இம்முறை எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும்? - 2024 பெண்கள் பிரீமியர் லீக் ஓர் அலசல்
2023 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான பெண்கள் பிரீமியர் லீக் தொடங்கப்பட்டு அமோக வரவேற்பை பெற்றது. தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான பெண்கள் பிரீமியர் லீக் பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. கடந்த வருட பெண்கள் பிரீமியர் லீக்கை விட இம்முறை அதிக தொகைக்கு ஜியோ சினிமா நிறுவனம் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கியுள்ளது. ஒவ்வொரு அணியும் தற்போது பயிற்சியை தொடங்கியுள்ளன. மும்பையிலுள்ள ப்ராபோர்னே ஸ்டேடியம் மற்றும் D.Y பட்டில் ஸ்டேடியத்தில் அனைத்து ஆட்டங்களும் நடைபெறவுள்ளன. கடந்த ஆண்டு சாம்பியன்ஷிப் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் முதல் ஆட்டம் நடக்கவுள்ளது. இம்முறை ஒவ்வொரு அணியும் மிகுந்த பலத்துடன் காணப்படுகின்றன. அனைத்து அணிகளும் ஏலத்தில் பல நல்ல வீராங்கனைகளை வாங்கி அணியின் வெற்றிடத்தை நிரப்பியுள்ளன. இம்முறை எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை இக்கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.
2023 இல் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ்
மீண்டும் சாம்பியனாகுமா மும்பை இந்தியன்ஸ்?
ஹர்மன் ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை மிகுந்த பலத்துடன் காணப்படுகிறது. ஏனென்றால் அணியில் இருக்கும் 11 நபர்களுமே மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்கள். இம்முறையும் மும்பை அணி கோப்பையை வென்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கும் வெஸ்ட் இண்டீசின் ஹேலே மேத்தீயுஸ் மற்றும் யஸ்டிகா பாட்டியா அணிக்கு மிகப்பெரிய பலம். ஆரம்பத்திலிருந்து அதிரடியாக ஆடக்கூடியவர் ஹேலே மேத்தீயுஸ், ஆட்டத்திற்கு ஏற்றவாறு பொறுமையாக ரன்ரேட்டை ஏற்றக்கூடியவர் யஸ்டிகா பாட்டியா. அதனால் இருவருக்குமே பந்து வீசுவது கடினம். அதன்பின் இங்கிலாந்தின் நாட்- ஸ்கிவேர் பிரண்ட் இறங்குவார். இவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர். கடந்த சீசனில் மும்பை அணிக்காக இவர்தான் அதிக ரன்களை குவித்தார். 10 இன்னிங்சில் விளையாடி 332 ரன்கள் குவித்து சராசரி 66.40 வைத்திருந்தார். பேட்டிங்கில் மட்டுமன்றி பந்துவீச்சிலும் 10 விக்கெட்கள் எடுத்து அசத்தினார். மிடில் ஆர்டரில் பலம் சேர்ப்பதற்கு அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர், இந்திய ஆல்ரவுண்டர் பூஜா வஸ்திரக்கர் மற்றும் நியூசிலாந்தின் தலைசிறந்த லெக்ஸ்பின் ஆல்ரவுண்டர் அமெலியா கெர் ஆகியோர் உள்ளனர். ஸ்பின் பௌலிங்கை பலப்படுத்துவதற்கு, தற்போது இந்தியாவிற்காக அறிமுகமான சாய்கா இஷாக் மற்றும் பெண்கள் சாலென்ஜெர் கோப்பையில் அசத்திய தமிழகத்தின் கீர்த்தனா பாலகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர். இங்கிலாந்தின் இசி வோங் மற்றும் இந்தியாவின் அமஞ்சோத் கவுர், வேகபந்துவீச்சிற்கு பலம் சேர்க்கின்றனர். எனவே இம்முறையும் மும்பை அணியே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மெக் லென்னிங் மற்றும் டெல்லி கேபிட்டலஸ் அணி
கோப்பையுடன் விடைபெறுவாரா மெக் லென்னிங்?
கடந்த வருடம் லீக் போட்டிகளில் முதலிடம் பிடித்த டெல்லி, இறுதி போட்டியில் தோற்று கோப்பையை தவறிவிட்டது. இதனால் இம்முறை கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்கிற முனைப்பில் களமிறங்க இருக்கிறது டெல்லி அணி. அதுமட்டுமில்லாமல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட அணியின் கேப்டன் மெக் லென்னிங்கிற்கு இந்த தொடரே கடைசி லீக் தொடராக இருக்கும். அதனால் டெல்லி வீரர்கள் மெக் லென்னிங்கிற்கு கோப்பையை வாங்கி தரும் முனைப்பில் விளையாடுவார்கள். டெல்லி அணியை பொறுத்தவரை பேட்டிங் மிகவும் பலமாக காணப்படுகிறது. தொடக்க வீராங்கனைகள் அணியின் கேப்டன் மெக் லென்னிங் மற்றும் ஷாபாலி வர்மா அதிரடியாக ஆடக்கூடியவர்கள். கடந்த வருட ஐபிஎல்லில் 4 முறை 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும், 3 முறை 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து டெல்லி அணி இறுதி போட்டிக்கு செல்ல உதவியாய் இருந்தனர். அதன்பிறகு ஜெமிமா ரொட்ரிகஸ் அணியின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆடக்கூடியவர். மிடில் ஆர்டரை பலப்படுத்துவற்கு ஆஸ்திரேலியாவின் ஜெஸ் ஜோனசென் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் மாரீசேன் கேப் ஆகியோர் உள்ளனர். இந்தியாவின் பூனம் யாதவ் மற்றும் ராதா யாதவ் தற்போது நல்ல ஃபார்மில் உள்ளனர். அதனால் ஸ்பின் பௌலிங்கிலும் பலமாகவே இருக்கிறது டெல்லி. இந்த அணியின் மிகப்பெரிய பலவீனமே சிறந்த இந்திய வேகபந்துவீச்சாளர் இல்லாதது தான். டிடாஸ் சந்து மட்டுமே தற்போது ஃபார்மில் இருக்கிறார். இவரை தவிர்த்து ஷிகா பாண்டே, அருந்ததி ரெட்டி பார்மில் இல்லாதது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. மற்றபடி டெல்லி அணிக்கும் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. கோப்பையுடன் மெக் லென்னிங் விடைபெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆர்.சி.பி அணியின் முன்னணி வீராங்கனைகள்
முன்னணி வீராங்கனைகளை வைத்து சொதப்பும் பெங்களூரு அணி
உலகிலுள்ள அனைத்து முன்னணி வீராங்கனைகளும் பெங்களூரு அணியில்தான் இருக்கிறார்கள். ஆனால் கடந்த வருடம் படுபயங்கரமாக சொதப்பியது பெங்களூரு. பெங்களூரு அணிக்கு கடந்த வருடம் எதுவுமே சரியாக அமையவில்லை. பேட்டிங்கில் அணியின் கேப்டனான ஸ்ம்ரிதி மந்தனா மற்றும் நியூசிலாந்தின் சோபி டிவைன் ஆகியோர் சொதப்பியது அணிக்கு பெரும் பின்னடைவாக ஆனது. கடைசி கட்டத்தில் சோபி டிவைன் நன்றாக விளையாடினாலும் எந்த பயனுமில்லாமல் போனது. அதுபோல பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகின் தலை சிறந்த ஆல்ரவுண்டரான எல்லிஸ் பெர்ரி சொதப்பியது அணியினை அதிகமாக பாதித்தது. 8 ஆட்டங்களில் வெறும் 210 ரன்களே குவித்தார். பந்துவீச்சில் 8 ஆட்டங்களில் 4 விக்கெட் எடுத்தார். அதுபோல மிடில் ஆர்டரில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் ரிச்சா கோஷும் பெரிதாக ஜொலிக்கவில்லை. இந்திய அணியின் நட்சத்திர வேகபந்துவீச்சாளர் ரேணுகா தாகூர் 6 ஆட்டங்களில் 1 விக்கெட் மட்டுமே எடுத்தார். அதனால் இம்முறை மிகுந்த கவனத்துடன் களமிறங்க இருக்கிறது பெங்களூரு அணி. புதிதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீராங்கனை கேட் கிராஸ் இணைந்திருப்பது அணிக்கு கூடுதல் பலம். இப்படி பல்வேறு விதங்களில் பலமாக காணப்படும் பெங்களூரு அணி இம்முறை சாம்பியன் பட்டம் வெல்லுமா? என்று பார்ப்போம்.
அலீசா ஹீலி மற்றும் உ.பி. வாரியர்ஸ்
அலீசா ஹீலியின் படை கோப்பையை வெல்லுமா?
கடந்த வருடம் பிளே ஆஃப் சுற்றுக்கு கஷ்டப்பட்டு வந்தது UP வாரியர்ஸ். அந்த அணியை பொறுத்தவரையில் பேட்டிங்கில் அலீசா ஹீலி, கிரேஸ் ஹாரிஸ் மட்டுமே நன்றாக ஆடினர். குறிப்பாக கிரேஸ் ஹாரிஸ் மிடில் ஆர்டரில் வந்து நிறைய ஆட்டங்களில் முடித்து கொடுத்திருக்கிறார். பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் அணியை வெற்றி பெற வைத்து பிளே ஆஃப் சுற்றுக்கு கொண்டு சென்றார். அதுபோல பந்து வீச்சில் சோபி எக்லேஸ்டோன் ஜொலித்தார். 6 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். இவர்களால் தான் UP வாரியர்ஸ் அணி பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தீப்தி சர்மா சரியாக செயல்படவில்லை. அதுமட்டுமில்லாமல் இந்த அணியில் வேகபந்துவீச்சாளர்கள் மிகமோசமாக செயல்பட்டனர். முழு தொடரிலும் வெறும் 10 விக்கெட்களை எடுத்திருந்தனர். அதனால் இந்த வருட ஏலத்தில் தனது அணியை சரி செய்வதற்கு பல முக்கியமான வீராங்கனைகளை ஏலத்தில் எடுத்தனர். குறிப்பாக 22 வயதான வரிந்தா தினேஷை அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்தது. தற்போது காயம் காரணமாக இங்கிலாந்தின் லாரன் பெல் அணியில் இருந்து வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக இலங்கையின் சத்தமாரி அத்தப்பட்டு அணியில் இணைந்துள்ளார். இவரின் வருகையால் அணி வலுவடைந்துள்ளது. இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்புடன் இறங்கவிருக்கிறது UP வாரியர்ஸ் அணி.
காயத்திலிருந்து அணிக்கு திரும்பும் பெத் மூனி
மீண்டும் களமிறங்க இருக்கிறார் பெத் மூனி
கடந்தமுறை UP வாரியர்ஸ் அணியிடம் கடைசி ஆட்டத்தில் தோற்று பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த குஜராத் அணி, இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்க இருக்கிறது. கடந்த வருடம் முதல் ஆட்டத்திலேயே பெத் மூனி, காயம் ஏற்பட்டு அணியிலிருந்து விலகினார். இதனால் அந்த அணி ஆரம்பத்திலிருந்தே தடுமாறியது. குஜராத் அணி பெத் மூனியை சுற்றியமைக்கப்பட்டது. திடீரென அவரது காயம் அணியை வெகுவாக பாதித்தது. அதுமட்டுமில்லாமல் பேட்டிங்கில் இந்திய வீராங்கனை தயாளன் ஹேமலதா மட்டுமே சிறப்பாக ஆடினார். மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்னேஹ் ராணா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்டநெர் சிறப்பாக செயல்படவில்லை. பேட்டிங், பௌலிங் என்று எதுவுமே சரியாக அமையவில்லை. ஆரம்பத்தில் அணியின் ஆலோசகர் மிதாலி ராஜ் என்று அறிவிக்கப்பட்டதும் அணியின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அனைத்து எதிர்பார்ப்புகளையும் குஜராத் அணி வீணடித்தது. இம்முறையாவது பெத் மூனி தலைமையிலான குஜராத் அணி சாம்பியன் பட்டம் வெல்லுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.