இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்தியாவின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் ரவீந்திர ஜடேஜா. தற்போது இங்கிலாந்திற்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த 3 ஆவது டெஸ்டில் பேட்டிங்கில் 112 ரன்களும், பந்துவீச்சில் இரண்டு இன்னிங்சுகளில் 2/51 & 5/41 என்று அசத்தியதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 'ஜட்டு’, 'ராக்ஸ்டார்’, 'சர் ஜடேஜா’ என எத்தனையோ செல்லப் பெயர்கள் ரவீந்திர ஜடேஜாவிற்கு உண்டு. இவற்றில் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே பாராட்டி வைத்த பெயர்தான் 'ராக்ஸ்டார்'. இந்த புகழும், பெருமையும் அத்தனை எளிதாக அவருக்குக் கிடைத்துவிடவில்லை. அவர் கடந்து வந்த பாதை சாதாரணப் பாதை அல்ல... ஒரு சராசரி மனிதனாக இழப்புகள், அவமானங்கள், பிரச்சினைகள் என அவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். போராடிப் போராடித்தான் தன்னை கிரிக்கெட்டில் நிலைநிறுத்திக்கொண்டார் ரவீந்திர ஜடேஜா.

ரவீந்திர ஜடேஜாவின் ஆரம்ப காலம்

1988 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி குஜராத்திலுள்ள ஜாம்நகர் மாவட்டத்திலிருக்கும் நவாகம் கெட் என்கிற ஊரில் பிறந்தார் ஜடேஜா. அப்போது ஜடேஜாவின் குடும்பம் ஒரே ஒரு படுக்கையறை கொண்ட வீட்டில் வாழ்ந்து வந்தது. ஜடேஜாவின் அம்மா லதா, அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்தார். பெயர்தான் 'குஜராத்தி ராஜ்புத்’ குடும்பம். ஆனால், குடும்பம் மொத்தமும் அம்மா லதாபென் கொண்டு வரும் சம்பளத்தில்தான் ஓடிக்கொண்டிருந்தது. அப்பா அனிருத் கிடைத்த வேலைகளையெல்லாம் பார்த்தார். அவற்றில் ஒன்று, ஒரு செக்யூரிட்டி ஏஜென்சியில் வாட்ச்மேன் வேலை. பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஜடேஜா, 10 வயதில் இருந்தபோதே விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டிருந்தார். கிரிக்கெட் விளையாட தொடங்கிய அவரை, சீனியர் மாணவர்கள் கிண்டல் கேலி செய்வதும் வழக்கமாக இருந்தது. அதனால் தினமும் இரவு நேரங்களில் அழுவாராம் ஜடேஜா. வீட்டில் வறுமை வாட்டி கொண்டிருந்தது.


ஜடேஜாவின் குடும்பம் மற்றும் இளவயது கிரிக்கெட் வாழ்க்கை

அரசு மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றும் அம்மா லதாபென்னுக்கு ஒரு சின்னஞ்சிறு அறையைக் கொடுத்திருந்தது மருத்துவமனை நிர்வாகம். அந்த அறையிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்தார் ஜடேஜா. கிரிக்கெட்டில் பெரும் ஆர்வமிருந்த ஜடேஜாவை அம்மாவும் அக்கா நைனாவும் ஊக்கப்படுத்தியுள்ளனர். அதுவும் நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஒரு விபத்தில் அம்மா லதா இறந்துபோனார். அப்போது ஜடேஜாவுக்கு வயது 17. ஜடேஜா கிரிக்கெட் விளையாடுவது அவரது தந்தைக்கு சுத்தமாக பிடிக்காதாம். அதனால் அவருக்கு தெரியாமல்தான் கிரிக்கெட் விளையாடுவாராம் ஜடேஜா. ஜடேஜாவை இந்திய ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்பதே அவரது தந்தைக்கு கனவாக இருந்தது. ஒரு சமயம் ஜடேஜாவின் முன், இரண்டில் ஒரு வாய்ப்பை தேர்வு செய்யும் இக்கட்டான சூழல் ஏற்பட்டது. கிரிக்கெட் பயிற்சியை தொடருவது அல்லது ஆர்மி பள்ளிக்கு சென்று கல்வியை தொடர்வது என்று வந்தபோது, அவர் கிரிக்கெட்டை தேர்ந்தெடுத்தார். வேகப்பந்து வீச்சாளராக கிரிக்கெட்டில் தன் பயணத்தை தொடங்கிய ஜடேஜா, பயிற்சியாளர் செளஹானின் அறிவுரையின் பேரில் பின்னர் இடதுகை ஸ்பின்னராக மாறினார். இரவு தூக்கத்தின்போது நடக்கும் பிரச்சினையை கொண்டிருந்த ஜடேஜாவை பலமுறை செளஹான் திட்டி அடித்துள்ளார். ஒரு மேட்சின்போது, பல ரன்களை ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டக்காரர் எடுத்தபோது, இடையில் கோச் செளஹான் அவரை மோசமாக விளையாடுவதாகக் கூறி பார்வையாளர்களுக்கு முன்பே கன்னத்தில் அறைந்தார். அடிவாங்கிய பின்னர் பந்துவீசிய ஜடேஜா, 5 விக்கெட்டுகளை மேட்சின் இறுதிக்குள் எடுத்தார்.


Under-19 மற்றும் ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் விளையாடியபோது

முதல்தர போட்டியில் அறிமுகம்

2005-ம் ஆண்டு, 16 வயதில் பொதுவெளியில் ஜடேஜாவின் கிரிக்கெட் ஆட்டம் வெளியானது. 19 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் (Under-19 Cricket World Cup) போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பாகிஸ்தானுக்கு எதிரான அந்த இறுதிப் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஜடேஜா. 2006-07ல் தன் முதல் மேட்சை துலீப் ட்ராபி போட்டியில் விளையாடினார். செளராஷ்டிரா அணியில் ரஞ்சி ட்ராபியும் விளையாடினார். 2012ல் 23 வயதாக இருந்த ஜடேஜா, கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சாதனையை படைத்தார். அவர் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் முச்சதத்தை அடித்து, உலகின் எட்டாவது மற்றும் இந்தியாவின் முதல் வீரராக சாதனை படைத்தார். டான் ப்ராட்மேன், பிரையன் லாரா, பில் பான்ச்ஃபோர்ட், வால்ட்டர் ஹம்மாண்ட், W.G.கிரேஸ், க்ரேம் ஹிக் மற்றும் மைக் ஹஸ்ஸி ஆகியோர் இந்த சாதனை பட்டியலில் இருந்தனர். 2008-09 ரஞ்சி சீசனில் 739 ரன்களும் 42 விக்கெட்டுகளும் எடுத்தார் ஜடேஜா. அதன்மூலம் சர்வதேச விளையாட்டுகளில் விளையாட இந்திய அணியில் தேர்வானார்.


சர்வதேசப் போட்டிகளில் ஜடேஜாவின் சிறந்த தருணங்கள்

சர்வதேச தொடக்கம்

இலங்கைக்கு எதிரான தனது அறிமுக ஆட்டத்தில் 60 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பலமுறை இந்திய அணி வெற்றிபெறும் வகையில் ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக ஆடியுள்ளார் ஜடேஜா. 2013 சாம்பியன் ட்ராபி போட்டியில் ஜடேஜா ஒரு முக்கியமான வீரராக திகழ்ந்தார். அந்த போட்டியில் 12 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட் எடுத்த வீரரானார். அதுமட்டுமில்லாமல் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் உலகின் நம்பர் ஒன் பவுலர் என்ற பெருமையை பெற்றார். இந்திய முன்னாள் வீரரான அனில் கும்ப்ளேவுக்கு பின் அந்த இடத்தை பிடித்த இந்தியர் ஜடேஜா மட்டுமே. இப்படி சர்வதேச போட்டிகளில் தான் ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் என பலமுறை நிரூபித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் சாதனை

2008 இந்தியன் பிரீமியர் லீகின் முதல் சீசனில் இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். முதல் சீசனில் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்து ராஜஸ்தான் அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக விளங்கினார். இந்தத் தொடரின் முடிவில் 14 போட்டிகளில் விளையாடிய இவர் 335 ரன்களை எடுத்தார். இவரின் ஸ்டிரைக் ரேட் 131.06 ஆக இருந்தது. 2009 ஆம் ஆண்டு சீசனிலும் சிறப்பாக விளையாடி மொத்தம் 295 ரன்களை எடுத்தார்.


ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகளுக்காக விளையாடியபோது

அதுமட்டுமில்லாமல் பந்துவீச்சில் 16 விக்கெட்களை வீழ்த்தியதுடன் நல்ல எகானமியில் (5.9) பந்து வீசினார். மேலும் கடைசி கட்டத்தில் இறங்கி ராஜஸ்தான் அணியை பலமுறை வெற்றி பெற வைத்துள்ளார். 2010 ஆம் ஆண்டுவரை ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ஜடேஜா, 2011 ஆம் ஆண்டு கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்காக விளையாடினார். கொச்சி அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு 2012 ஆம் ஆண்டு ஜடேஜா மீண்டும் ஏலத்தில் வந்தார். அதன்பிறகு 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் இவரை எடுப்பதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கடும் போட்டி நிலவியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது. அதாவது 9.8 கோடிக்கு ஜடேஜாவை வாங்கியது. அன்று முதல் இன்றுவரை சென்னை அணியின் ஆஸ்தான வீரராக ஆகிவிட்டார் ரவீந்திர ஜடேஜா. அதுமட்டுமில்லமல் 2022 ஆம் ஆண்டு இவர் சென்னை அணிக்கு கேப்டனாகவும் இருந்தார். அந்த சீசனில் சென்னை அணியின் தொடர் தோல்வியால் பதவி பறிபோனது. 2023 ஆம் ஆண்டு சீசனில் விளையாடுவாரா என்று சந்தேகம் இருந்த நிலையில் மீண்டும் சென்னை அணிக்குள் வந்து 5 ஆவது முறையாக கோப்பையை வெல்ல உதவியாக இருந்தார்.

Updated On 4 March 2024 6:21 PM GMT
ராணி

ராணி

Next Story