இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்தியாவில் கிரிக்கெட் திருவிழா என்றால் அது ஐபிஎல்தான். ஒவ்வொரு சீசனும் மார்ச் இறுதியில் ஆரம்பித்து ஏப்ரல் - மே மாதங்களில் கோலாகலமாக நடைபெறும். கடந்த வருடம் மட்டும் ஒளிபரப்பு உரிமை, டிக்கெட் விநியோகம் என்று பிசிசிஐ 4000 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 27 ஆம் தேதி, 2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ரிட்டென்ஷன் நடந்தது. இதில் அனைத்து அணிகளும் பல முக்கியமான வீரர்களை வெளியே விட்டுள்ளன. இதனை சுவாரஸ்யப்படுத்தும் விதமாக ஐபிஎல்லில் பல நாட்டு வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இதையடுத்து எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கப் போகிறது என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.


சென்னை அணியிலிருந்து நீக்கப்பட்ட பென் ஸ்டோக்ச்

பென் ஸ்டோக்சை வெளியே விட்டது சென்னை அணி:

நடப்பு சாம்பியன் சென்னை அணியில் ஏற்கனவே 11 வீரர்கள் முடிவாகிவிட்டனர். கடந்த வருடம் உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டரான இங்கிலாந்தின் பென் ஸ்டோக்சை ரூ.16.5 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது சென்னை அணி. ஆனால் அவர் 2023 ஐபிஎல் தொடரில் மிக மோசமாக ஆடி சொற்ப ரன்களில் வெளியேறினார். பந்து வீச்சிலும் பெரிதாக விக்கெட் எடுக்கவில்லை. இதனால் தொடரின் பாதியிலேயே சென்னை அணி அவரை பெஞ்சில் உட்கார வைத்தது. இவ்வருடம் அணியின் அனைத்து ஸ்பாட்களுமே ஓரளவு ஃபில் ஆகிவிட்டதால் பென் ஸ்டோக்சை கழட்டி விட்டது சென்னை அணி. மேலும் சிசன்டா மகளா, அம்பத்தி ராயுடு, கைல் ஜேமிசன், டுவைன் பிரிட்டோரியஸ் காஃபியோரையும் வெளியேற்றியது.


டெல்லி அணியை தலைமை தாங்கும் ரிஷப் பண்ட்

டெல்லிக்கு மீண்டும் கேப்டனானார் ரிஷப் பண்ட்?

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இந்திய அணி வீரரும், டெல்லி அணியின் கேப்டனுமான ரிஷப் பண்ட் பெரிய கார் விபத்தில் சிக்கினார். பெரும் காயத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் 1 வருடம் கிரிக்கெட் விளையாட முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் அவர் ஆடவில்லை. அவருக்கு பதில் டேவிட் வார்னர் அணியை வழிநடத்தினார். அந்த தொடரில் டெல்லி அணி படுமோசமாக விளையாடியது. தற்போது காயம் குணமாகி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார் ரிஷப் பண்ட். அவர் வந்திருப்பது டெல்லி அணிக்கு பலத்தை சேர்த்துள்ளது. இதை தவிர கடந்த வருடம் ஃபார்மில் இல்லாத பிளேயேர்களான சர்ப்ராஸ் கான், அமன் கான், கமலேஷ் நாகர்கோடி ஆகியோரை கழட்டி விட்டுள்ளது டெல்லி அணி.


குஜராத் அணியிலிருந்து நீக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியாவை வெளியேற்றியது குஜராத் அணி:

2022 ஆம் ஆண்டு அறிமுகமான குஜராத் அணி, முதல் சீசனில் கோப்பையை வென்றதுடன், இரண்டாவது சீசனில் இறுதி போட்டி வரை முன்னேறி அசத்தியது. தற்போது, அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவையே மும்பை அணியிடம் டிரேட் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதுமட்டுமில்லாமல் குஜராத்தின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் அணியின் முதுகெலும்பாக இருந்த பாண்டியா வெளியேறி இருப்பது பணம் விஷயமாகதான் என்று வதந்திகளும் பரவி வருகின்றன. ஹார்திக் பாண்டியாவை தவிர்த்து அல்சாரி ஜோசப், பிரதீப் சங்வான், தசுன் ஷனகா ஆகிய முக்கிய வீரர்களையும் கழட்டி விட்டுள்ளது குஜராத் அணி.


ஷர்துல் தாகூருக்கு எந்த அளவிற்கு வாய்ப்பு

ஷர்துல் தாகூருக்கு மாற்று வீரரை எடுக்குமா கொல்கத்தா?

2023 ஆரம்பத்தில் நன்றாக விளையாடிய கொல்கத்தா அணி கடைசி நேரத்தில் சொதப்பியது. இந்த தோல்விக்கு, 10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஷர்துல் தாகூர் மிகவும் சொதப்பியதே காரணமாக கூறப்படுகிறது. ஆல்ரவுண்டரான ஷர்துல் தாகூர் பேட்டிங்கில் 113 ரன்களும், பந்து வீச்சில் வெறும் 7 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்து படுபயங்கரமாக சொதப்பினார். இது கொல்கத்தா அணிக்கு மிகவும் பின்னடைவாக கருதப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ், நியூசிலாந்தின் டிம் சௌதீ மற்றும் லாக்கி பெர்குசன் ஆகியோரையும் கொல்கத்தா அணி கழட்டி விட்டுள்ளது. ஏற்கனவே கொல்கத்தா அணியில் 8 இடங்கள் உறுதியான நிலையில், மீதமுள்ள இடங்களுக்கு அந்த அணி, வேகப்பந்து வீச்சாளர்களையும், ஆல்ரவுண்டர்களையும் ஏலத்தில் குறி வைக்கலாம் என்று நம்பப்படுகிறது.


லக்னோ அணியில் இடம்பெற்ற தேவ்தத் படிகல்

தேவ்தத் படிகல்லின் சேர்ப்பு லக்னோ அணிக்கு பலம் சேர்க்குமா?

ஏற்கனவே 11 வீரர்களை தேர்வு செய்துவிட்ட லக்னோ அணி டிரேடிங் முறையில் ராஜஸ்தான் அணியிடம் இருந்து தேவ்தத் படிக்கல்லை வாங்கியுள்ளது. அணியில் ஏற்கனவே இந்தியன் பேட்ஸ்மேன் ஆயுஷ் பதோனி இருந்தாலும், அவர் சொதப்பினால் மட்டுமே தேவ்தத் படிக்கல்லிற்கு வாய்ப்பு கிடைக்கும். பெங்களூரு அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்த தேவ்தத் படிக்கல், அந்த அணியில் மிக சிறப்பாக ஆடினார். தேவ்தத் படிக்கல்லை, 2022 ஏலத்தில் வாங்கிய ராஜஸ்தான் அணி, அவரை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறக்கியது. இதில் படுபயங்கரமாக சொதப்பினார் படிக்கல். அவரை தற்போது லக்னோ அணி டிரேடிங் முறையில் வாங்கியிருப்பது பலமாக இருக்கும் என்று நம்பலாம். இதை தவிர இந்தியன் பௌலர் ஜெயதேவ் உனட்கட், டேனியல் சாம்ஸ் மற்றும் கருண் நாயரை கழட்டி விட்டுள்ளது லக்னோ அணி.


மும்பை அணியில் ஹர்திக்

மீண்டும் மும்பை அணியில் ஹர்திக்?

கடந்த வருடம் மிக மோசமாக விளையாடி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது மும்பை அணி. 2023 ஆம் ஆண்டு பேட்டிங், பௌலிங் என்று எதுவும் அந்த அணிக்கு சரியாக அமையவில்லை. பேட்டிங்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், சூர்யா குமார் யாதவ், டிம் டேவிட் என அனைவரும் சொதப்பியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகிவிட்டது. பந்து வீச்சில் அந்த அணி மேலும் சொதப்பியது. பும்ரா இல்லாதது மும்பை அணியின் பந்துவீச்சை மோசமாக பாதித்தது. அர்ச்சரின் ஃபார்மும் மோசமாக இருந்ததால், அந்த அணியால் கடைசி வரை தோல்வி பிடியிலிருந்து வெளியே வரமுடியவில்லை. கடந்த வருடம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து ரசிகர்களை மும்பை ஏமாற்றியது. அதனை சரிகட்ட தற்போது மும்பை அணி இந்தியாவின் தலை சிறந்த ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியவை குஜராத் அணியிடம் டிரேடிங் செய்துள்ளது. இது மும்பை அணிக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. அது தவிர ஜோப்ரா ஆர்ச்சர், ஜெய் ரிச்சர்ட்சன், ஹ்ரித்திக் ஷோக்கேன் மற்றும் ரிலே மெரிடித்தை மும்பை அணி கழட்டி விட்டுள்ளது.


பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்

வலுவான பஞ்சாப் அணி:

பஞ்சாப் அணியை பொறுத்தவரை பார்ப்பதற்கு நன்கு பலமாக காட்சியளிக்கிறது. ஆனால் எப்பொழுதும் பெரிய பிளேயேர்களை வைத்து சொதப்பி வருகிறது. பஞ்சாப் அணியின் வரலாற்றை புரட்டி பார்த்தால் யுவராஜ் சிங் ஆரம்பித்து தற்போதைய இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் கே.எல். ராகுல் வரை அனைவரும் அந்த அணிக்காக விளையாடினர். ஆனால் ஒருமுறை கூட அந்த அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் கடந்த வருடம் உலகின் தலைசிறந்த பௌலர் ரபாடா இருந்தும் அந்த அணியால் பந்து வீச்சிலும் பெரிதாக சோபிக்க முடியவில்லை. அதுபோல கடந்த வருடம் தமிழகத்தின் ஷாருக்கானை பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் சொற்ப ரன்களில் வெளியேறி அனைவரையும் ஏமாற்றினார். இதனால் இம்முறை ஷாருக்கான், ராஜ் அங்கத் பாவா மற்றும் பானுக ராஜபக்ஷாவை அந்த அணி வெளியேற்றி உள்ளது. இந்நிலையில், இம்முறையாவது பஞ்சாப் அணி கோப்பையை வெல்லுமா என்று பொறுத்திருந்து பாப்போம்.


அணியை பலப்படுத்தும் ராஜஸ்தான் ராயல்ஸ்

சாம்பியன் பட்டம் வெல்லும் நோக்கில் ராஜஸ்தான்:

முதல்தர வீரர்களை மட்டுமே வெளியேற்றி மிகச்சிறந்த அணியாக திகழ்கிறது ராஜஸ்தான். கடந்த வருடமே கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த அந்த அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் முதல் ஐந்து போட்டிகளில் வெற்றி கண்ட ராஜஸ்தான், அதன்பிறகு தொடர்ச்சியாக சொதப்பி அனைவரையும் ஏமாற்றியது. இம்முறை அதே வலுவான அணியுடன் களம் காணும் ராஜஸ்தான், கோப்பையை கண்டிப்பாக வென்று விடும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறிவருகின்றனர். கடந்த வருடம் ஏலத்தில் எடுத்த ஜோ ரூட் மற்றும் ஜேசன் ஹோல்டேரை ராஜஸ்தான் வெளியே விட்டுள்ளது. அதுமட்டுமில்லால் பந்துவீச்சை மேலும் வலுப்படுத்த லக்னோவில் இருந்த ஆவேஷ் கானை டிரேடிங் முறையில் வாங்கியுள்ளது ராஜஸ்தான் அணி.


ஹேசில்வுட்டை தவறவிட்ட ராயல் சேலஞ்சர்ஸ்

எப்பொழுதும் போல டிரேடிங்கில் சொதப்பிய பெங்களூரு அணி:

இம்முறை டிரேடிங் மற்றும் ரீட்டைன் பிளேயர்களில் படுபயங்கரமாக சொதப்பியது பெங்களூரு அணி. உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரான ஹேசில்வுட்டை அந்த அணி வெளியே விட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 2022 ஆம் ஆண்டு பர்பிள் கேப் வின்னர் ஹர்ஷல் படேலையும் வெளியேற்றியுள்ளது. மேலும் டிரேடிங் முறையில் ஆஸ்திரேலியாவின் கேமெரூன் கிரீனை ரூ.17.5 கோடிக்கு வாங்கி, எதற்கு அணியில் எடுத்தோம் என்று தெரியாமலும் விழித்து வருகிறது. இந்நிலையில், ஏலத்தில் எந்தெந்த வீரர்களை பெங்களூரு அணி எடுக்கப்போகிறது என்று தெரியாமல், அந்த அணியின் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.


புதிய வீரர்களுடன் களம் காணும் சன்ரைசர்ஸ்

ஏலத்தில் புதிய வீரர்களை எடுக்கும் முயற்சியில் ஹைதராபாத் அணி:

கடந்த வருடம் ஹைதராபாத் அணிக்குள்ளேயே பல சர்ச்சைகள் எழுந்தன. உம்ரன் மாலிக்கை வெளியில் உட்காரவைத்தது, அப்துல் சமரை களமிறக்காமல் ஒதுக்கியது என்று பல குற்றச்சாட்டுகள் அந்த அணியின் மீது எழுந்தன. பெரிதும் எதிர்பார்க்கபட்ட ஹார்ரி புரூக்கின் மோசமான ஆட்டம், அணியின் கேப்டன் மார்க்ரமின் மோசமான கேப்டன்சி என்று ஹைதராபாத் அணிக்கு அனைத்தும் சொதப்பலாகவே அமைந்தன. எனவே இம்முறை, ஹார்ரி புரூக், அகில் ஹூசெயின் ஆகியோரை கழட்டி விட்டு, ஏலத்தில் பெரிய வீரர்களை எடுக்க ஹைதராபாத் அணி திட்டமிட்டுள்ளது. இம்முறை பிரச்சினைகளை சரிசெய்து ஹைதராபாத் அணி கோப்பையை வெல்லுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Updated On 12 Dec 2023 12:15 AM IST
ராணி

ராணி

Next Story