இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்தியாவில் தற்போது அதிகம் பேசப்படும் கிரிக்கெட்டர் ஹர்திக் பாண்டியா. எதிர்பாராதவிதமாக இவ்வருடம் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் கேப்டனாக நியமிக்கபட்டதிலிருந்து எதுவுமே அவருக்கு சரியாக நடக்கவில்லை. கிரிக்கெட்டிலும் சரி, சொந்த வாழ்க்கையிலும் சரி தொடர்ந்து பிரச்சினையாகவே வந்து கொண்டிருக்கிறது. கேப்டன்சி, பேட்டிங் மற்றும் பௌலிங் என்று அனைத்திலும் சொதப்பினார். அதுமட்டுமில்லாமல் அவரது ரசிகர்களே அவர் கேப்டனாக இருக்க வேண்டாம் என்று மைதானத்தில் கோஷமிட்டனர். இதனால் பெரும் மன உளைச்சலில் இருந்த ஹர்திக் பாண்டியாவிடம், அவரது மனைவி நடாஷாவும் விவாகரத்து கேட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்கு உண்மையில் என்னதான் பிரச்சினை? பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து கொண்டிருக்கும் ஹர்திக் பாண்டியா சரிவிலிருந்து மீண்டு வருவாரா? என்பதை பற்றியெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.

ஹர்திக் பாண்டியாவின் ஆரம்பக்காலம் :

ஹர்திக் பாண்டியா குஜராத்தின் சூரத்தில் 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி பிறந்தார். அவரது தந்தை சூரத்தில் ஒரு சிறிய கார் நிதி வணிகத்தை வைத்திருந்தார். ஹர்திக்கிற்கு சிறந்த கிரிக்கெட் பயிற்சி வசதிகளை வழங்குவதற்காக அவரது தந்தை குடும்பத்துடன் வதோதராவுக்கு மாற வேண்டியிருந்தது. ஹர்திக் தனது சகோதரர் க்ருனால் பாண்டியாவுடன் சேர்ந்து வதோதராவில் உள்ள கிரண் மோர் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார். மேலும் கோர்வாவில் வாடகை குடியிருப்பில் வசித்து வந்தார். ஆரம்பத்தில் ஹர்திக்கும், அவரது சகோதரர் க்ருனால் பாண்டியாவும் மிகவும் கஷ்டப்பட்டனர். இவர்களது அதிகபட்ச உணவே நூடுல்ஸ்தானாம். அதன்பிறகு ஹர்திக் தனது பள்ளிப் படிப்பை எம்கே உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். 9ம் வகுப்பு வரை படித்த அவர், கிரிக்கெட்டில் கவுனம் செலுத்த வேண்டும் என்பதற்காக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். கிளப் கிரிக்கெட்டில் தனி ஒருவனாக பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.


சகோதரருடன் ஹர்திக் பாண்டியாவின் சிறுவயது புகைப்படங்கள்

முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகம் :

தனது 18 வயதில் முதல்தர போட்டியில் அறிமுகமானார் ஹர்திக். அவர் 2013 முதல் பரோடா கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். 2013-14 சீசனில் சையது முஷ்டாக் அலி கோப்பையை வென்று அணிக்கு பெருமை சேர்த்தார். ஆரம்பத்தில் கிரண் மோர் அகாடமியில், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பற்றாக்குறை இருந்தது. பொதுவாக, ஹர்திக் ஆட்டத்திற்கு லெக் ஸ்பின் வீசும்படியாகதான் இருந்தது. ஆனால் ஒருமுறை அவருக்கு வேகப்பந்து வீச்சாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் தனது அற்புதமான திறமையால் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நேரம் அது. அந்த போட்டியில் மட்டும் அவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பரோடா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரண் மோர் இவரை பரோடாவைச் சேர்ந்த மேற்கிந்திய பையன் என்று செல்லமாக அழைப்பார். அவரது குணாதிசயங்கள் மற்றும் நடத்தைகள் அனைத்தும் மேற்கிந்திய வீரர்களுடன் பொருந்தும்.


முதல்தர போட்டிகளில் ஹர்திக் பாண்டியா அறிமுகமானபோது

சர்வதேச போட்டிகளில் ஆதிக்கம் :

27 ஜனவரி 2016 அன்று, ஹர்திக் தனது 22-வது வயதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவுக்காக டி20 சர்வதேசப் போட்டியில் அறிமுகமானார். கிறிஸ் லின்னுக்கு எதிராக அவர் தனது முதல் விக்கெட்டை எடுத்து சர்வதேச பயணத்தை ஆரம்பித்தார். அதன்பிறகு தொடர்ச்சியாக ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தார். தனது சிறப்பான ஆட்டத்தின் மூலமாக 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கும் தேர்வானார். பல போட்டிகளில் இந்திய அணிக்காக தனி ஆளாக பேட்டிங் மற்றும் பௌலிங்கில் அசத்தினார். இந்திய அணியில் தவிர்க்க முடியாத ஆல்ரவுண்டராக வலம் வந்தார். அதுமட்டுமில்லாமல் இந்திய அணியின் அடுத்த கபில்தேவ் என்றும் அனைவரும் அவரை புகழ்ந்து தள்ளினர்.


சர்வதேச போட்டிகளில் ஹர்திக் பாண்டியா கலக்கியபோது

ஐபிஎல் தொடரில் அசத்தல் :

மும்பை அணிக்காக 2014 ஆம் ஆண்டு அடிப்படை தொகை 10 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அந்த வருடமே கொல்கத்தா அணிக்காக பேட்டிங்கில் அரைசதமும், சென்னை அணிக்கு எதிராக அதிரடி ஃபினிஷும் செய்து கொடுத்தார். அங்கிருந்து ஹர்திக் பாண்டியாவின் அதிரடி தொடக்கம் ஆரம்பித்தது. தொடர்ந்து தனது சிறப்பானா ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டே வந்தார். 2017 ஆம் ஆண்டில், பாண்டியாவின் திறமை மற்றும் ஆற்றல், முன்னாள் இந்திய மற்றும் மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் ஜான் ரைட்டால் வழிநடத்தப்பட்டன. அவரது வழிகாட்டுதலின் கீழ், பாண்டியா நிறைய கற்றுக்கொண்டார். அதுமட்டுமில்லாமல் 2018 ஆம் ஆண்டு மும்பை அணியால் 11 கோடிக்கு தக்கவைக்கவும்பட்டார். 2020 ஆம் ஆண்டுவரை சிறப்பாக செயல்பட்டுவந்த ஹர்திக் பாண்டியாவிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதன்பிறகுதான் அவரது சறுக்கல் ஆரம்பித்தது. பல போட்டிகளில் சொதப்பி இந்திய அணியிலிருந்தும் ஓரங்கட்டப்பட்டார். அதன்பிறகு 2022 ஆம் ஆண்டு மெகா ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி அவரை கழட்டிவிட்டது. அதன்பின் குஜராத் அணியால் ரிட்டென்ஷன் செய்யப்பட்டார். பலரது எதிர்பார்ப்பிற்கு மத்தியில் களமிறங்கிய குஜராத் அணி, அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தியது. அதுமட்டுமில்லாமல் அதன்பிறகு களமிறங்கிய சீசனில் இறுதி போட்டிவரை வந்து நூலிழையில் சென்னை அணியிடம் கோப்பையை தவறவிட்டது. இவ்வாறு தனது சொதப்பலில் இருந்து மீண்டுவந்த ஹர்திக்கை மீண்டும் 17 கோடிக்கு டிரேடிங் முறையில் ஏலம் எடுத்து கேப்டனாக அறிவித்தது மும்பை அணி.


ஐபிஎல் தொடர்களில் ஹர்திக் பாண்டியா ஆதிக்கம் செலுத்திய தருணங்கள்

சரிவை சந்தித்த ஹர்திக் :

மும்பை அணி எப்பொழுது ஹர்திக் பாண்டியாவை வாங்கியதோ அன்றிலிருந்து பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார் ஹர்திக். நடந்துமுடிந்த ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு போட்டியும் தொடங்கும் போதெல்லாம் ஹர்திக்கை மைதானத்தைவிட்டு வெளியரும்படி ரசிகர்கள் கோஷமிட்டனர். அதுமட்டுமில்லாமல் புள்ளி பட்டியலில் 8 ஆவது இடம் பிடித்து அனைவரையும் ஏமாற்றியது மும்பை. இது ஒரு பக்கம் இருக்க தற்போது அவரது திருமண வாழ்க்கையில் பிரச்சினை எழுந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு, நடிகையும் மாடலுமான நடாஷாவை திருமணம் செய்து கொண்டார் ஹர்திக். இவர் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 8 இல் போட்டியாளராக பங்கெடுத்த பின்னர் மிகவும் பிரபலமடைந்தார். ஹர்திக்கும் நடாஷாவும் முதன் முதலில் சந்தித்தது ஒரு நைட் கிளப்பில்தானாம். அந்த ராத்திரி நேரம் 1 மணிக்கு தலையில் தொப்பி, பெரிய செயின், கையில் வாட்ச் என வித்தியாசமான ஒரு நபர் வர, அவரை யார் இந்த விநோத மனிதன் என்பதுபோல நடாஷா பார்த்தாராம். அதுதான் அவர்களுடைய முதல் சந்திப்பு. அதைத்தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவும் சேர்ந்து டேட் போகவும் ஆரம்பித்திருக்கிறார்கள். நைட் கிளப்பில் நண்பர்களாக மாறிய நடாஷாவும், பாண்டியாவும் சேர்ந்து புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோதுதான் ஹர்த்திக் பாண்டியா நடாஷாவிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்த, நடாஷாவுக்கும் ஹர்திக்கை பிடித்திருந்ததால் ஓகே சொல்லிவிட்டார். இப்படி நன்றாக போய் கொண்டிருந்த ஹர்திக்கின் வாழ்க்கை தீடீரென்று தலைகீழாக மாறியது. தற்போது விவாகரத்து கேட்டிருக்கிறாராம் நடாஷா. அதுமட்டுமில்லாமல் ஹர்திக்கின் சொத்திலிருந்து 70 சதவீதம் தர வேண்டுமென்று டிமாண்ட் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஹர்திக் மிகவும் மனம்நொந்து போயிருக்கிறாராம். இருந்தபோதிலும் ஹர்திக் தனது முழு கவனத்தையும் T20 உலகக்கோப்பையில் செலுத்தி வருகிறாராம். அவர் தனது திறமையை நிரூபித்து முழு கம்பேக் கொடுப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Updated On 10 Jun 2024 11:55 PM IST
ராணி

ராணி

Next Story