இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக். கடந்த 2004 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் ‘இனி அவரது கேரியர் அவ்வளவு தான்’ என சொல்லும் போதெல்லாம் கம்பேக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். மீண்டும் ஒருமுறை அதுபோன்றதொரு கம்பேக்கை அவர் கொடுத்தாலும் அதில் ஆச்சரியம் கொள்ள வேண்டியதில்லை. அப்படி தனக்கு வாய்ப்பு மறுக்கப்படும் போதெல்லாம் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதன் ஊடாக உலக கிரிக்கெட்டில் என்ட்ரி கொடுப்பவர். தோனி இருக்கும்வரை தினேஷ் கார்த்திக்கு இந்திய அணியில் வாய்ப்பே கிடையாது என்பது விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவரும் அவரவர் மனதில் எழுதி வைத்திருக்கும் வாக்கியம். ஆனால், அதை தனது சமீபத்திய ஆட்டத்தால் கொஞ்சம் ஆட்டிப் பார்த்திருக்கிறார் தினேஷ் கார்த்திக். தோனிக்கும், தினேஷ் கார்த்திக்குக்கும் நான்கு வயதுதான் வித்தியாசம் என்றாலும், தினேஷ் கார்த்திக், மீண்டும் T20 உலககோப்பைக்கு தேர்வாவாரா? இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவாரா? என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

ஓய்வு பெற போவதாக அறிவித்த தினேஷ் கார்த்திக் :

இந்த ஐபிஎல் தொடரோடு அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற போவதாக அறிவித்திருக்கிறார் தினேஷ் கார்த்திக். ஏறக்குறைய இந்திய அணியிலிருந்து புறக்கணிக்கபட்ட தினேஷ் கார்த்திக், தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வருகிறார். இவரது வர்ணனையை ரசிகர்களும் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்கின்றனர். ஐபிஎல்லில் பெங்களூரு அணிக்காக விளையாடிய அவர், இந்த ஐபிஎல்லுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் என்று தொடர் தொடங்கும்போதே கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் கடந்த வருட ஐபிஎல்லில் படுமோசமாக சொதப்பியிருந்தார். ஏன் அவரை அணியில் வைத்திருக்கிறீர்கள்? என்று பெங்களூரு ரசிகர்கள் அவர் மீது வன்மத்தையும் கோபத்தையும் கொட்டி தீர்த்தனர். பல விமர்சனங்களுக்கு நடுவேதான் இந்த ஐபிஎல்லில் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார்.


பெங்களூரு அணி வீரராகவும், கிரிக்கெட் வர்ணனையாளராகவும் தினேஷ் கார்த்திக்

பெங்களூரு அணியில் கம்பேக் :

பல எதிர்ப்புகளை மீறி சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், சென்னை அணியின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்தார். அதன்மூலம் தன்மீதான விமர்சனங்களை எல்லாம் சரி செய்து இருக்கிறார். மேலும், தான் விளையாடிய 3 ஆட்டங்களில் இரண்டு அரைசதம் அடித்து அசத்தியிருக்கிறார். குறிப்பாக ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசிவரை களத்தில் இருந்து எதிரணியை மிரட்டினார். நடராஜன் வீசிய பந்தை 108 மீட்டர் சிக்ஸர் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தற்பொழுது ரசிகர்கள் மீண்டும் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் வேண்டும் என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஹைதராபாத் அணி இமாலய இலக்கு(287) நிர்ணயித்த ஆட்டத்தில், அந்த அணிக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டம், ஹைதராபாத் அணிக்கு தோல்வி பயத்தை காட்டியது என்றே சொல்ல வேண்டும். அவர் அவுட் ஆன பிறகுதான் ஹைதராபாத் அணி பெருமூச்சு விட்டது. அவர் அவுட் ஆகி பெவிலியன் திரும்பும்பொழுது ஒட்டுமொத்த மைதானமுமே அவருக்கு எழுந்து நின்று கைதட்டியது. இது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது.


பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடிய தருணம்

மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவாரா தினேஷ் கார்த்திக்?

தினேஷ் கார்த்திக்கை T20 உலககோப்பைக்கு தேர்வு செய்ய வேண்டும். அவரை போல அனுபவம் வாய்ந்த வீரர் அணியில் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது ஆதரவை அவருக்கு தெரிவித்து வருகின்றனர். "இன்னொரு பக்கம் இதை போன்றுதான் 2022 ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடி 2022 உலககோப்பைக்கு தேர்வானார். ஆனால் அந்த தொடரில் படுபயங்கரமாக சொதப்பினார்" என்றும் சில ரசிகர்கள் பேசி வருகின்றனர். இதனால் ரசிகர்களுக்கு இடையே குழப்பம் எழுந்துள்ளது. சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா "தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் மீண்டும் விளையாட அதிக வாய்ப்புள்ளது" என்று கூறியிருந்தார். தொடர்ச்சியாக இந்த ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டால் அவரது இந்திய அணி வருகையை யாராலும் தடுக்க முடியாது. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் 5 ஆட்டத்தில் 216 ரன்கள் குவித்திருக்கும் தினேஷ் கார்த்திக், இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு செய்யப்படுவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Updated On 29 April 2024 6:22 PM GMT
ராணி

ராணி

Next Story