இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி இந்திய டெஸ்ட் அணியின் ஆஸ்தான விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கு விபத்து நேரிட்டது. அதனால் அவருக்கு பதிலாக இந்திய அணி விக்கெட் கீப்பரை தேடியது. கே.எல். ராகுல் , இஷான் கிஷன் மற்றும் கே.எஸ். பரத் என்று பல பேரை முயற்சி செய்து பார்த்தது. ஆனால் கே.எல். ராகுல் மட்டுமே நன்றாக ஆடினார். அவரும் தற்போது காயத்தால் அவதிப்படுவதால் மாற்று வீரரை தேடி வந்தது. அதனால் தற்போது இங்கிலாந்திற்கு எதிரான 3 ஆவது டெஸ்டில் துருவ் ஜூரல் அறிமுகமாகியுள்ளார். அந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் 46 ரன்கள் குவித்து குல்தீப் யாதவ் உடன் இணைந்து 52 ரன்கள் பார்ட்னெர்ஷிப் அமைத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் துருவ் ஜூரலுக்கு பேட் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பிறகு ராஞ்சியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தொடரை வென்றது இந்தியா. முதல் இன்னிங்ஸில் 177/7 என இந்தியா தடுமாறிய போது குல்தீப் யாதவுடன் சேர்ந்து 90 ரன்கள் அடித்து தொடரை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார் துருவ். யார் இந்த துருவ் ஜூரல்? அவரது கிரிக்கெட் பயணம் எங்கிருந்து தொடங்கியது என்பதை பற்றியெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.


குடும்பத்தினர் மற்றும் சிறுவயதில் துருவ் ஜூரல்

துருவ் ஜூரலின் ஆரம்பகாலம் :

ஜனவரி 21, 2001 ஆம் ஆண்டு ஆக்ராவில் பிறந்தார் துருவ் ஜூரல். இவரது தந்தை நெம் சந்த் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. கார்கில் போரில் சண்டையிட்டுள்ளார். தனது 6 வயதில் பள்ளியில் நடக்கும் சம்மர் கேம்ப்பில் கிரிக்கெட் பயிற்சியை ஆரம்பித்தார் துருவ். அதுமட்டுமில்லாமல் இவரது அம்மா தனது நகையை அடகு வைத்துதான் இவருக்கு முதல் கிரிக்கெட் கிட்டை வாங்கி கொடுத்துள்ளார். துருவ் கிரிக்கெட் விளையாடுவது அவரது தந்தைக்கு சுத்தமாக பிடிக்காதாம். அதன்பிறகு பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் துருவ் ஜூரல் சிறப்பாக விளையாடியதை அவரது தந்தை கவனித்துள்ளார். அதன்பின் அவரே ஆக்ராவிலுள்ள மிகப்பெரிய கிரிக்கெட் அகாடெமியான முன்னாள் உத்தரப்பிரதேச ரஞ்சி வீரர் பூல் சந்தின் அகாடெமியில் சேர்த்துள்ளார். 13 வயதிலேயே உத்தரப்பிரதேச மாநில அளவிலான அணிக்கு தேர்வானார். அதுமட்டுமில்லாமல் 13 வயதில் 200 உள்ளூர் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளார் துருவ். அதன்பிறகு தொடர்ச்சியாக உத்தரப்பிரதேச U-14, U-16 மற்றும் U-19 அணிக்காக விளையாடினார்.


முதல்தர கிரிக்கெட் மற்றும் U-19 உலகக்கோப்பை போட்டிகளில் ஜூரல்

துருவ் ஜூரலின் U-19 உலகக்கோப்பை மற்றும் முதல்தர போட்டி அறிமுகம் :

15 வயதில் உத்தரப்பிரதேச அணிக்காக விஜய் மெர்ச்சண்ட் தொடருக்கு தேர்வானார். 17 வயதில், U-19 மாநில அணிக்காக விளையாடியிருந்தார். 18 வயதில், 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை இந்திய அணிக்காக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டார். அதுமட்டுமில்லாமல் 6 போட்டிகளில் 232 ரன்களும், ஸ்ட்ரைக் ரேட் 152-ம் எடுத்தார். அதே நேரத்தில் உபேந்திர யாதவ் உத்தரப்பிரதேச விக்கெட் கீப்பராக இருந்தார். ஆனால் ஜூரலின் அசத்தலான பேட்டிங் தகுதி மூலம் அவருக்கு முதல் தர போட்டியில் அறிமுகம் கிடைத்தது. ஆயினும்கூட, அவர் காத்திருக்க வேண்டியிருந்தது, கொரோனா தொற்றுநோய் காரணத்தால் வரலாற்றில் முதல்முறையாக ரஞ்சி டிராஃபி நடைபெறவில்லை. அதன்பிறகு மீண்டும் ஒருவருடம் கழித்து இந்தியாவில் ரஞ்சி டிராஃபி தொடங்கப்பட்டது. அப்பொழுது உத்தரபிரதேச விக்கெட் கீப்பர் உபேந்திர யாதவ் ரயில்வே அணிக்காக விளையாட தேர்வானார். அதனால் ஜூரலுக்கு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொண்டார் துருவ். தனது முதல் இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்து அசத்தினார். அதுமட்டுமில்லாமல் நாகலாந்திற்கு எதிரான போட்டியில் 399 பந்துகளில் 249 ரன்கள் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அந்த போட்டியில் உத்தரப்பிரதேச அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.


ஐபிஎல் மற்றும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியபோது

சர்வதேச அறிமுகம் :

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ஜூரல், இம்பாக்ட் பிளேயராக வந்து 173 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். அதன்பிறகு இந்தியா "A " அணிக்காக தேர்வானார். தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான T20 போட்டியில் 72 ரன்கள் குவித்து அசத்தினார். அதன்பிறகு 2022-23ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஸ்டான்ட்-பை பிளேயராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கே.எல் ராகுல் மற்றும் கே.எஸ் பரத் அணியில் இருந்ததால் நீண்ட நாள் அணியில் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. சுமார் இரண்டு ஆண்டுகளாக அணியில் காத்திருந்த துருவ் ஜூரலுக்கு தற்போது இங்கிலாந்திற்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் 46 ரன்கள் அடித்தார். இரண்டாவது இன்னிங்சில் இவருக்கு பேட் செய்யும் வாய்ப்பு அமையவில்லை. இருப்பினும் இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஜூரலின் மேல் எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார். அதன்பிறகு 4 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 172 ரன்னுக்கு 5 விக்கெட் என்று தவித்த நிலையில் 90 ரன்கள் அடித்து அனைவரையும் பிரம்மிக்க வைத்தார். அதுமட்டுமில்லாமல் அரைசதம் அடித்த பிறகு தனது தந்தைக்கு சல்யூட் அடித்தார். இது பார்வையாளர்களை நெகிழ்ச்சி படுத்தியது. அதன்பிறகு அந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி அசத்தியது.


தந்தைக்கு மரியாதை செலுத்திய தருணங்கள்

ஜூரலை எண்ணி பெருமிதத்தோடு பேட்டி அளித்த அவரது தந்தை :

அழுத்தமான நேரத்தில் விழிப்புணர்வுடன் செயல்படும் அவர், அடுத்த எம்எஸ் தோனியாக உருவாகும் பாதையில் இருப்பதாக சுனில் கவாஸ்கர் பாராட்டியிருந்தார். இந்நிலையில் நான்காவது போட்டியில் தன்னுடைய மகன் அடித்த சல்யூட் இந்திய ராணுவம் மற்றும் மக்களுக்கானது என்று துருவ் ஜூரலின் தந்தை நேம் சந்த் பெருமிதத்துடன் கண்ணீர் மல்க கூறியுள்ளார். மேலும் தோனியுடன் தம்முடைய மகனை ஒப்பிடவில்லை என்று தெரிவித்தார். அதன்பிறகு அவர் கூறியது நான் ராணுவத்தைச் சேர்ந்தவன். எனவே என்னுடைய கட்டுக்கோப்பை தெரிந்த துருவ் ஜூரேல் நான் ராணுவ உடையில் சல்யூட் அடித்ததை பார்த்து வளர்ந்தவர். அதனால் அரை சதமடித்த போது சல்யூட் அடித்து கொண்டாடலாம் என்று அவர் நினைத்திருக்கலாம். அந்த சல்யூட் எனக்கு மட்டுமல்ல இந்திய ராணுவம் மற்றும் மக்கள் அனைவருக்குமானது. இந்தியாவுக்காக 20 வருடங்கள் விளையாடி நட்சத்திரமாக இருக்கும் சுனில் கவாஸ்கர் போன்றோர் அப்படி சொன்னது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது”. அனில் கும்ப்ளே, சேவாக் போன்றவர்களும் துருவைப் பற்றி பேசினார்கள். ஆனால் நான் தோனியுடன் ஒப்பிடப்போவதில்லை. இந்தியாவுக்காக 2 உலகக் கோப்பைகளை வென்று மிகப்பெரிய நட்சத்திரமாக இருக்கும் தோனியுடன் என்னுடைய மகனை எப்போதும் ஒப்பிடமாட்டேன். ஆனால் முன்னாள் வீரர்கள் என்னுடைய மகனை ஒப்பிடுவது மகிழ்ச்சியை கொடுக்கிறது. நாங்கள் எங்கள் மகனை ராணுவத்தில் சேர்க்க விரும்பினோம். அதற்காக என்டிஏ தேர்வில் தேர்ச்சி பெறுமாறு அவரை வற்புறுத்தினேன். ஆனால் வேறு மாதிரி சிந்தித்த அவர் “கிரிக்கெட்டில் விளையாடுகிறேன் அப்பா” என்று என்னிடம் சொன்னார். அந்த வகையில் 10 – 11 வயதிலேயே கிரிக்கெட்டில் விளையாடத் துவங்கிய அவர் பள்ளித் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்காததால் நான் திட்டினேன். ஆனால் அம்மா மீது அவர் அதிக அன்பைக் கொண்டவர். எனவே என் மனைவிதான், துருவ் படித்துக் கொண்டே கிரிக்கெட்டும் விளையாடட்டும் என்று ஆதரவைக் கொடுத்தார் எனக் கூறினார்.

Updated On 11 March 2024 11:41 PM IST
ராணி

ராணி

Next Story