிக்காவின் வெட்டல் கடலில் நின்றது. அதன்பிறகு அது ஒரு பனித் தீவாக மாறியது. A68, A71 என A23a-ஐ விட பெரிய பனிப்பாறைகள் தோன்றியிருந்தாலும் அவை சில காலத்திலேயே உருகி சிறியதாகிவிட்டதால் மீண்டும் அந்த பட்டத்தைப் பெற்றிருக்கிறது A23a. தற்போது லண்டனை விட இருமடங்கு மற்றும் சென்னையை விட 4 மடங்கு பெரியதான இந்த பனிப்பாறை நகர்வது என்பது உலகத்திற்கு நன்மையான விஷயமே அல்ல! இதனால் நாம் சந்திக்கப்போகும் விளைவுகள் மற்றும் அது எப்படி தோன்றியது என்பதை பற்றியெல்லாம் விரிவாக இக்கட்டுரையில் காணலாம்.


அண்டார்டிகாவை நோக்கி நகரும் A23a பனிப்பாறை

பயங்கரமான A23a பனிப்பாறை

A23a பனிப்பாறை லண்டன் நகரைவிட இரண்டு மடங்கு பெரியது. கிட்டத்தட்ட 3,800 சதுர கி.மீ. 1986ம் ஆண்டு அண்டார்டிகாவிலிருந்து தனியாகப் பிரிந்தது இந்தப் பனிப்பாறை. அதன்பின்னர் கடலுக்கு அடியில் பாறையின் அடிபாகம் சிக்கிக்கொண்டது. அதனால் 30 ஆண்டுகள் நகராமல் நின்றிருந்தது. 2020ம் ஆண்டுதான் நகரத்தொடங்கியது. பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே கூற்றின்படி, பனிப்பாறை வடக்கு நோக்கி நகர்கிறது. இது எந்தப் பாதையில் செல்லும்? சுற்றுச்சூழலில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கடல்சார் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்படையுமா?

A23a வேகம் பெறும்போது, அது அண்டார்டிக் சர்க்கம்போலார் மின்னோட்டத்தில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு ஜார்ஜியா தீவில் A23a மீண்டும் தரையிறங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இது பிராந்தியத்தின் வனவிலங்குகளுக்கு சவால்களை ஏற்படுத்தும். இந்த சூழ்நிலையானது தீவில் இனப்பெருக்கம் செய்து சுற்றியுள்ள நீரில் தீவனம் தேடும் மில்லியன் கணக்கான முத்திரைகள், கடல் பறவைகள் மற்றும் பெங்குவின் அணுகலைத் தடுக்கும். இதனால் கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது கவலையளிக்கிறது.


A23a போன்று ஒரு ராட்சத பனிப்பாறையான A68

துண்டுகளாக உடைய வாய்ப்பு

2020-ஆம் ஆண்டில், இதே போன்று ஒரு ராட்சத பனிப்பாறையான A68, தெற்கு ஜார்ஜியாவுடன் மோதுவது, கடல் தளத்தில் கடல் வாழ் உயிரினங்களை அச்சுறுத்துவது மற்றும் உணவு அணுகலை சீர்குலைப்பது பற்றிய கவலைகளை எழுப்பியது. அதிர்ஷ்டவசமாக A68, இறுதியில் சிறிய துண்டுகளாக உடைந்தது. எனவே A23a-க்கும் இதே போன்று சாத்தியமான விளைவுகள் ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது.

உலகமெங்கும் இருக்கும் பனிப்பாறைகள்

உலகின் பெருங்கடல்களில் எத்தனை பில்லியன் டன் பனி உருகுகிறது என்பதைக் கண்காணிப்பதும், கணிப்பதும் சிக்கலான இயற்பியல். மேலும் இது, கடல், பனி மற்றும் வளிமண்டலத்திற்கு இடையிலான தொடர்பு காரணமாக ஒரு பெரிய சவாலாக உள்ளது. இதுவரை சுமார் 30,000 பனிப்பாறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான A23a

பனிப்பாறைகள் கரைவதால் ஏற்படும் நன்மைகள்

உயிரியல்-வேதியியலாளர் லாரா டெய்லர், "இந்த வகை பெரிய பனிப்பாறைகள் உடைந்து கடலில் கரையும்போது அவை கடலுக்கு பலவகை சத்துக்களை அளிக்கும். இதனால் அது செல்லும் வழியில் உயிரினங்கள் செழிக்கும். இதுகுறித்து ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். இந்த பணிப்பாறை கடலின் கார்பன் அளவை எவ்வாறு பாதிக்கிறது? வளிமண்டலத்துடனான சமநிலையை எவ்வாறு பாதிக்கிறது? ஆகியவற்றை ஆராய வேண்டுமெனக் கூறியிருக்கிறார் லாரா. மேலும், எந்த மாதிரியான பனிப்பாறைகள் உயிரியல் சூழலில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அறிய பனிப்பாறை கடந்து செல்லும் இடங்களில் தண்ணீர் மாதிரியை சேகரித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பனிப்பாறை உருகுவதால் ஏற்படும் பாதிப்புகள்

கடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதில் பனிப்பாறைகள் ஒரு முக்கிய பகுதியாகும். பனிப்பாறைகள் உருகும்போது அவை நன்னீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை கடலில் சேர்க்கின்றன. இது கடலில் உயிர்கள் எவ்வளவு வளரும் என்பதையும், நீர் எவ்வாறு நகர்கிறது என்பதையும், கடல் பனி உருவாகி உருகுவதையும் பாதிக்கிறது. இருப்பினும், பனிப்பாறைகள் கப்பல்களுக்கு ஆபத்தானவை. அதனால்தான் பனிப்பாறைகள் எங்கு உள்ளன மற்றும் அவை எவ்வளவு பெரியவை என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

Updated On 24 Dec 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story