இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இப்போது எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை என பல்வேறு குற்றங்கள் அரங்கேறிவருகிற சூழலில் பெண்களுக்கு தற்காப்பு கலை கண்டிப்பாக அவசியம் என்ற நிலை உருவாகிவிட்டது. இதுகுறித்து பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும் பலரும் அதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. தனக்கென ஒரு தற்காப்பு கலையை தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும் என்ற 13 வயது சிறுமியின் எண்ணம்தான் இப்போது அவரை சர்வதேச அளவில் வலிமைமிக்க குத்துச்சண்டை போட்டியாளராக உருவாக்கி இருக்கிறது. மிகக்குறுகிய காலத்தில் தேசிய மற்றும் உலக அளவிலான பல்வேறு விருதுகளை வென்று கிக் பாக்ஸிங்கில் தனது கால்தடத்தை பதித்த நிவேதா சீனிவாசனுடன் ஒரு நேர்க்காணல்...

கிக் பாக்ஸிங் மீதான ஆர்வம் எப்போது ஏற்பட்டது?

கொரோனா காலகட்டத்தில் நான் 8ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது தற்காப்பு கலை ஏதேனும் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டுமென என அம்மாவிடம் கேட்டேன். நிறையப்பேர் கராத்தே போன்ற கலைகளை கற்றுக்கொள்வதால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று சொல்லி அம்மா என்னை கிக் பாக்ஸிங்கில் சேர்த்துவிட்டார்.

ரிங்கில் நிற்கும்போது ஜெயிப்பதைத் தவிர வேறு என்ன மனதில் தோன்றும்?

பெரும்பாலும் ஜெயிக்கவேண்டும் என்ற எண்ணம்தான் ஓடிக்கொண்டே இருக்கும். அதைத்தாண்டி மனதை ப்ளாங்க்காக வைத்துக்கொள்வதுதான் சிறந்தது. சிலர் காம்போக்களை பற்றி சிந்திக்க வேண்டும் என்பார்கள். இருந்தாலும் மனம் எதையும் யோசிக்காமல் இருப்பதே நல்லது.

2020-இல் கிக் பாக்ஸிங் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததற்கும் இப்போது இருப்பதற்குமான வித்தியாசங்கள் என்னென்ன?

நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. நான் கற்றுக்கொள்ள ஆரம்பித்த சமயத்தில் கிக் செய்யும்போது இடுப்புக்குமேல் காலை தூக்கமுடியாது. ஆனால் இப்போது முகம் வரைக்கும் அடிக்கும் அளவிற்கான கிக்ஸ்தான் அதிகம் பண்ணுவேன். பஞ்சஸ் அதிகம் பண்ணமாட்டேன். மூன்று வருடங்களில் இவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

குறுகிய காலகட்டத்தில் பல போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கிறீர்கள். மேட்ச்களுக்கு செல்வதற்கு முன்னால் உங்களை எப்படி தயார்படுத்திக்கொள்வீர்கள்?

3 வருடங்கள்தான் பயிற்சி எடுத்திருக்கிறேன் என்றாலும் அது கிட்டத்தட்ட 5, 6 வருட பயிற்சிக்கு சமம். ஏனென்றால் நான் ஒரே நாளில் 3 செஷன்ஸ்கூட பயிற்சி எடுப்பேன். அதேபோல் மேட்ச்கள் இருந்தால் அதற்குமுன்பு குறைந்தது 8 மணிநேரம் பயிற்சி எடுப்பேன். அப்படி இல்லையென்றால் ஒரு நாளில் இரண்டு முறை பயிற்சி இருக்கும். சர்வதேச போட்டிகளுக்குச் சென்றால் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் ரன்னிங் உட்பட காலை 6 - 8 மணிவரை பயிற்சி இருக்கும். மதியம் core strength training இருக்கும். பிறகு மாலையில்தான் விளையாட்டிற்கான டெக்னிக்குகளை சொல்லித்தருவார்கள்.


கிக் பாக்ஸிங் ரிங்குக்குள் நிற்கும்போது ஜெயிக்கவேண்டும் என்ற எண்ணம்தான் ஓடிக்கொண்டே இருக்கும் - நிவேதா சீனிவாசன்

ஒரு கிக் பாக்ஸர் என்னென்ன மாதிரியான டயட் முறைகளை பின்பற்றுவார்?

நிறைய புரதச்சத்துமிக்க உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். எடையை எப்போதும் கட்டுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டுமென்பதால் அதிக புரத உணவுகளைத்தான் எடுத்துக்கொள்வேன்.

முதன்முதலாக ஜெயித்த தருணம் எப்படி இருந்தது?

நான் பங்கேற்ற முதல் போட்டியில் தோற்றுவிட்டேன். அப்படி தோற்றதால்தான் கண்டிப்பாக ஜெயிக்கவேண்டும் என்ற ஆர்வமே எனக்குள் வந்தது. ஒருவேளை அந்த முதல் போட்டியில் நான் ஜெயித்திருந்தால், இது சுலபமாக இருக்கிறதே என்று அதை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டிருப்பேன். என்னுடைய முதல் போட்டி நன்றாக நினைவில் இருக்கிறது. அந்த போட்டி மாநில அளவிலான ஓபன் போட்டியாக ஆவடியில் நடந்தது. அந்த போட்டியில் ஓரிரு புள்ளிகளில் தோற்று வெண்கலம்தான் வென்றேன். அப்போதிருந்தே எப்படியாவது தங்கப்பதக்கம் வென்றுவிட வேண்டும் என்ற வெறி எனக்குள் உருவானது. அடுத்த போட்டியிலேயே தங்கம் வென்றேன். அதுதான் என்னுடைய அடையாளம் என்ற எண்ணம் எனக்கும் உருவானதால் அந்த நாள் முழுவதும் நான் போட்டிருந்த ட்ராக்ஸை கூட கழற்றவே இல்லை.

வீட்டில் உங்களுக்கு எந்த அளவிற்கு ஆதரவு கிடைக்கிறது?

என்னுடைய வீட்டில் நிறைய ஆதரவு கிடைக்கிறது. குறிப்பாக, அம்மாவின் சப்போர்ட் இல்லாமல் என்னால் ஒன்றுமே பண்ணமுடியாது. நான் போகிற எல்லா போட்டிகளுக்கும் அம்மா கூடவே வருவார். அதுமட்டுமில்லாமல் நான் இருக்கும் walk of federation-இல் என்னுடைய அம்மா பிசியோதெரபிஸ்ட். அதனால் எப்போதும் கூடவே வருவார். நான் எங்கும் தனியாக போகவே மாட்டேன். அதேபோல் பயிற்சிக்கு போகும்போதும் அம்மா என்னை தினமும் கூட்டிக்கொண்டு போவார்.


போட்டிகளுக்கு முன்பு நாள்தோறும் குறைந்தது 8 மணிநேரம் பயிற்சி எடுப்பேன் - நிவேதா

உங்களுடைய கோச் உங்களுக்கு கொடுத்த ஒரு அட்வைஸ் என்ன?

நான் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொள்வதால் அதற்கேற்றபடி நிறைய கோச் எனக்கு இருக்கிறார்கள். அதில் ராணுவத்தில் பாக்ஸராக பணிபுரிந்த ஒரு கோச் இருந்தார். அவர் எப்போதும் ஒரு கண் கிக் பாக்ஸிங் என்றால் மற்றொரு கண் படிப்பு என்று சொல்வார். கிக் பாக்ஸிங்கில் பெரிய ஆள் ஆனாலும்கூட படிப்பை விட்டுவிடக்கூடாது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவர் சொன்னதிலிருந்துதான் இரண்டையுமே விட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.

பள்ளியில் எந்த அளவிற்கு சப்போர்ட் கிடைக்கிறது?

ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு போட்டியில் வெற்றிபெற்று திரும்பும்போதும் வாழ்த்து தெரிவித்துக்கொண்டே இருப்பார்கள். நான் பெரும்பாலும் போட்டிகளுக்கு சென்றுவிடுவேன். அதனால் எப்போதாவதுதான் பள்ளிக்கு போவேன். அதேபோல் தேர்வுகளில் எப்படியாவது படித்து மார்க் எடுத்துவிடுவேன் என்பதால் ஆசிரியர்களும் என்னை நோட்ஸ் எழுதச் சொல்லி கட்டாயப்படுத்தாமல், ஜெராக்ஸ் எடுத்துக்கொள்ள அனுமதிப்பார்கள். ஏதாவது பாடம் புரியவில்லை என்றாலும் எப்போது வேண்டுமானாலும் வந்து கேட்கச் சொல்வார்கள்.

இதுவரை எத்தனை போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கிறீர்கள்?

சமீபத்தில் போன போட்டிகளை கணக்கிடவில்லை. ஆனால் ஒரு தேசிய அளவிலான போட்டி என்றால் அதில் குறைந்தது 8 மோதல்கள் இருக்கும். அதேபோல் சர்வதேச போட்டிகளிலும் 4 அல்லது 5 மோதல்கள் இருக்கும். அப்படி கடைசியாக நான் கணக்கிட்டபோது 39 வெற்றிகளும் 8 தோல்விகளும் இருந்தன.


நிவேதாவின் தாயார் மற்றும் குடும்பத்தினர்

உங்களைப்பற்றி நீங்களே பெருமையாக நினைக்கிற தருணம் எது?

கடைசியாக ராஞ்சியில் தேசிய அளவில் நடந்த போட்டியில் என்னை 45 மற்றும் 50 என இரண்டு எடை பிரிவுகளின்கீழ் போட்டிருந்தார்கள். அதுபோக இரண்டு டிசிப்ளினின் கீழும் போட்டிருந்தார்கள். இப்படி மொத்தமாக 3 பிரிவின்கீழ் விளையாடினேன். ஆனால் அவர்களுடைய கால அட்டவணை சரியாக இல்லாததால் அனைத்துப் போட்டிகளுமே ஒரேநாளில் நடந்தது. அப்படி அந்த நாளில் மட்டும் 11 சண்டைகள் எனக்கு இருந்தது. அந்த 11 சண்டைகளிலும் நான் போட்டியிட்டு 2 தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் வென்றேன். அந்த போட்டியை எப்போது நினைத்தாலும் பெருமையாக உணர்கிறேன்.

பல போட்டிகளில் வென்றிருந்தாலும் எந்த ஒரு போட்டியை என்றுமே மறக்கமுடியாது என்று சொல்வீர்கள்?

எல்லா போட்டிகளுமே எப்போதும் நினைவில் இருக்கும். அதில் மிகவும் மறக்கமுடியாதது என்றால் அது உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டது. அதில் சில பாயிண்டுகள் வித்தியாசத்தில்தான் என்னால் வெற்றிபெற முடியாமல் போனது. அதை என்றுமே மறக்கமுடியாது.

இவ்வளவு நாள் கலந்துகொண்ட போட்டிகளில் உங்களுக்கு டஃப் கொடுத்த போட்டியாளர் என்று யாரை சொல்வீர்கள்?

2022-இல் துருக்கி உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்றேன். அதுதான் என்னுடைய முதல் சர்வதேச போட்டியும்கூட. அங்கு கிரீஸிலிருந்து ஒரு நபர் வந்திருந்தார். அவர் ஒரே காலில் ஆடி மொத்த ஆட்டத்தையுமே முடித்துவிட்டார். அப்போது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்போதுதான் முதன்முறை அப்படியொரு ஃபைட்டிங் ஸ்டைலை பார்த்தேன். அதுதான் இதுவரை நான் ஆடியதிலேயே கடினமான போட்டி.


தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் நிவேதா வென்ற தருணங்கள்

கிக் பாக்ஸிங் மற்றும் படிப்பு இரண்டையும் எப்படி சமாளிக்கிறீர்கள்?

எனக்கு படிப்பு ஈஸியாக வந்துவிட்டது. அதுமட்டும் சலிப்பை ஏற்படுத்தியதால்தான் விளையாட்டு பக்கமே போனேன். க்ளாஸில் எப்போதும் நன்றாக கவனிப்பேன். அப்படி போகமுடியாவிட்டாலும் வீட்டில் சார்ட்டில் எழுதி மாட்டி வைத்து பார்த்துக்கொண்டே இருப்பேன். அதனால் இரண்டையுமே மேனேஜ் செய்யமுடிகிறது.

கிக் பாக்ஸிங்கிற்குள் வராவிட்டால் உங்களுடைய குறிக்கோள் என்னவாக இருந்திருக்கும்?

படிப்பு. சின்ன வயதிலிருந்தே நிறைய படிப்பேன். Spellbee, Olympiad தேர்வு போன்றவற்றையும் எழுதியிருக்கிறேன். என்னுடைய தாத்தா முதற்கொண்டு வீட்டில் நிறைய டாக்டர்கள் இருக்கிறார்கள். அதனால் நானும் டாக்டராகியிருப்பேன்.

கிக் பாக்ஸிங் கற்றுக்கொள்ள விருப்பப்படுபவர்கள் என்னென்ன செய்யவேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது?

முறையான பயிற்சி வேண்டும். டயட் மற்றும் ஒழுக்கம் கட்டாயம் இருக்கவேண்டும். ஒழுக்கமுடன் கூடிய பயிற்சி இருந்தாலே குறுகிய காலத்திலேயே சாதித்துவிடலாம்.

உங்களுடைய எதிர்கால திட்டங்கள் என்னென்ன?

கிக் பாக்ஸிங்கில் உலக சாம்பியன்ஷிப்பில் வெற்றிபெற வேண்டும். கடந்த மூன்றுமுறை நான் தேசிய அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதைப் போன்று, உலக சாம்பியன்ஷிப்பிலும் தொடர்ந்து வெற்றிபெற்றுக்கொண்டே இருக்கவேண்டும். படிப்பை பொருத்தவரை எம்பிபிஎஸ் முடித்துவிட்டு, ஸ்போர்ட்ஸ் மெடிசனுக்குள் போய்விட வேண்டும்.

Updated On 29 July 2024 11:44 PM IST
ராணி

ராணி

Next Story