இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

2024-ஆம் ஆண்டுக்கான பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 3-ஆம் தேதி தொடங்கி வரும் 20-ஆம் தேதிவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. வங்கதேசத்தில் நடப்பதாக இருந்த இந்தத் தொடர், அங்கு நிலவி வரும் அரசியல் சூழ்நிலை காரணமாக இடம் மாற்றப்பட்டிருக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய மகளிர் அணிதான் இதுவரை பெண்கள் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்ற இந்திய அணிகளிலேயே பலமானது என்று சொல்லப்படுகிறது. எனவே நிச்சயம் இம்முறை இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல கிரிக்கெட் நிபுணர்களும், இந்திய மகளிர் அணிதான் இம்முறை கோப்பையை வெல்லும் என்று கணித்திருகின்றனர். இத்தொகுப்பில் இந்திய பெண்கள் அணி வலுவாக இருக்கிறதா? நிச்சயம் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கிறதா? என்பதை விரிவாக பார்ப்போம்.


வங்கதேசத்தில் நடக்கவிருந்த உலகக்கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம்

உலகக்கோப்பை அட்டவணை

இந்த உலகக்கோப்பையில் மொத்தம் 23 ஆட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் அனைத்தும் துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறுகின்றன. அதேநேரம் முன்னர் அறிவிக்கப்பட்டபடி குருப் பிரிவில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் குருப் ஏ பிரிவிலும், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து அணிகள் பி பிரிவிலும் அங்கம் வகிக்கின்றன. குருப் பிரிவில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறும். அக்டோபர் 17, 18 ஆகிய தேதிகளில் அரைஇறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தொடர்ந்து அதில் வெற்றி பெறும் அணிகள் அக்டோபர் 20-ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும். மழை உள்ளிட்ட ஏதேனும் பிரச்சினைகள் காரணமாக இறுதிப்போட்டி நடைபெறாமல் போனால் அதற்கு மறுதினம் அதாவது அக்டோபர் 21-ஆம் தேதி ரிசர்வ் டே ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. அரைஇறுதிப் போடிகளிலும் இந்த ரிசர்வ் டே முறை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை மகளிர் தகுதிச்சுற்றின் மூலம் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.


உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ள அணிகளின் கேப்டன்கள்

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா கற்றுக்கொண்ட பாடம்?

இந்திய அணி உலகக்கோப்பைக்கு துபாய் கிளம்புவதற்கு முன்பு கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார். சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி இறுதி போட்டியில் படுமோசமாக இலங்கையிடம் தோற்றது. அதுபற்றி பேசிய ஹர்மன், "ஆசிய கோப்பை தொடரில் நாங்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டோம். அந்த மொத்த தொடரிலும் நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடினோம் என்று சொல்வேன். ஆனால் அந்த ஒரே ஒரு நாள், அந்த ஒரே ஒரு ஆட்டம் நாங்கள் எதிர்பார்த்தபடி செல்லவில்லை. அதனால் நாங்கள் எதிர்பார்த்த முடிவு எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்கள் பயிற்சி முகாம்களில் பிரச்கினைகளை எப்படி சரிசெய்வது என்பது பற்றி அமர்ந்து விவாதித்தோம். இந்த மாதிரியான சூழ்நிலை மீண்டும் வந்தால், அதை சமாளிக்க என்னென்ன விஷயங்களில் முன்னேற்றம் காணவேண்டும் என்பதைப் பற்றியும் விவாதித்துள்ளோம்" என்று கூறினார்.


துபாய் கிளம்புவதற்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர்

“ஒவ்வொருவரும் சுதந்திரமாக தங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்”

"உலகக்கோப்பைத் தொடரில் நெருக்கடி அதிகமாக இருக்கும் என்று தெரியும். அதை எப்படி கையாளவேண்டும் என்று ஆலோசித்துள்ளோம். ஒவ்வொருவரும் சுதந்திரமாக தங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். முடிவுகளைப் பற்றி யோசிக்காமல் தங்கள் ஆட்டத்தை சிறப்பாக ஆடுவது முக்கியம். அதேநேரம் என்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது என்னால் பல விஷயங்களை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்றும் கேப்டன் ஹர்மன் தெரிவித்துள்ளார்.


இந்திய அணியின் பௌலர் ரேணுகா மற்றும் அருந்ததி ரெட்டி

இந்திய அணியின் பௌலிங் யூனிட்

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை மற்ற அணிகளோடு எப்படி ஒப்பிடுவீர்கள் என்று கேட்டதற்கு, "பூஜா வஸ்த்ரக்கர் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ரேணுகா சிங் அவருக்கு நல்லபடி சப்போர்ட் கொடுக்கிறார். ரேணுகா எப்போதுமே எங்களுக்கு தொடக்கத்திலேயே எதிரணி விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல தொடக்கம் தருவார். அதேபோல் அருந்ததி ரெட்டியும் ஒருசில நல்ல ஓவர்கள் பந்துவீசுவதன் மூலமும், தேவையான நேரத்தில் பேட்டிங் மூலமும் அணிக்குக் கைகொடுக்கிறார். அது அணியின் பேட்டிங் டெப்தையும் பலப்படுத்துகிறது. அதேசமயம் இந்திய பௌலிங் யூனிட்டை மற்ற அணிகளின் பௌலிங் யூனிட்டோடு நான் ஒப்பிட விரும்பவில்லை. ஒவ்வொரு அணிக்கும் அவர்களுக்கே உரிய ப்ளஸ், மைனஸ் இருக்கின்றன. ஆனால் என்னுடைய அணி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு நன்கு தெரியும். அவர்களால் என்ன செய்ய முடியும் என்றும் தெரியும்" என்று கூறியுள்ளார் இந்திய கேப்டன் ஹர்மன்.


உலகக்கோப்பை அனுபவங்கள் பற்றிப்பேசிய ஹர்மன்

முதல் உலகக்கோப்பையை போலவே உற்சாகத்தோடு இருக்கிறேன் - ஹர்மன்

தன்னுடைய உலகக்கோப்பை அனுபவங்கள் பற்றிப் பேசிய ஹர்மன், இன்னும் தன் முதல் உலகக்கோப்பையைப் போலவே அதே உற்சாகத்தோடு இருப்பதாகக் கூறினார். "நான் பல்வேறு உலகக்கோப்பைகளில் விளையாடியிருக்கிறேன். உலகக்கோப்பையில் சந்திக்கும் சூழ்நிலையோ, அங்கு கிடைக்கும் அனுபவமோ வேறு எந்தவொரு தொடரிலும் கிடைக்காது. 19 வயதில் நான் எவ்வளவு உற்சாகத்தோடு உலகக்கோப்பை அரங்கில் கால் வைத்தேனோ அதேபோல்தான் இப்போதும் உணர்கிறேன். இப்போது என்னுடைய அனுபவத்தையும் உடன் எடுத்துச்செல்கிறேன் என்று கூறினார்.

பாகிஸ்தானை வென்ற இந்திய பெண்கள்!

தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் மோசமாக தோற்ற இந்தியா, கடந்த 6-ஆம் தேதி பாகிஸ்தானுடன் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அருந்ததி ரெட்டி 3 விக்கெட்களையும், ஸ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ரேணுகா சிங், தீப்தி சர்மா, ஆஷா ஷோபனா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 106 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய மகளிர் அணி, 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் இந்திய அணியின் முதல் வெற்றியாக இது அமைந்தது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 9-ஆம் தேதி இலங்கையுடன் மோதுகிறது.

Updated On 14 Oct 2024 9:54 PM IST
ராணி

ராணி

Next Story