உலக தடகள சாம்பியன்ஷிப் - தொடர் ஏமாற்றமளிக்கும் இந்தியா
தற்போது மிகப் பிரம்மாண்டமாக ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடந்துவரும் 19வது உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் மக்களின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 202 நாடுகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் மொத்தம் 2,187 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதில் உலக தடகள வரிசையில் 85வது இடத்தில இருக்கும் இந்தியா அணி சார்பில் 28 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அதுமட்டுமில்லாமல் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் யுனைடெட் ஸ்டேட்ஸ் அணி இம்முறையும் தொடர் ஆதிக்கம் செலுத்துமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
உலக தடகள சாம்பியன்ஷிப்பின் ஆரம்ப காலம்:
தடகள போட்டிக்கென்று பிரத்யேக சாம்பியன்ஷிப் போட்டிகள் எதுவும் அப்போது இல்லை. எனவே ஒலிம்பிக்கில் பங்கேற்பதையே தடகள சாம்பியன்ஷிப் போட்டியாக 1918 ஆம் ஆண்டு சர்வதேச தடகள கழகம்(IAAF) அறிவித்தது. அந்த முடிவை மாற்றுவதற்கு 50 வருடங்கள் எடுத்துக்கொண்டது. பின்னர் 1960களில் சர்வதேச தடகள கழகம் தங்களுக்கென ஒரு உலக சாம்பியன்ஷிப் போட்டி வேண்டும் என்று முடிவு செய்தது. அங்கிருந்துதான் உலக தடகளத்தின் ஆதிக்கம் ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து 1976ஆம் ஆண்டு சர்வதேச தடகள கழகம் பியெட்டோ ரிக்கோவில் ஆலோசனை நடத்தியது. அதற்கு பின்புதான் ஒலிம்பிக்கில் இருந்து தனியாக உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற ஆரம்பித்தது.
சர்வதேச தடகள கழகம்
முதலில் உலக தடகளத்தின் முன்னோட்டமாக ஆண்கள் 50 கி.மீ நடக்கும் போட்டி நடைபெற்றது. 20 நாடுகள் பங்கேற்ற அந்தப் போட்டியில் சோவியத் யூனியன் அணி அதிக பதக்கங்கள் பெற்று வெற்றிபெற்றது. அதன் தொடர்ச்சியாக 1980களிலும் உலக தடகள முன்னோட்ட போட்டி நடந்தது. அதில் இரண்டு புது தடகள போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்களுக்கான 300மீ மற்றும் 3000மீ தடை ஓட்ட போட்டியும் புதிதாகச் சேர்க்கப்பட்டன.
இரண்டு முன்னோட்டத் தொடர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து முதல் உலக தடகள சாம்பியன்ஷிப் எடிஷன் அறிவிக்கப்பட்டது. இந்தத் தொடர் எந்த இடத்தில நடக்க வேண்டும் என்று வாக்கெடுப்பை IAAF நடத்தியது. இதில் ஹெல்சின்கி, ஸ்டூட்ட்கர்ட், வெஸ்ட் ஜெர்மனி என்று மூன்று இடங்களை தேர்வு செய்தது. முதல் எடிஷனை நடத்தும் உரிமையை பின்லாந்து நாட்டிலுள்ள ஹெல்சின்கி நகரம் பெற்றது. கோலாகலமாக தொடங்கப்பட்ட இத்தொடரில் இந்தியா உள்ளிட்ட 153 நாடுகளும், 1333 தடகள வீரர்களும் பங்கேற்றனர்.
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர்களில் முதல் 3 இடங்களிலுள்ள நாடுகள்
இறுதியில் வெஸ்ட் ஜெர்மனி அணி அதிக பதக்கங்கள் பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. முதல் இரண்டு எடிஷன் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடந்தது. பின்பு ஒலிம்பிக்கும் இதுவும் சேர்ந்து வருவதால் 2 வருடத்திற்கு ஒருமுறை என்று இத்தொடர் மாற்றப்பட்டது. ஒவ்வொரு எடிஷனிலும் புதுபுது தடகள போட்டி அறிமுகப்படுத்தப் பட்டன. கடைசியாக நடந்த தொடரில் 49 போட்டிகள் நடத்தப்பட்டன.
உலக தடகள சாம்பியன்கள்:
உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் இதுவரை அதிக பதக்கங்களைப் பெற்ற அணி என்ற பெருமையை பெற்றுள்ளது யுனைடெட் ஸ்டேட்ஸ். 188 தங்கப் பதக்கங்களும்,128 வெள்ளிப் பதக்கங்களும் மற்றும் 107 வெண்கலப் பதக்கங்களும் வாங்கி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2-வது இடத்தில கென்யாவும்(162) , 3-வது இடத்தில் ரஷ்யாவும் (142) இருக்கின்றன.
ஜர்மிலா க்ராடோச்விலோவா
தடகளத்தில் உலக சாதனைகள்:
உலகிலுள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் இத்தொடரில் 36 உலக சாதனைகள் நிகழ்ந்துள்ளன. அதில் 18 சாதனைகளை ஆண்களும்,15 சாதனைகளை பெண்களும், 3 சாதனைகளை கலப்பு இரட்டையரும் நிகழ்த்தியுள்ளனர். முதல் சாதனை 1983-இல் நடந்தது. செக்கோஸ்லோவேகியா (Czechoslovakia) நாட்டைச் சேர்ந்த ஜர்மிலா க்ராடோச்விலோவா பெண்கள் 400மீ ஓட்ட பந்தயத்தில் 47.99 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இதுவே உலக தடகளத்தின் முதல் சாதனையாகும். இதுபோல் 36 சாதனைகள் நிகழ்ந்துள்ளன. இதில் குறிப்பிடத்தக்க சாதனை 2009-ஆம் ஆண்டு ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசைன் போல்ட் 9.58 வினாடிகளில் 100m தூரத்தை கடந்தார். இவர் தனது சாதனைமூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். இதன்மூலம் ’மின்னல் வீரர்’ என்று மக்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.
தடகள வீரர் உசைன் போல்ட்
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் அதிக பதக்கங்களை வென்றவர்கள்:
இதுவரை உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஆண்கள் பிரிவில் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசைன் போல்ட் 11 தங்க பதக்கங்கள், 2 வெள்ளி பதக்கங்கள்,1 வெண்கல பதக்கம் என மொத்தம் 14 பதக்கங்கள் பெற்று முதலிடத்தில் உள்ளார். பெண்கள் பிரிவில் அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த அல்லிசின் பெலிக்ஸ் 14 தங்கப் பதக்கங்களையும், 3 வெள்ளிப் பதக்கங்களையும், 3 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
இந்திய தடகள வீரர்கள் அஞ்சு பாபி ஜார்ஜ் மற்றும் நீரஜ் சோப்ரா
உலக தடகளத்தில் இந்தியாவின் பயணம்:
1983-ஆம் ஆண்டு முதல் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பங்கேற்று வருகிறது. சுமார் 19 எடிஷன் நடந்துள்ள இத்தொடரில் இந்தியா வெறும் இரண்டே இரண்டு பதக்கங்கள் மட்டுமே வென்றுள்ளது. அதில் முதல் பதக்கத்தை 2003 ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் நீளம் தாண்டுதலில் அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலப் பதக்கம் வென்றார். இதுவே இந்தியாவின் முதல் பதக்கமாகும். பின்னர் 2022 ஆம் ஆண்டு ஈட்டி எரிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். இது இரண்டு மட்டுமே இன்றுவரை இந்தியா வென்ற பதக்கங்களாகும். இதனாலேயே இந்தியர்கள் உலக தடகளத்தை அதிகம் விரும்புவதில்லை.
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா
ஏற்கனெவே ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, தற்போது நடந்துகொண்டிருக்கும் 2023 ஆம் ஆண்டிற்கான உலக சாம்பியன்ஷிப் தொடரில் 88.17 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எய்து தங்கம் வென்றுள்ளார். 40 ஆண்டுகால உலக தடகள வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் நீரஜ். இதனால் இந்திய ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கம் பூர்த்தியாகிவிட்டது.