இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பாரிஸில் கோலாகலமாக நடந்துவரும் ஒலிம்பிக் போட்டிகள் தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளன. ஒவ்வொரு நாடுகளும் பதக்கங்களுக்காக மோதி கொள்கின்றன. வழக்கம் போல் சீனாவும், அமெரிக்காவும் பதக்க வேட்டையை நடத்தி வருகின்றன. இந்திய அணி புள்ளி பட்டியலில் தற்போதுவரை 57-ஆவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் அணியினர் அசத்தி வருகின்றனர். பெண்கள், ஆண்கள் என துப்பாக்கிச் சுடுதலில் 3 வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. குறிப்பாக ஹரியானவை சேர்ந்த மனு பாக்கர் மிகச்சிறப்பாக செயல்பட்டு 2 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியிருக்கிறார். அவரது வாழ்க்கை வரலாறு பற்றியும், ஒலிம்பிக் சிகரத்தில் வெற்றி காண அவர் எதிர்கொண்ட சவால்களை பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


ஹீனா சித்துவுடன் மனு பாக்கர்

மனு பாக்கரின் ஆரம்பகாலம் :

ஹரியானாவின் ஜாஜர் பகுதியில் பிறந்து வளர்ந்த மனு பாக்கர், விளையாட்டு துறையில் முதலில் துப்பாக்கிச் சுடுதலை தேந்தெடுக்கவில்லை. கிரிக்கெட் தொடங்கி நீச்சல், கராத்தே, பாக்ஸிங் என பலதரப்பட்ட விளையாட்டுகளில் பயிற்சி பெற ஆரம்பித்திருக்கிறார். ஆனால் அவர் எத்தனையோ விளையாட்டுகளில் ஆர்வம் காட்டினாலும் அவருக்கு கனகச்சிதமாக செட்டானது என்னவோ துப்பாக்கிச் சுடுதல்தான். 2016ல் தந்தையின் ஆசியோடு கைகளில் துப்பாக்கியை பிடித்தார். அப்போது அவருக்கு 14 வயது. துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி எடுக்கத் தொடங்கிய ஒரு வருடத்திலேயே முன்னாள் நம்பர் 1 வீராங்கனை ஹீனா சித்துவை தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வீழ்த்தினார். 16வது வயதில், உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீராங்கனை, மூன்று முறை உலக சாம்பியன் வென்ற வீராங்கனை உள்ளிட்டோரை வீழ்த்தி தங்கம் வென்று சர்வதேச களத்தில் தடம் பதித்தார். 2018ல் காமன்வெல்த் போட்டிகள், ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல், இளையோருக்கான ஒலிம்பிக்கில் தங்கம் என்று வரிசையாக பதக்கங்களை வசப்படுத்தினார். இதுவரை 14 தங்கங்களை வென்றிருக்கும் மனு, 4 வெள்ளிகளை வென்றிருக்கிறார். ஒரு வெண்கலம் கூட அவரது பதக்கப் பட்டியலில் இல்லை. மனு பாக்கரின் திறமைக்கு சாட்சி இதுதான். 99% தங்கம் வென்றுவிடுவார். மிஸ் ஆனால் வெள்ளி உறுதி.


டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை கோட்டைவிட்ட மனு பாக்கர்

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஏமாற்றம் :

டோக்கியோ ஒலிம்பிக்கில் மனு பாக்கர் மீது அத்தனை எதிர்பார்ப்பு. ஆனால், அத்தனையும் பொய்த்துப் போனது. மனு பாக்கர் என்றில்லை, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்குகொண்ட துப்பாக்கிச்சுடுதல் முகாமே மொத்தமாக கோட்டைவிட்டது. அதுமட்டுமில்லாமல் டோக்கியோ ஒலிம்பிக்கில் மனு பாக்கருக்கு பல்வேறு சோதனைகள் ஏற்பட்டன. போட்டியின் ஆரம்பத்தில் துப்பாக்கி கோளாறானது. துப்பாக்கியில் கோளாறு ஏற்படவே அதை சரிசெய்வதற்கு நேரம் எடுத்துக்கொண்டதால் அடுத்த 44 குண்டுகளை சுடுவதற்கு 36 நிமிடங்கள் மட்டுமே இருந்தன. இதனால் தகுதிச் சுற்றுடன் வெளியேறினார். கலப்பு 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலிலும், 25 மீட்டர் பிரிவிலும் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தவறவிட்டார். நான்கு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்ட சோக முகத்தோடு களத்தில் இருந்து மனு பாக்கர் வெளியேறினார். "டோக்கியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு நான் கடும் அதிருப்திக்குள்ளாகியிருந்தேன். அதிலிருந்து மீள நிறைய காலம் பிடித்தது”, என மனு பாக்கர் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றுவிட்டு பேசியிருக்கிறார். அந்த டோக்கியோ ஒலிம்பிக் சோகத்திற்குப் பிறகு மனு கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தார். துப்பாக்கிச்சுடுதலை விட்டுவிட்டு முழுமையாக படிப்பில் கவனம் செலுத்தலாம் எனும் முடிவையெல்லாம் எடுத்திருக்கிறார். ஆனால், காலம் எல்லாவற்றையும் மாற்றியது.


மனு பாக்கர் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்பால்

பாரிஸ் ஒலிம்பிக்கில் சாதனை :

கடந்த முறை பெரும் ஏமாற்றமே மிஞ்சியதால் இந்த முறை மனு பாக்கர் மீது அவ்வளவாக எதிர்பார்ப்பு இல்லை. அதுவே அவருக்கு ஒரு சௌகரியத்தையும் நிதானத்தையும் கொடுத்தது. இறுதிப்போட்டியில் துப்பாக்கியை கையில் ஏந்திய தருணத்திலிருந்து எந்த உணர்வையும் அவர் வெளிக்காட்டவில்லை. ஆரம்பத்தில் திடீரென துப்பாக்கி கோளாறானதால் அதை சரிசெய்ய மனு சில நிமிடங்களை எடுத்துக் கொண்டார். 6 நிமிடங்கள் அதிலேயே விரயமானது. விளைவு, 10 மீட்டர் ஏர் பிஸ்டலின் முதல் சுற்றிலேயே மனு எலிமினேட் ஆகியிருந்தார். அதுமட்டுமில்லாமல் அவருடைய பயிற்சியாளரான ஜஸ்பால் ராணாவுக்கும் அவருக்குமே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் கலந்துகொண்ட மேலும் இரண்டு போட்டிகளிலும் கூட அவரால் சிறப்பாக ஆட முடியவில்லை. அடுத்த ஆட்டத்தில் ஒரு வழியாக சுதாரித்துக்கொண்ட மனு, மூச்சை இழுத்துவிட்டு ஸ்டாண்ட் எடுத்து இடது கையை பேன்ட் பாக்கெட்டுக்குள் விட்டு, வலது கையை மேலிருந்து நிதானமாக இறக்கி டார்கெட்டை லாக் செய்து கொண்டு சுட்டார். தனது திறமையை வெளிப்படுத்தி இந்த போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலத்தை வென்றார். வெள்ளி வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரிய வீராங்கனையால் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். கொரிய வீராங்கனையை விட 0.1 புள்ளி குறைவாக பெற்று 221.7 புள்ளிகள் எடுத்து வெண்கலம் வென்றார். இதனால் 12 ஆண்டுகளுக்கு பிறகு துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைத்தது.


12 ஆண்டுகளுக்கு பிறகு துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைத்த சந்தோஷத்தில் மனு பாக்கர்

இரண்டு வெண்கலம் :

கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின், வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்தியாவின் மனு பாக்கர், சர்போஜோட் மற்றும் தென்கொரியாவின் லீ வான்ஹோ, ஒ யோ ஜின் இணை இடையில் போட்டி நடைபெற்றது. இதில், கடும் போட்டி ஒன்றும் நடைபெறவில்லை. துவக்கம் முதலே, இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி, இறுதியில் 16-10 என்ற கணக்கில் அபார வெற்றியைப் பெற்று, மனு பாக்கர், சர்போஜோட் இணை வெண்கலப் பதக்கத்தை வென்றது. இதன்மூலம் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் இரண்டு பதக்கங்களை வென்ற ஒரே வீராங்கனை என்கிற பெருமைக்கு சொந்தக்காரரானார் மனு பாக்கர்.


பதக்கம் வென்ற பூரிப்பில் மனு பாக்கர்

ஹாட்ரிக் வாய்ப்பை தவறவிட்ட மனு :

மகளிருக்கான 25 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெற்றிபெற்று, மனு பாக்கர் ஹாட்ரிக் மெடல் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நூலிழையில் அந்த பதக்கத்தை தவறவிட்டார். இறுதிப் போட்டியில் முதல் எலிமினேஷனில் 6வது இடம் பிடித்த மனு பாக்கர், 2வது எலிமினேஷனில் 3வது இடம்பிடித்தார். பின்னர் 3வது எலிமினேஷனில் 2வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு முன்னேறினார். 4வது எலிமினேஷனில் 2வது இடத்தில் இருந்த மனு இறுதியாக 28 புள்ளிகள் பெற்று 4வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதன்மூலம் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கத்தை இழந்து தொடரிலிருந்து வெளியேறினார். இதனால் ஹாட்ரிக் பதக்கம் வெல்லும் வாய்ப்பை மனு பாக்கர் தவறவிட்டார்.

Updated On 12 Aug 2024 6:34 PM GMT
ராணி

ராணி

Next Story