இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

முன்பெல்லாம் ஆங்கிலேயர்களும் இந்திய பணக்காரர்களும் மட்டுமே குழிப்பந்தாட்டம் என்கிற கோல்ஃப் விளையாட்டை விளையாடினர். இதனால் மக்களிடையே பணக்கார விளையாட்டாகவே தெரிந்தது கோல்ஃப். மக்களும் ஆரம்பத்தில் கோல்ஃப் விளையாட்டை விளையாடத் தயங்கினர். பின்னர் காலப்போக்கில் அனைத்து தரப்பு மக்களும் விளையாடும் விளையாட்டாக மாறியது. பிரிட்டிஷ் மற்றும் டச்சுக்காரர்களால் இந்தியாவிற்குள் நுழைந்த கோலப்க்கென்று தற்போது தனி யூனியன் மற்றும் அதிக அளவிலான கிளப்கள் இங்கு அமைந்துள்ளன. கோல்ஃப் விளையாட்டு மக்களால் நன்கு அறியப்பட்டாலும் கிரிக்கெட், கபடி, கால்பந்து போன்று கொண்டாடப்படுகிறதா என்று கேட்டால் கேள்வி குறிதான். பச்சை பசேலென்ற புல்வெளித் தோட்டத்தில், இயற்கையோடு ஒன்றிணைந்து விளையாடப்படும் கோல்ஃப் விளையாட்டானது இந்தியாவில் எப்படி நுழைந்தது? கோல்ஃப் -இன் வரலாறு என்ன? என்பதை பற்றியெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.

கோல்ஃப் -இன் வரலாறு:

500 வருடங்களுக்கு முன்னர் ஸ்காட்லாந்து நாட்டுக்காரர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது கோல்ஃப் விளையாட்டு. பச்சை புல்வெளியில் 9 அல்லது 16 குழிகள் வெட்டி கோல்ஃப் மட்டையை வைத்து வெண்பந்தை அந்த குழிகளில் தள்ளுவர். இப்படித்தான் ஸ்காட்லாந்தில் கோல்ஃப் விளையாட்டானது ஆரம்பித்தது. ஆனால் இதன் தொடக்கக் கால வரலாறு பற்றி இன்னும் முழுமையாக தெளிவாக தெரியவில்லை. இன்றுவரை கோல்ஃப் விளையாட்டின் வரலாறு பெரிய விவாதமாகத்தான் இருக்கிறது. சில வரலாற்று ஆசிரியர்கள் ரோம நாட்டிலிருந்த ‘பாகனிகா’ என்ற விளையாட்டிலிருந்து தோன்றியதுதான் கோல்ஃப் என்று கூறுகின்றனர். கி.மு 1 ஆம் நூற்றாண்டு ரோம பேரரசு பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை கைப்பற்றி இருந்ததால் கோல்ஃப் இப்படியும் பரவியிருக்கலாம் என்று கூறுகின்றனர் வரலாற்று நிபுணர்கள்.


கோல்ஃப் விளையாட்டின் தொடக்கம்

இந்தியாவில் கோல்ஃப் விளையாட்டின் தொடக்கம்:

கோல்ஃப் விளையாட்டானது 1829 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் இந்தியாவிற்குள் நுழைந்தது. கொல்கத்தாவில் தனது முதல் ராயல் கிளப்பைத் தொடங்கி அவர்கள் விளையாடுவதற்கு ஆரம்பித்தனர். சுதந்திரத்திற்குப் பிறகு அந்த கிளப்பை இந்திய அரசாங்கம் வாங்கியது. பின்னர் இந்தியாவில் உள்ள பணக்காரர்கள், பெரிய பெரிய வணிகர்கள் மட்டுமே கோல்ஃப் விளையாட்டை விளையாடி வந்தனர். 1960களில் கோல்ஃப் விளையாட்டு மெல்ல மெல்ல அனைத்து தரப்பு மக்களாலும் விளையாடப்பட்டது. அதன்பின்பு 1972 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டது கோல்ஃப். ஒலிம்பிற்கிற்குப் பின்னர் அநேக இந்திய நகரங்களில் கோல்ஃப் மைதானம் மற்றும் கிளப்கள் தொடங்கப்பட்டன. கொல்கத்தா, அசாம் மாநிலத்திலுள்ள ஷிலாங் நகரம் மற்றும் மெட்ராஸ் மாகாணம் போன்ற பல இந்திய மாநகரங்களில் தொடங்கப்பட்டன. தற்போது இந்தியாவில் 73 ராயல் கோல்ஃப் கிளப்கள் உள்ளன.


ஆங்கிலேயர்களால் இந்தியாவிற்குள் நுழைந்த கோல்ஃப் விளையாட்டு

இந்தியாவில் முதல் கோல்ஃப் தொடர்:

ராயல் கிளப்பின் வளர்ச்சியால் இந்தியாவில் சர்வதேச அளவிலான கோல்ஃப் தொடர்கள் நடக்க ஆரம்பித்தன. டெல்லி கோல்ஃப் கிளப் மற்றும் ராயல் கல்கத்தா கிளப்பும் இணைந்து முதல் இந்திய ஒப்பனையை நடத்தியது. இதில் 10 நாடுகளிருந்து வீரர்கள் கலந்துகொண்டனர். ஆரவாரமில்லாமல் நடந்த இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பீட்டர் தாம்ப்ஸனும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரால்ப் மொப்பிடும் போட்டியிட்டனர். இதில் பீட்டர் தாம்ப்ஸன் மொபிட்டை வென்று முதல் இந்திய ஒப்பனையை வென்றார். இந்தத் தொடருக்கு பின்னர்தான் கோல்ஃப் உலகை பீட்டர் தாம்ப்ஸன் திரும்பிப் பார்க்க வைத்தார். டிஎல்எப் தான் இந்திய ஓபெனின் முதல் ஸ்பான்சர்.


பிரபல கோல்ஃப் வீரர் பீட்டர் தாம்ப்ஸன்

கோல்ஃப் உலகில் இந்திய வீரர்களின் ஆதிக்கம்:

1965 ஆம் ஆண்டு மக்களிடையே ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது இந்திய ஓபன். இந்தத் தொடரில்தான் இந்திய வீரர்களின் ஆதிக்கம் ஆரம்பித்தது. 1965 ஆம் ஆண்டு நடந்தத் தொடரில் இந்தியாவின் பிரேம் கோபால் சேதி(பிளூ) கோப்பையை வென்று இந்திய மக்களை திரும்பிப் பார்க்க வைத்தார். அதுவும் அவர் தோற்கடித்தது கோல்ஃப் உலகின் முன்னணி வீரர்களான பீட்டர் தாம்ப்ஸன் மற்றும் ஓல்ஸ்டன்ஹோம். இதனால் கோல்ஃப் விளையாட்டு உலகமே இவரை பாராட்டி தீர்த்தது. இவரைத் தொடர்ந்து பல வீரர்கள் கோல்ஃப் விளையாட்டில் சிறந்து விளங்கினர். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் மில்கா சிங், அனிர்பான் லாஹிரி மற்றும் அதிதி அசோக். இவர்கள் இந்திய கோல்ஃப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றனர். இவர்களைத் தொடர்ந்துதான் பல இந்திய இளைஞர்கள் கோல்ஃப் விளையாட்டின் பக்கம் திரும்பினர்.


இந்திய கோல்ஃப் வீரர் பிரேம் கோபால் சேதி

இந்திய பொருளாதாரத்தில் கோல்ப் விளையாட்டின் பங்களிப்பு:

இந்தியாவில் கோல்ஃப் இன்றளவும் வளர்ந்து வரும் விளையாட்டாகவே உள்ளது. வெளிநாட்டவர்களுக்கு நிறைய மைதானங்களை கோல்ப் டூரிஸம் என்று சுற்றி காண்பிக்கிறது இந்திய அரசாங்கம். அதுமட்டுமில்லாமல் கோல்ஃப் விளையாட்டை கார்பரேட் நிறுவனத்திடமும் ஒப்படைத்திருக்கிறது. மைதானங்களை வசப்படுத்தியிருக்கும் அந்தந்த நிறுவனங்கள், பல நிகழ்ச்சிகள் மற்றும் அங்குள்ள ஊழியர்களுக்கிடையே போட்டிகளை நடத்துகின்றன. பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்தியாவிற்கு வந்து கோல்ஃப் விளையாட்டை விளையாட விரும்புகின்றனர். இதன்மூலமாய் கோல்ஃப் விளையாட்டை வளர்ப்பது மட்டுமில்லாமல் இந்திய பொருளாதாரத்தையும் சேர்த்து வளர்க்கின்றனர்.


இந்திய கோல்ஃப் வீரர் அனிர்பா லாஹிரி

இந்தியாவில் கோல்ஃப் - இன் எதிர்காலம்:

இந்தியாவில் 18- ஆம் நூற்றாண்டு ஆரம்பித்த கோல்ஃப் விளையாட்டானது தற்போது இந்தியா பொருளாதாரத்தில் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறது. பல முதலீட்டாளர்கள் கோல்ஃப் விளையாட்டின் மீது முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். பல இந்திய இளைஞர்களும் கோல்ஃப்-இல் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் கோல்ஃப் ஒளிபரப்பால் ரூ.300 கோடிக்கும் மேல் வருவாய் வந்துதுள்ளதாக இந்தியா கோல்ஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. இன்னும் ஒருசில வருடங்களில் கோல்ஃப் விளையாட்டு, இந்திய மக்களிடையே பிரபலமடைந்துவிடும் என்று கோல்ஃப் அமைப்பு கூறியிருக்கிறது. கோல்ஃப் விளையாட்டு இந்திய பொருளாதாரத்தில் மட்டுமில்லாமல் இந்திய விளையாட்டுத்துறைக்கும் பெரிய லாபத்தை ஈட்டி கொடுக்கும் என்று நம்புவோம்.

Updated On 25 Oct 2023 10:20 AM IST
ராணி

ராணி

Next Story