வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்! சாதனை படைக்குமா இந்தியா?
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 2 டெஸ்ட் தொடரிலும், 2 டி20 போட்டிகளிலும் இந்திய-வங்கதேச அணிகள் மோதவுள்ளன. முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னையிலும், 2-வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27-ஆம் தேதி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்திலும் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறக்கூடிய முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது . இதில் விளையாட உள்ள இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ கடந்த 08-ஆம் தேதி அறிவித்தது. அதேபோல, வங்கதேச வீரர்கள் பட்டியல் செப்டம்பர் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
ரிஷப் பந்த் மற்றும் கோலி
கம்பேக் கொடுக்கும் சீனியர் வீரர்கள் :
நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் , கடைசியாக 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆடினார். சுமார் ஒன்றரை வருடத்துக்கு பிறகு, மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். டி20, ஒருநாள் போட்டிகள், ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடியது போல டெஸ்ட் போட்டிகளிலும் தனது கம்பேக்கை அவர் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுதவிர, அனுபவ வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், ஜடேஜா, பும்ரா, சிராஜ் ஆகியோருடன் இளம் வீரர்களான சர்ப்ராஸ் கான், துருவ் ஜோயல், யஷ் தயாள் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் பயிற்சியில் ஈடுபட்ட கோலி மற்றும் சிராஜ்
சென்னை வந்தடைந்த இந்திய வீரர்கள் :
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர் கடந்த வாரம் சென்னை வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து பெங்களூருவில் இருந்து இந்திய அணி வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யாஷ் தயாள் மற்றும் யசஸ்வி ஜைஸ்வால் ஆகியோர் சென்னை விமானநிலையம் வந்தனர். அதனைத்தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சென்னை வந்தடைந்தனர். சென்னை வந்த இந்திய அணியின் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக செப்.14 அன்று வங்கதேச அணி வீரர்கள் சென்னை வந்து சேர்ந்தனர். இதையடுத்து இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு களத்திற்கு திரும்பிய ரிஷப் பந்த்
சொதப்பும் இந்திய வீரர்கள் :
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆட உள்ள இந்திய அணி வீரர்கள், துலீப் ட்ராபி உள்ளூர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்றனர். ஆனால் அதில் பெரும்பாலானவர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. அவர்கள் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தாலும் துலீப் ட்ராபியில் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. துலீப் ட்ராபி தொடரின் முதல் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களில் சுப்மன் கில் 46 ரன்கள் மட்டுமே எடுத்தார். முதல் இன்னிங்ஸில் 25 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 21 ரன்களும் அடித்தார். அடுத்து அதிரடி துவக்க வீரர் ஜெய்ஸ்வால் இரண்டு இன்னிங்ஸ்களில் மொத்தம் 39 ரன்கள் மட்டும் எடுத்தார். கே.எல். ராகுல், இரண்டு இன்னிங்ஸ்களில் விளையாடி 94 ரன்கள் சேர்த்தார். இது நல்ல ஸ்கோர்தான் என்றாலும் முதல் இன்னிங்ஸில் 111 பந்துகளை சந்தித்து வெறும் 37 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது ஆமை வேக ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. எனினும் அவர் இரண்டாவது இன்னிங்ஸில் 57 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். மிடில் ஆர்டரில் ஆடும் சர்ஃபராஸ் கான் 9 மற்றும் 46 ரன்கள் சேர்த்தார். ரிஷப் பந்த் ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு இன்னிங்க்ஸில் 61 ரன்கள் சேர்த்திருந்தார். மேலும், விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்டு முதல் போட்டியில் 7 கேட்ச்களையும் அவர் பிடித்தார். இந்திய டெஸ்ட் அணியில் மாற்று விக்கெட் கீப்பராக இடம் பெற்றுள்ள துருவ் ஜுரல் மொத்தமே இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தார்.
டெஸ்ட் தொடரில் பங்கேற்க காத்திருக்கும் கோலி, ரோஹித் மற்றும் அக்சர்
பயிற்சி இல்லாமல் நேரடியாக பங்கேற்கும் சீனியர் வீரர்கள் :
இப்படி இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருக்கும் இரண்டாம் கட்ட வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. அதேநேரம் அனுபவம்மிக்க வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பும்ரா ஆகியோர் துலீப் ட்ராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. அவர்கள் போதிய பயிற்சி இல்லாமல் நேரடியாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர். அவர்கள் வலை பயிற்சியில் மட்டுமே ஈடுபட உள்ளனர். இது இந்திய அணிக்கு சாதகமாக இருக்குமா? அல்லது பாதகமாக முடியுமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. துலீப் ட்ராபியில் பங்கேற்ற இந்திய டெஸ்ட் அணி வீரர்களில் ரிஷப் பந்த் மற்றும் அக்சர் பட்டேல் மட்டுமே பாராட்டும்படி செயல்பட்டுள்ளனர்.
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ
இந்திய அணி :
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (WK), துருவ் ஜூரல் (WK), அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
வங்கதேச அணி :
நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் குமார் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ஹசன். , ஜாக்கர் அலி, ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது ஆகியோர் வங்கதேச அணியில் விளையாடுகின்றனர்.