இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கடந்த மாதம் தொடங்கி கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது டி20 உலகக்கோப்பை. இந்த தொடரில் பல போட்டிகள் சுவாரஸ்யத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றன. அதிலும் அசோஸியேட் அணிகள் பெரிய அணிகளை புரட்டி எடுத்தன. அதுமட்டுமில்லாமல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளின் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்குதான் சாதகமாக அமையும் என்று எதிர்பார்த்த நிலையில், பந்துவீச்சுக்கு பயங்கரமாக ஒத்துழைத்ததால். அதிகமான போட்டிகள் லோ ஸ்கோரிங் த்ரில்லராக அமைந்தன. இதனால் ஐபிஎல்லில் அதிக சிக்சர்களை கண்டு ரசித்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சினாலும், பல கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த உலகக்கோப்பை விருந்தாக அமைந்தது. இப்படி தற்போது நடந்து முடிந்துள்ள டி20 உலகக்கோப்பை பற்றியும், அதில் நடந்த சுவாரசியமான போட்டிகளை பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.


சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை தோற்கடித்த அமெரிக்கா

சூப்பர் ஓவரில் வென்ற அமெரிக்க அணி :

அமெரிக்காவில் உள்ள டெல்லாஸ் நகரில் நடைபெற்ற நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 11-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகள் மோதின. பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் அமெரிக்க அணியை எளிதாக வீழ்த்தும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். அந்த வகையில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி, அமெரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் துவக்கத்திலிருந்தே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதி நேரத்தில் ஓரளவு சுதாரித்து 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை குவித்தது. பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்க அணி விளையாடியது. பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் இந்த இலக்கை அவர்களால் தொட முடியாது என்றே பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமெரிக்கா, 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சரியாக 159 ரன்களை குவித்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணியானது மிகச் சிறப்பாக செயல்பட்டு 18 ரன்களை குவித்தது. பின்னர் 19 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்ட போதுதான் அமெரிக்க தரப்பில் இந்திய வம்சாவளி வீரரான சவுரப் நேத்ரவால்கர் பந்துவீச வந்தார். அந்த சூப்பர் ஓவரில் 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்ததால் 5 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்க அணிக்கு மாபெரும் சாதனை வெற்றியை தேடித்தந்தார். ஏற்கனவே இந்த போட்டியில் 4 ஓவர்களை வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் சூப்பர் ஓவரையும் அசத்தலாக வீசியிருந்தார்.


நியூசிலாந்து அணியின் பேட்டிங்கை சரியவைத்த ஆப்கானிஸ்தான்

நியூசிலாந்தை தொடரை விட்டு வெளியேற்றிய ஆப்கானிஸ்தான் :

நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹீம் சத்ரான் மிகச் சிறந்த துவக்கத்தை அளித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தன. இதுவே இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் அஸ்திவாரமாக அமைந்தது. இப்ராஹீம் சத்ரான் 41 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவருக்கு பின் வந்த அஸ்மதுல்லா ஓமர்சாய், 13 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார். அதன் பின் அவர் ஆட்டம் இழந்தார். ஆப்கானிஸ்தான் அணி 17 ஓவர்களில் 127 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்திருந்தது. ஆப்கானிஸ்தான் துவக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் கடைசி ஓவர்வரை தாக்குப் பிடித்து 56 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். 20 ஓவர்களின் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. 160 ரன்கள் என்ற சவாலான இலக்கை நியூசிலாந்து அணி சேஸிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் ஃபின் ஆலன், தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். அதன் பின் டெவான் கான்வே 8 ரன்கள், கேன் வில்லியம்சன் 9 ரன்கள், டேரில் மிட்செல் 5 ரன்கள், மார்க் சாப்மேன் 4 ரன்கள், மைக்கேல் பிரேஸ்வெல் டக் அவுட், மிட்செல் சான்ட்னர் 4 ரன்கள் என வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து அணி. 59 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்து தவித்தது. 15-வது ஓவர்வரை தாக்குப்பிடித்த நியூசிலாந்து, 15.2 ஓவர்களில் 75 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஃபாசல்ஹக் ஃபரூக்கி அபாரமாக பந்து வீசி 3.2 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.


பாகிஸ்தானிற்கு எதிராக தனது ஆதிக்கத்தை மீண்டும் காட்டிய இந்தியா

பாகிஸ்தானிற்கு எதிராக மீண்டும் இந்தியாவின் ஆதிக்கம் :

உலகக்கோப்பையில் 19-வது போட்டியாக இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரில் 8 ரன்கள் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மழை குறுக்கீடு ஏற்பட்டது. இதையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது. இதில் விராட் கோலி 4 ரன்களில் ஆட்டமிழக்க, ரோகித் சர்மா 13 ரன்களில் நடையை கட்டினார். முதல் 6 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் எடுத்திருந்தது. நான்காவதாக வந்த அக்‌ஷர் படேல் 20 ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யகுமார் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் முறையே 11, 18, 13, 15 மற்றும் 7 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அடுத்து வந்த ஷிவம் துபே 3 ரன்களில் நடையை கட்டினார். இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்தியா. அதிகபட்சமாக ரிஷப் பந்த் 42 ரன்கள் குவித்தார். பின்னர் எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடி காட்டினர். இதில் 13 ரன்களில் பாபர் அசாம் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உஸ்மான் கான் 13 ரன்களிலும், ஃபகர் ஜமான் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி தனது சிறப்பான பந்துவீச்சால் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, பாகிஸ்தானிற்கு எதிரான தனது ஆதிக்கத்தை மீண்டும் காட்டியது.

வங்கதேசத்தை வெளியேற்றி சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா :

20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் 21வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் களம் இறங்கினர். டி காக் 18 ரன்னில் வெளியேற, ரீசா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, கேப்டன் எய்டன் மார்க்ரம் 4 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் சேர்த்தது தென்னாப்பிரிக்கா. வங்தேசம் அணி தரப்பில் தன்சிம் ஹசன் சாகிப் 3 விக்கெட்டுகளையும், ஸ்கின் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 114 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வங்கதேசம் அணி. தொடக்க வீரர்கள் தன்சித் ஹசன் 9 ரன்னும், ஷாண்டோ 14 ரன்களும், லிட்டன் தாஸ் 9 மற்றும் ஷகிப் அல் ஹசன் 3 ரன்களும் எடுத்தனர். இதன்பின்னர் ஜோடி சேர்ந்த தவ்ஹித் ஹிருதாய் - மகமதுல்லா ஜோடி சரிவிலிருந்த அணியை மீட்டனர். இதனால் 15 ஓவர்களில் வங்கதேசம் அணி 83 ரன்களை எட்டியது. ஒரு கட்டத்தில் 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையிலிருந்தது வங்கதேசம் அணி. ஆனால், அப்போதுதான் ஆட்டம் தலைகீழாக மாறியது. 18வது ஓவரை ரபாடா வீச, 37 ரன்கள் எடுத்திருந்த ஹிர்டாய் அந்த ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் 12 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு தள்ளப்பட்டது வங்கதேசம். 19வது ஓவரில் 7 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை மஹாராஜ் வீசினார். ஆனால் கடைசி ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே வங்கதேச அணியால் எடுக்க முடிந்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

ஆஸ்திரேலியாவை வெளியேற்றி வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான் :

கிங்ஸ்டனில் நடைபெற்ற சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஓப்பன் பேட்ஸ்மேன்களாக இறங்கிய குர்பஸ் மற்றும் இப்ராஹிம் ஜோர்டான் நிதானமான தொடக்கம் தந்தனர். இருவரும் அரை சதம் கடந்த நிலையில் பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்கள் சேர்த்தனர். இந்நிலையில் குர்பாஸ் 60 ரன்களிலும், ஜோர்டான் 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இன்னிங்ஸ் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே அதிரடி பேட்ஸ்மேனான ஹெட் விக்கெட்டை நவீன் உல் ஹக் கழட்டினார். இதனைத்தொடர்ந்து வார்னர் 3 ரன்களிலும், கேப்டன் மார்ஷ் 12 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 127 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 21 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் குல்பதீன் நைப் 4 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். தனது வேகத்தால் 20 ரன்கள் மட்டுமே வழங்கி 4 விக்கெட்டுகளை சாய்த்து அணியின் வெற்றிக்கு உதவிய குல்பதீன் நைப்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.


ஆஸ்திரேலியாவை வெளியேற்றி அரையிறுதிக்கு முன்னேறிய ஆப்கானிஸ்தான் அணி

அரைஇறுதிக்கு முன்னேறிய ஆப்கானிஸ்தான் :

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி மிகவும் நிதானமாக ஆடி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அணியின் துவக்க வீரர் ரஹ்மானுல்லா 55 பந்துகளில் 43 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அடுத்து வங்கதேச அணி பேட்டிங் செய்தது. 12.1 ஓவரில் 116 ரன்கள் இலக்கை எட்டினால் வங்கதேசம் அணி அதிக நெட் ரன் ரேட் பெற்று ஆஸ்திரேலியாவை முந்தி அரை இறுதிக்கு முன்னேறும் என்ற நிலை இருந்ததால் போட்டியில் புது ட்விஸ்ட் உருவானது. அதற்கு ஏற்ப அந்த அணி அதிரடியாக ஆரம்பித்தது. முதல் 2 ஓவர்களில் 18 ரன்கள் எடுத்தது. ஆனால், அதன் பின் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. வங்கதேச அணி சரியாக 11.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. சில நிமிடங்கள் கழித்து போட்டி மீண்டும் தொடங்கியது. அப்போது வங்கதேச அணி 19 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. ஏற்கனவே அதிக விக்கெட்டுகளை இழந்திருந்த வங்கதேச அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. டிஎல்எஸ் முறைப்படி ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது முறை சாம்பியனான இந்தியா :

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ரோஹித் சர்மா 9 ரன்களிலும், ரிஷப் பண்ட் டக் அவுட் ஆகியும் வெளியேற, கோலி மட்டும் நம்பிக்கை அளித்தார். சூர்ய குமார் யாதவும் 3 ரன்களில் அவுட் ஆக அதன்பின் அக்சர் பட்டேல் அதிரடி காட்டினார். கோலி மெதுவாக ஆடி அரைசதம் அடிக்க, 31 பந்தில் 4 சிக்ஸ், 1 பவுண்டரி என்று அக்சர் படேல் 47 ரன்கள் எடுத்தார். 50 ரன்கள் அடித்தபின் வேகம் காட்ட தொடங்கினார் கோலி. 59 பந்தில் 76 ரன்களை அவர் குவித்தார். ஆனாலும் அவரின் வேகம் அவ்வளவு சிறப்பாக இல்லை. துபே கடைசியில் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 176/7 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் அடுத்தடுத்து ஹென்ரிக்ஸ், மார்க்கரம் அவுட்டாக, டி காக், ஸ்டப்ஸ் பார்ட்னர்ஷிப் போட்டு ஆடினர். ஸ்டப்ஸ் 31, டி காக் 39 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்க அணி ட்ரைவர் சீட்டில் அமர்ந்தது. வெறும் 27 பந்தில் 5 சிக்ஸ் உடன் 52 ரன்கள் கெல்சன் எடுக்க, ஆட்டம் அப்படியே தென்னாப்பிரிக்க அணி பக்கம் சென்றது. இப்படி கடைசி 30 பந்துகள் வரை ஆட்டம் தென்னாப்பிரிக்கா கையில்தான் இருந்தது. கடைசி 30 பந்துகளில் 30 ரன்களை எடுக்க வேண்டும். இரண்டு செட்டில் பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக தென்னாப்பிரிக்கா அணி எளிதாக வெல்லும் என்றே கருதப்பட்டது. ஆனால் அந்த 30 பந்துகளில் ஆட்டம் தென்னாப்பிரிக்கா கையை விட்டு சென்றது. முக்கியமாக கடைசி 4 ஓவர்களில், அதாவது பாண்டியா - பும்ரா - அர்ஷிதீப் - மீண்டும் பாண்டியா வீசிய ஓவர்கள் ஆட்டத்தை தென்னாப்பிரிக்கா கையை விட்டு பறித்தன. கடைசி ஓவரில் சூர்யா குமார் யாதவின் கேட்ச் ஆட்டத்தை முழுமையாக மாற்றியது. இறுதியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

Updated On 8 July 2024 11:46 PM IST
ராணி

ராணி

Next Story