இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கடந்த ஒரு மாதமாகவே கால்பந்து காய்ச்சல் ரசிகர்களை பாடாய்படுத்தியது. ஒருபுறம் ஐரோப்பிய நாடுகளில் யூரோ கோப்பை நடந்தது. மறுபுறம் அமெரிக்க நாடுகளில் கோபா அமெரிக்கா தொடரும் ஒருங்கே நடைபெற்றது. ஜூன் மாதத்தில் தொடங்கிய இந்த தொடர்கள் ஜூலை 15ஆம் தேதியோடு நிறைவடைந்தன. கால்பந்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான கால்பந்து போட்டிகளில் கோபா அமெரிக்காவும் ஒன்று. தற்போது முடிந்திருக்கும் இந்த தொடரில் கொலம்பியாவை தோற்கடித்து அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் மெஸ்ஸி இத்தொடரோடு ஓய்வு பெறபோவதாக செய்திகள் பரவி வருகின்றன. ஏனென்றால் கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓய்வை அறிவித்தார். அதனால் மெஸ்ஸியும் ஓய்வை அறிவித்துவிடுவார் என்கிற பயம் அர்ஜென்டினா ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் கோபா அமெரிக்கா தொடரில் கடந்த 2 முறை இறுதி போட்டிவரை வந்து தோற்ற அர்ஜென்டினா அணி, இம்முறை எதிர்பார்ப்பே இல்லாமல் சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கியிருக்கிறது. அதுவும் மெஸ்ஸியின் துணை இல்லாமல் இளம் படையை நம்பி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த இளம் படையை வைத்து அர்ஜென்டினா அணி எப்படி வெற்றி பெற்றது? மெஸ்ஸி இத்தொடரோடு ஓய்வு முடிவை அறிவிப்பாரா? என்பதை பற்றியெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.


ஆட்டத்தின் இடையில் காயத்தால் அவதிப்பட்ட மெஸ்ஸி

பரபரப்பான இறுதி ஆட்டம் :

நடப்பு ஃபிபா உலகக்கோப்பை சாம்பியனான அர்ஜென்டினா அணியும், கொலம்பியா அணியும் கோபா அமெரிக்கா இறுதி போட்டிக்கு முன்னேறின. போட்டி தொடங்குவதற்கு முன்பு மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டு கட்டுக்கடங்காத சூழல் நிலவியதால் போட்டி 80 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது. அதில் முதல் பாதி முழுக்க எந்த அணியும் கோல் கணக்கைத் தொடங்க முடியாத வண்ணம் கடுமையான போட்டி நிலவியது. பரபரப்பான இறுதி போட்டியில் இரு அணிகளும் மோதிக் கொண்ட நிலையில் முதல் பாதியில் இரு அணிகளுமே ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதற்கிடையில் இரண்டாம் பாதி தொடங்கிய 64வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி மைதானத்தில் சுருண்டு விழுந்தார். ஏற்கெனவே காயத்தில் அவதியுற்றவர் மேற்கொண்டு போட்டியில் தொடர முடியாத சூழலில் மைதானத்தை விட்டுத் தேம்பித் தேம்பி ஒரு குழந்தையைப் போல அழுதுகொண்டே வெளியேறினார். அவரது கணுக்கால் காயம் அனைவரையும் திகைப்புக்குள் ஆழ்த்தியது. இரண்டாம் பாதியிலும் ஆட்டம் இறுதியை நெருங்கும்வரை கோல்களே விழாமல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சரியாக ஆட்டத்தின் 112வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் லட்டாரோ மார்டினெஸ் முதல் கோலை அடித்தார். அதன்பின்னர் கொலம்பியா அடிக்க முயன்ற கோல்கள் தோல்வியில் முடிந்ததால் ஆட்ட முடிவில் 1-0 என்ற கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது அர்ஜென்டினா. கடந்த ஃபிஃபா உலகக்கோப்பையில் சாம்பியன்ஷிப் வென்ற அர்ஜென்டினா தற்போது கோபா அமெரிக்காவையும் வென்றுள்ளது. இது அர்ஜென்டினா கால்பந்து ரசிகர்களையும், லியோனல் மெஸ்ஸி ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


112-ஆவது நிமிடத்தில் கோல் அடித்த அர்ஜென்டினா வீரர் லட்டாரோ (இடது)

கோபா தொடரில் அர்ஜென்டினாவின் ஆதிக்கம் :

இதுவரை நடந்த கோபா தொடரில் 1921, 1925, 1927, 1929, 1937, 1941, 1945, 1946, 1947, 1955, 1957, 1959, 1991, 1993, 2021, 2024 என 16 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது அர்ஜென்டினா. இந்தப் போட்டியின் 66-வது நிமிடத்தில் காயம் காரணமாக மெஸ்ஸி சப்ஸ்டிடியூட் செய்யப்பட்டார். அதனால் டக்-அவுட்டில் வருத்தத்தில் மூழ்கி இருந்தார். அந்தச் சூழலில் தனது அணியின் கடைசி நேர கோலை உற்சாகமாக அவர் கொண்டாடி இருந்தார். கோப்பையை வென்ற கையுடன் அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மரியா ஓய்வை அறிவித்தார். இந்த ஆட்டத்தில் கொலம்பியா அணி 56 சதவீதம், பந்தை, தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து பாஸ்களை மேற்கொண்டது. அதில் 85 சதவிகிதம் துல்லியமானதாக அமைந்தது. 7 கார்னர் வாய்ப்புகள், 19 ஷாட்கள் ஆடி அசத்தியது. இருந்தபோதும் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு கைகூடாமல் போனது.


16-ஆவது முறையாக கோபா அமெரிக்கா சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா

கோல்டன் பூட்டை வென்ற லட்டாரோ மார்டினெஸ் :

பால் பொசஷன் என்று சொல்லக்கூடிய, பந்தைக் காலில் தக்க வைக்கும் பணியை கொலம்பியா அணி நன்றாக செய்தது. இதனால் போட்டி கூடுதல் நேரத்துக்குச் சென்றது. இந்நிலையில் ஆட்டத்தின் 97-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் லட்டாரோ மார்டினெஸ் களத்துக்குள் இறங்கினார். அதுவே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இரண்டு பக்கமும் ஆட்டக்காரர்கள், போர் வீரர்களைப் போல அடித்து மாய்ந்து கொண்டிருக்க, ஆட்டத்தின் 112-வது நிமிடத்தில் லட்டாரோ மார்டினெஸ் வெற்றிக்கான கோலினை உறுதி செய்தார். இந்தத் தொடரில் அதிக கோல் அடித்த வீரர் என்ற வகையில் கோல்டன் பூட்டும் அவரிடம் வந்து சேர்ந்தது. கோப்பையைப் பெற்றுக்கொள்ள வந்த கேப்டன் மெஸ்ஸி இந்தத் தொடரோடு ஓய்வை அறிவித்துள்ள நட்சத்திர வீரரான டி மரியா மற்றும் நிக்கோலஸ் ஓட்டமெண்டி ஆகியோரையும் அழைத்து, சேர்ந்தே கோப்பையைப் பெற்றுக்கொண்டார். அதன் பிறகு 2022-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றபோது நிகழ்த்திய அதே மாதிரியான ஒரு கொண்டாட்டத்தினை நிகழ்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் அர்ஜென்டினா வீரர்கள்.


கோபா அமெரிக்கா கோப்பையுடன் அர்ஜென்டினா அணி வீரர்கள்

விரைவில் ஓய்வு முடிவை அறிவிக்கவிருக்கும் மெஸ்ஸி?

எந்தவொரு வீரரின் விளையாட்டு ஆளுமையையும் கோப்பைகளால் மட்டுமே அளவிட்டுவிட முடியாது. குறிப்பாக ஒரு குழு விளையாட்டில், வெற்றி தோல்வியைப் பொருட்படுத்தாமல், ஒரு விளையாட்டு வீரர் எவ்வாறு சிறப்பாகச் செயல்படுகிறார் என்பதைப் பொறுத்தே அவரது திறமை நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் அணியின் தோல்விக்காகத் தொடர்ந்து விமர்சனம் செய்யப்பட்ட ஜாம்பவான்தான் அர்ஜென்டினாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி. இதுவரை யாரும் வென்றிடாத 45 முக்கிய கோப்பைகளின் சொந்தக்காரராகப் பிரேசிலின் டானி ஆல்விஸின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளார் கால்பந்தின் அரசன் லியோனல் மெஸ்ஸி. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதை பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார் மெஸ்ஸி. அவர் கூறியதாவது, 2026 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன், உடல் ரீதியாக எப்படி உணர்கிறேன் என்பதைப் பார்க்கவேண்டும் என மெஸ்ஸி கூறியிருக்கிறார். இதுவே மெஸ்ஸியின் கடைசி கோபா அமெரிக்காப் போட்டியாக இருக்கும் என்ற நிலையில் “உங்கள் திறமையின் உச்ச நிலையைப் பார்க்க உழைத்துக்கொண்டே இருங்கள், அதை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருங்கள், அது நிச்சயம் கிடைத்துவிடும்” என்று தன் மந்திர அஸ்திரத்தை அடுத்த தலைமுறைக்கும் விட்டுச் சென்றிருக்கிறார் அவர்.

Updated On 29 July 2024 11:51 PM IST
ராணி

ராணி

Next Story