ஆரம்ப கால கட்டங்களில் இந்திய கிரிக்கெட்டில் எப்போதுமே ஸ்பின்னர்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்துள்ளது. தற்போது வேகபந்துவீச்சாளர்கள் நன்றாக வீசினாலும் அதிக வேகத்துடன் வீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் இல்லை. 1980, 90 களில் கபில் தேவ், ஜவகர் ஸ்ரீநாத் ஆகியோர் மணிக்கு 145 கி.மீ வேகத்தில் வீசினாலும், பாகிஸ்தானின் ஷோயிப் அக்தரை போல் 150 கி.மீ வேகத்தில் வீச யாருமில்லை. இது ரொம்ப காலமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவாகவே இருந்தது. அப்பொழுதுதான் ஐபிஎல் தொடரில் ஒரு இந்திய வீரர் தொடர்ச்சியாக 5 பந்துகளை 150 கி.மீ வேகத்தில் வீசி அசத்தினார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக இந்திய கிரிக்கெட் போர்டின் கவனத்தை ஈர்த்தது. அவர்தான் ஜம்மு எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் உம்ரான் மாலிக். யார் இந்த உம்ரான் மாலிக்? எப்படி அவர் இந்திய கிரிக்கெட் அணியில் கால் பதித்தார்? இந்த கட்டுரையில் காணலாம்.

உம்ரான் மாலிக்கின் ஆரம்ப காலம்

22 நவம்பர் 1999 ஆம் ஆண்டு ஜம்முவில் பிறந்தார் உம்ரான் மாலிக். இவரது தந்தை அப்துல் ரஷீத் ஜம்முவிலுள்ள ஷஹீதி சோவ்க் மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். ஆரம்பத்திலிருந்தே கிரிக்கெட்டில் பெரும் ஆர்வம் கொண்ட உம்ரான் மாலிக், டென்னிஸ் பால் கிரிக்கெட்தான் ஆடிக்கொண்டிருந்தார். இவர் பந்து வீசும் வேகத்தை பார்த்த ஜம்மு காஷ்மீரின் U-19 பயிற்சியாளர் அஜய் சர்மா, இவரை லெதர் பாலில் கவனம் செலுத்தும்படி கூறினார். அவர் கூறிய 6 மாதங்களிலேயே ஜம்மு காஷ்மீர் U-19 அணிக்கு தேர்வானார். அதன்பின் தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீர் அணிக்காக கூச் பெஹர் தொடரில் விளையாடினார் உம்ரான் மாலிக்.


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய போது...

ஐபிஎல்லில் ஆதிக்கம்

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் முதல் பாதியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக நெட் பவுலராக அறிமுகமானார் உம்ரான் மாலிக். 2021 ஆம் ஆண்டு ஐபிஎல்லின் இடையில் கொரோனா தொற்றால் தொடர் தள்ளிவைக்கப்பட்டு அக்டோபர் மாதம் நடந்தது. இரண்டாம் பாதியில் நடராஜனின் காயம் காரணமாக ஹைதராபாத் அணிக்கு 20 லட்சத்திற்கு ஒப்பந்தமானார். ஐபிஎல்லின் 49 ஆவது ஆட்டத்தில் ஹைதராபாத்தும், பெங்களூரும் மோதின. இந்த போட்டியில் அறிமுகமானார் உம்ரான் மாலிக். தனது முதல் ஓவரின் 5 பந்துகளை மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வீசி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். இது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. ஹைதராபாத் அணி சொதப்பினாலும், உம்ரான் மாலிக் அந்த அணிக்கு மிகப்பெரிய சொத்தாக தெரிந்தார். அடுத்த வருடமே ஹைதராபாத் அணி, உம்ரான் மாலிக்கை 4 கோடிக்கு ரீட்டைன் செய்தது. அதுமட்டுமில்லாமல் 2022 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் அவர் விளையாடிய முதல் ஆட்டத்திலேயே 5 விக்கெட்களை சாய்த்தார். அந்த வருடம் எமெர்ஜிங் பிளேயருக்கான விருதையும் வென்றார்.


இந்திய அணிக்காக விளையாடிய தருணங்கள்

சர்வதேச போட்டியின் தொடக்கம்

ஐபிஎல் போட்டிகளில் நன்றாக செயல்பட்ட உம்ரான், 2021 ஆம் ஆண்டிற்கான T20 உலகக்கோப்பை போட்டியில் நெட் பவுலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் 2022 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஒரு ஆட்டத்தில் கூட அவர் விளையாடவில்லை. அதே வருடம் அயர்லாந்துக்கு எதிரான T20 போட்டியில் அறிமுகமானார். அந்த போட்டியில் விக்கெட் எடுக்காவிட்டாலும் எகானமியாக பந்து வீசினார். அதன்பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிராக ஓடிஐ போட்டிகளில் அறிமுகமானார். அறிமுக போட்டியிலேயே டெவோன் கான்வேயின் விக்கெட்டை வீழ்த்தினார். ஜம்மு எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் உம்ரான் மாலிக், இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்து ஆஸ்தான பவுலராக மாற, அவரது பிறந்தநாளில் வாழ்த்துவோம்.

Updated On 22 Nov 2023 5:00 PM IST
ராணி

ராணி

Next Story