இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த 2024 பெரும் அதிர்ச்சிகரமான ஆண்டு என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் கிரிக்கெட்டின் முன்னணி ஜாம்பவான்கள் ஒவ்வொருவராக ஓய்வு முடிவை அறிவித்து வருகின்றனர். நமது சிறுவயதில் பல நீங்கா நினைவுகளை இந்த கிரிக்கெட்டர்கள் விட்டு சென்றுள்ளனர். குறிப்பாக இந்த வருடத்தில் ஓய்வுபெற்ற வீரர்கள் 90'ஸ் கிட்ஸ்களின் ஹீரோக்களாக இருந்து வந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவராக ஓய்வு முடிவை அறிவித்திருப்பது ஒரு சகாப்தமே முடிவடைந்ததுபோல் இருக்கிறது. இக்கட்டுரையில் எந்தெந்த கிரிக்கெட் வீரர்கள் எந்தெந்த ஃபார்மட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர் என்பது குறித்து பார்ப்போம்.


தென் ஆப்ரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் டீன் எல்கர்

தென் ஆப்ரிக்காவின் டெஸ்ட் மன்னன்

சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்காக 84 டெஸ்ட் மற்றும் 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள டீன் எல்கர், தன்னுடைய 12 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் கேரியரில் 5000+ ரன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்துள்ளார். அவரின் டெஸ்ட் கிரிக்கெட் சராசரி 37.28. கடந்த 2012-ல் அறிமுக வீரராக களம்கண்ட டீன் எல்கர், கடந்த ஜனவரியில் ஓய்வை அறிவித்தார். அப்போது, “கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது எனது கனவு. அதுவும் தேசத்துக்காக சர்வதேச அளவில் விளையாடுவது சிறப்பானது. அதுவும் 12 ஆண்டுகளாக இதை செய்ய முடிந்தது மகத்தானது. இந்த பயணம் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அனைத்து நல்ல விஷயங்களுக்கும் முடிவு உள்ளது. அந்தவகையில் இந்திய அணியுடனான தொடர் எனது கடைசி சர்வதேச தொடர் என்பதை அறிவித்துக்கொள்கிறேன். உலகில் எனக்கு பிடித்த கேப்டவுன் நகரில் நான் கடைசியாக விளையாட உள்ளேன். இந்த மைதானத்தில்தான் எனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தேன்” என அவர் தெரிவித்தார்.


ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர்

ஆஸ்திரேலியாவின் அதிரடி மன்னன் ஓய்வு

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் இருந்து ஆஸ்திரேலியா வெளியேறியதை அடுத்து அந்த அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 37 வயதான டேவிட் வார்னர், அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக 2009 ஆம் ஆண்டு, ஜனவரி 11ஆம் தேதி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டேவிட் வார்னர் டி20 போட்டியில் அறிமுகமானார். அதன்பிறகு 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணிக்காக டேவிட் வார்னர் விளையாடி வருகிறார். 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,786 ரன்களை அடித்திருக்கிறார். டேவிட் வார்னரின் கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு உச்சங்களும் சரிவுகளும் இருக்கின்றன. 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதற்கான சர்ச்சையில் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் சிக்கினர். இதனால் இருவருக்கும் ஒர் ஆண்டுவரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. இதுவரை 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6932 ரன்களையும், 110 டி20 போட்டிகளில் விளையாடி 3278 ரன்களையும் ஆஸ்திரேலியாவுக்காக அடித்திருக்கிறார் வார்னர். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக டேவிட் வார்னர் 49 சதங்களும் அடித்திருக்கிறார்.


டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஹென்றிச் கிளாசன்

தென் ஆப்பிரிக்கா அதிரடி மன்னனின் திடீர் ஓய்வு

களத்தில் அமைதியாகவும், ஆக்ரோஷமாகவும் செயல்பட கூடியவர் ஹென்ரிச் கிளாசென். வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு மிடில் ஆர்டரில் பலம் சேர்ப்பவர்களில் கிளாசெனும் ஒருவர். இப்படி தொடர்ந்து வெள்ளை பந்து கிரிக்கெட்டை விளையாடி வரும் ஹென்ரிச் கிளாசென் தற்போது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன்மூலம், இனி அவர் சர்வதேச அளவில் ஓடிஐ மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துவார் என தெரிகிறது. குறிப்பாக கிளாசென், ஐபிஎல், எம்எல்சி போன்ற உலகெங்கிலும் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை அறிவித்துள்ளார் என கூறப்படுகிறது. 32 வயதான இவர் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். அதாவது, 2019 முதல் தற்போதுவரை. இவர் கடந்தாண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடினார். அதில் நான்கு இன்னிங்ஸிலும் சேர்த்து 56 ரன்களை மட்டுமே சேர்த்தார். மேலும் ஒட்டுமொத்தமாக 8 இன்னிங்ஸ்களில் 104 ரன்களை மட்டுமே அடித்தார்.


அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்ற நீல் வாக்னர்

நியூசிலாந்து அணியின் தலைசிறந்த பவுலரின் திடீர் ஓய்வு

நியூசிலாந்து அணியின் நட்சத்திர இடது கை வேகப்பந்து வீச்சாளர் நெய்ல் வேக்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இவர் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி 2012ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் இடது கை வேகப்பந்து வீச்சாளராக எதிரணிகளுக்கு சவாலை கொடுத்தார். இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 260 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். குறிப்பாக ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்துகளை துல்லியமாக வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திண்டாட வைப்பதில் கில்லாடியான இவர் 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் இந்தியாவை தோற்கடித்து நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார். தற்போது 37 வயதாகும் வேக்னர் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வந்தார். தற்போது அதிலிருந்தும் ஓய்வு பெறுவதாக கண்ணீர் மல்க அறிவித்துள்ளார். நியூசிலாந்துக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த 5வது வீரராக விடைபெறும் வேக்னர், குறைந்தது 100 விக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் ஜாம்பவான் ரிச்சர்ட் ஹாட்லிக்கு (50.80) பின் சிறந்த ஸ்டிரைக் ரேட்டை (52.70) கொண்டவராகவும் பெருமையுடன் ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.


ஓய்வு முடிவை அறிவித்த இந்திய அணியின் விராட் கோலி, ரோஹித் சர்மா

இந்திய சீனியர் வீரர்களின் ஓய்வு

சமீபத்தில் டி20 உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது இந்திய அணி. கோப்பையை வென்ற கையோடு அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி, இளையதலைமுறைக்கு வழிவிட்டு ஓய்வு முடிவை அறிவிக்கிறோம் என்று தெரிவித்தனர். உடனடியாக அடுத்த நாளே ரவீந்திர ஜடேஜாவும் ஓய்வு முடிவை அறிவித்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். சுமார் 14 ஆண்டுகள் மூவரும் இந்திய அணியின் தூண்களாக செயல்பட்டு பல சாதனைகளை செய்துள்ளனர். இவர்கள் மூவரை தொடர்ந்து இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் ஷிகர் தவானும் ஓய்வு முடிவை அறிவித்திருகிறார். இதனால் 90'ஸ் கிட்ஸ்களின் ஹீரோக்களாக இருந்த இவர்கள் ஓய்வு முடிவை அறிவித்திருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On 9 Sept 2024 9:51 PM IST
ராணி

ராணி

Next Story