இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

2000-2010 ஆம் ஆண்டிலிருந்து இந்திய கிரிக்கெட்டின் மிடில் ஆர்டர் தூணாக இருந்தவர் யுவராஜ் சிங். அவரது ஓய்விற்கு பிறகு இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன் குறை இருந்து கொண்டே இருந்தது. அதுமட்டுமன்றி ஹர்திக் பாண்டியாவை தவிர்த்து இந்திய அணியில் வேக பந்துவீசும் ஆல்ரவுண்டர் இல்லை. அவற்றை சரிசெய்ய தற்போது இந்திய அணியில் இணைந்துள்ளார் ஷிவம் துபே. 6 அடியில் இருக்கும் ஷிவம் துபே பந்துகளை எதிர்கொள்வதை பார்க்கும்பொழுது யுவராஜ் சிங்கை போன்று இருப்பதாக பல முன்னணி கிரிக்கெட் வீரர்களும், நிபுணர்களும் கூறுகின்றனர். தற்போது நடந்து வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான T20 போட்டிகளில் முதல் இரண்டு ஆட்டங்களில் 60 ரன்கள் அடித்ததோடு 2 விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினார். T20 போட்டிகளில் தொடர்ந்து அசத்திய ஷிவம் துபேக்கு உலகக்கோப்பை வாய்ப்பு கிடைக்குமா ? என்பதை பற்றியெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.


முதல்தர போட்டிகளில் ஷிவம் துபே விளையாடிய தருணங்கள்

ஷிவம் துபேவின் ஆரம்பகால வாழ்க்கை

26 ஜூன் 1993 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார் ஷிவம் துபே. தனது 7 வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த ஷிவம் துபே சிறுவயதில் குண்டாக இருந்ததால் இவருக்கு கிரிக்கெட் விளையாடும்போது மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அதனால் 14 வயதில் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தியுள்ளார் ஷிவம் துபே. பிறகு மீண்டும் தனது 19 வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துள்ளார். தொடர்ந்து தனது பிட்னெஸ்ஸை சரி செய்து மும்பை U-23 அணியில் இடம்பிடித்தார். துபேவின் தந்தைதான் அவருக்கு பெரும் துணையாக இருந்துள்ளார். கர்நாடக ஸ்போர்ட்டிங் கிளப்தான் ஷிவம் துபேவின் கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியது. அங்கு பயிற்சி பெற்ற பின்புதான் அவருக்கு U-23 அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு இவரது மொத்த கவனமும் மும்பை பிரீமியர் லீகில்தான். சிவாஜி பார்க் லயன்ஸ் அணிக்காக ஆடிய ஷிவம் துபே பாந்த்ரா ப்ளாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 21 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். அதுமட்டுமன்றி அதே ஆட்டத்தில் பிரவீன் தாம்பேவின் பந்துவீச்சில் ஒரே ஓவரில் 32 ரன்களை அடித்து சிவாஜி பார்க் லயன்ஸ் அணியை வெற்றி பெற செய்தார். இங்கிருந்துதான் சிவம் துபேவின் வாழ்க்கை தலைகீழாக மாறியது.


ஐபிஎல்லில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளுக்காக விளையாடியபோது

ஐபிஎல் அணிகளில் ஷிவம் துபே

மும்பை பிரீமியர் லீகில் கலக்கிய ஷிவம் துபேவிற்கு ஐபிஎல் ஏலத்தில் ஜாக்பாட் அடித்தது. பெங்களூரு அணி இவரை 5 கோடிக்கு வாங்கியது. பெங்களூரு அணிக்காக முதல் போட்டியில் விளையாடிய துபே 26 ரன்கள் மற்றும் 1 விக்கெட்டையும் எடுத்து அசத்தினார். அதன்பிறகு ஒரு சில போட்டிகளில் பந்துவீச்சிலும், ஒரு சில போட்டிகளில் பேட்டிங்கிலும் கை கொடுத்தார். இதற்கு பின்புதான் இவருக்கு சர்வதேச அழைப்பு வந்தது. ஹர்திக் பாண்டியாவின் காயம் காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான T20 போட்டியில் களமிறங்கினார். பிறகு மீண்டும் பாண்டியா, ஷங்கர் வருகையால் அணியில் மீண்டும் ஓரங்கட்டப்பட்டார். பிறகு பெங்களூரு அணி இவரை கழட்டிவிட்டது. அதன் பிறகு ராஜஸ்தான் அணியில் இணைந்தார் ஷிவம் துபே. அங்கு படுமோசமாக சொதப்பினார். அதனால் பல போட்டிகளில் உட்காரவைக்கப்பட்டார்.


சி.எஸ்.கே அணிக்காக விளையாடிய ஷிவம் துபே

சென்னை அணியில் ஜொலித்த ஷிவம் துபே

2022 ஆம் ஆண்டு சென்னை அணி ஷிவம் துபேவை 4.6 கோடிக்கு வாங்கியது. சென்னை அணியில் விஸ்வரூபம் எடுத்தார். தொடர்ந்து சிக்ஸர்களை மைதானத்தில் பறக்கவிட்டார். குறிப்பாக பெங்களூரு அணிக்கு எதிராக 95 ரன்கள் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அந்த போட்டியில் 8 சிக்ஸர்களை பறக்கவிட்டார். பிறகு ஸ்பின்னர்களை மட்டும் குறிவைத்து அடித்தார். இதனாலேயே கேப்டன் டோனி மிடில் ஓவர்களில் ஷிவம் துபேவை களமிறக்குவார். இவரும் ஸ்பின்னர்களை குறிவைத்து தாக்குவார். பிறகு 2023 ஆண்டு ஐபிஎல் தொடரில் 386 ரன்கள் குவித்து மீண்டும் இந்திய அணிக்குள் நுழைந்தார். அந்த வருடம் சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.


ஷிவம் துபே சர்வதேச அணியில் அறிமுகமானபோது

சர்வதேச தொடக்கம்

அக்டோபர் 2019 ஆம் ஆண்டு வங்காளதேச அணிக்கு எதிரான சுற்றுப் பயணத்தில் 20-20 சர்வதேச அணியில் தேர்வு செய்யப்பட்டார். அந்த தொடரின் இரண்டாவது போட்டியில் 54 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும் அந்த மாதத்தில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இந்திய ஒருநாள் சர்வதேச (ஒருநாள்) அணியிலும் தேர்வு செய்யப்பட்டார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக, டிசம்பர் 15, 2019 அன்று இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 2023 ஆசியா கோப்பையில் களமிறங்கினார். தற்போது ஆப்கானிஸ்தானிற்கு எதிரான T20 போட்டிகளில் தொடர்ந்து அசத்தி வருகிறார். இதனால் T20 உலகக்கோப்பைக்கு ஷிவம் துபே தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On 30 Jan 2024 12:14 AM IST
ராணி

ராணி

Next Story