இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்தியாவில் அதிகம் கொண்டாடப்படும் விளையாட்டுகளில் முதலிடத்தில் இருப்பது கிரிக்கெட். அதிலும் சர்வதேச போட்டிகளை எந்த அளவிற்கு ரசிக்கின்றனரோ அதே அளவிற்கு உள்ளூர் போட்டிகளையும் கிரிக்கெட் ரசிகர்கள் ரசிப்பர். அப்படி ரஞ்சி கோப்பை ஆரம்பித்து விஜய் ஹசாரே கோப்பை வரை எப்பொழுதும் பார்ப்பதற்க்கு ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் ஒரு முதல்தர போட்டி தொடருக்கு உலகமெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அது துலீப் கோப்பைக்குதான். ஏனென்றால் துலீப் கோப்பையிலிருந்துதான் இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வாவார்கள். அதனால் உலகில் இருக்கும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் துலீப் கோப்பையின் மீது ஒரு கண்ணிருக்கும். தற்போது துலீப் கோப்பைக்கான அணிகள் மற்றும் வீரர்களை அறிவித்திருக்கிறது பிசிசிஐ. ஆனால் அதில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது சர்ச்சையாகிவுள்ளது. ஏன் சர்ச்சை? ஏன் துலீப் கோப்பை முக்கியம்? துலீப் கோப்பை வரலாறு என்ன? துலீப் கோப்பை என்கிற பெயர் எப்படி வந்தது? என்பது குறித்தெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.


டெஸ்ட் கிரிக்கெட்டின் ஜாம்பவான் துலீப்சிங்ஜி

துலீப் கோப்பையின் பெயர் காரணம் :

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் துலீப்சிங்ஜியின் நினைவாக இத்தொடருக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. இந்தியாவில் பிறந்த இவர், ஆங்கிலேயர் அணிக்காகதான் களமிறங்கினார். வலதுகை ஆட்டக்காரரான இவர், ஆங்கிலேயர் அணிக்காக பல போட்டிகளை வென்றுகொடுத்துள்ளார். முதல்தர போட்டிகளில் இதுவரை 15000 ரன்களும், 50 சதங்கள் உட்பட சராசரி 50-ம் வைத்திருந்தார். மும்பையில் பிறந்த இவர் அப்போதைய கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று அழைக்கப்பட்டார். சர்வதேச போட்டிகளில் குறைந்த போட்டிகளில் விளையாடிய இவர் 995 ரன்களும், 58.52 சராசரியும் வைத்திருந்தார்.டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சராசரி வைத்திருந்தவர் இவர், இதனால் இவரின் நினைவாக 1961-ஆம் ஆண்டு இந்தியாவில் ஒரு தொடர் ஆரம்பிக்கப்பட்டது. அதுதான் துலீப் கோப்பை.


1961-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துலீப் கோப்பை

முதல் துலீப் கோப்பை :

முதன்முதலாக துலீப் தொடர் 1961-62 சீசனில் பிசிசிஐ-யால் நிறுவப்பட்டது. இந்த தொடரின் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளாக வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளுக்கு இடையே நடத்தப்பட்டன . முதல் துலீப் கோப்பை இறுதிப் போட்டியில் தென் மண்டலத்தை பத்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கு மண்டலம் தொடரை வென்றது. 1962-63 சீசனில், மத்திய மண்டலம் தவிர ஐந்து அணிகளில் நான்கு அணிகளில் ஒரு மேற்கிந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரரை விளையாட வைக்கும் புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டது.


மாற்றப்பட்டு கொண்டேயிருக்கும் துலீப் கோப்பை விதிமுறைகள்

துலீப் கோப்பையின் விதிமுறைகள் :

ரஞ்சி கோப்பையை போன்று இதுவும் டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மட்டில்தான் நடைபெறும். ஐந்து அணிகள் துலீப் கோப்பை தொடரில் பங்குபெறும். 5 அணிகளும் நாக்-அவுட் முறையில் விளையாடும். 1993-94 சீசனில் இருந்து, நான்கு சீசன்களுக்கு நாக்-அவுட் முறைக்கு பதிலாக லீக் முறையாக மாற்றப்பட்டது. 2002-03 சீசனில் மண்டல அணிகளுக்கு பதிலாக ஐந்து அணிகள் அந்தந்த ரஞ்சி கோப்பை அணிகளை அறிமுகப்படுத்தின, ஆனால் இந்த வடிவம் ஒரு சீசன் மட்டுமே நீடித்தது. பிறகு 2003-04 சீசனில் இருந்து, ஐந்து மண்டல அணிகள் ஆறாவது வெளிநாட்டு அணியுடன் போட்டியிட வேண்டும் என்கிற புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் வெளிநாட்டு அணியாக 2003-04-ல் இங்கிலாந்து A அணி இந்தியாவிற்கு வந்து விளையாடியது. 2009-10 சீசனில் இருந்து, இந்த விதிமுறை கைவிடப்பட்டது. மீண்டும் பழைய முறையை பின்பற்றி ஐந்து அணிகள் நாக் அவுட் போட்டிகளில் மோதும் விதிமுறை 2014-15 சீசனில் கொண்டுவரப்பட்டது.


துலீப் கோப்பையில் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட பிங்க் நிற பந்து

பிங்க் நிற பந்து அறிமுகம் :

துலீப் கோப்பை 2015-16-ஆம் ஆண்டு நடத்தப்படவில்லை, ஆனால் 2016-17-ல் ஒரு புதிய வடிவத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது, புதிதாக பிசிசிஐ மூன்று அணிகளை தேர்வு செய்தது. இந்தியா கிரீன், இந்தியா ப்ளூ மற்றும் இந்தியா ரெட் என அணிகள் தேர்வு செய்யப்பட்டன. இந்த அணிகள் ரவுண்ட்-ராபின் முறையில் விளையாடி, முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. அனைத்து விளையாட்டுகளும் பகல்-இரவு ஆட்டங்களாக அரங்கேற்றப்பட்டன. மேலும் இளஞ்சிவப்பு கிரிக்கெட் பந்துகள் பயன்படுத்தப்பட்டன. கோவிட்-19 காரணமாக கோப்பை மூன்று சீசன்களுக்கு ரத்து செய்யப்பட்டது. 2022-23-ஆம் ஆண்டு இத்தொடர் மீண்டும் தொடங்கப்பட்டது.


கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற தெற்கு மண்டல அணி

இதுவரை சாம்பியன்கள் :

மேற்கு மண்டல அணியும், வடக்கு மண்டல அணியும் தலா 18 முறை சாம்பியன் பட்டம் வென்று அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றன. அதன்பிறகு தெற்கு மண்டல அணி 13 முறையும், மத்திய மண்டல அணி 6 முறையும், கிழக்கு மண்டல அணி, இந்தியா ப்ளூ மற்றும் இந்தியா ரெட் அணிகள் தலா 2 முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. அதிக முறை இறுதி போட்டிக்கு சென்ற அணியும் மேற்கு மண்டல அணிதான். அதன்பிறகு வடக்கு மண்டல அணி 23 முறை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஒரே ஒருமுறை மட்டும் வெளிநாடு அணியான இலங்கை A அணி இறுதி போட்டிவரை முன்னேறியிருக்கிறது.


துலீப் கோப்பையில் அதிக ரன் குவித்த வாசிம் ஜாபர்

துலீப் கோப்பையின் சாதனையாளர்கள் :

இதுவரை நடந்த துலீப் கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை மேற்கு மண்டல அணிக்காக வாசிம் ஜாபர் குவித்துள்ளார். சுமார் 2545 ரன்கள் அடித்திருக்கிறார். தனி நபர் அதிகபட்ச ரன்னாக, ராமன் லம்பா 320 ரன்கள் அடித்து தற்போது வரை முதலிடத்தில் இருக்கிறார். அதன்பிறகு 9 சதங்கள் அடித்து அதிக சதங்களை அன்ஷுமன் கைகுவாட் வைத்துள்ளார். அதிக அரைசதங்கள் அடித்தவர் பட்டியலில் 21 அரைசதங்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார் வாசிம் ஜாபர். பந்துவீச்சை பொறுத்தவரையில் 126 விக்கெட்டுகளை அள்ளி நரேந்திர ஹிரவாணி முதலிடத்தில் உள்ளார். தனிநபர் சிறந்த பந்துவீச்சில் அவரே முதலிடத்தில் நீடிக்கிறார். மேற்கு மண்டல அணிக்கு எதிராக 40 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளை அவர் அள்ளினார்.


துலீப் கோப்பையில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நடராஜன்

துலீப் கோப்பையில் கழற்றிவிடப்பட்ட நடராஜன்!

வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி தொடங்கவுள்ள துலீப் கோப்பை தொடரில் விளையாட தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 2020-21-ல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் நெட் பவுலராக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அப்போது முக்கிய வீரர்கள் காயமடைந்ததால் 3 வகையான போட்டிகளிலும் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்று, நன்றாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். அதன் பின் காயத்தை சந்தித்த அவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. காயத்திலிருந்து குணமடைந்து 3 வருடங்களாகியும் அவருக்கு மறு வாய்ப்பு கொடுக்காத தேர்வுக்குழு தற்போது துலீப் கோப்பையிலும் கழற்றிவிட்டுள்ளது. இந்நிலையில் நடராஜன் ஏன் துலீப் கோப்பை தொடரில் தேர்வாகவில்லை என்று ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கமளித்துள்ளார்.


நடராஜன் நீக்கம் குறித்து அஸ்வின் விளக்கம்

அஸ்வின் விளக்கம் :

காயத்திலிருந்து குணமடைந்த நடராஜன் கடந்த 3 வருடங்களாக ரஞ்சிக்கோப்பை போன்ற உள்ளூர் டெஸ்ட் தொடர்களில் விளையாடவில்லை என அஸ்வின் தெரிவித்துள்ளார். அதனாலேயே தற்போது துலீப் கோப்பையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அஸ்வின் விளக்கியுள்ளார். "நடராஜன் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அற்புதமான பவுலர். இந்த வருட ஐபிஎல் தொடரிலும் அவர் நன்றாக விளையாடினார். இருப்பினும் கடைசியாக அவர் முதல் தர போட்டியில் 2021 ஜனவரி மாதம் 15-ஆம் தேதி பிரிஸ்பேனில் விளையாடினார். அதன் பின் அவர் 3 வருடங்களாக முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. உள்ளூர் சிவப்பு நிற பந்து கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்காக நடராஜன் விளையாடியிருந்தால் உண்மையில் அவர் துலீப் கோப்பை தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்" என்று தான் கருதுவதாக அஸ்வின் கூறியுள்ளார்.

Updated On 27 Aug 2024 12:07 AM IST
ராணி

ராணி

Next Story