இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

உலகில் அனைத்து நாடுகளிலும் பல்வேறு விதமான கிரிக்கெட்டுகள் விளையாடப்பட்டு வருகின்றன. அமெரிக்க கண்டத்தில் T10 லீகுகளும், ஐரோப்பிய கண்டத்தில் கவுண்டி கிரிக்கெட்டும், ஆஸ்திரேலியா கண்டத்தில் பிக்-பாஷ் தொடரும் கொண்டாடுவது போல் ஆசிய கண்டத்தில் பெரிதாக கொண்டாடப்படுவது ஆசிய கிரிக்கெட். இதில் முன்னணி அணிகளான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளும், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் போன்ற அசோஸியேட் அணிகளும் விளையாடும். இப்படி உலகளவில் பெரிதாக கருதப்படும் ஆசிய கிரிக்கெட் எவ்வாறு உருவானது? தற்போதைய ஆசிய கிரிக்கெட்டில் இந்திய அணியின் நிலை என்ன? என்பதை பற்றியெல்லாம் இத்தொகுப்பில் காணலாம்.


ஆசிய கிரிக்கெட் கவுன்சில்

ஆசிய கிரிக்கெட்டின் தொடக்கம்:

1983-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிறுவப்பட்டது. ஆசிய கிரிக்கெட்டின் முதல் தலைவராக இந்தியாவின் முன்னாள் பிசிசிஐ தலைவரான நரேந்திர குமார் பிரசாத் ராவ் சால்வே நியமிக்கப்பட்டார். 1984 ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கெட் முதன்முதலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. ஒருநாள் போட்டியாக நடத்தப்பட்ட இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அப்போதைய அசோஸியேட் அணியான இலங்கையும் பங்கேற்றது. மூன்று அணிகள் மட்டும் பங்கேற்ற இத்தொடருக்கு ரோத்மான்ஸ் ஆசிய கப் எனப் பெயரிடப்பட்டது. அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த இத்தொடரில் சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இத்தொடரில் இந்தியாவின் விக்கெட் கீப்பர் சுரிந்தர் கண்ணா அதிக ரன்கள் (107) குவித்தார். பந்துவீச்சில் ரவிசாஸ்திரி அதிக விக்கெட்டுகளை(4) கைப்பற்றினார்.


முதல் ஆசியக்கோப்பையை இந்தியா வென்ற தருணம்

ஆசிய கிரிக்கெட் கப் இரண்டாண்டுக்கு ஒருமுறைதான் நடக்கும். ஆனால் 1984 ஆம் ஆண்டுக்கு பிறகு 1986 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த தொடரில் இந்தியா பங்கேற்கவில்லை. இலங்கையில் நடந்த தமிழினப் போருக்காக இந்திய அணி கலந்துகொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்தது. அத்தொடரில் இந்திய அணிக்கு பதிலாக பங்களாதேஷ் அணி பங்கேற்றது. பின் தொடர்ச்சியாக இரண்டாண்டிற்கு ஒருமுறையென தொடர் நடந்துகொண்டிருந்தது. 2016 ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் புதிய விதிமுறையை வெளியிட்டது. இனி நடக்கவிருக்கும் ஆசியத்தொடர் சுழற்சி முறையில் அதாவது ஒருநாள் மற்றும் T20 என மாறி மாறி நடக்கவேண்டும் எனக் கூறியது. இதனால் 2018ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியாகவும் 2020ஆம் ஆண்டு தொடர் கொரோனா பிரச்சினையால் 2022ஆம் ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு T20 தொடராகவும், 2023ஆம் ஆண்டிற்கான ஆசியத்தொடர் ஒருநாள் போட்டியாகவும் இனி நடக்கவுள்ளது.


ஷார்ஜாவில் நடந்த ஆசியக்கோப்பை போட்டி

ஆசிய தொடரில் இளம் இந்திய அணி:

2022ஆம் ஆண்டு நடந்த ஆசியத் தொடரில் பாகிஸ்தானுடன் மட்டும் வெற்றிபெற்று இந்திய அணி தொடரைவிட்டு வெளியேறியது. இந்த ஆட்டத்தொடரில் இலங்கை அணி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் இருந்தனர். இதன் காரணமாக இவ்வருடம் நடக்கவிருக்கும் தொடரில் முழுக்க முழுக்க இளம் இந்திய அணி களமிறக்கப்பட உள்ளது. பிசிசிஐ தரப்பில், ”நாங்கள் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இளம் இந்திய அணியை பாகிஸ்தானில் நடக்கவுள்ள ஆசிய கோப்பைக்கு அனுப்புகிறோம்” என்று கூறியுள்ளது.


தற்போதைய இந்திய அணி

ஐபிஎல் தொடரின் வெளிப்பாடு இனி இந்திய அணித்தேர்விலும் காணப்படும். சூர்யா குமார் யாதவ், திலக் வர்மா, யசஷ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் போன்ற இந்திய வீரர்கள் அணியில் இடம்பெறுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் அடிபட்டு காயம் ஏற்பட்டிருந்த கே.எல் ராகுல், பும்ரா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுபவமும் இளம் அணியும் கைகோர்த்து உள்ளதால் மீண்டும் ஆசிய கப்பை இந்தியா வெல்லும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


இளம் இந்திய அணி வீரர்கள்

இதுவரை நடந்த ஆசியா கோப்பைகளில் இந்திய அணிதான் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. 7 முறை சாம்பியன்ஷிப் வென்ற இந்திய அணி கடந்தமுறை பெரும் சரிவை சந்தித்தது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற அணிகளிடம் நாக்- அவுட் சுற்றில் தோற்று வெளியேறியது. அதனால் இம்முறை பிசிசிஐ-ம் வீரர்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாக உள்ளது. ஏனென்றால் இந்த அணிதான் கிட்டத்தட்ட உலகக்கோப்பைக்கு செல்லும் அணி. எனவே உலகக்கோப்பைக்கு தயாராகும் விதமாக இத்தொடர் இருப்பதால் ஆசிய கப்பின் முடிவைக் காண ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்துள்ளனர்.

Updated On 29 Aug 2023 12:25 AM IST
ராணி

ராணி

Next Story