இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

18 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ்காரர்களால் இந்தியாவில் நுழைந்த ஸ்குவாஷ் விளையாட்டானது பேட்மிண்டன், டென்னிஸ் போன்று மக்களிடையே பிரபலமடைய ஆரம்பித்தது. குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே மிகவும் பிடித்த விளையாட்டுகளில் ஒன்றானது. ஸ்குவாஷ் என்பது ஒரு அறையில் இரு வீரர்கள் சுவரை நோக்கி பந்தை அடிப்பர். டென்னிஸை போன்று செட் வாரியாக ஆட்டம் நடக்கும். இப்படி ஓரளவு மக்களிடையே நன்றாக தெரிய ஆரம்பித்த ஸ்குவாஷ் விளையாட்டு, 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்தது. ஸ்குவாஷ் விளையாட்டு பிரபலமடைய மிக முக்கிய காரணம் உலகின் தலைசிறந்த இரண்டு ஸ்குவாஷ் வீராங்கனைகள்தான். அவர்களால்தான் இந்தியாவிலும் ஸ்குவாஷ் பற்றி பலருக்கும் தெரியவந்தது என்றுகூட சொல்லலாம். அவர்கள் யாரென்றால் தீபிகா பல்லிகல் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா. குறிப்பாக ஜோஷ்னா சின்னப்பா உலக அரங்கில் ஸ்குவாஷ் விளையாட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இவர் பல பதக்கங்களை இந்தியாவிற்கு பெற்று கொடுத்துள்ளார். யார் இந்த ஜோஷ்னா சின்னப்பா? அவர் செய்த சாதனைகள் என்னென்ன? என்பதை பற்றியெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.


குடும்பத்தினருடன் ஜோஷ்னா சின்னப்பா

யார் இந்த ஜோஷ்னா சின்னப்பா?

1986 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி சென்னையில் பிறந்தார் ஜோஷ்னா. இவரது தந்தை அஞ்சன் சின்னப்பா குர்க் நகரில் காபி தோட்டம் நடத்தி வருகிறார். இவரும் ஸ்குவாஷ் விளையாட்டு வீரர். 7 வயதில் ஸ்குவாஷ் விளையாட ஆரம்பித்த ஜோஷ்னா, இடையில் பேட்மிண்டன், கிரிக்கெட் என்று மாறி மாறி விளையாடி வந்தார். தனது 14 வயதில்தான் ஸ்குவாஷ் விளையாட்டை தீவிரமாக விளையாடியுள்ளார். ஜோஷ்னாவிற்கு முதல் பயிற்சியார் இவரது தந்தை அஞ்சன் சின்னப்பாதான். 14 வயதில் ஆரம்பித்த அவரது பயணம் இன்றளவும் தொடர்கிறது.


முதல் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி

முதல் சர்வதேச போட்டி

தனது 14 வயதில் 2000 ஆண்டிற்கான ஜூனியர் மற்றும் சீனியர் லெவலிற்கான சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் ஜோஷ்னா. இதுவே அவருடைய முதல் வெற்றியும் முதல் சர்வதேச போட்டியும் ஆகும். பின்பு தனது 16 வயதில் பிரிட்டிஷ் ஜூனியர் ஓப்பனை வென்றார். இதன்மூலம் உலக அரங்கில் ஸ்குவாஷ் விளையாட்டில் தனது கால் தடத்தை பதித்தார். அடுத்த வருடமே U19 பிரிவில் எகிப்தின் ஓமனிய அப்டேல்ஸ்டாமிடம் தோற்று வெளியேறினார். இது அவருக்கு சற்றே பின்னடைவை ஏற்படுத்தியது. பின் அதே ஆண்டில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று கம்பேக் கொடுத்தார். அங்கிருந்து அவரது வெற்றி பயணம் தொடங்கியது. தொடர்ந்து விஷ்பா பட்டம், PSA சாம்பியன்ஷிப் என்று தனது 20 வயதில் பல சாதனைகளை படைத்திருந்தார் ஜோஷ்னா.


தீபிகா பல்லிகலுடன் ஜோஷ்னா

தீபிகாவுடன் இணைந்து உலக சாதனை

2014 ஆம் ஆண்டு தீபிகா பல்லிகலுடன் கைகோர்த்தார் ஜோஷ்னா. அதன்பிறகுதான் ஒரு சகாப்தமே உருவானது. இருவரும் இணைந்து செய்யாத சாதனைகளே இல்லை என்றே சொல்லலாம். 2014 இல் க்ளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் தொடரில் இருவரும் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றனர். அதுமட்டுமில்லாமல் உலகின் முன்னணி வீராங்கனைகளான ஆஸ்திரேலியாவின் ரேச்சல் கிரீன்ஹம் மற்றும் கேசி பிரௌனை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். இதுதான் காமன்வெல்த் போட்டிகளில் ஸ்குவாஷில் இந்தியா வென்ற முதல் பதக்கம் ஆகும். அதன்பின் தொடர்ச்சியாக ஆசிய போட்டியில் தங்கமும், தேசிய அளவிலான போட்டியில் வெண்கலமும் வென்று தொடர்ச்சியாக பல சாதனைகளை இருவரும் நிகழ்த்தி வந்தனர்.


காமன்வெல்த் போட்டிகளில் வென்ற தருணங்கள்

ஜோஷ்னா சின்னப்பாவின் உலக சாதனைகள்

தீபிகா பல்லிகலுடன் சேர்ந்து பல வெற்றிகளை பெற்றாலும் தனியாக, அதாவது சிங்கிள்ஸ் போட்டிகளில் பல வெற்றிகளை பெற்று பதக்கங்களை அள்ளியுள்ளார் ஜோஷ்னா. 16 முறை உலக சாம்பியனான புவனேஸ்வரி குமாரியின் சாதனையை முறியடித்து 17 முறை சாம்பியன் பட்டம் பெற்றவர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அதன்பிறகு 2020 ஆம் ஆண்டு நடந்த சீனியர் நேஷனல் சாம்பியன்ஷிப்பிலும் பதக்கம் வென்று 18 ஆவது முறை சாம்பியனானார். இன்றுவரை ஸ்குவாஷ் போட்டியில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்றவர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் இவர். இந்திய ஸ்குவாஷை உலக தரத்தில் உயர்த்தியதில் ஜோஷ்னா சின்னப்பாவிற்கு மிகப்பெரிய பங்கு உண்டு. தனது 37 வயதிலும் அசராமல் பல சாம்பியன் பட்டங்களை வென்று இன்றைய தலைமுறைக்கு முன்னோடியாக விளங்குகிறார் ஜோஷ்னா சின்னப்பா. அதுமட்டுமில்லாமல், ‘இன்னும் பல சாம்பியன்ஷிப் பட்டங்களை வெல்லுவேன்’ என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இன்னும் அவர் பல சாதனைகளை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார் என்று நம்புவோம்.

Updated On 7 Nov 2023 12:27 AM IST
ராணி

ராணி

Next Story