இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

அனைவருக்குமே வாழ்க்கையில் பிடித்த விஷயம் என்ற ஒன்று இருக்கும். ஆனால் வாழ்க்கையின் தேவைக்காக ஏதேனும் ஒரு அலுவலகத்தில் அமர்ந்து பணி செய்து கொண்டிருப்போம். இதனால் நமது கனவு நிஜமாகாமலேயே போய்விடும். இந்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சவுரப் நேத்ராவல்கர் தற்போது அமெரிக்காவில் ஐடி பணியில் இருந்து கொண்டே அமெரிக்க கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் நேத்ராவல்கர் சிறப்பாக செயல்பட்டு அமெரிக்க அணியின் வெற்றிக்கு உதவி செய்திருக்கிறார். யார் இந்த சவுரப் நேத்ராவல்கர்? அவரை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் காண்போம்.


பெங்களூரில் உள்ள என்சிஏவில் யுவராஜ் சிங்கின் ஸ்டம்புகளை நேத்ராவல்கர் அடித்து நொறுக்கியபொழுது

ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கை :

மும்பையில் பிறந்த நேத்ராவல்கர், நீண்ட காலமாக இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவைக் கொண்டிருந்தார். 2009 ஆம் ஆண்டு ஏர் இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் ஸ்காலர்ஷிப்பில் இருந்தபோது, பெங்களூரில் உள்ள என்சிஏவில் யுவராஜ் சிங்கின் ஸ்டம்புகளை அடித்து நொறுக்கிய இடது கை வேகபந்துவீச்சாளர் இவர். சிறப்பான பந்துவீச்சின் மூலம் அவருக்கு அப்போதைய மதிப்புமிக்க பிசிசிஐ கார்ப்பரேட் டிராபியில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரங்களான யுவராஜ், சுரேஷ் ரெய்னா மற்றும் ராபின் உத்தப்பாவுடன் தனது 15 வயதில் விளையாடி வந்தார் நேத்ராவல்கர். 2010 ஆம் ஆண்டு U19 டி20 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக, கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், ஜெய்தேவ் உனட்கட், மந்தீப் சிங் போன்றோருடன் இந்திய அணியில் விளையாடினார்.


U19 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நேத்ராவல்கர்

முதல்தர கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்த நேத்ராவல்கர் :

அந்த டி20 உலகக்கோப்பையில் விளையாடியதால், அவர் ஆறு மாதங்களுக்கு முன்பு பதிவு செய்த கணினி பொறியியல் பட்டப்படிப்பின் முதல் செமஸ்டர் தேர்வுகள் முழுவதையும் எழுத முடியவில்லை. அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் செய்த மிகப்பெரிய தியாகம் அதுதான். U19 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், மும்பை கிரிக்கெட் அணியில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்று நேத்ராவல்கர் நம்பினார். ஆனால் அது சரியாக அமையவில்லை. மும்பை கிரிக்கெட் வாரியம் இவரை ஒதுக்கிவைக்க ஆரம்பித்தது. அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் போட்டியிலும் மும்பை அணி தன்னை ஏலம் எடுக்கும் என்று நம்பிய நேத்ராவல்கருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அஜித் அகர்கர், ஜாகீர் கான், ஆவிஷ்கர் சால்வி, தவால் குல்கர்னி ஆகியோரால் ஐபிஎல் தொடரில் மும்பை அணி இவரை தேர்வு செய்யவில்லை. நேத்ராவல்கர் இறுதியாக 2013-ல் தனது ரஞ்சி டிராஃபியில் அறிமுகமானார். தற்செயலாக, சில மாதங்களுக்கு முன்பு அவர் மற்றொரு கடினமான முடிவை எடுத்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கிரிக்கெட்டில் முழு ஈடுபாடுடன் இருக்க புனேவில் சாஃப்ட்வேர் டெஸ்டிங் இன்ஜினியர் வேலையை விட்டுவிட்டார்.


அமெரிக்க அணிக்காக களமிறங்கிய நேத்ராவல்கர்

அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்த நேத்ராவல்கர் :

கிரிக்கெட்டில் நிரந்தர இடம் கிடைக்காத நிலையில், ஆகஸ்ட் 2015-இல் நியூயார்க்கில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் சேர்க்கைக்கான வாய்ப்பு இவரை தேடி வந்தது. அவருடைய வலுவான கல்வித் தகுதியும், கிரிக்கெட்டில் இருந்த ஆர்வமும் அவருக்கு உதவியது. அவர் பட்டப்படிப்பை முடித்தவுடன், சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள ஆரக்கிள் நிறுவனம் ஒரு வேலையை வழங்கியது. தனது கிரிக்கெட் கிட் இல்லாமல் அமெரிக்காவிற்கு சென்ற நேத்ராவல்கர், அங்கிருக்கும் இந்திய சமூகத்துடன் பொருந்திக்கொள்வதற்காக வார இறுதி நாட்களில் பொழுதுபோக்கிற்காக கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கினார்.

அமெரிக்காவின் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தல் :

2016-இல் அவர் USACA தேசிய சாம்பியன்ஷிப்பில் சதன் அணிக்காக விளையாடினார். ஐசிசி அவர்களின் குறைந்தபட்ச குடியுரிமையை நான்கு ஆண்டுகளில் இருந்து மூன்றாகக் குறைத்தபோது, முடிந்தவரை அமெரிக்க அணிக்காக விளையாடுவதற்கான பல வாய்ப்புகளைத் தேடி, அவர் தனது முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். 2017 கோடையில் ஒரு தேசிய அணி பயிற்சி ஆட்டத்தில் USA லெவனுக்கு எதிராக தெற்கு கலிபோர்னியா கிரிக்கெட் சங்க லெவன் அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி அப்போதைய அமெரிக்க அணி பயிற்சியாளர் பூத்து தசநாயக்கவை வெகுவாக கவர்ந்தார். இதன்மூலம் ஜனவரி 2018-இல், அமெரிக்காவின் லிஸ்ட் A அணியில் இடம்பெற்று லீவர்ட் தீவுகளுக்கு எதிராக விளையாடி 45 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார். பிறகுதான் இவரது வாழ்க்கை தலைகீழாக மாற ஆரம்பித்தது.

மேஜர் கிரிக்கெட் லீக்கில் அசத்தல் :

இன்று, மேஜர் கிரிக்கெட் லீக்கில் தொடர்ந்து விளையாடும் சில அமெரிக்க தேசிய அணி வீரர்களில் நேத்ராவல்கரும் ஒருவர். கடந்த ஆண்டு, தொடக்க சீசனில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்காக அதிக விக்கெட்டும், அந்த சீசனில் மூன்றாவது அதிக விக்கெட்டுகளையும் வீழ்த்திய நேத்ராவல்கர், இதில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிராக 9 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை எடுத்தார். அந்த விக்கெட்டுகளில் மேத்யூ வேட், மார்கஸ் ஸ்டோனிஸ், ஷதாப் கான் போன்றோரின் விக்கெட்டுகள் குறிப்பிடத்தக்கவை. இதன் மூலம் அமெரிக்காவின் டி20 உலகக்கோப்பை அணியில் விளையாடும் வாய்ப்பு இவரை தேடி வந்தது.


நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக பந்துவீசியபொழுது

வேலை, கிரிக்கெட் - இரண்டையும் சமாளிக்கும் நேத்ராவல்கர் :

நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக இவரின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. இப்போட்டியில் நேத்ராவல்கர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, சூப்பர் ஓவரிலும் நன்றாக பந்துவீசி அமெரிக்க அணியின் வெற்றிக்கு உதவினார். அதுமட்டுமில்லாமல் இந்திய அணிக்கு எதிராக போராடிதான் அமெரிக்க அணி தோற்றது. இதில் முதல் ஏழு பந்துகளில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை வீழ்த்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் நேத்ராவல்கர். இப்பொழுது எங்கு பார்த்தாலும் இவரது பேச்சுதான் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இவர் குறித்து சமீபத்தில் இவரது சகோதரர் நித்தி பேசுகையில் "கிரிக்கெட் விளையாடும்போது தனது 100 சதவிகித உழைப்பை கொடுப்பவர் நேத்ராவல்கர். அதேபோல் பணியிலும் 100 சதவிகித உழைப்பை கொடுப்பார். இப்போது கூட லேப்-டாப்பை உடன் வைத்துக்கொண்டே பயணித்து வருகிறார். அவர் எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்றலாம் என்ற சுதந்திரம் இருக்கிறது. இந்தியாவுக்கு வரும்போது கூட ஒரு லேப்-டாப்பை எப்போதும் கையில் கொண்டு வருவார். வேலை மற்றும் கிரிக்கெட் இரண்டையும் திறம்பட சமாளித்து வருகிறார் என்று கூறினார்.

Updated On 2 July 2024 12:00 AM IST
ராணி

ராணி

Next Story