இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்தியாவில் பெண்களுக்கான பிரீமியர் லீக் கோலாகலமாக நடந்து வருகிறது. தற்போது அந்த தொடர் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை, பெங்களூர், யுபி வாரியர்ஸ் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் அரைஇறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளன. மும்பை மற்றும் டெல்லி அணிகள் அபாரமாக ஆடி ஆரம்பத்திலேயே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தன. ஆனால் யுபி வாரியர்ஸ் அணி கடைசி கட்டத்தில் போராடிதான் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அந்த அணி தகுதி பெறுவதற்கு மிகமுக்கிய காரணம் தீப்தி ஷர்மாவின் அசத்தலான ஆட்டம் மட்டுமே. பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் நன்றாக செயல்பட்டார். தொடர்ச்சியாக பேட்டிங்கில் மூன்று அரைசதங்களும், டெல்லி அணிக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்தும் அசத்தினார். இதன்மூலம் பெண்கள் பிரீமியர் லீக் தொடரில் ஹாட்ரிக் எடுத்த முதல் வீராங்கனை என்கிற பெருமைக்கு சொந்தக்காரரானார். யார் இந்த தீப்தி ஷர்மா? இவரது கிரிக்கெட் பயணம் எங்கிருந்து தொடங்கியது ? என்பதை பற்றியெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.


பெற்றோருடன் தீப்தி ஷர்மா

தீப்தி ஷர்மாவின் ஆரம்பக்காலம் :

24 ஆகஸ்ட் 1997-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்திலுள்ள ஆக்ரா நகரில் பிறந்தார் தீப்தி ஷர்மா. தீப்தி ஷர்மாவின் தந்தையான பகவான் ஷர்மா, ரயில்வேஸில் புக்கிங் சூப்பர்வைசராக பணியாற்றினார். தாயார் பெயர் சுசிலா. தனது 9 வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தாராம் தீப்தி ஷர்மா. தீப்தியின் அண்ணன் சுமித் ஷர்மா உத்தரப்பிரதேச அணிக்காக விளையாடியபோது, தீப்தியை கூடவே அழைத்து செல்வாராம். அங்குதான் தனது முதல் கிரிக்கெட் பயிற்சியை ஆரம்பித்துள்ளார் தீப்தி. தீப்தி விளையாடுவதை இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தேர்வாளர் ஹேமலதா கலா கவனித்து வந்தாராம். ஒரு நாள், 50 மீட்டர் தூரத்திலிருந்து டைரக்ட் த்ரோவின் மூலம் ரன் அவுட் ஒன்றை செய்த தீப்தியின் விளையாட்டு, ஹேமலதாவின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அதன்பின் தனது 15-வது வயதில் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆரம்பத்தில் வேகபந்துவீச்சாளராக இருந்த தீப்தி பின்னர் இந்திய முன்னாள் வீராங்கனை ரீத்தா தேவின் அறிவுரைப்படி ஆஃப் ஸ்பின்னராக மாறினார். அதன்பின்னரே அவருக்கு இந்திய அணி வாய்ப்பு வந்தது.


சர்வதேசப் போட்டிகளில் தீப்தி ஷர்மா விளையாடியபோது

இந்திய அணியில் அறிமுகம் :

2014-ஆம் ஆண்டு பெண்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் தென்னாப்ரிக்காவிற்கு எதிராக பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் அறிமுகமானார். ஆஃப் ஸ்பின்னராக இருந்த தீப்தி, போகபோக ஆல்ரவுண்டராக உருவெடுத்தார். பௌலிங்கில் தொடர்ந்து அசத்திவந்த தீப்தி, அணிக்கு தேவைப்படும் போதெல்லாம் 7-ஆவது விக்கெட்டுக்கு இறங்கி 30, 40 ரன்கள் அடித்து கொடுப்பார். இப்படி 7-ஆவது வரிசையில் ஆடிக்கொண்டிருந்த இவரை அப்பொழுதைய இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் புதிய முயற்சியில் இறக்கினார். அயர்லாந்திற்கு எதிரான போட்டியில் முக்கியமான வீராங்கனை ஸ்மிரிதி மந்தனாவிற்கு ஓய்வு கொடுத்துவிட்டு பூனம் ரவுத்தயும், தீப்தி ஷர்மாவையும் ஒப்பனராக களமிறக்கினார். அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றார் மிதாலி. ஒப்பனராக களமிறங்கிய பூனமும் தீப்தியும் முதல் விக்கெட்டுக்கு 320 ரன்கள் குவித்து அசத்தினர். அதுமட்டுமில்லாமல் தற்போது வரை பெண்கள் கிரிக்கெட்டில் இது உலகசாதனனையாகவே இருக்கிறது. அந்த போட்டியில் 188 ரன்கள் குவித்து அசத்தினார் தீப்தி. அதன்பின் அணிக்கு தேவைப்படும் போதெல்லாம் எல்லா இடத்திலும் ஆடியிருக்கிறார். ஒரு பேட்ஸ்வுமன் காயமடைந்தால் அந்த இடத்திற்கு தீப்திதான் களமிறங்குவார். 2017 பெண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பைதான் இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் மிக முக்கியமான தொடர். அங்கிருந்துதான் பல சூப்பர்ஸ்டார் கிரிக்கெட்டர்கள் உருவாகினர். அந்த தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை செல்வதற்கு மிகமுக்கிய காரணமாயிருந்தார் தீப்தி.


ஐபிஎல் - தி 100 - பிபிஎல் போட்டிகளில் விளையாடிய தீப்தி

அந்த தொடரில் மட்டும் பேட்டிங்கில் 218 ரன்களும், பந்துவீச்சில் 12 விக்கெட்களும் எடுத்து அசத்தினார். அதில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 3-59 என்று சிறப்பாக பந்துவீசி இந்திய அணி இறுதி ஆட்டம் வரை செல்வதற்கு உதவியாக இருந்தார். அதன்பின் 2017 ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இலங்கைக்கு எதிராக 6-20 என்று சிறப்பாக பந்துவீசி ஆசிய கோப்பையை வெல்வதற்கு உதவியாக இருந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஆல்ரவுண்டர் தரவரிசையில் அதிகநாள் முதலிடத்தில் நீடித்தவரும் தீப்தி ஷர்மாதான். அதன்பிறகு இவரை பெருமைப்படுத்தும் விதமாக உத்தரப்பிரதேச அரசு டிஎஸ்பி பதவி வழங்கி சிறப்பித்தது.

லீக் போட்டிகளில் அசத்தல் :

2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற கியா சூப்பர் லீக் தொடரில் வெஸ்டர்ன் ஸ்டோர்ம்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு மீண்டும் இங்கிலாந்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட "100" என்கிற தொடரில் லண்டன் ஸ்பிரிட் அணிக்காக தற்போது வரை விளையாடி வருகிறார். அதன்பின்னர் 2021-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த பெண்களுக்கான பிக்பாஷ் போட்டியில் சிட்னி தண்டர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்பொழுது பெண்களுக்கான ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் தீப்தி. அதுவும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் டெல்லி அணிக்கு எதிராக தனது ஹாட்ரிக் சாதனையை படைத்துள்ளார். பந்துவீச்சில் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் தொடர்ச்சியாக மூன்று முக்கியமான போட்டிகளில் அரை சதமடித்து, யுபி அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற காரணமாயிருந்திருக்கிறார் தீப்தி.

Updated On 25 March 2024 11:56 PM IST
ராணி

ராணி

Next Story