இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்தியாவின் பிரபலமான சுற்றுலா தலமாகவும், சூரத்தின் உள்ளூர் மக்களால் அடிக்கடி பார்வையிடப்படும் இடமாகவும், டுமாஸ் கடற்கரை இருக்கின்றது. பிரபல கடற்கரையான இதை பற்றி இணையதளத்தில் தேடினால், இது இந்தியாவில் பேய்கள் உலவும் இடங்களில் ஒன்றாக காட்டுகிறது. இது உண்மையா? இணையத்தில் பல முரண்பட்ட தகவல்கள் இருந்தாலும், படித்தவர்கள் அதனை பொய் என்று கூறினாலும், டுமாஸ் கடற்கரையில் ஏதோ ஓர் அமானுஷ்யம் இருப்பதை அனுபவித்தவர்களும் இருக்கிறார்கள். டுமாஸ்‌ கடற்கரை என்பது அரேபிய கடலுடன்‌ இணைந்திருக்கும்‌ ஒரு நகர்ப்புற கடற்கரையாகும்‌. குஜராத்தின் சூரத்‌ நகரத்திற்கு தென்மேற்கே 21 கிலோமீட்டர்‌ தொலைவில்‌ இந்த கடற்கரை அமைந்துள்ளது. அமானுஷ்யம் நிறைந்ததாகக் கூறப்படும் இந்த கடற்கரையை பற்றி விரிவாக பார்க்கலாம்.


பேய்கள் இருப்பதாக கருதப்படும் டுமாஸ் கடற்கரையில் பழங்காலத்தில் புதைகுழி இருந்ததாம்!

புதைகுழியாக இருந்த கடற்கரை :

டுமாஸ் கடற்கரையில் பேய்கள் இருப்பதாக கருதப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, இந்த கடற்கரை பழங்காலத்தில் புதைகுழியாக இருந்துள்ளது. மேலும் ஆவிகள் இன்றும் அங்கு உலவுவதாகவும், இரவில் அமைதியான நேரத்தில் பேய்களின் சத்தம் கேட்பதாகவும் மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர். பகலில், இந்த கடற்கரையில் உள்ளூர்வாசிகள், சுற்றுலாப் பயணிகள் என கூட்டம் காணப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பகலில் உணவு மற்றும் பானங்கள் விற்கும் கடைகளும் அதிகமாக இருக்கின்றன. ஆனால் இரவு நேரங்களில், மாலை நேரத்திற்கு நேர்மாறாக குறைவான மக்களே காணப்படுகின்றனர். அமானுஷ்ய செயல்களால் பாதிக்கப்படாதவர்களும், அதுகுறித்த தகவல்களை கேட்டு அச்சமடைந்து, மாலை நேரத்திற்கு பிறகு அங்கு இருப்பதில்லை. இருட்டுவதற்கு முன்பே பெரும்பான்மையான மக்கள் கடற்கரையிலிருந்து கிளம்பி விடுகின்றனர் என்பது ஆச்சர்யம். இதெற்கெல்லாம் காரணம், அங்கிருக்கும் கருப்பு மணலும், புதைகுழி இருந்த வரலாறும்தான் என்று சிலர் கூறுகின்றனர்.


டுமாஸ் கடற்கரையில் விவரிக்க முடியாத உருவங்களும், நிழல்களும் வெளிவருவதாக அச்சம்கொள்ளும் மக்கள்

நிஜமாகவே அங்கு பேய்கள் இருக்கின்றனவா?

சூரியன் மறையும் நேரத்தில், விவரிக்க முடியாத உருவங்களும், நிழல்களும் வெளிவருவதாக மக்கள் கூறுகின்றனர். அத்துடன் டுமாஸ் கடற்கரையில் மற்றொரு பயங்கரமான நிகழ்வு என்னவென்றால், மக்கள் மர்மமான முறையில் காணாமல் போவதுதான். அங்குள்ள மக்களின் கூற்றுபடி, உள்ளூர்வாசிகள், சுற்றுலாப் பயணிகள் உள்பட பலர் கடற்கரையில் இரவில் உலாவும்போது காணாமல் போயுள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகளை கடற்கரைக்கு அருகில் செல்லவிடாமல் தடுக்க நாய்கள் ஊளையிடுவதாகவும் அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். மேலும், கடற்கரையில் நாக்கு வெளியேவந்த நிலையில் சிலர் இறந்து கிடந்ததாகவும், இந்த சம்பவங்களுக்கு பின்னால் இருக்கும் காரணத்தை யாராலும் இன்றுவரை கண்டுபுடிக்க முடியவில்லை என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.


காலை நேரத்தில் அழகிய சுற்றுலாதலமாக காட்சியளிக்கும் டுமாஸ் கடற்கரை

ஆய்வு நடத்திய சூரத் இளைஞர்கள் :

சூரத்தில் உள்ளூர் நண்பர்களின் குழு ஒன்று, உண்மையிலேயே டுமாஸ் கடற்கரையில் பேய்கள் உள்ளதா என்பதை கண்டறிய முடிவு செய்து அங்கே ஆய்வு செய்ய கிளம்பினர். வதந்திகளில் ஏதேனும் உண்மையைக் கண்டறிய அவர்கள் பகல் மற்றும் இரவிலும் ஒரு சில மணி நேரம் அங்கேயே செலவிட்டனர். அந்த பயணத்திற்குப் பிறகு, எதை நம்புவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் உண்மையில் எந்த அமானுஷ்ய சக்தியின் இருப்பையும் பார்க்கவில்லை அல்லது அனுபவிக்கவில்லை என்றாலும், மனதளவில் பெரும் பயத்துடனேயே அவர்களுக்கு அந்த இரவு கடந்துள்ளது. எப்பொழுது விடியும் என்று நீண்ட நேரம் காத்திருந்ததாக அவர்கள் கூறினர். அங்கு பேய்கள் இல்லாவிட்டாலும், ஒருவித அச்சம் கலந்த உணர்வு தங்களை ஆட்கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

டுமாஸ் கடற்கரைக்கு செல்வது எப்படி?

டுமாஸ் கடற்கரையில் பேய்கள் இருப்பதாக செய்திகள் பரவினாலும், தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளையும், உள்ளூர் மக்களையும் அந்த கடற்கரை ஈர்க்கிறது. பயம் கலந்த த்ரில் அனுபவத்தை பெற விரும்புபவர்கள் நிச்சயம் டுமாஸ் கடற்கரைக்கு செல்லலாம்.

சூரத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. சூரத் ரயில் நிலையம் 23.4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சூரத் நகரின் மையத்தில் உள்ள டுமாஸ் கடற்கரைக்கு சொந்த வாகனங்களிலும் செல்லலாம்.

சூரத் நகரிலுள்ள டுமாஸ் கடற்கரைக்கான கூகுள் மேப் :


Updated On 29 July 2024 6:15 PM GMT
ராணி

ராணி

Next Story